இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிற்கான உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் எதிர்வரும் ஏப்ரல் 4ம் தேதி சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் கூடி மியான்மரில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப் பட்டு வரும் பௌத்த இனவெறித் தாக்குதல் குறித்து விவாதிக்க உள்ளனர். இத்தகவலை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் (ஓ.ஐ.சி.) பொதுச் செயலாளரான இக்மெலத்தீன் இஸ்னோக்லு தெரிவித்துள்ளார்.

மியான்மரில் நடைபெற்று வருகின்றமுஸ்லிம் மக்களின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கூட்டமைப்பு தயாராக உள்ளது என தெரிவித்துள்ள இக்மெலத்தீன், மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பைத் தொடங்கியுள்ள பௌத்த தீவிரவாதிகளின் வெறுப்புமிகு பிரச்சாரங்களுக்கும், தாக்குதல்களுக்கும் முடிவு கட்டுமாறு மியான்மர் அரசை வலியுறுத்தியுள்ளார்.

ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு உதவும் வகையில், மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு திரும்பி வந்து குடியேறவும், அவர்களது குடியுரிமைக்காகவும், அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவும் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 30ம் தேதிவரை 10 நாட்களில் மியான்மர் நாட்டின்மையப் பகுதியில் மட்டும் பலியான முஸ்லிம்களின் எண்ணிக்கை 43ஐத் தாண்டி விட்டதென்றும், 1300க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்றும் மியான்மர் மீடியாக் களே செய்தி வெளியிட்டுள்ளன.

வன்முறைக்கு முடிவு காணவேண்டும் என கோரிக்கை வைக்கின்ற சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளுக்கு மியான்மர் அரசு செவிசாய்ப்பதில்லை என் றும், இதற்கு தீர்வுகாண முன்வருவதில்லை என்றும் மியான்மர் அரசை குற்றம் சுமத்தியுள்ளார் இக்மெலக்தீன் இஸ்னோக்லு.

“மியான்மரில் நடைபெறும் கொடுமைகளை சர்வதேச சமூகத் தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாங்கள் அனைத்து கதவுகளையும் தட்டத் தயாராக இருக்கிறோம். கடந்த வாரம் அரபு லீக் மாநாட்டில் இப்பிரச்சினையை நான் எழுப்பியுள்ளேன்...” என்றும் தெரிவித்துள்ளார் இக்மெலக்தீன்.

கடந்த 29ம் தேதி, மியான்மரின் மனித உரிமைக்கான ஐ.நா.வின் சிறப்பு பார்வையாளரான தாமஸ் ஒஜினா கின்டானா, மியான்மரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றில் அரசாங்கமே ஈடுபட்டிருக்கிறது என்று தனக்கு வந்த தகவல் குறித்து மியான்மர் அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இதனை மியான்மர் அரசு கடுமையாக ஆட்சேபித்துள்ளது.

மார்ச் 20ம் தேதி கலவரம் தொடங்கியதிலிருந்து மத்திய மியான்மரில் உள்ள பல நகரங்களில் புத்த வெறியர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும் கூட! கடந்த வருடம் நிகழ்ந்த ரொஹிங்கியா முஸ்லிம் இனப்படுகொலையின்போது 180க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு, வாசல் இழந்து இடம் பெயர்ந்துள்ளனர். இப்போதும் கூட, மியான்மரில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதாக மியான்மரில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த சகோதரி ஷீரின் நமக்குத் தகவல் தருகிறார். ஆனால் பலியானோர் எண்ணிக்கையை மியான்மர் அரசு உலகிற்கு குறைத்தே காட்டி வருகிறது.

Pin It