பேரா. முத்துமோகனின் ‘பௌத்தமும் பெரியாரியமும்’

muthumohan book 450பௌத்தம் உலகின் ஆதி மதங்களில் ஒன்று. தவிரவும் அது கிறிஸ்தவம், இஸ்லாம் முதலான செமிடிக் மதம்போல பரவுதற்குரிய மதம். அதாவது இந்து மதம் சொல்வதுபோல ஒருவன் இந்துவாக இருக்க வேண்டு மானால், அவன் இந்துவாக ஒரு குறிப்பிட்ட வருணத்தில் பிறக்க வேண்டும். அப்படிப் பிறக்காத ஒருவன் இந்துவாக முடியாது. இதனால் பவுத்தம் இந்து மதம் போலல்லாமல் அது பிற நாடுகளிலும் வேகமாகப் பரவியது.

இன்னொரு பக்கம் செமிடிக் மதங்களிலிருந்து பவுத்தம் ஒரு அம்சத்தில் விலகி இருந்தது. கிறிஸ்தவம், இஸ்லாம் முதலானவை தம்மை மூடிக் கொண்ட (exclusive) மதங்கள். பிற மதக் கூறுகளிலிருந்து இறுக்க மாகத் தம்மை வேறுபடுத்திக் கொள்பவை. பிறவற்றைத் தமக்குள் அனுமதிக்காதவை. ஆனால் இந்திய மதங்களோ பிற மதக் கூறுகளை ஏற்றுக்கொள்பவை (inclusive).

இறுக்கமான அருளப்பட்ட ஒற்றை வேதங்கள் இல்லாதவை. இப்படிப் பிறவற்றையும் உள்ளடக்கும் அம்சத்தில் பவுத்தம் இந்திய மதங்களின் பண்புகளைக் கொண் டிருந்தது. இதனால் வரலாற்றுப் போக்கில் அது பரவிய இடங்களில் உள்ள பிற மதக் கூறுகளையும் ஒரு குறிப்பிட அளவிற்கு உள்வாங்கிக் கொண்டது. இலங்கையில் உள்ள பவுத்த ஆலயங்களில் முருகன், விநாயகர், லக்ஷ்மி முதலான கடவுளருக்கும் ஒரு இடமிருப்பது இப்படித் தான்.

பவுத்தத்தைப் புரிந்து கொள்ள இன்னொரு அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பவுத்தம் தோன்றிய காலத்திலிருந்து (கி.மு 5-6 ம் நூ) அடுத்த ஆயிரம் ஆண்டில், அதாவது மகாவம்சம், மணிமேகலை முதலானவை தோன்றிய காலத்தில் மிகப் பெரிய மாற்றங் களுக்கு உள்ளாகியது.

பல உட்பிரிவுகளும் அதில் உருவாயின். தமிழகத்திலேயே அறுவகைத் தேரர்கள் இருந்ததாகத் தமிழ் நூல்களில் காணலாம். ஆன்மா என ஒன்று கிடையாது, எல்லாம் மரிக் கொண்டுள்ளது, எல்லாம் சார்புத் தன்மை உடையவை, (இறை) பக்தியின் அடிப்படையில் ‘அறத்தை’ (சீலம்) முன்வைத்தல் என்பதான பவுத்த அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து இந்தப் புதிய மாற்றங்கள் பெரிதும் பிறழாமல் இருக்க முயற்சித்த போதும், நடைமுறையில் அது ஒரு ‘மதமாக’ கால வெள்ளத்தில் பயணிக்க நேர்ந்தபோதும் அது ஒரு வகையில் கடவுள் என்கிற கருத்தாக்கத்தையும் கூட ஏற்றுக் கொள்ள நேர்ந்தது.

இந்தப் பின்னணியில்தான் பெரியார், வாழ்ந்திருந்த 20ம் நூற்றாண்டில் பவுத்தத்தை அவர் எவ்வாறு அணுகினார் என்பது முக்கியமானது. பவுத்தத்தைப் பெரியார் அதன் ஆதி வடிவில், புத்தரது ஆதி அணுகல் முறைகளைக் கடக்காமல் அணுகினார் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு அறிமுகம் செய்துள்ளது நண்பர் பேரா. ந.முத்துமோகன் அவர்கள் மட்டுமே. முத்துமோகன் ஒரு பொதுவுடமைக் கட்சிக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை முழு நேர கட்சி ஊழியராக இருந்தவர். சோவியத் ரஷ்யாவில் இந்தியத் தத்துவங்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் முத்துமோகன். மதுரைப் பல்கலைக் கழகத்தில் சீக்கியவியல் இருக்கையில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர். இந்தியத் தத்துவங்கள் குறித்துத் தொடர்ந்து நிறைய எழுதிவருபவர். தற்போது ஓய்வுக்குப் பின்னும் பஞ்சாபில் சீக்கிய ஆய்வுத் துறையில் பணியாற்றி வருபவர். பேரா. நா.வானமாமலையின் மாணவர் குழாமில் ஒருவர். பலருக்கும் இந்த அறிமுகம் தேவை என்பதால் இவற்றைச் சொல்ல வேண்டியதாயிற்று.

‘இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்’ என்பது அவரது சமீபத்திய (2016) நூல் (NCBH வெளியீடு, 472 பக். 370 ரூ). அதிலுள்ள ஒரு சிறிய கட்டுரைதான் ‘பௌத்தமும் பெரியாரியமும்’. புத்தர் கடவுள் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் இருப்பை ஏற்காதவர். வைதீகம், அதுசார்ந்த வேள்வி முதலான சடங்குகள், வருண வேறுபாடுகள் ஆகியவற்றை மறுத்தவர். கடவுள் மறுப்பு என்கிற வகையில் உலகாயுதக் கோட்பாட்டிற்கு நெருக்கமாக வருபவர் (சார்வாகமல்ல). ஆன்மா மற்றும் பிரும்மம் முதலான வற்றை ஏற்காதவர். எல்லாவற்றிற்கும் மேலாக “நிர்வாணம்” என்கிற கருத்தாக்கத்தை முன்மொழிந்தவர்.

தமிழ்ச் சூழலில் பெரியார், சொல்லப் போனால் பெரியார் மட்டுமே இந்த அம்சங்களில் முழுமையாகப் புத்தரை ஏற்றவர். புத்தரின் மேற்குறித்த கருத்தாக்கங் களுடன் ‘பகுத்தறிவு’ என்பதையும் பெரியார் சேர்த்துக் கொண்டார் என்கிறார் முத்துமோகன். எனினும் முன் குறிப்பிட்ட ஆன்மா மற்றும் பிரும்மத்தை மறுப்பது, நிர்வாணம் என்கிற கருத்தாக்கத்தை ஏற்பது ஆகியனவே பகுத்தறிவின் அடிப்படை. எனவே பெரியார் இதைக் கூடுதலாகத் தரித்துக் கொண்டார் எனக் கருதத் தேவையில்லை.

இனி பெரியாரை இந்தப் பின்னணியில் இருந்து புரிந்து கொள்ள முயல்வோம்.

அறிந்ததனின்றும் விடுதலை - அதுவே நிர்வாணம்

பெரியார் தனது தத்துவ நிலைபாட்டை “மெட்டீரி யலிசம்” எனவும் “பிரகிருதிவாதம்” எனவும் கூறிக் கொள்வார். கடவுள், ஆன்மா, மறு பிறப்பு, மோட்சம், ஆகிய அனைத்து நம்பிக்கைகளையும் மறுப்பார். வைதீக வேள்விகள், புரோகிதம், சடங்காசாரம் ஆகியவற்றை மறுத்த பண்டைய உலகாயதர்களுக்கு நெருக்கமாக உள்ள பெரியார் இவற்றோடு கூடுதலாக இன்றைய நவீன ஐரோப்பிய பகுத்தறிவு வாதத்தையும் இணைத்துக் கொள்வார். “ஐரோப்பிய விஞ்ஞானமுறை”, “சயன்ஸ்” முதலான சொற்களை அடிக்கடிப் பயன்படுத்துவது தவிர, டெஸ்ட் டியூப் பேபி உட்பட நவீன விஞ்ஞான முறைகளை அவர் விதந்து அறிமுகப்படுத்துவதும் உண்டு.

“சிந்திக்கும் தன்மை”, தயவுதாட்சண்யமின்றி (எதையும்) கேள்வி கேட்பது, “சொந்த அறிவும் அனுபவமும்”, “அறிவும் ஆராய்ச்சியும்”, “காரண காரியங்களைக் கண்டறிதல்”, “பிரத்தியட்ச அனுபவம்”, “விஞ்ஞான ஆராய்ச்சி”, “தர்க்க விவாதம்”, “ஆதாரங் களைக் கொண்டு அறிதல்”, “அறிவும் நியாயமும்” - முதலானவை பெரியார் ஆங்காங்கு தன் அறிதல் முறையைக் குறிப்பிடும் சொற்கள். நம்பிக்கைகளைச் சாராமல் அறிவு பூர்வமான தர்க்கத்தின் அடிப்படையில் எதையும் ஏற்க வேண்டும் என்பது அவர் கருத்து.

பவுத்த தர்க்கம் என்பது புத்தருக்குப் பின் மிக வளர்ந்த ஒரு துறை. ஷெர்பாட்ஸ்கி இரு பெருந் தொகுப்புகளாக அவற்றைத் தந்துள்ளார். பெரியார் அந்த அளவிற்கெல்லாம் போனவரில்லை. அவர் புத்தரைப் போலத் தத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு முதன்மை அளித்தவர்.

ஆம். தன் முக்கிய சீடர்களில் ஒருவரான மொகல்லானரிடம் புத்தர் இதை, அதாவது வெறும் தத்துவ விசாரங்களில் தனக்கு ஆர்வமில்லை என வெளிப்படையாகச் சொன்ன வரலாற்றை எனது ‘புத்தமும் தம்மமும்’ நூலில் நீங்கள் காணலாம்.

பெரியாரைப் பொறுத்தமட்டில் அவரே கூறுவதைப் போல, “சொந்த அறிவு, அனுபவம்”, “பிரத்தியட்ச அனுபவம்” ஆகியவற்றை மட்டுமே அவர் நம்பிக்கைகளுக்குப் பதிலாகப் பிரதியிடுகிறார். அவரைப் பொறுத்த வரையில் நான் ஓரிடத்தில் சொல்லி யுள்ளதைப் போல “நம்பிக்கைகள் எல்லாமே மூட நம்பிக்கைகள்” தான். அறிவு, அனுபவம், பிரத்தியட்சம் ஆகியன மட்டுமே ஆதாரங்கள்.

ஆனால் பல நூற்றாண்டுச் சிந்தனைகள், கருத்துக்கள், முடிவுகள், நம்பிக்கைகள் முதலியன நம் அறிவையும், சிந்தனைகளையும் சூழ்ந்துள்ளன. தினந் தோறும் இப்படியான நம்பிக்கைகள், படிக்கும் நூல்கள், அனுபவங்கள், பார்க்கும் திரைப்படங்கள், பத்திரிகைகள் ஆகிய ஒவ்வொன்றின் ஊடாகவும் உறுதிப்படுத்தப் படுன்றன. இவை சுய சிந்தனைக்கும், “பிரத்தியட்ச அனுபவங்களை” பெறுவதற்கும் தடையாக உள்ளன. உங்களை மூடிக் கிடக்கும் இந்தத் திரைகளை நீக்கி “நிர்வாணம்” அடைதலே நீங்கள் உண்மைகளை அறிய ஒரே வழி.

நம்மைச் சுற்றி அறிஞர்களின் சிந்தனைகளாகவும், மத போதனைகளாகவும், வேத நூல்களாகவும் நின்று நம் சுய சிந்தனையை மறைக்கும் திரு உருக்களை (icons/ idols), 16-17ம் நூற்றாண்டு ஐரோப்பிய மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்கள் உடைத்து நொறுக்கிக் கடக்குமாறு கூறியதைப் போலவே இங்கு பெரியாரும் செய்தார். சமயம், இலக்கியம், வரலாறு எல்லாவற்றாலும் நம் அறிவுக் கண்ணை மூடிக் கிடக்கும் உலகின் தோற்றம், மனிதனின் படைப்பு முதலான அனைத்து நம்பிக்கை களையும் புனைவுகளையும் உடைத்தெறிந்தார். இந்த அனைத்திலிருந்தும் விடுபட்டு “நிர்வாணம்” அடைதலே நீங்கள் அறிவையும் விடுதலையையும் அடைய ஒரே வழி என்றார்.

ஒரு வகையில் அறிவுதான் விடுதலை. அறிவை அடைவது என்பது ஏற்கனவே அறிந்தவற்றிலிருந்து விடுதலை அடைவதுதான். அதுதான் “நிர்வாணம்” அடைதல்.

பெரியார், புத்தர் இருவரும் இத்தகைய விடுதலைக்குப் பயன்படுத்தும் சொல்தான் “நிர்வாணம்”. புத்தர் பாலிமொழியில் அதை ‘நிப்பானம்’ என்பார். பெரியார் நம் தமிழில் நிர்வாணம் என்பார். அவ்வளவே.

கல்வி குறித்துப் பேச வரும்போது ஒருவனை அவனுக்கு ஏற்கனவே இந்தச் சமூகத்தால் ஊட்டப்பட்ட அனைத்திலிருந்தும் விடுவித்து அவனை நிர்வாண மாக்குவதே சரியான கல்வி எனப் பெரியார் கூறுவதை நான் ‘பாரதி புத்தகாலயம்’ வெளியிட்டுள்ள பெரியாரின் கல்வி குறித்த சிந்தனைகள் தொகுப்பின் முன்னுரையில் ஜென் கதை ஒன்றின் துணையுடன் விளக்கியிருப்பதைக் காண வேண்டுகிறேன்.

“நான் நிர்வாணமாகச் சொல்லுகிறேன். அதாவது மறைவில்லாமல், அப்படியே மனதில் பட்டதை, பச்சையாகப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறதோ அப்படியே உள்ளது உள்ளபடியே கூறுவதுதான் ‘நிர்வாணமான’ என்பதன் அர்த்தம். நிர்வாணம் என்பது நம் உள்ளத்தில் தோன்றிய உண்மையான காரணங்களை எடுத்துக் கூறும் நிலைஸ்தானமாகும். புத்த நெறியினர் கூட நிர்வாணா ஸ்தானம் என்பார்கள்.”

- என்கிற பெரியாரின் இந்த மேற்கோளைச் சுட்டிக் காட்டி (பெரியார் சிந்தனைகள், ஆனைமுத்து தொகுப்பு 2, பக். 1072) ஜான் லாக்கின் ஐரோப்பியச் சிந்தனையுடனும் புத்தரின் “இருப்பதை இருக்கும் படியே” எனக் கூறும் (ததாகதா) எனும் சிந்தனையுடனும் ஒப்பிடுவார் முத்துமோகன்.

புத்தரின் ஆன்ம மறுப்புக் கோட்பாட்டின் 

அரசியலும் பெரியாரும்

ஏதொன்றையும் எதிர்கொள்ளும்போது ‘நிர்வாண மாக’ அணுகுவது என்பதன் பொருள் என்ன? எதையும் நம்முடைய நம்பிக்கை, முடிவுகள், கொள்கைகள் ஆகியவற்றின் நோக்கிலிருந்து அணுகாமல், விருப்பு வெறுப்புகளின்றி உள்ளதை உள்ளபடியே அணுகுவது தான் அது. இதில் நான் “கொள்கைகள்” என்பதையும் சேர்த்திருப்பது உங்களுக்கு வியப்பு அளிக்கலாம். சிலருக்கு வெறுப்பையும் அளிக்கலாம். இதையும் நீங்கள் விருப்பு வெறுப்பின்றி நோக்கினால், பல நேரங்களில் நாம் சுமந்திருக்கும் இறுக்கமான கொள்கைகளே நாம் சரியான முடிவுகளை அடையத் தடையாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

நிர்வாணம் என்கிற கருத்தாக்கம் சிரமண மதங்களில் முக்கியத்துவம் பெறுவது கவனத்துக்குரியது. சமணத்தின் இரு முக்கிய பிரிவுகளில் ஒன்றான திகம்பர சமணத்தை ஏற்ற முனிவர்கள் கருத்தளவில் மட்டுமின்றி நடைமுறையிலும் ஆடைகளின்றி நிர்வாணமாக வாழ்வதை அறிவோம், அவர்கள் ‘திக்கு’களையே (திசை களையே) ‘அம்பரம்’ ஆக (ஆடைகளாக) அணிந்தவர்கள். இங்கொரு சுவாரசியமான விடயம் கருதத்தக்கது. பெரியார் சோவியத் ரஷ்யா, ஜெர்மனி, இலங்கை முதலான நாடுகளுக்குச் சென்றபோது ஜெர்மனியில் இருந்த நிர்வாண சங்கத்திற்குச் சென்று அவர்களோடு ஆடைகளின்றி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று உண்டு. பெரியாரின் அயல்நாட்டுப் பயணங்கள் குறித்த ஆனைமுத்து அவர்களின் நூலில் அந்தப் படத்தைக் காணலாம்.

முந்துமோகன் பவுத்தம் முன்வைக்கும் ‘நிர்வாணம்’ எனும் கோட்பாட்டையும் ‘அனாத்மன்’ எனும் கோட் பாட்டையும் இணைக்கிறார். வைதீக அணுகல்முறை ‘ஆத்மன்’ (ஆத்மா) என்பதற்கு முதன்மை அளிப்பதை அறிவோம். பெரியார் குறிப்பிடுவதுபோல வைதீகத்தைப் பொருத்தமட்டில் ஆன்மா என்பது ஒரு “நித்திய வஸ்து” ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த வஸ்து அவர்கள் அழியும்போது, அதாவது அவர்கள் இறக்கும் போதும் அது அழியாது. தீ உடலைத்தான் எரித்துச் சாம்பலாக்குமே ஒழிய ஆன்மாவைத் தீண்டாது; தீண்ட முடியாது. அது மீண்டும் மீண்டும் பிறக்கும் தன்மையது, ஒரு பிறவியில் அவரவர் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப அவர்களது ஆன்மா அடுத்த பிறப்பை எடுக்கும் என்பது வைதீகத்தின் அடிப்படை.

புத்தர் இந்த வைதீகக் கோட்பாட்டை மிக நுணுக்கமாக மறுத்தார். அவர் “ஆத்மன்” என்னும் இடத்தில் “அனாத்மன்”, அதாவது “ஆன்மா இல்லாதது” என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்தார். இது குறித்து நான் மிக விரிவாக எனது ‘புத்தம் சரணம்’ நூலில் எழுதி யுள்ளேன். வைதீகத்தில் யாக்ஞவல்கியருக்கும் மைத்ரே யிக்கும் நடக்கும் ஒரு உரையாடலையும், பவுத்தத்தில் பசனேதி மன்னனுக்கும் (ப்ரசேனஜித்) அவன் மனைவி மல்லிகாவுக்கும் நடக்கும் உரையாடலையும் பொருத்தி அதை விளக்க முயன்றிருப்பேன். மேலும் விளக்கம் காண விரும்புவோர் அதனைக் காண்க.

முத்துமோகன் வைதீகத்தில் ‘ஆன்மா’ என்கிற கருத்தாக்கம் உருவாவதை புராதனப் பொதுமைச் சமூகம் அழிந்து ஏற்றத்தாழ்வுகள், படிநிலை அதிகாரங்கள் நிறைந்த ஒரு உடமைச் சமூக உருவாக்கத்துடன் இணைக்கிறார். இனக்குழுப் பொதுவுடைமை அழியும் போது தான், தன் குடும்பம், தன் குடி எனும் தன் முனைப்பு உருவாவதை ஏற்றுத்தான் வைதீகம் பொது மைக்கு எதிராக சுயத்தை மேன்மைப் படுத்தித் தத்து வார்த்த தளத்தில் ‘ஆன்மா’ என்பதை முன்வைத்தது என்கிறார் முத்துமோகன். புத்தர் இனக்குழு மரபிலிருந்து வந்தவர். அம்மரபின் பொதுமையை முன்வைத்து இயங்கியவர். எனவே அவர் வைதீகம் முன்வைத்த இந்த ‘ஆன்மா’ எனும் கருத்தாக்கத்தை முற்றாக மறுக்கிறார்.

புத்தரின் நிர்வாணம் என்கிற கோட்பாட்டைப் பெரியார் முழுமையாக ஏற்றுக் கொண்டதைப் போலவே, புத்தரின் இந்த ‘ஆன்மா மறுப்பு’ கோட் பாட்டையும் முழுமையாக ஏற்கிறார்.

“ஆன்மா என்பது ஒரு பொருளல்ல. அது சுதந்திரம், அறிவு, உணர்ச்சி ஆகியவைகளை உடையதல்ல என்பதோடு, அது பெரிதும் அர்த்தமற்ற ஒரு வார்த்தை என்றே நமக்குக் காணப்படுகிறது. இப்போது பழக்கத்தில் ஆத்மா என்றால் அது சரீரத்திற்குள் இருக்கும் ஒரு நித்திய வஸ்து என்றும், அதற்குப் பிறப்பு, இறப்பு இல்லை என்றும், அது சரீரத்தில் இருக்கும்போது செய்த காரியங்களுக்காக அதன் பயனை சரீரத்தை விட்டுப் பிரிந்த பின்பு கடவுள் மூலம் அனுபவிக்கிறது என்றும் பல மதங்களில் பலவிதமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றதாய் அறிகிறோம்...”- எனச் சொல்லும் பெரியார், இதைத் தற்காலச் சூழலில் இயங்கும் அனைத்து முக்கிய மதங்களுடனும் ஒப்பிடுகிறார். சொர்க்கம், நரகம், இறப்புக்குப் பின் அவரவர் பாவங்களுக்கு ஏற்ப நியாயத் தீர்ப்பு அளிக்கப்படுதல் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான மதங்களிலிருந்தும் பவுத்தம் தனித்து நிற்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

“பவுத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து ஆகிய மதங்களில் பவுத்தம் தவிர மற்ற முக்கியமான மூன்று மதங்களும் ஏறக்குறைய ஒரே கொள்கையில்தான் ஆத்மாவையும், ஆத்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் பற்றிய விஷயங்களையும் வைத்துக் கொண்டிருக்கின்றன. (ஆனால்) பவுத்தர்கள், ‘ஆன்மா என்பதே கிடையாது. நித்திய வஸ்து என்பதே கிடையாது’ என்பதாக முடிவுகட்டி விட்டார்கள்” (ஆனைமுத்து தொகுப்பு பக் 1066- 68). - என்பது பெரியார் கூற்று.

சொர்க்கம், நரகம் என்பன போன்ற கருத்தாக்கங் களின் மூலம் ஒரு உடைமைச் சமூகம் ‘எஜமானத் துரோகம்’, ‘இராஜத் துரோகம்’ போன்ற பல்வேறு துரோகங்களைக் கற்பித்து அப்படியானவற்றிற்கு இறப்பிற்குப் பின் நரகமே விதியாகும் எனச் சொல்கிறது. இப்படிச் சொல்வதின் ஊடாக மக்கள் “தங்களின் நியாயமான உரிமைகளைப் பெறவேண்டும் என்கிற எண்ணம் உதிக்காமலே ஏமாற்றிவிடுவதற்குத் தக்க பேராயுதமாய் நரகம் விளங்கி வருகிறது” (பக். 1069) என்பது பெரியாரின் கூற்று.

இப்படிச் சொல்வதனூடாக பெரியார் இரண்டு விடயங்களை இங்கே சுட்டிக் காட்டுகிறார். 1. எல்லா மதங்களும் மக்களின் உரிமை வேட்கைக்குத் தடை யாகவே அமைகின்றன. 2. புத்தர் மதங்களுக்கான இந்தப் பொது அம்சத்திலிருந்து விலகி நிற்பதன் மூலம் அவரது நோக்கம் இப்படியான இன்னொரு மதத்தை உருவாக்குவது அல்ல. புத்தருக்குப் பின் அவரும் ஒரு கடவுளாக்கப்பட்டு அவரது பாதையும் ஒரு மதமாக்கப் பட்டதும் வேறு கதைகள்.

இங்கே நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பெரியாரின் நோக்கம் புத்தர் அல்லது புத்த மதம் குறித்து ஆய்வு செய்வதோ, இல்லை கி.மு 6ம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் நடந்த வைதீக X அவைதீக விவாதங்களைப் பற்றிக் கட்டுரை எழுதுவதோ அல்ல. தத்துவ விசாரமல்ல அவரது நோக்கம். அதற்குரிய sophisticated tools என்பனவெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டும் அல்ல. அதையும் அவரே சொல்லி விடுகிறார். ‘ஆத்மா’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதத் தொடங்கும்போது அவர் சொல்வது இது:

“ஆத்மா என்ற விஷயத்தைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைப் பார்க்கும் நமது நண்பர்கள் பலர் ‘இது தத்துவ விசாரம். இதைப் பற்றிப் பேசவோ எழுதவோ வேண்டிய அவசியம் சமுதாய சீர்திருத்தக்காரருக்கு எதற்கு’ என்று கூசாமல் பேசுவார்கள்... சமுதாய சீர்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் ஆடிப் போன, சுவண்டு போன, இடிந்து போன பாகங்களைச் சுரண்டி, கூறு குத்தி, மண்ணைக் குழைத்துச் சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அனேகர் கருதி இருக்கிறார்கள். நம்மைப் பொருத்த மட்டில் நாம் அந்த மாதிரித் துறையில் உழைக்கும் சமுதாயச் சீர்திருத்தக்காரனல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். (நாம் உண்மையில் சமுதாயத்தை) அடியோடு பெயர்த்து அஸ்திவாரத் தையே புதுப்பிப்பது என்கின்றதான பணியை மேற் கொண்டுள்ளோம்” (பக்.1065) என்கிற பெரியாரின் சுய பிரகடனம் அவரது நோக்கத்தை வெளிப்படுத்தும்.

periyar 600 copyகடவுள் மற்றும் பக்தியின் இடத்தில் அறம்

புத்தரின் வழி நின்று பெரியார் மிகவும் நுண் மையாக வைதீகம் முன்வைத்த ‘ஆன்மா’ எனும் கருத்தாக்கத்தை அவருக்கே உரித்தான எளிமையுடன் மறுப்பதை முத்துமோகன் சுட்டிக் காட்டுகிறார். ”சமயவாதிகள் ஏற்படுத்தியுள்ள முதல் பித்தலாட்டம் ஆன்மா என்பது. இது இல்லாவிட்டால் மற்ற பித்தலாட்டங்களுக்கெல்லாம் இடமேயில்லை” (முன் குறிப்பிட்ட நூல், பக்.1074) எனக்கூறும் பெரியார் தொடர்ந்து, “ஆத்மா என்பது ஒன்று. அதற்கு எஜமான் என்று ஒரு கடவுள் இல்லை என்றுதான் (புத்தரும் சொல்லியிருக்கிறார்)” என்கிறார் (பக்.1075). உடைமைச் சமூகத்தில் சொத்துக்களை ஆளும் எஜமான் அவனிடம் அடிமையாக இருக்கும் இதரர் என்பதுதான் வைதீகத்தில் பிரும்மம் - ஆத்மா என்கிற உறவாக வெளிப்படுவது எனப் பெரியார் அணுகுவதற்கு ஒரு சான்றாக இதை முத்துமோகன் சுட்டிக்காட்டிச் செல்கிறார்.

புத்தரது அறவுரைகளில் ஆத்மா இன்மை (அனாத்மன்) கோட்பாடு போலவே நான்கு பேருண் மைகள் மற்றும் “தோற்றங்களின் சார்புத்தன்மை” ஆகியனவும் மிகவும் முக்கியமானவை. புத்தர் தன் அறவுரைகளில் இவற்றை அடிக்கடி வற்புறுத்துவார்.

நான்கு பேருண்மைகள் என்பவற்றை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம். இன்றைய வாழ்க்கை முறையில் நமது இருப்பின் நிபந்தனையாக ‘துக்கம்’ உள்ளது என்கிறது பௌத்தம். துக்கம் என்பது எவ்வாறு ஏற்படுகிறது? ஏதோ ஒன்றை நாம் இழந்துள்ளதாக, குறையாக உணர்வதால் துக்கம் ஏற்படுகிறது. ஆக துக்கம் என்பது வேறொன்றுமில்லை. திருப்தியின்மை தான் துக்கம். திருப்தியின்மை எவ்வாறு உருவாகிறது? ஆசைதான் திருப்தியின்மையின் அடிப்படையாக உள்ளது. ஆனால் பௌத்தம் அத்தோடு நிறுத்திக் கொள்வதில்லை. இதுவே வாழ்வின் விதியல்ல என அது நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. இது துறக்கக்கூடியதுதான் என்கிறது. ஆக துறவு என்பது துறவிகளுக்கு மட்டும் உரியதல்ல. ஆக ‘துறவு’ என்பதற்கு இங்கே புதிய பொருள் அளிக்கப்படுகிறது உலக வாழ்வின் துக்கத் திற்கும், திருப்தியின்மைக்கும் காரணமான ஆசைகளைத் துறப்பதுதான் துறவு. இது எப்படிச் சாத்தியம்? அற அடிப்படையிலான வாழ்வை நாம் அமைத்துக் கொள்வதன் மூலம் நாம் அதைச் சாத்தியமாக்க வேண்டும். அதற்கெனவே பஞ்சசீலம், தச சீலம், எண்வழிப்பாதை முதலான சீலங்களை முன்வைக்கிறது பௌத்தம்.

ஆக அறவாழ்வையே துக்கங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழி என பவுத்தம் உரைக்கிறது. இறைவன், பக்தி எனும் இரண்டும் பௌத்தத்தில் அர்த்த மற்றுப் போகும் விந்தை இப்படித்தான் நிகழ்கிறது. பெரியாரை பவுத்தம் ஈர்த்ததை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள முடிகிறது. பெரியாரின் வாழ்வையும் அரசியலையும் கூர்ந்து நோக்கினால் அப்படியாகத் தான் வகுத்துக் கொண்ட அறங்களை அவர் தொடர்ந்து பிடிவாதமாகப் பின்பற்றியதைப் புரிந்து கொள்ள இயலும். ஒரு எடுத்துக்காட்டு. போராட்டங்களுக்காகக் கைது செய்யப்பட்ட அத்தனை முறையும் தன் மீது அரசு சாட்டிய குற்றங்களைத் தான் எதிர்த்து வழக்காடியதே இல்லை என்பதை அவர் பதிவு செய்துள்ளார். தேசியக் கொடியை எரிக்கும் போராட்டமானாலும் சரி, அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டமானாலும் சரி, தான் அறிவிக்கும் போராட்டங்களில் யார் கலந்து கொள்வர் என்பதை முன்கூட்டியே அறிவிப்பது குறித்த விமர்சனம் ஒன்று அவர்மீது வைக்கப்பட்டபோது தனது போராட்ட அறமாக அவர் இதைக் குறிப்பிடுகிறார். சின்ன வயதில் தன் மீது பொய்க் கையெழுத்து இட்டதாக ஒரு ‘போர்ஜரி’ வழக்குத் தொடரப்பட்ட போது வழக்குரைஞர்கள் அறிவுரைத்தபடி அந்த வழக்கி லிருந்து தப்புவதற்காக ஒரு சிறிய பொய்யைச் சொல்ல முடியாது என மறுத்துச் சிறை ஏகத் தான் தயார் செய்து கொண்ட வரலாற்றை அவர் சொல்வது சுவையான ஒன்று. சிறு வயது முதலே இப்படியான அறங்களைத் தான் கடைபிடித்து வருவதாக அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத் தக்கது (பார்க்க: என் ‘பெரியார்?’ எனும் நூல்).

பவுத்தத்தின் வேத உபநிடத மறுப்பும் பெரியாரும்

இறுதியாக ‘பிரதித்ய சமுத்பாதம்’ என சமஸ் கிருதத்திலும் ‘பட்டிசமுத்பாத’ எனப் பாலியிலும் கூறப்படுகிற பௌத்தத்தின் இன்னொரு முக்கிய கோட்பாடான “தோற்றங்களின் சார்புத்தன்மை” (dependent origination) என்பதைப் பெரியார் எவ்வாறு கையாள்கிறார் எனப் பார்க்கலாம். தனக்கே உரிய முறையில் எளிமையாகவும் அதே நேரத்தில் அடிப்படை சிதையாமலும் பெரியார் அதை, விளக்குவதைப் பார்ப்போம்.

உருவாகிய ஒன்றாயினும், உருவாகிக் கொண்டுள்ள ஒன்றாயினும் எதற்கும் சாராம்சமான பண்பு கிடையாது என்பதுதான் பவுத்தத்தின் இந்தக் கோட்பாட்டின் அடிப்படை. அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளன, எதுவும் சுயமாக உருவானதும் அல்ல; சுயமாக இயங்கிக் கொண்டிருப்பதும் அல்ல. மொத்தத்தில் சுயம் (self) என்றே ஒன்று கிடையாது. எதையும் சார்ந்திராத ஆத்மா என ஒன்று இருப்பதாக வைதீகம் சொல்வதை பௌத்தம் இந்த அடிப்படையிலிருந்துதான் முற்றாக மறுக்கிறது. இதைச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

தோன்றுகிற ஒவ்வொன்றும் மற்றதைச் சார்ந்தே இருக்கிறது என்றும் எதுவும் தானாகத் தோன்றுவது இல்லை என்றும் பௌத்தம் சொல்கிறது என்றோம். ஒரு செடி முளைக்கிறது என்றால் அது தானாக முளைப்பதில்லை. அது மண்ணையும், தண்ணீரையும், சூரிய ஒளியையும் சார்ந்தே உயிர்க்கிறது. புத்தர் ஒரு தேரைச் சுட்டிக் காட்டி இதில் எது தேர் என்பார். நீங்கள் அதனுடைய சக்கரங்கள் அல்லது அச்சு அல்லது குதிரைகளைப் பூட்டும் நுகத்தடி என அந்தத் தேரில் ஏதொன்றையாவது தொட்டுத்தான் அதை அடையாளப் படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு நீங்கள் தொட்டுக் காட்டும் ஒவ்வொன்றிற்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பின் எதுதான் தேர்?

இதன் பொருள் எதுவும் சுயமாக இல்லை, தனித்த இருப்பு எதற்கும் சாத்தியமல்ல என்பது மட்டுமல்ல, அப்படி இருக்கவும் முடியாது என்பதுதான். பின் ஆன்மா என்பது மட்டும் எப்படிச் சாத்தியம்? தான், தன்னிலை என்பதற்கெல்லாம் பொருள் என்ன? தொழிலாளி இல்லாமல் முதலாளி ஏது? அடிமைகள் இன்றி ஆண்டான் ஏது? மாணவர் இன்றி ஆசிரியர் ஏது? உயிர்கள் இன்றிக் கடவுள் ஏது? பிள்ளைகள் இன்றிப் பெற்றோர் ஏது? பெற்றோர் இன்றிப் பிள்ளைகள் ஏது?

வைதீக நூல்களில் ஒன்றான பிருஹதாரண்ய உபநிடதம் ஆத்மனை ‘சத்’ என்கிறது. அதாவது நிலையானது. நிரந்தரமானது. உருப்பெற்றிருப்பது, பூரணமானது; குறைகளற்றது எனப் பொருளாகிறது. உருப்பெற்றிருப்பது எனச் சொல்லும்போது அது உருவாகிக் கொண்டிருப்பதல்ல என்றாகிறது. நிரந்தரமானது எனச்சொல்லும்போது அது அழிவற்றது என்றாகிறது.  குறைகளற்றது என்கிற போது அது துக்கமும் அற்றது என்றாகிறது. ஏனெனில் குறைகளே துக்கத்திற்குக் காரணங்களாகின்றன.

ஆனால் பவுத்தம் முற்றிலும் இதற்கு நேர் எதிர்மாறான ஒரு பார்வையை முன்வைக்கிறது, எதுவும் நிரந்தரமானதில்லை; எல்லாமே மரிக் கொண்டே இருக்கிறது என்கிறது. எதுவும். ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீர் என்பது பவுத்தத்தின் ஒரு புகழ்மிக்க எடுத்துக்காட்டு. எல்லாமே ஓடிக் கொண்டிருப்பதுதான். இந்தக் கணத்தில் பார்க்கும் நீர் சென்ற கணத்தில் பார்த்ததும் அல்ல; அடுத்த கணத்தில் பார்க்கப் போவதும் அல்ல.

புத்தம் மூன்று எதிர்மறைகளை முன்வைக்கிறது. அவை:

1.            அநிச்ச - அநித்தியம் -வாழ்வு நித்தியமற்றது; மரிக் கொண்டிருப்பது.

2.            துக்க - துக்கம்- வாழ்வு குறைகள் மிக்கது, நிறைவற்றது

3.            அனத்த - அனாத்மம் - வாழ்வு ஆத்மா அற்றது.

இவ்வாறு உயிர் = பிரபஞ்சம் = சாரம் என

(1=1=1) என்பதாக உபநிடதங்கள் ஒரு சமன்பாட்டை முன்வைத்த போது புத்தரோ,

உயிர் = பிரபஞ்சம் = சார்பின்மை என (0=0=0) என்பதாக ஒரு எதிர்மறையை / மறுப்பை / இன்மையை முன்வைத்தார்.

இது அன்றைய உலகில் ஒரு பெரும் புரட்சி. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின் வந்த நாகார்ஜுனர் இந்த இன்மையைத்தான் ‘சூன்ய வாதம்’ என்கிற கோட்பாடாக முன்வைத்தார்.

பெரியாரிடமும் ஒரு வகையில் இந்த சூன்யவாத மனப்பாங்கு ஆங்காங்கு தெறிப்பாக வெளிப்படுவதைக் காணலாம். அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நமது பண்பாட்டை, வரலாற்றை, மொழியை, இலக்கியங் களை எல்லாவற்றையும் முற்றாக மறுதலித்ததை (எ.கா தமிழ் காட்டுமிராண்டி மொழி) நாம் இந்த நோக்கி லிருந்துதான் விளங்கிக் கொள்ள முடிகிறது.

இனி பெரியாரை அவரது சொற்களில் சந்திப்போம்.

“உலகத்தில் பெயரும் உருவமும் உள்ள பொருட்கள் எல்லாம் ஒருவித சேர்க்கையால் - அதாவது பல கூட்டுப் பொருட்களால் சேர்ந்து இருக்கும் வடிவத்தையே பெரிதும் உணர்த்துவதாகும்... ஒரு லாந்தர் என்பது எது எனத் தொட்டுக்காட்டச் சொன்னால் லாந்தர் என்பதில் அவன் தொட்டுக் காட்டிய பாகம் ஒரு சிம்னியையோ, கண்ணாடியையோ, தகட்டையோ, கம்பியையோ, ஆணியையோதான் தொட்டுக் காட்டப்பட்டதாய் இருக்கும். அதுபோலவே ஒரு மேசையைத் தொட்டுக் காட்டச் சொன்னால் தொட்டுக் காட்டிய பாகம் ஒரு பலகையையோ அல்லது காலையோ, ஆணியையோ, குமிழையோ, கைப்பிடியையோதான் தொட்டுக் காட்டியதாய்க் காணப்படும். அவன் லாந்தர் என்பதாகக் காட்டியது (ஏதோ ஒரு) கம்பி என்பதானாலும், கம்பி என்பதாக ஒன்றைத் தொட்டுக் காட்டியதாக இல்லாமல் இரும்பைத் தொட்டுக் காட்டியதாகத்தான் காணப்படும், இரும்பு என்பதன்போது ஏதோ ஒருவகையான மண்ணின் (அதாவது துகள்களின்) சேர்க்கையைக் காட்டியதாகத்தான் காணப்படும். ஆகவே லாந்தர், மேசை, கடிகாரம், புத்தகம் என்றதும் ஒருவகை வடிவத்தில் காணப்படும் ஒரு தோற்றத்தின் பெயரே தவிர ஒரு வஸ்துவின் பெயரல்ல என்பதும் இதனால் உணரத் தக்கதாகும். ஜீவன்கள் என்று சொல்லப்படும் உயிர்ப் பிராணிகள் எல்லாம் கூட உருவத்தில் தோற்றத்தில் வேறு வேறு வகையாய்ப் பெயராய்ச் சொல்லப்பட்டாலும் அவற்றின் மூலப் பொருட்கள் ஒன்றேயாகும். ஒரு மனித உருவத்தைக் காட்டி அவனை மற்ற ஒரு மனிதனைத் தொட்டுக் காட்டச் சொன்னால் அவன் ஒரு மனிதனின் சரீரம் என்பதில் ஏதாவது ஒரு அவையவத்தைத்தான் தொட்டுக் காட்டுவான். அந்த அவயவத்திற்கு ஏற்கனவே பெயர் கை, கால், வயிறு, மார்பு, முதுகு, தோள் என்பவை முதலாகிய ஏதாவது ஒரு பெயருடைய அவயவமாகத்தான் இருக்க முடியும்.” (பக். 1996 -97).

புத்தரை முழுமையாகப் பின்பற்றி பெரியார் இந்த வாதத்தை முன்வைப்பதை உணர்கிறோம்.

இறுதியாக,

பெரியார் தனது “பகுத்தறிவு” எனும் அடிப்படை அணுகல்முறையையும் கூட புத்தரிடமிருந்தே எடுத்துள்ளார். புத்தரின் மரணத் தறுவாயில் அவரது சீடர் ஆனந்தர் அவரிடம் இறுதி அறிவுரை கேட்ட போது, “ஆனந்தா! உனக்கான தீவை நீயே உருவாக்கிக் கொண்டு வாழ்ந்துகொள். உனக்கு நீயே விளக்கு” எனச் சொல்லிப் பிரிந்தார் என்பது வரலாறு. ஒவ்வொரு வருக்கும் அவரவர் அறிவே விளக்காக இருக்க முடியும். அவரவர் காலத்துக்கும் சூழலுக்கும் தகப் பகுத்தறிந்து அவரவர்களே முடிவு எடுக்க வேண்டும் என்பதே புத்தரின் கருத்தாக இருந்தது. தான் அருளிய தம்ம உரைகளைக் கூட அவர் தன் சீடர்களும் மற்றவர்களும் கண்மூடிக் கடைபிடிக்க வேண்டிய ’மறை’ என்றோ ‘வேதம்’ என்றோ கூறவில்லை. அவை அவர்கள் சிந்திப்பதற்கான ஒரு கருவி என்று மட்டுமே சொல்லிச் சென்றார்.

பெரியார் சொல்வார்:

“2500 வருடங்களாக புத்தர் கூறினாரே, ‘யார் எதைக் கூறினார்கள் என்பதற்காக எதையும் நம்பாதே! சிந்தித்துப் பார்! பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்! உன் புத்தி என்ன சொல்கிறதோ அதன்படி நட!’ என்றார். புத்திப்படி நட என்பதால்தான் அவருக்குப் புத்தர் என்று பெர் வந்தது” (பக்.1075) எனப் பெரியார் கூறுவது குறிப்பிடத் தக்கது. “20ம் நூற்றாண்டின் புத்தர்கள் கருஞ்சட்டைக்காரர்களே” என்றும் பெரியார் ஓரிடத்தில் முத்தாய்ப்பாய்ச் சொல்லி வைப்பார் (பக்.1121).

பின்னுரை

முத்துமோகனில் தொடங்கினோம். தனது கட்டுரையில் அவர் இறுதியாக, 

“பெரியாருக்கு பௌத்தம் என்பது ஒரு மதமல்ல. அன்று அறியப்பட்டிருந்த பௌத்தத்தின் எல்லாக் கோட்பாடுகளையும் பெரியார் அப்படியே எடுத்துக் கொண்டார் என்பதும் இல்லை. பௌத்தம் என்பது அவருக்கு ஒரு அறிவு மரபு, ஆராய்ச்சி மரபு, விமர்சன மரபு, எதிர்ப்பு மரபு, ஒரு கலக மரபு. பழைய பவுத்தத்தை ஒரு பொற்காலச் சிந்தனை என்று சிலாகித்து அதனை மீட்டுருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை”

என்கிறார். இது உண்மையே. பெரியாரைப் பொருத்தமட்டில் அவர் மதத்தை ஏற்காதவர் என்பதை அனைவரும் அறிவோம். நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் புத்தரும் மதம் எனத் தன் வழியை அழைத்துக் கொண்டவர் அல்ல என்பதுதான். அவர் உரைத்தது தம்மம். தம்மம் மட்டுமே. அறம் உரைத்த அண்ணல் அவர். தன்னை அவதார மாகவோ, இல்லை இறைத்தூதராகவோ கூட அவர் முன்னிறுத்திக் கொண்டவர் அல்லர். அவர் “ததாகதர்’. இவ்வழியே வந்தவர். இப்படியே சென்றவர். அவ்வளவே. அவர் சொல்லிச் சென்றது அறவாழ்வு என்பது மட்டுமே.

புத்தருக்குப் பின் பௌத்தம் மிகப் பெரிய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டது. தம்மம் மதமாகியது. புத்தர் கடவுளாக்கப்பட்டார். குறைந்த பட்சம் ஆறுக்கும் மேற்பட்ட கிளைகள் அதில் உருவாயின. உலகம் வியக்கும் அளவிற்கு அளவை நூற்களும் தத்துவங்களும், மணிமேகலை போன்ற மகா காவியங்களும் உருவாயின. பெரியாரைப் பொருத்த மட்டில் அவர் புத்தரோடு நிறுத்திக் கொண்டார். புத்தரின் வைதீக மற்றும் உபநிடதத் தத்துவ மறுப்புகள், வேள்வி மற்றும் வருண எதிர்ப்புகள் ஆகியவற்றிலேயே பெரியார் மனம் லயித்தார்.

பெரியார் இவற்றை எல்லாம் சிந்தித்த, எழுதிய பிரச்சாரம் செய்த காலங்களில் இந்திய அளவிலும் தமிழ்ச் சூழலிலும் ஒரு பௌத்த மறுமலர்ச்சி விகசித்துக் கொண் டிருந்தது. கர்னல் ஆல்காட், மேடம் பிளாவட்ஸ்கி ஆகியோரின் ‘தியாசஃபிகல்’ முயற்சிகள், அநகாரிக தர்மபாலாவின் முயற்சியால் புத்தகயா மீட்கப்பட்டது, சென்னையில் மகாபோதி கழகம் உருவானது, அயோத்தி தாசரின் சாக்கிய புத்த கழகம், சிங்காரவேலரின் முயற்சிகள், அண்ணல் அம்பேத்கருக்கே பவுத்தத்தில் நாட்டம் ஏற்படக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான பவுத்த அறிஞர் லட்சுமி நரசு ஆகியோரின் செயற்பாடுகள் ஆகியன இதில் முக்கிய பங்கு வகித்தன. இவர்களில் சிங்காரவேலர், பெரியார் தவிர இதரர் அனைவருக்கும் பௌத்த மதத்தை மீட்டுருவாக்குதல் என்கிற நோக்கமே முதன்மையாக இருந்தது.

பௌத்தத்தைப் பொருத்த மட்டில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. முன்பே குறிப்பிட்டதுபோல புத்தருக்குப் பிந்திய ஆயிரம் ஆண்டுகளில் பெரிய அளவில் பவுத்த தர்க்கம், தத்துவம் முதலியன வளர்ந்தன. பௌத்தம் ஆசிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. புத்தர் கடவுளாக்கப்பட்டார். தம்மம் மதமாகியது. இந்நிலையில் அறிவையும் அறவாழ்வையும் முதன்மைப் படுத்தி எழுந்த தம்ம வழியில் அதற்கு ஒவ்வாத பல நம்பிக்கைகள், கருத்துகள், சடங்குகள் எல்லாம் இணைந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி ஆகியவற்றில் இந்தியத் துணைக் கண்டத்தில் உருவான பவுத்த எழுச்சியில் புத்தருக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் புகுந்த இந்த எல்லா நம்பிக்கைகளும் பெரிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவற்றில் பல புத்தரின் ஆதி பவுத்தத்தின் அடிப்படைகளுக்கு எதிரானவை என்றாலும் கூட.

எனினும் இதே காலகட்டத்தில் (19 ம் நூற்றாண்டின் பிற்பகுதி, 20ம் நூற்றாண்டின் முற் பகுதி) பவுத்தம் குறித்த மிக ஆழமான ஆய்வு, அளவை மற்றும் வரலாற்று நூல்களும் வெளிவந்தன. இவர்களில் பலர் மேலை நாட்டினர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நூல் இந்த வரிசையில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்திய எழுத்துக்கள் என்கிற வகையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு நூல் அறிஞர் லட்சுமி நரசுவின் The Essence of Buddhism.

இந்தப் பின்னணியில்தான் நாம் பெரியாரின் இடையீட்டைக் காண வேண்டும். பவுத்தத்தை ஒரு மதமாகவும் வழிபாடாகவும் அணுகாத வகையில் இவர்கள் எல்லோரிடமிருந்தும் பெரியார் தனித்து நின்றார்.

பவுத்தத்தின் அடிப்படைகளைச் சரியான கோணத்தில் மேலும் அறிய விழைவோர் பெரியாரின் இந்த எழுத்துக்களோடு அண்ணல் அம்பேத்கரின் புத்தமும் தம்மமும், அறிஞர் லட்சுமி நரசுவின் மேற் குறிப்பிட்ட நூல் ஆகியவற்றைப் பயிலலாம். லட்சுமி நரசுவின் நூலை பவுத்தச் சிந்தனைகளைத் தற்போது தமிழகத்தில் பரப்பி வரும் பெரியவர் வணக்கத்துக்குரிய அறிஞர் ஓ.ர.ந.கிருஷ்ணன் அவர்கள் தமிழில் பெயர்த்து அவர்களின் மெத்தா பதிப்பக வெளியீடாக வெளி யிட்டுள்ளார்.

Pin It