அரசியல் தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி அல்லது போராட்டங்களை நடத்தி சிறைக்குச் செல்லும்போதோ,தேர்தலில் தோல்வியடைந்தாலோ அந்தத் தலைவர் மீது வைத்திருக்கும் அதீத பற்றின் காரணமாக தொண்டர்கள் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வது;விரல்,நாக்கு போன்ற உடல் உறுப்புகளை அறுத்துக் கொள்வதுமான ஒரு கலாச்சாரம் தமிழகத்தில் விரும்பியோ, விரும்பாமலோ வளர்ந்து வந்திருக்கிறது.

இதன் நீட்சியாக சமீப காலமாக ஈழப் பிரச்சினையில் தீக்குளிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாய் உள்ளது.

ஈழப் பிரச்சினையில் மத்திய அரசின் கவனத்தை கவருவதற்காக சென்னை சாஸ்திரி பவனுக்கு முன்பு முத்துக்குமார் தீக்குளித்தார். அவரைத் தொடர்ந்து பலர் இந்த தீக்குளிக்கும் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர்.அந்தப் பட்டியலில் செங்கொடிக்கு அடுத்து இப்போது விக்ரம்.

விக்ரமோடு சேர்த்து இதுவரை ஈழப் பிரச்சினைக்காக தீக்குளித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது என்று ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது சமூக ஆர்வலர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த தீக்குளிப்பு சம்பவங்கள் ஈழப் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தி தந்து விடாது.தொடர்ச்சியான- எழுச்சியான போராட்டங்கள்தான் பயன்தரும் என்கின்றனர் அவர்கள்.

உண்மைதான்.ஈழப் பிரச்சினையில் வன்முறையற்ற வலிமையான போராட்டங்களும், தமிழரின் ஒற்றுமையும்தான் ஓரளவிற்காவது அந்த மக்களின் உரிமைகளுக்கு உகந்ததாக இருக்கும்.

தீக்குளிப்பு சம்பவங்களால் தேசிய கவனத்தையோ,சர்வதேச கவனத்தையோ பெற முடியாது. இன்றைய அரசியலில் அதற்கான சூழலோ, அரசியல் தலைவர்களுக்கு அதற்கான மனநிலையோ இல்லை.

மகாத்மா காந்தி உண்ணா விரதம் இருந்தபோது ஆங்கிலேயர்கள் அந்தப் போராட்டத்திற்கு மதிப்பளித்தனர்.காந்தியின் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தினர்.காது கொடுத்து கேட்டனர்.ஆனால் இன்றும் பலர் அரசின் கவனத்தை கவர உண்ணாவிரதம் இருக்கின்றனர். அரசு அவர்களை கண்டு கொள்வதில்லை.

வட கிழக்கு மாநிலங்களில் துணை இராணுவப் படையினருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 11ஆண்டுகளாக ஐரோம் ஷர்மிளா என்ற பெண்மணி போராடி வருகிறார்.ஆனால் மத்திய அரசு இதுவரை அவரது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.மாறாக அவரின் மீது வழக்கு தொடுத்து,கைது நடவடிக்கைகளை பிரயோகித்து அவரை அலைக்கழித்து வருகிறது.

தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் போராட்டங்களும், தீக்குளிப்பு மூலம் கோரிக்கையை வலியுறுத்துவதும் என்ன பயனைத் தந்திருக்கிறது?

மனித உயிர் என்பது மிக விலை மதிக்க முடியாத ஒன்று.அதை மாய்த்துக் கொள்வது என்பது அறிவீனம். இறைவன் கொடுத்த உயிரை அது தனது உயிரானாலும் அதை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

இந்த தீக்குளிப்பு கலாச்சாரத்திற்கு அரசியல் கட்சிகளும்,தமிழ் உணர்வாளர்களும் ஒரு வகையில் காரணம் என்று விமர்சிக்க வேண்டியது இச்சூழலில் அவசியமாகிறது.

முத்துக்குமார் தீ குளித்தபோது,தீக்குளிப்புக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்காமல், அதை போற்றும் வகையில் முத்துக்குமாரின் தியாகத்தை மதிக்கிறோம் என்ற பெயரில் நிகழ்ச்சிகளையும், கருத்தரங்குகளையும் நடத்தினார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

முத்துக்குமாரைப் உயர்த்திப் போற்றி அவரை ஈழ மண்ணுக்கு உயிர் நீத்த தியாகி என்றெல்லாம் புகழ்ந்த நடவடிக்கைகள் இதுபோன்ற தீக்குளிப்புக்கு ஏனைய தமிழர்களையும் தூண்டி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே சமயம் தீக்குளிப்பு கூடாது என்று தமிழ் அமைப்புகள் கூறி வருவதையும் மறுப்பதற்கில்லை என்றாலும்,இக்கருத்து அழுத்தமாக முன் வைக்கப்படுவதில்லை. பெயரளவிற்குத்தான் இந்த அறிவுரை சொல்லப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

முத்துக்குமார் உள்ளிட்ட தீக்குளித்த நமது தொப்புள் கொடி உறவுகளின் உணர்வுகள் மதிக் கத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.ஆனால் அவர்களின் உணர்வுகளை மதிப்பது என்பது வேறு.அவர்களின் (தீக்குளிப்பு)செயலை நியாயப்படுத்தி அதை போற்றுவது என்பது வேறு.

இரண்டாவது செயல்,பிறரது மன நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.தானும் தீக்குளித்தால் மதிக்கப்படுவோம்;அது ஈழ மண்ணுக்கு தான் செலுத்தும் அதிகபட்ச பங்களிப்பாக இருக்கும். இதை விட வேறு வகையில் தனது ஈழ உணர்வை வெளிப்படுத்தி விட முடியாது என்பது போன்ற எண்ணங்கள்தான் தமிழகத்தின் ஈழ ஆதரவு இளைஞர்கள் மத்தியிலும் மிகும்.

இதை விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் அமைப்புகள் ஊக்கப்படுத்தியதன் விளைவுதான் இன்று 22,தமிழர்களின் உயிர்கள் பலியானதற்கு காரணம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய தருணம் இது.இந்த படிப்பினையைத்தான் சகோதரன் விக்ரமின் தற்போதைய தற்கொலையிலிருந்து கற்க வேண்டியுள்ளது.

இனி, விக்ரமோடு இந்த தற்கொலை முயற்சிகள் முடிவுக்கு வர வேண்டும். விக்ரமோடு இது முடிந்து போக வேண்டும் என்றால் இதுபோன்ற தீக்குளிப்புகள் சமூகத்தில் வெறுப்புக்குரிய செயலாக பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்.

தீக்குளிப்பவர்களுக்கு எந்த வகையிலும் மதிப்பளிக்கப்படாது என்பது போன்ற கருத்துகள் மேலோங்க வேண்டும்.ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார் என்றால் அது சமூகத்தில் அவமானகரமான செயலாகக் கருதப்பட வேண்டும்.இது ஒன்றுதான் இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொள்பவர்களுக்கு நான் ஜனாஸா தொழுகையை (முஸ்லிமாக மரணித்தவர்களுக்கு நடத்தப்படும் தொழுகை) நடத்த மாட்டேன் என்றார்கள்.

மனிதனின் இறுதிப் பயணத்தின்போதுகூட அவருக்கான தொழுகையை நடத்த நபிகள் நாயகம் முன் வரவில்லை என்ற செய்தி மூலம்-தற்கொலை என்பது எவ்வளவு வெறுப்புக்குரிய செயல் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

முஸ்லிம் சமூகத்தில்,அதுவும் இஸ்லாத்தை அறியாத மக்களிடத்தில் மிகமிக அரிதாக தற்கொலை நிகழ்வதற்கு இஸ்லாத்தின் இந்த போதனைதான் காரணம்.இதுபோன்ற போதனைகள் மூலம்தான் சமூகத்தை சீர்படுத்த முடியும்.

நாமும் தீக்குளிப்புக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுப்போம்.சமூகத்திலிருந்து இந்த கலாச்சாரத்தை விரட்டுவோம். இனி தீக் குளிப்பிற்கு தீ வைப்போம்.

Pin It