தமிழில் கவிதையின் வீச்சு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த வீரியத்துடன் எழுந்திருக்கிறது. பெண்கள் தங்கள் பெண்மொழியைக் கவிதையாக மாற்றியதால்தான் தமிழ்க் கவிதையின் வீச்சு முன்னேறியதா? பெண் கவிஞர்கள் பாலியல் விழைவுகளைக் கவிதையாக்கும் போது கத்திமேல் நடப்பதுபோல் சற்றே பிசகினாலும் வணிக ஊடகங்கள் பிரச்சாரம் செய்வதுபோல மோசமான தளத்துக்குச் சரிந்து போகும் அபாயம் நேர்கிறது. பெண் மொழியின் நுட்பம் குறித்துச் சொல்லுங்கள்.

பெண்மொழி என்பதை பெண்களின் பாலியல் விளைவுகளை மொழிப்படுத்தும் செயலாக குறுக்கப்பட்டுவிடும் அபாயம் இன்று நேர்ந்து கொண்டிருக்கிறது. பெண் இருப்பு சார்ந்த சமூக வாழ்வியல் நெருக்கடிகளையும் அவள் மீது திணிக்கப்பட்ட மதிப்பீடுகளையும் பற்றிப் பேசுவது. அதற்கான மாற்று மதிப்பீடுகளை உருவாக்குவது. தனக்கென வெளியையும் காலத்தையும் சமூக மதிப்பீட்டு வரையறைகளை மீறி மொழிக்குள் கட்டமைப்பதுதான் பெண் மொழி. அதில் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை மதிப்பீடுகளையும் சுமத்தப்பட்ட கடமைகளையும் மொழிக்குள் குலைக்கத் தொடங்குகிறீர்கள். இது நிகழும் போது நீங்கள் இந்த ஆணாதிக்க சமூகத்துக்கு எதிரானவராக உங்கள் எழுத்தால் நிறுத்தப்படுவீர்கள். இவ்வரசியல் மொழி பெண் மொழியாக உருவாக முடியும்.

1995 க்கு பிறகு வெளியான பெண் கவிஞர்கள் கவிதைகள், பெண்களின் இருப்புச் சார்ந்த வெளியையும் காலத்தையும் பேசத்துவங்கியதியதால் உருவான எழுச்சி இது. அதிகமாக பெண் இருத்தலின் நசிவு குறித்தும் பெண் மீது திணிக்கப்படும் தாம்பத்திய உறவின் வன்முறை குறித்தும் அப்போது எழுதத் தொடங்கினார்கள். குடும்பத்திற்குள் நிகழும் ஆண் பெண் உறவில் எழும் முரண் முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழில் பதிவாகத் தொடங்கியதும் ஒரு காரணம். பெண் தன் காதலைக் குறித்து சமூகத் தடைகளை மீறி பேச முடிந்தது. இது ஒரு கட்டம். இந்த முதல் கட்டத்தை மீறி அடுத்த கட்ட அரசியலை நோக்கி பெண்மொழி நகரத்துவங்க ஆரம்பித்துள்ளது. பெண் தன் உடலை ஆணுக்குக் கொடுப்பதற்கான பாலியலி சொல்லாடல்களை கவிதைக்குள் கட்டமைப்பதும் ஆண்மொழிதான்.

இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் எந்த ஆணும் சமூக மதிப்பீடுகளிலிருந்து முற்றாக வெளியேறியவன் அல்ல.

பெண் கவிதைக்குள் ஒரு கனவுக் காதலனைத் தருவிக்கும்போது, அவனுடன் சேர்ந்து சமூக நிறுவனங்களின் மொத்த வன்முறையும் கவிதைக்குள் உங்கள் அனுமதி கோராமலே அத்துமீறி உள் நுழைந்து விடுகிறது. ஆண் உடல் சுதந்திரமாகப் பெண் உடலை ஆலிங்கனம் செய்ய கவிதைக்குள் உலவவிடுவது பெண்ணின் இருப்பையும் ஆளுமையையும் விடுதலையையும் இழிவு படுத்தும் செயலாகும். இதை நான சொல்வதால் சக பெண்கவிகளே என்னை எதிரியாகப் பாவிக்கிறார்கள். என் எழுத்துக்களின் மூலம் பெண்ணை இந்த சமூக வெளியிலிருந்து மீட்டெடுத்து கடத்திக் கொண்டு போகிறேன் மாற்றுலகுக்கு.

அப்பெண் தான் கடக்கும் வெளியையும் காலத்தையும் எனது கவிதைக்குள் பேசுகிறாள். உடல், மன துய்ப்பு இன்பம் என்பது ஆணை மட்டுமே மையப்படுத்தியது என்பதை என் கவிதைக்குள் மறுக்கிறேன். கவிதை என்பது ஒரு சுதந்திர வெளி. அங்கு பெண்ணிருப்பு என்பது பிரபஞ்சத்தின் மூலமாகத் தன்னை நிறுவி பரிபூரணியாக விகசிக்க வேண்டும்.

இதுவரை பெண் எழுத்தைப் பற்றி எவ்வித கவனப்படுத்தல்களும் அக்கறையும் கொள்ளாத வெகுசன ஊடகங்கள் பாலியல் என்பதை விற்பனைச் சரக்காகத்தான் பார்க்கின்றன. அதனால் இவ்வெழுத்தைப் பற்றிய தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இது கத்தி மேலேயோ கயிறு மேலேயோ நடக்கின்ற விசயம் இல்லை. உலகில் பேசப்படாத, எழுதப்படாத எந்த விசயத்தையும் இன்று பெண்கள் எழுதிவிடவில்லை. வெகுசன ஊடகங்களின் சர்ச்சை குறித்தெல்லாம் எழுத்தாளர்கள் கவலையடையத் தேவையில்லை. கவிதைக்குள் கட்டமையும் மதிப்பீடுகளை ஆராய்ந்து விமர்சிப்பதுதான் விமர்சனமாக முடியும். அதைத் தவிர்த்து எழுதும் பெண்ணின் அந்தரங்கமாக அக்கவிதையை வாசித்து அர்த்தம் கொள்வதென்பது வக்கிரத்தின் வரைமுறையற்ற ஆணாதிக்க வன்முறையைத்தான் வெளிப்படுத்துகிறது.

Pin It