மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது முதலில் முஸ்லிம் இயக்கங்கள் மீது பழி சுமத்தப்பட்டது. தொடர்ந்து முஸ்லிம்கள் சிலரை காவல்துறை கைது செய்தது. ஆனால், புலனாய்வு அமைப்பின் விசாரணையில், இந்துத்துவா பெண் சாமியாரிணியான பிராக்கியா சிங் தாகூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோருக்கு மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகச் சொல்லி இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

மஹாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையின் விசாரணையில், குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இந்துத்துவாவினருக்கு தொடர் பிருப்பது தெரிய வந்தபோது, ஆடிப்போன பிஜேபி உள்ளிட்ட இந்துத் துவா கட்சிகள், இது மத்திய காங்கிரஸ் அரசின் திட்டமிட்ட சதி என பிரச்சாரம் செய்தன. மத்திய அரசை கடுமையாக குறையும் கூறின. அதே ஆயுதத்தைத்தான் தற்போது குஜராத் அமைச்சர் கைது விவகாரத்திலும் எடுத்து மத்திய அரசின் மீது அவதூறைஅள்ளி வீசி வருகின்றன இந்துத்துவா சக்திகள்.

சிபிஐயை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தவில்லை என மன்மோ கன் சிங் பதறிப்போய் மறுப்புத் தெரிவிக்கும் அளவிற்கு பிஜேபி உள் ளிட்ட இந்துத்துவாவினரின் அவதூறுப் பிரச்சாரம் வீரியம் பெற்றுள்ளது.

சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் சிக்கியுள்ள குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா கைது செய்யப்படுவதற்கு முன், சி.பி.ஐ. கண்காணிக்கத் தொடங்கியவுடனேயே தங்களது திட்டமிட்டப் அவதூறுப் பிரச்சாரத்திற்கு அடித்தளமிட்டனர் இந்துத்துவாவினர். இதன்படி சிபிஐயை விமர்சனம் செய்வதால் எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. அம்பினை மத்திய அரசை நோக்கி எய்தால் அமித்ஷாவின் கைதைத் தவிர்க்கலாம் எனக் கணக்கு போட்டவர்கள், மத்திய அரசு சிபிஐயை தவறாகப் பயன்படுத்துகிறது என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர்.

பிஜேபி தரப்பிலிருந்து எழுந்த இந்த அவதூ றுக் குரல் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது. தொடர்ந்து, மோடியும் மத்திய அரசை விமர்சித்தார். அவரும் சிபிஐயை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்றார். அமித்ஷா கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் குஜராத்தில் உள்ள பிஜேபி அலவலகத்தில் இருந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதிலும், ""மத்திய அரசு திட்டமிட்டே என் மீது பழி போடுகிறது. அது சிபி ஐயை தவறாகப் பயன்படுத்துகிறது'' என அரற்றினார். எல்லாப் பத்திரிகைக ளும் இந்தச் செய்தியயைப் பரப்பிவிட்டு, மத்திய அரசின் மீது வைக்கப்பட்டி ருக்கிற குற்றச்சாட்டின் சூடு தணியாமல் பார்த்துக் கொண்டன.

இந்த விவகாரத்தின் உச்சகட்டமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக அனைத்துக் கட்சிகளையும் கூட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்தார். எதிர்க்கட்சியான பிஜேபியும் இந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். ஆனால் அரசியல் நாகரீகம் கூடத் தெரியாத பிஜேபியினர், அமீத்ஷா மீதான விசாரணையைக் காரணம் காட்டி பிரதமர் தரவிருந்த விருந்தை புறக்கணிப்புச் செய்தனர்.

அப்செட்டான பிரதமருக்கு அமித்ஷாவைக் கைது செய்யக் கூடாது என நிர்பந்தித்தனர். ஆனால் மத்திய அரசோ, பிஜேபியின் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. இன்னொருபுறம் பிஜேபியின் மீதே கோபமானார் மோடி. மத்திய அரசுக்கு பிஜேபி தலைவர்கள் நிர்ப் பந்திக்கத் தவறி விட்டனர் என தன் கட்சித் தலைமை மீதே விமர்சனப் பார்வையை வீசினார் மோடி. பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண் மையாகிவிடும் என்கிற கோயபல்ஸ் தத்து வத்தை அமித்ஷா விஷயத்தில் கடைபிடிக்கின்றன இந்துத்துவா கட்சிகள்.

முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்ஹா, மாலேகான், ஜெர்மன் பேக்கரி போன்ற குண்டு வெடிப்பு வழக்குகளின் போதும், இவ்வழக்குகளின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போதும் காவல்துறையையோ, சிபிஐயையோ பிஜேபியினர் விமர்சிக்கவில்லை. ஆனால், இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உண்மையி லேயே தொடர்பு கொண்டிருந்த இந்துத்துவா சக்திகளின் முகத்திரையை சிபிஐ கிழிக்கும் போது மட்டும், சிபிஐயை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக அலறித் துடிக்கின்றனர்.

முஸ்லிம் இயக்கங்களின் மீது சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ளும்போது நேர்மையான விசாரணை அமைப்பாகத் தெரிந்த சிபிஐ, இப்போது அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என ஓங்கார ஓலமிடுவது ஏன்?

தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு, பயங்கரவாதிகளாகச் செயல்பட்ட விஷயம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்திக் காட்டி விட்டதே சிபிஐ என்கிற கொந்தளிப்பு தானே இப்படி விமரசனம் செய்யக் காரணமாக இருக்க முடியும்? ஆனால், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசோ, அமித்ஷா கைது செய்யப்பட்டதற்கும் - மத்திய அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. சிபிஐ தன் கடமையைச் செய்கிறது எனத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமரிடம் "செய்தியாளர்கள் கேட்ட முதல் கேள்வியே சிபிஐயை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறதா?'' என்பதுதான். அந்த அளவிற்கு அவதூறுப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது பிஜேபி கும்பல்.

மீடியாக்களும் இது போன்ற அவதூறுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே எழுதுகின்றன. மீடியாக்களுக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் மிக நன்றாகவே தெரியும், சொராபுதீன் வழக்கின் அடுத்தடுத்த நகர்வுகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, சொராப்தீன் வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி அல்ல. 

உச்சநீதிமன்றம்தான் 6 மாத காலத்திற்குள் இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டிருக்கிறதே தவிர, மத்திய அரசு அல்ல. பிரதமர் மன்மோகன் சிங் சொல்வது போல் உள்ளபடியே மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்பது சொராபுத்தீன் வழக்கை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு கூடத் தெரியும் போது, அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமித்ஷாக்களுக்கும், மோடிகளுக்கும் தெரியாதா மத்திய அரசு சிபிஐயை தவறாகப் பயன்படுத்துகிறதா இல்லையா என்று!

- அபு

Pin It