பொதுவாக உலக முஸ்லிம்களுக்கு அரபு நாடுகள் மீது ஒரு வகையான வெறுப்பும், கோபமும் உண்டு. அது, முஸ்லிம் நாடுகள் மீது மேற்கத்திய நாடுகள் நிகழ்த்தும் வன்முறையின் போதும், ஆக்கிர மிப்பு யுத்தங்களின் போதும் அமைதி காப்பது அல்லது தனக்குள் முணகிக் கொள்வதைப் போன்றபலவீனமான எதிர்ப்பைக் காட்டுவது. பாலஸ்தீன் பிரச்சினையாகட்டும், இராக், இரான், ஆப்கான் பிரச்சினைகளாகட்டும் - அரபு நாடுகளின் பங்களிப்பு என்னவோ சபையேறாத அளவிற்குத்தான் இருக்கும்.

இந்த நிலைபாட்டில் சற்றேமாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ என்கிற சந்தோஷக் கீற்றை வெளிப்படுத்துகிறது அண்மையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த, சிரிய அதிபர் பஷார் அல் அசாத், சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் ஆகியோரின் சந்திப்பு.

லெபனானில் ஷியா - சன்னி பிரிவு முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவி வருகிறது. இங்கு ஷியா பிரிவினர் பெரும்பான்மையாகவும், சன்னி பிரிவு முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் இருப்பதுதான். அவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் மோதலுக்கு அடித்தளமிடுகிறது.

சன்னி முஸ்லிம்கள் மீதான ஷியா பிரிவினரின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைமுடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்த சிரிய அதிபர் பஷர் அல் அசாத், முதன்முறையாக லெபனானுக்கு பயணித்துள்ளார்.

லெபனானில் இரு பிரிவு முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்டு வரும் முரண்பாடுகளைக் களைந்து அங்கு அமைதியை ஏற்படுத்த சவூதி அரேபிய அரசுடன் இணைந்து செயலாற்ற இருப்பதாக தெரிவித்துள்ள அசத், சவூதி மன்னர் அப்துல்லாஹ்வைச் சந்தித்து எதிர்வரும் காலங்களில் லெபனானுக்கு ஆதரவாக செயல்படப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு சவூதி மன்னரும் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தலையிட்டு அமைதியை நிலை நாட்டிட அசதுக்கு உரிமையும், பொறுப்பும் அதிகமாகவே உண்டு. ஏனெனில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற சன்னி முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் போது, மற்றஅரபு நாட்டுத் தலைவர்களை விட அதிகமான கவலையை வெளியிட்டு ஷியா பிரிவின் போராளிக் குழுவான ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஹசன் நசுருல்லாஹ்வுடன் அவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியவர்.

தாக்குதல்களினால் சன்னி முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறார் அசத். இதன் முதற்கட்ட முயற்சியாக லெபனான் சன்னி முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விசார ணையை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்திற்கு இரு நாட்டுத் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மற்ற நாடுகளைப் போலவே, ஐ.நா. சபையிலும் பிரச்சினையைக் கொண்டு செல்லும் அளவிற்கு அரபு நாட்டுத் தலைவர்களுக்கு அக்கறைபிறந்திருப்பது வரவேற்கப் பட வேண்டியதே. ஆனால் இது போன்றநடவடிக்கைகளை மத்திய கிழக்கு நாடுகளுக்குள் மட்டும் மேற்கொள்ளாமல் உலகின் மற்றஇஸ்லாமிய நாடுகளின் பிரச்சினை களிலும் தலையிட்டு தீர்வு காண அரபு நாடுத் தலைவர்கள் முன் வர வேண்டும் என்பதே உலக முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு உலக ரவுடியான அமெரிக்கா மீது நடவடிக்கை எடு என ஐ.நா. மன்றங்களில் அரபு நாட்டுத் தலைவர்களின் குரல்கள் ஆவேசமாக ஒலிக்கும் வரை இருந்து கொண்டுதான் இருக்கும்.

- ஃபைஸ்

Pin It