மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி 1976-இல் தொடங்கப்பட்டது. அடுத்த 1977-இல், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலும், சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல்களும் நடைபெற்றன. அந்தத் தேர்தலை மா.பெ.பொ.க. அடியோடு புறக்கணித்தது. அதேபோல் அது முதல் இன்று வரை எல்லாத் தேர்தல்களையும் புறக்கணித்து வருகிறது. ஏன்?

தந்தை பெரியார் அவர்கள் 1945 செப்டம்பர் முதல் அவர் மறைந்த 1973 வரையில் “தனித் திராவிட நாடு”, “தனித் தமிழ்நாடு” கோரினார்.

அப்படித்  தனித் தமிழ்நாடு பெற்றால்தான், நாம் :

 1. பிறவி நால்வருணத்தை ஒழிக்கச் சட்டம் செய்ய முடியும்;
 2. “பழக்கவழக்கச் சட்டம் இன்றும் செல்லும்” என்பதை அடியோடு நிறுத்த முடியும்;
 3. சமதர்மச் சமுதாயம் அமைக்க முடியும்.

1946 முதல் செய்யப்பட்ட அரசியல் சட்டம் மேலே கண்ட குறிக்கோள்களுக்கு எதிரானது.

இந்த நிலையில் 1925-இல் இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் குறிக்கோள் இந்தியாவில் இந்து மதத்தைத் தலைமையாகக் கொண்ட ஓர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதாகும். அதனால் இந்தியா முழு வதையும் செயல்படு களமாக ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொண்டது.

1925-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தொடங்கப் பட்டது. அதுவும் இந்தியா முழுவதையும் செயல்படு களமாகக் கொண்டது.

தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனரல்லாதார் சுய மரியாதை இயக்கத்தை 26.12.1926-இல் தொடங்கினார். அதற்கு முன்னர் திராவிட இன உணர்வுள்ள பார்ப்பனரல் லாத தலைவர்கள், பார்ப்பனரல்லாதாருக்கான அரசியல் பதவி, அரசியல் உத்தியோகம் இவற்றில் பங்குபெறுவதற் கென்று ஒரு அரசியல் கட்சியை அமைத்தனர்.

தந்தை பெரியார் அவர்களோ, பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர்களோ இந்தியாவைச் செயல்படு களமாக எப்போதும் கொள்ளவில்லை.

வெள்ளையன் துண்டு துண்டுகளாகக் கிடந்த இந்தியா வை ஒரு ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான். இந்தியா என்று ஒரு அரசியல் கட்டமைப்பு இருக்கிற வரையில் - இந்தியாவைச் செயல்படு களமாகக் கொண்டால்தான் தந்தை பெரியார் கோரிய எல்லாக் குறிக்கோள்களையும் அடைய முடியும். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இந்து மதத்துக்கு எதிராக இசுலாமியர்கள் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தெளிவாகச் சொன்னார்கள். அதனால் இந்தியாவை இந்து ராஜ்யமாக - இராம இராஜ்யமாக நிறுவ வேண்டும் என, 1948 பிப்ரவரியில் ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்தது. அதோடு கி.பி.2000-இல் ஆர்.எஸ்.எஸ். இராம ராஜ்யம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றியது.

பி.வி. நரசிம்மராவ், இந்தியாவின் பிரதமராக இராஜிவ் காந்திக்குப் பிறகு ஆனார். அவர் காலத்தில் அவருடைய மறைமுக ஆதரவுடன், சங்கப் பரிவாரங்களால் அத்வானி மற்றும் ஜோஷி தலைமையில், அயோத்தியில் பாபர் மசூதி 6.12.1992-இல் இடிக்கப்பட்டது. அதுமுதல் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வரிந்துகட்டிக் கொண்டு இந்திய ஆட்சியைப் பிடிப்பதில் அக்கறை செலுத்தினர்.

 1. இராம ராஜ்யம் அடைவதைக் குறிக்கோளாகக் கொண்ட ராஷ்டீரிய சுயம் சேவக் சங்கம் கட்டுக்கோப்பாக இயங்கு கின்ற இராணுவம் போன்ற அமைப்பாகும்.
 2. மகளிர் அமைப்பு கட்டுக்கோப்பாக இயங்குகிறது.
 3. அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் (ABVP) எல்லாக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் உயிரோட்ட முள்ள மாணவர் அமைப்பாக வேலை செய்கிறது.
 4. “பாஞ்ச சன்யம்”, “ஆர்கனைசர்” என்கிற வார ஏடுகள் தொடர்ந்து வெளிவருகின்றன.

இத்தனை அமைப்புகளும் அனைத்திந்திய அளவில் களப்பணி ஆற்றுகின்றன.

2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய சனதா மட்டும் 303 இடங்களைக் கைப்பற்றி இருப்ப தற்கு இவையே அடிப்படைக் காரணங்களாகும்.

இரண்டாவதாக கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு பணக்காரர்களுக்கு, தொழில் அதிபர்களுக்கு ஆதரவான திட்டங்களைச் செயல்படுத்தியது. உயர் அதிகார வர்க்கத்தில் இந்துத்துவக்காரர்களை அமர்த்தியது. இதற்கு மாற்றாகத் தேர்தல் களத்தில் நின்ற காங்கிரசுக்கு, இந்திராகாந்தி காலத்துக்குப் பிறகு கட்சிக் கிளைகள் பல மட்டங்களில் செயல்படவில்லை. “எல்லாம் தில்லியின் முடிவு” என்பதுபோல் சோனியா காந்தி கையிலும், இராகுல் காந்தி கையிலும் அதிகாரங்கள் குவிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் 16.8.1969-இல் காமராசரை வீழ்த்துவ தற்கு, கலைஞர் உதவியுடன் இந்திராகாந்தி மேற்கொண்ட முயற்சி, தமிழ்நாட்டில் அடியோடு காங்கிரசு பலவீனப்படு வதற்குக் காரணமாயிற்று.

இருப்பினும் கலைஞர் மறைவுக்குப் பிறகு, தி.மு.க.வுக்குத் தலைமையேற்ற மு.க.ஸ்டாலின், தொலைநோக்குப் பார்வை யோடு திராவிடக் கட்சியான அ.தி.மு.க.வையும், பாரதிய சனதாவையும் எதிர்த்து - பெரியார் உணர்வாளர்கள், திராவிட உணர்வாளர்கள், அம்பேத்கர் கொள்கையினர், பொதுவுடைமைக் கட்சியினர் ஆகிய எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணி அமைத்து தேர்தல் நடைபெற்ற 39 இடங்களில் 38 இடங்களைக் கைப்பற்றி இருப்பது பாராட்டத்தகுந்தது.

இன்று பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி அரசு இந்துத்துவாக் கொள்கையை அரியணை ஏற்றுவதில் குறியாக உள்ளது. இதை நாம் எல்லோரும் உணர வேண்டும்.

 1. கல்வித் திட்டத்தில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இராமாயணம், பாரதம், பகவத் கீதை முதலானவை கட்டாயப் பாடங்களாக வைக்கப்பட அரசு முயற்சித்தால், நாம் எல்லோரும் ஒன்றுபட்டு நின்று அதை எதிர்க்க வேண்டும்.
 2. இந்தி, மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியா முழு வதிலும் ஆட்சி மொழியாவதை எல்லோரும் சேர்ந்து எதிர்த்து நின்று தடுக்க வேண்டும்.
 3. எந்த வடிவத்திலும் சமற்கிருதம் தொடக்கப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டால் அதைத் தடுத்து நிறுத்திட ஆவன செய்ய வேண்டும்.
 4. சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு இன்னமும் உயர் கல்விகளிலோ அரசுப் பதவிகளிலோ விகிதாசாரப் பங்கீடு கிடைக்கவில்லை. அதற்கு நாம் அனைத்திந்திய அளவில் முயற்சிக்க வேண்டும்.
 5. பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் எல்லா நிலைப் பதவிகளிலும் விகிதாசாரப் பங்கு கிடைத்திட நாம் ஆவன செய்ய வேண்டும்.

ஆட்சியில் அப்போதுதான் பெரும்பாலான மக்களுக்கு உரிய பங்கு வந்து சேரும். நிற்க.

I. இந்தி மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி ஆவதற்குத் தகுதி உள்ள மொழி என்று இந்திக்காரர்கள் தொடக்கம் முதலே பொய் சொல்லுகிறார்கள்.

உண்மை என்ன?

அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியில் உள்ள பட்டியலில் 2001-இல் எடுத்த மக்கள் தொகைக் கணக்குப் படி, 102 கோடிப் பேரில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட வர்கள் 25,79,19,635 பேர் தான். இது இந்தி என்று பொதுத் தலைப்பிட்டு 50 மொழிகளுக்கு மேற்பட்ட தாய்மொழிகளுள், இந்தி 18ஆவதாக உள்ளது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லாமல் மற்றும் 50 மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்டவர்களைச் சேர்த்து 42,20,48,462 பேர் என்று இந்தி என்கின்ற பொதுத் தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளது.

அதேபோல் 2011 மக்கள் தொகைக் கணக்கின்படி, 18ஆவது வரிசையில் உள்ள இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்கிற கணக்கு 32,33,30,097 பேர் ஆகும். ஆனால் இந்தி என்று பொதுத் தலைப்பிட்டு 50 மொழிகளுக்கு மேற்பட்ட தாய்மொழிகளைக் கொண்டவர்கள் 52,83,47,193 பேர் என்பதாகும். இது 121 கோடிப் பேரில் உள்ள 43.65 விழுக்காடு என்று கண்டுள்ளது. மீண்டும் 50 தாய்மொழிகளுக்குச் சேர்த்து அதன்படி 43 விழுக்காடு பேர் இந்தி பேசுகிறார்கள் என்று சொல்வது தவறல்லவா?

திராவிட மொழிகளுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மற்றும் இவை போன்ற மொழிகளைப் பேசுவோர் இன்றைய இந்தியாவில் 25 கோடிப் பேருக்கு மேல் உள்ளனர். இவர்கள் இந்தி ஆட்சிமொழி என்பதை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.

அந்தந்த மாநிலத்தில் உள்ள மய்ய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாநில மொழியே அலுவல் மொழியாகத் தொடர வேண்டும். அஞ்சல் துறை, வருமான வரித்துறை, தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள் முதலான மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் (Official Language) மொழியாக இருக்க வேண்டும். மேலே கண்ட இதற்குத், தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுள்ள 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாடுபட வேண்டும்.

II. 2001 மக்கள் தொகைக் கணக்குப்படி சமற்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 14099 பேர்தான். சமற்கிருதம் என்கின்ற பொதுத் தலைப்பில் காணப்படுவோர் 14135 பேர்தான். சமற்கிருதம் பார்ப்பனர் அர்ச்சகராக இருப்பதற்கும், புரோகிதராகச் செயல்படவும் பயன்படக் கூடிய மந்திர மொழி. இது மொத்தப் பார்ப்பனரல்லாதாருக்கு எதிரானது.

இப்போது பாரதிய சனதா கூட்டணி 353 இடங்களைப் பெற்றுள்ளது. இது அறுதிப் பெரும்பான்மையை விட வலிவான நிலைமையைக் கொண்டுள்ள ஆட்சியாகும். இதை நாம் எல்லோரும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எதிரணியில் போட்டியிட்ட காங்கிரசுக் கட்சி இப்போது 52 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இது இரண்டாவது பெரும்பான்மை பெற்ற கட்சியாகும். அங்கீகாரம் பெற்ற எதிர்க்கட்சியாகக்கூட காங்கிரசு ஆக முடியாது.

2014-இல் ஏற்கெனவே 37 இடங்களைப் பெற்று இருந்த அ.தி.மு.க., செயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. ஆட்சி பிரதமர் மோடிக்குக் கையாளாக விளங்கியது இனியும் விளங்கும்.

இந்தச் சூழ்நிலையில் 17ஆவது நாடாளுமன்றத்தில் 38 இடங்களைப் பெற்று 3ஆவது இடத்தைப் பெற்றுள்ள தி.மு.க. கூட்டணி, முடிந்த வரையில் அனைத்திந்தியப் பார்வையோடு நாடாளுமன்றத்தில் செயல்பட வேண்டும்.