ஜனவரி 20-26, 2012 தேதியிட்ட சமுதாய மக்கள் ரிப்போர்ட் இதழில் டெல்லி பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்ட்டர் விவகாரம் குறித்து விரிவாக எழுதியிருந்தோம்.

உத்திரப் பிரதேசத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் தீயைப் பற்ற வைத்தது பாட்லா ஹவுஸ் விவகாரம். இன்றும் கூட பாட்லா ஹவுஸ் விவகாரத்தில், காங்கிரஸ் அரசு மறு விசாரணைக்கு உத்தரவிடாமல் இருப்பது உ.பி. முஸ்லிம்கள் மத்தியில் கோபக் கணலாக கனன்று கொண்டிருக்கும் நிலையில் - கடந்த 17ம் தேதி நள்ளிரவு பாட்லா ஹவுஸ் இருக்கும் டெல்லி ஜாமியா நகரில் டெல்லி போலீசார் நடத்திய போலி ரெய்டால் கொந்தளித்துள்ளனர் அப்பகுதி முஸ்லிம்கள்.

17ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு ஜாமியா நகர் பகுதிக்கு வந்த சீருடை அணியாத டெல்லி போலீஸின் பங்களாதேஷ் பிரிவு காவல்துறையினர் அங்கு திடீர் சோதனையில ஈடுபட... விழித்துக் கொண்ட அப்பகுதி முஸ்லிம்கள் காவல்துறையினரை சுற்றி வளைக்க... இரு தரப்புக்கும் மோதல் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் காவல்துறைக்கு கூட தகவல் தெரிவிக்காமல் ஜாமியா நகருக்கு வந்திருக்கிறது டெல்லி போலீஸ். பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து போலீஸôரால் முஸ்லிம் இளைஞர்கள் பிடித்துச் செல்லப்பட்டதையும், போலீஸ் டார்ச்சரையும் அனுபவித்து வந்த ஜாமியா நகர் மக்களின் பயம் விலகாத நிலையில் மீண்டும் ஒரு பீதியைக் கிளப்பியுள்ளது டெல்லி போலீஸ்.

பங்களாதேஷைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஜாமியா நகர் பகுதியில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளதாகவும் அவர்களைப் பிடிக்கத்தான் இந்த சோதனை என்று கூறிய டெல்லி போலீஸ், அப்பகுதியைச் சேர்ந்த ருஸ்தம் கான் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போலீஸ் வேனில் திணிக்க முற்பட்டிருக்கின்றனர்.

மற்றவர்களோடு சேர்த்து தன்னை ஏன் கைது செய்கிறது போலீஸ் என்று ருஸ்தம் கானும், ருஸ்தம் கானோடு சேர்த்து எங்களை ஏன் கைது செய்கிறது போலீஸ் என மற்றவர்களும் புரியாமல் குழம்பியிருக்கின்றனர்.

இதற்கிடையில், ருஸ்தம் கானின் மனைவி ரூபினாவுடன் வேறு சிலரையும் கைது செய்து வேனில் ஏற்றியிருக்கிறது போலீஸ். கைது செய்யப்பட்டவர்களின் அலறல் குரல் கேட்டு விழித்தெழுந்த ஏரியா மக்கள், இவர்களை ஏன் கைது செய்கிறீர்கள் என எதிர்ப்பு காட்ட... போலீசுக்கும் பொது மக்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர் இரண்டு ரவுண்டு வானத்தை நோக்கி சுட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

கைது செய்து வேனில் ஏற்றப்பட்ட பகுதிவாசிகள் பங்களாதேஷைச் சேர்ந்த சட்ட விரோத குடியேறிகள் என டெல்லி போலீசின் பங்களாதேஷ் பிரிவினர் கூற... அவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள் என்பதற்கான ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைக் காட்டி அவர்களை மீட்டுள்ளனர் ஏரியாவாசிகள். இதனையடுத்து டெல்லி போலீசின் வரம்பு மீறலைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஜாமியா நகர் காவல் நிலையத்தில் டெல்லி போலீசுக்கு எதிராக புகார் அளித்ததைத் தொடர்ந்து, சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 6 போலீசாரை சஸ்பெண்ட் செய்துள்ள உயரதிகாரிகள், அவர்கள் மீதான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி தென் மண்டல காவல்துறை இணை கமிஷ்னர் அஜய் சவுத்ரி, “டெல்லி போலீஸின் பங்களாதேஷ் பிரிவினருக்கு வந்த தகவலையடுத்து தான் அவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஆயினும், உள்ளூர் காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் தராதது தவறுதான்...'' எனத் தெரிவித்துள்ளார்.

“காவல்துறை மக்களை பாதுகாக்க வேண்டும். மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். மாறாக இதுபோன்று சட்ட விரோத ரெய்டு நடத்தி மக்களை மனரீதியான பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடாது...'' என்கிறார் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாள ரான அக்லாக் அஹ்மது.

ஜாமியா நகரில் வசிக்கும் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆசிப் அஹ்மது கானும் போலீஸôரின் இந்த சட்ட விரோத நடவடிக்கையைக் கண்டித்துள்ளார்.

“இப்பகுதியில் போலீசார் கூறுவதுபோல பங்களாதேஷைச் சேர்ந்த எவரும் இல்லை. அப்படி காவல்துறையினர் சோதனையிட வேண்டுமானால் அதற்கான சட்ட ரீதியான வழிமுறை இருக்கிறது. அதை விடுத்து நள்ளிரவில் ரெய்டு நடத்தி பொது மக்களை பீதிக்குள்ளாக்குவது, அதுவும் உள்ளூர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்காமல் ரெய்டு நடத்துவது சட்டத்தை மீறிய செயல்தான்...'' என்கிறார் ஆசிப் முஹம்மது கான்.

சில வாரங்களுக்கு முன் மும்பையிலி ருந்து வந்த மஹாராஷ்டிரா தீவிரவாத தடுப் புப் படை இதே ஜாமியா நகருக்கு வந்து தகீ அஹ்மது என்ற முஸ்லிம் இளைஞரை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயற் சித்த சம்பவம் நிகழ்ந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன், தகீ அஹ்மதுவுக்கு "சம்மன்' கொடுக்கத்தான் தீவிரவாதத் தடுப்புப் படை யினர் சென்றனர் என கதை விட்டது மும்பை போலீஸ்.

ஆனால் டெல்லிக்கு வந்து ஒருவருக்கு சம்மன் வழங்க மும்பை போலீசுக்கு சட்ட அதிகாரம் கிடையாது. அது டெல்லி போலீஸின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்ற அறிவு கூட இல்லாமல் நடந்து கொண்டது மஹாராஷ்டிரா தீவிரவாதப் படை என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி காவல்துறையின் சட்ட மீறல்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையிலும், அதனைக் கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைத் தான் டெல்லி போலீஸின் பங்களாதேஷ் பிரிவினர் நடத்திய நள்ளிரவு வேட்டை வெளிப்படுத்தியுள்ளது.

Pin It