உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைக் குறி வைத்து ஆரம்ப கட்டத்தில் இயங்கியது பாஜக. உ.பி., பிரச்சாரத்தின் போது முஸ்லிம்கள் வெறுப்படையாத வகையில் தனது பிரச்சார வியூகத்தை அது அமைத்திருந்தது. பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உமா பாரதி, காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு துரோகம் செய்கிறது என்ற வகையில்தான் தனது பிரச்சாரத்தை அமைத்துக் கொண்டார்.

ஆனால், முஸ்லிம்களின் வாக்கு தனக்கு கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தபின் இந்துக்களின் வாக்கு வங்கியையாவது கவர்ந்து விட வேண்டும் என்பதற்காக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அதோடு பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் ராமர் கோவில் கட்டும் திட்டம் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்துடன் வெளியிடப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையை சிறுபான்மை சமூகமோ, அரசியல் கட்சிகளோ எதிர்க்கவில்லை. மாறாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பதால் இவ்விவகாரம் முக்கியத்துடன் கவனிக்கப்படுகிறது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையிலிருந்து ராமர் கோவில் கட்டும் திட்டத்தை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருக்கின்றன அகில பாரதிய இந்து மஹா சபை, அகில பாரதீய சான்த் சமிதி, சான்த் மஹா சபை ஆகிய இந்து மத அமைப்புகள்.

இந்து மூன்று அமைப்புகளும் தேர்தல் ஆணையத்திடம் அளித்திருக்கும் புகார் மனுவில், “இந்தியா பல்வேறு மதங்களையும், பன்முக சமுதாயங்களையும் கொண்ட நாடு. இந்திய அரசியல் அமைப்பு அனைத்து மத - சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு சமமான உரிமையை வழங்கி இருக்கிறது. அதனால் பாஜகவின் தேர்தல் அறிக்கையிலிருந்து ராமர் கோவில் கட்டும் அஜன்டாவை நீக்க வேண்டும்...'' என குறிப்பிட்டுள்ளன.

அகில பாரதீய ஹிந்து மஹா சபையின் தேசிய தலைவரான சுவாமி சக்கரபாணி, “ராமர் கோவில் விவகாரம் என்பது மிகவும் நுட்பமான ஒரு பிரச்சினை. இதனை அரசியல் ஆக்குவது குற்றம். தவிர, ராமர் கோவில் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை பாஜக சேர்த்திருப்பதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருக்கிறது...'' எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த மூன்று ஹிந்து மத அமைப்புகளின் புகாரின் அடிப்படையில் பாஜகவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் தேர்தல் ஆணையத்தின் செயலாளரான பி.சி. பத்ரா.

“சில தினங்களுக்கு முன் சான்த் சமாஜ் அமைப்பின் சார்பாக தேர்தல் அதிகாரிகளை சந்தித்த குழுவினர், பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள ராமர் கோவில் அறிவிப்பை உடனடியாக நீக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்...'' என்கிறார் சான்த் மஹா சபையின் வட இந்தியாவுக்ககான தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்.

இதற்கிடையில் பாஜக மீது (சட்ட) அவமதிப்பு வழக்கை தொடரப் போவதாக அறிவித்திருக்கிறார் சுவாமி சக்கரபாணி. பாஜகவின் மதவாத அரசியலை நல்ல முறையில் புரிந்து கொண்டதோடு, அதனை எதிர்க்கவும் ஹிந்து அமைப்புகள் முன் வந்திருப்பது உள்ளபடியே பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.

இந்த மூன்று ஹிந்து மத அமைப்புகளைப் போன்றே அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பும் ஏனைய ஹிந்து சமய அமைப்புகளும் பாஜக போன்ற மதவாத அரசியல் கட்சிகளை புறக்கணித்தால் தேசிய ஒற்றுமை பாதுகாக்கப்படும்.

Pin It