ஜனவரி 20-26, 2012 தேதியிட்ட சமுதாய மக்கள் ரிப்போர்ட்டில், "தொடரும் முஸ்லிம் விரோதப் போக்கு - காவல்துறையின் காட்டு தர்பார்' என்ற தலைப்பில், மதுரையில் அத்வானி பிரச்சாரம் செல்லவிருந்த பாதையில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டு விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் மதுரை காவல்துறை, அப்பாவி முஸ்லிம்களை தொந்தரவு செய்து வருவதை குறிப்பிட்டிருந்தோம். அதில், மதுரை எஸ்.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி, தென்காசியைச் சேர்ந்த சுலைமான் சேட் என்ற இளைஞரைப் பிடித்து, “எங்களுக்கு இன்ஃபார்மராக மாறு. இல்லையென்றால் உன்னை டெல்லிக்கு தூக்கிட்டுப் போய் ஐ.பி.யிடம் மாட்டி விட்டுடுவேன்...'' என்று மிரட்டியிருந்ததையும் சுட்டிக் காட்டி நேரடி ரிப்போர்ட்டாக கொடுத்திருந்தோம்.

இந்த விவகாரத்தில், சுலைமான் சேட்டிற்கு போலீஸ் தொந்தரவு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் சுலைமான் சேட்டின் மனைவி ஷர்ஃபு நிசா.

ஷர்ஃபு நிசாவைப் போன்றே நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெஹ்ராஜ் பேகம் என்ற பெண்மணியும், தனது கணவர் முஹம்மது ஹனிபாவை பைப் வெடிகுண்டு சம்பவத்தில் சம்பந் தப்படுத்தி காவல்துறை தொந்தரவு செய்வதாக வழக்கு தொடுத்திருந்தார். இந்த இரு வழக்குகளையும் இணைத்து விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த முன் மாதிரி தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

மெஹ்ராஜ் பேகம் தனது மனுவில், “எனது கணவர் முஹம்மது ஹனீபா எங்கே இருக்கிறார் என்ற விபரம் எனக்கு தெரியாது. ஆனால் போலீசார் தேவையில்லாமல் விசாரணை என்ற பெயரில் எனக்கு தொந்தரவு கொடுத்து வருகின்றனர்!'' என்றும், ஷர்ஃபுநிசா தனது மனுவில், “பைப் வெடிகுண்டு தொடர்பாக என் கணவர் சுலைமான் சேட்டை தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரித்து வெடிகுண்டு சம்பவத்துக்கும் என் கணவருக்கும் சம்பந்தமில்லை என்று விடுவித்து விட்டார்.

அதன் பின்னர் தேவையில்லாமல் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி என்னையும், எனது கணவரையும் துன்புறுத்தி வருகிறார்...'' என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதி சசிதரன் காவல்துறைக்கு எதிராக சாட்டையை சுழற்றியிருக்கிறார்.

நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவில், “ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க போலீஸôருக்கு உரிமை உள்ளது. ஆனால் விசாரணை என்ற போர்வையில் தேவையில்லாமல் அப்பாவிகளை துன்புறுத்த எந்த அதிகாரமும் இல்லை. விசாரணைக்காக போலீசார் அழைக்கும்போது எந்த வழக்கு விசாரணைக்காக அழைக்கிறோம் என்ற தகவலை சொல்ல வேண்டும். சம்மன் இல்லாமல் ஆஜராகச் சொல்வது தவறு.

காவல்துறையில் சில அதிகாரிகள் தாங்கள் வைத்தது தான் சட்டம் என்று நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். இப்படிப்பட்ட போலீஸ் அதிகாரிகள் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும். உண்மை நிலையை கருத்தில் கொண்டு சம்மன் கொடுத்து விசாரிக் வேண்டும். அதே சமயம், காவல்துறையில் சமூகப் பார்வையுடன் செயல்படும் நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அதிகாரிகள் விசாரணையின்போது கண்ணியம் காக்கின்றனர்...'' என்று சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து அதிகார பலத்தை காட்டும் காவல்துறை அதிகாரிகளுக்கு உரைக்கும் வகையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

போலீசாரால் துன்புறுத்தலுக்கு ஆளான சுலைமான் சேட் டிடம் தீர்ப்பு குறித்து கேட் டோம்.

“இந்தத் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். நீதிபதி சசிதரன் தெள்ளத் தெளிவான தீர்ப்பைத் தந்திருக்கிறார். காவல்துறையினரால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டத்தை தவறாக பயன்படுத்தும் போலீஸôருக்கு இது சாட்டையடித் தீர்ப்பு.

நீதிபதி சசிதரன் விசாரணையின்போது, “சுலைமான் சேட் உங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறார்; நீங்கள் அழைக்கும்போது வருகிறார். பிறகு ஏன் நீங்கள் தேவையில்லாமல் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? நீங்கள் சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு இன்ஃபார்மராக மாறு என்று சொல்வது அதிகாரிகளுக்குரிய அழகல்ல...'' என்று போலீஸ் தரப்பைப் பார்த்துக் கேட்டார்.

உண்மையிலேயே நான் கோர்ட்டுக்குப் போன பின்தான் முஸ்லிம்கள் உயிரோட வாழ உரிமை இருக்கு என்கிற நம்பிக்கை எனக்கு வந்தது. பாரபட்சம் காட்டாத நேர்மையான நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் தெரிகிறது. அது மட்டுமல்ல, காவல்துறையில் பாதுகாப்பு இல்லை. நீதிமன்றத்தில்தான் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்ற எண்ணத்தை நீதிபதி சசிதரனின் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு...'' என்றார் முக மலர்ச்சியுடன்.

இந்த சிறப்புமிகு தீர்ப்பின் பின்னணியில் இயங்கிய வழக்கறிஞர்களான பஹதூர் ஷா, ஜின்னா, ஆறுமுகம் ஆகியோர் நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள்தான். இந்தத் தீர்ப்பின் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் பாதுகாப்பை பெறுவார்கள் என்றால் அது மிகையல்ல.

தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்கள் தரப்பு என்ன சொல்கிறது?

நாம் பஹதூர்ஷாவிடம் பேசினோம். “எவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றால் சம்மன் கொடுத்து சட்டப் படி அழைக்க வேண்டும். அதை பெரும்பாலான விசாரணை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. சுலைமான் சேட் போன்றவர்கள் தொழில் செய்பவர்கள். இப்படித் தொழில் செய்பவர்களை தொல்லை கொடுக்கும் நோக்கில்தான் காவல் துறை செயல்படுகிறது. மதுரை, நெல்லை, கோவை, சென்னை ஆகிய நான்கு நகரங்களில் எஸ்.ஐ.டி. அலுவலகம் இருக்கிறது. ஒரு வழக்கிற்காக நான்கு இடங்களுக்கு விசாரணைக்காக அழைக்கிறார்கள். மைசூரில் தொழில் செய்யும் சுலைமான் சேட் இப்படித்தான் அலைகழிக்கப்பட்டார்.

தினந்தோறும் மதுரை, சென்னை, கோவையிலிருந்து 5 முதல் 10 நபர்களை (முஸ்லிம்களை) விசாரித்துக் கொண்டிருக்கிறது எஸ்.ஐ.டி. என்ற தகவல் எங்களுக்கு வருகிறது. விசாரணைக்கு அழைக்கும்போது, எழுத்துப்பூர்வமாக நாங்கள் பதில் தருகிறோம். காவல்துறை சட்டப்படி சம்மன் கொடுத்து அழைக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை.

விசாரணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லும்போதே அவரை போட்டோ எடுப்பது, கை ரேகை பதிவு செய்வது, வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்குவது என தனி நபர் உரிமையை மீறுகிறது காவல் துறை. டி.கே. பாசு வழக்கில் தனி நபர் உரிமை மீறல் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு இருந்தும் காவல்துறை இதனை கடைபிடிப்பதில்லை. நீதிபதி சசிதரன் கொடுத்த தீர்ப்பைப் பொறுத்தவரை அற்புதமான தீர்ப்பு. குறிப்பாக முஸ்லிம்களுக்கு இது மகிழ்ச்சியளிக்கக் கூடிய தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு முஸ்லிம் இளைஞர்களுக்கு பாதுகாப்பானதும் கூட...'' என்றார் வழக்கறிஞர் பஹதூர் ஷா சந்தோஷமான குரலில்.

Pin It