நரேந்திர மோடி 2014 தேர்தலில், தான் 'மக்களின் சேவகன்' என்றும், 2019-இல் தான் 'காவலன்' என்றும், 2024 தேர்தல் பரப்புரையில் தான் 'கடவுளின் அவதாரம்' என்றும் பேசினார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, 'நான் தாயை இழந்து அனாதையாய் நிற்கிறேன்' என்று அனுதாபம் தேடுகிறார்.

modi 344கடந்த காலங்களில் பாஜகவிற்கு அறுதிப் பெரும்பான்மை இருந்ததால், இறையாண்மை பெற்ற அரசு எந்திரங்கள் மீது அக்கட்சி ஆதிக்கம் செலுத்தியதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் இருந்தன. நீதித்துறை, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித் துறை, சிபிஐ என அனைத்து அமைப்புகளும் பாஜகவின் கிளை அமைப்புகளா என்ற அய்யதிற்கு உள்ளாகும் வகையில் இருந்தன. இந்திய ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதை எதிர்க்கட்சிகள் மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தன. இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அதன் பன்மைத்துவம் பலிகொடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், பாஜகவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டியதை மக்கள் உணரத் தொடங்கினர்.

இரண்டாவது, இந்த வாக்குச் சரிவிற்கு மக்களின் அடிப்படை சிக்கல்கள், பொருளாதார சரிவு முக்கிய பங்காற்றின. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காதது, விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல்,எரிவாயு உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் விலையுயர்வு போன்றவை மக்களைப் பெரிதும் பாதித்தன.

பாஜக அரசின் சமூக நீதிக்கு எதிராக, மக்களின் உரிமைகளை முடக்கும் அடிப்படையிலான மசோதாக்கள் பல்வேறு சமூகக் குழுக்களின் எதிர்ப்பைப் பெற்றன. சிறுபான்மையினருக்கு எதிராக மக்களைப் பிரித்தாளும் முறை மக்களிடம் எடுபடவில்லை. பெண்கள் அவமதிப்புக்கு உள்ளாவது, சிறுபான்மையினர் தாக்கப்படுதல், பட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தும் செயல்பாடுகள், கூட்டு வன்முறைகள் தலைவிரித்தாடின.

இறுதிக்கட்டத் தோல்வி பயத்தில் இஸ்லாமியருக்கும், தமிழர்களுக்கும் எதிராக மோடி பேசிய பேச்சுகள் இதுவரை இந்தியப் பிரதமர்கள் யாரும் பேசாத இழிவான பேச்சாகும்.

மூன்றாவது, இத்தேர்தலில் வலுவான கூட்டணிக் கட்சிகளின் துணையில்லாமல் பாஜக தள்ளாடியது. இதனால் அக்கட்சி பல இடங்களில் தனித்தே விடப்பட்டது. கூட்டணிக் கட்சிகளை பலவீனப்படுத்தி, தங்களை வலுப்படுத்திக் கொள்வது என்ற சுயநல ஆதிக்கச் சிந்தனைதான் இதற்குக் காரணம்.

மேலும் பாஜகவின் பழமைவாதமும், வெறுப்பு அரசியலும், அறிவியலுக்கு முற்றிலுமாக எதிரான சிந்தனை யோட்டமும் புதிய படித்த வாக்காளர்களிடம் இருந்து அக்கட்சியை அந்நியப்படுத்தி இருக்கிறது.

தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டத்தில் பேசிய மோடி ஜெய் ஸ்ரீராம் என்று கோசமிடும் வழக்கத்தை மாற்றி, 'ஜெய் ஜெகநாத்' என்று கோசமிட்ட போது, அவரின் தொண்டர்கள் பரிதாபமாக "ராமருக்கு என்ன ஆனது" என்று கேட்கும் அளவிற்கு இத்தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

பாவம்! ராமரும் காப்பாற்றவில்லை மோடியை!

- மதிவாணன்

Pin It