தூங்கிவிட்ட வெம்புலிகாள்! போதுமுங்கள் பெருந்தூக்கம்
தேங்கிவிட்ட நிலையறிந்தும் தாங்குவீர்கள் நெடுஞ்சோம்பல்
ஓங்கிவிட்ட ‘ஆரியத்தின் ஒவ்வாமை’ப் பொறுப்பீரோ?
தாங்கிவிட்ட தமிழ்மூச்சால் தரைநடுங்க விழிப்பீரே!
ஆரியத்தின் சிறைபட்டும் ஆயுளுக்கும் தண்டனையா!
நேரியத்தின் பெரியாரை உன்முன்பு கண்டனையா?
பார்இயத்தின் உயிரியக்கம் மானுடமே என்றனையா?
வேர்இயத்தின் சுவைப்பலவின் பகுத்தறிவை உண்டனையா?
அடைப்பட்ட காற்றுமது அழிபுயலாய் ஆர்த்தெழுமே!
தடைப்பட்ட தொழிலாளர், மேநாளும் பூத்தெழுமே!
மடைப்பட்ட நீர்வெள்ளம்; வயலெல்லாம் செழித்தெழுமே!
விடைக்கண்ட நீ விழித்தால் வையகமே விழித்தெழுமே!
வேங்கைவயல் குடிநீரில் மலம்பெய்தோர் மானிடரோ?
ஓங்கிவந்து சாதிபெய்த ஆரியந்தான் பேரிடரே!
ஏங்குமேழை வயிறெரிய ஏய்த்தவர் இரு பிறப்பாளர்!
வீங்குமூடக் களைபறித்த பெரியார் ஒரே-ஒரு சிறப்பாளர்!
கருவறையில் பெண்புணர்ச்சி செய்த கீழோன் மேலோனாம்
மரக்கிளையில் தொங்கி நோற்றுத்தலை இழந்தோன் (சம்புகன்) கீழோனாம்
குடியரசுத் தலைவர் (கீழ்ச்சாதி) வருங்கோயில் தீட்டாகும்
முடியரசாம் மேல்சாதிக் ‘குடியரசை’ வேட்டையாடும்
கொட்டடாநீ பெரும் பறையைத் திசைச் செவிகள் கிழிந்திடவே!
தட்டடாநீ கடும்ஒட்டடைப் புதுப்பொலிவுப் பொழிந்திடவே!
முட்டடாநீ மனத்தின்கண் பெரியாரை வைத்தவாறே!
முட்டாள்கள் மதமுகடுப் பொடிப்பொடியாய்ச் சிதறிடவே!
- பேராசிரியர் இரா.சோதிவாணன்