raj bhavan chennaiதிடுமென இன்றைக்கல்ல... கடந்த 1652இலிருந்து ஆளுநர்கள் என்போர் வந்தேறி அதிகாரிகளாக நம்மை ஆண்டு வருகின்றனர்.

எல்பின்ஸ்டன், நேப்பியர் பக்கிங்காம், கன்னிமரா, வெலிங்டன், தாடண்டர், ஸ்டான்லி - இந்தப் பெயர்களெல்லாம். சென்னையில் உள்ள இடத்தின் பெயர்கள் என்று கருதிவிட வேண்டாம். அவை யெல்லாம் அன்றைய சென்னை மாநிலத்தை ஆண்ட ஆளுநரின் பெயர்கள். ஏறத்தாழ 85 ஆங்கிலேய ஆளுநர்கள் 1652 முதல் 1948 வரை ஆட்சி செய்திருக்கிறார்கள்.

1948இல் சர் கிருஷ்ண இராசேந்திர சின்னாஜி தொடங்கி, இன்றைக்கு 2022 இல் ஆர்.என்.இரவி வரை ஏறத்தாழ 25 ஆளுநர்கள் தமிழ்நாட்டை மேய்ந்திருக்கிறார்கள்.

ஆளுநருக்கு மாதத்திற்கு மூன்றரை இலக்கம் உருபா சம்பளமாம், அலுவலக அலுவலர்கள், பாதுகாவலர்கள், சென்னையிலும், உதகையிலுமான இரண்டு மாளிகையிலுமுள்ள ஏறத்தாழ 300 ‘ஏக்கரு’க் கானத் தோட்டத் தொழிலாளர்கள், மாளிகை இல்லப் பணியாளர்கள் என மொத்தத்தில் ஆயிரக்கணக் கானவர்களுக்கும் தமிழ் நாட்டு அரசே கொட்டி அழ வேண்டுமாம்.

இவையன்றி ஆளுநருக்கான வண்டிகளுக்கு கன்னெய் (பெட்ரோல்), வானூர்தி உள்ளிட்ட போக்குவரத்துச் செலவுகள் என எல்லாம் தமிழ்நாட்டின் தலையில்தான்.

ஆளுநருக்கான அதிகாரங்கள்:

ஆளுநர்களுக்கு ஏது அதிகாரம் அவர் ஓர் இழுவை முத்திரை (இரப்பர் ஸ்டாம்ப்) தானே என்பதாகக் கருதினால் அது தவறு.

*             ஆட்சி நிலையில்,

*             சட்டமியற்றும் நிலையில்,

*             பொருளியல் வகைப்பாட்டு நிலையில்,

*             நீதி (நயன்மை)த் துறையில்,

*             எல்லாவற்றுக்கும் மேலாக விருப்ப அதிகாரம் (discretionary) நிலையில் என்று எல்லா நிலைகளிலும் அதிகாரம் படைத்ததாகவே ஆளுநர் பொறுப்பு இருக்கிறது.

  1. மாநிலத்தின் நிர்வாக அதிகாரங்களை ஆளுநர் நேரடியாகவோ தன் கீழுள்ள அதிகாரிகளின் மூலமா கவோ கவனிக்க முடியும் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 154(1) பிரிவிலான சட்ட நெறி. இதுபோன்றதான நிலைகளிலேயே எண் 163, 163(3), 167(1), (2), (3), 217 - ஆகிய நெறிமுறைகள் பல்வேறு வகையில் ஆளுநரின் அதிகாரங்களை விளக்குகின்றன.
  2. சட்ட முன்வரைவு ஒன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபின், ஆளுநரின் இசைவிற்காக அது அளிக்கப்பட வேண்டும். தனது ஒப்புதல் அல்லது இசைவுக் காக அனுப்பப்பட்ட சட்ட முன்வரைவில் தனது இசைவை வழங்கலாம் அல்லது இசைவினை மறுக்கலாம், அல்லது குடியரசுத் தலைவரின் கருத்துக்கு அதை ஒதுக்கிவைத்து விடலாம். அதேபோல், பொருள் (நிதி) திட்ட சட்ட முன்வரைவைத் தவிர பிற எந்தச் சட்ட முன்வரைவையும், மீண்டும் மறுஆய்வு செய்ய வேண்டும் என ஆணையிட்டுச் சேர்த்து ஆளுநர் அந்தச் சட்ட முன் வரைவைச் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பிவிடலாம் என்கிறபடியாகப் பல அதிகாரங்கள் ஆளுநருக்கு உண்டு என்பதை அறிய வேண்டும்.
  1. பொருளியல் அதிகாரங்கள் என்கிற வகையில், ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு பொருள் முன்வரைவையும், பண முன்வரைவையும் சட்ட மன்றத்தில் முன்மொழியக் கூடாது என்கிற வகையில் பொருளியல் அதிகாரமும் ஆளுநரின் பிடிக்குள் வைக்கப்பட்டிருப்பதை உணர வேண்டும்.
  2. ஒரு மாநிலத்தின் ஆட்சி அதிகார எல்லைக்குட் பட்ட குற்றத்தைச் செய்த குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கவும், மாற்றவும், நிறுத்தி வைக்கவும், நீக்கிவிடவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது உசாவல் நடந்து கொண்டிருக்கும் போதோ, விசாரணை முடிந்து அவர் தண்டிக்கப்பட்ட பின்னரோ, எப்போது வேண்டுமானாலும் ஆளுநர் தன் அதிகாரத்தை நிறுவ முடியும். 15 நாள்களுக்கு ஒரு முறை மாநிலத்தின் நிலைபற்றிக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அறிக்கை அனுப்ப வேண்டும். மாநிலத்தில் நெருக்கடி நிலையைக் குடியரசுத் தலைவர் நடைமுறைப்படுத்துவதற்குரிய நிர்வாக நிலை பற்றிய அறிக்கையைக் குடியரசுத் தலைவர். கேட்கும்போது மாநில ஆளுநர் அனுப்ப வேண்டும் எனும் சட்ட நெறி 356 பிரிவுப்படி ஆளுநருக்கான அதிகாரங்கள் நிரம்ப உண்டு.
  3. இவையன்றி, ஆளுநரின் விருப்ப அதிகாரங்கள் (discretionary) என்கிற பெயரில் நெறிவிலக்கு என்கிற அடிப்படையில் ஆளுநர் என்ன முடிவையும் முன்னெடுக்க முடியும்.

இவ்வகையில் எல்லாம் பார்க்கும்போது ஆளுநர்களுக்கு இருக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரங்களைக் காட்டிலும் கூடுதலானவையாகவே உள்ளன.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான திட்டம் இருப்பது போன்று ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தைச் சட்ட மன்றத்தில் கொண்டு வர இயலாது. இது அவருக்கு உரிய அதிகப்படியான அதிகாரங்களைக் காட்டும்.

இந்த வகையில் எல்லாம் ஆளுநரின் அதிகார எல்லை மீறலைக் கண்டு ஆளுநர் என்பவரே தேவையில்லை என்பதான குரல்கள் 1960 முதற்கொண்டே எழுந்தன.

“ஆட்டுக்குத் தாடியும். நாட்டுக்கு ஆளுநரும்“ தேவையில்லை என்பதாக அண்ணா பகடி பேசினார்.

ஆளுநர் பொறுப்பே கூடாது என்று மறுத்தும், ஆளுநர் எங்கு வந்தாலும் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்றும், அவர் பங்கு கொள்ளும் கூட்டங்களை யெல்லாம் முழுமையாகப் புறக்கணிப்பது என்றும், அன்றைக்குத் தி.மு.க சார்பில் அறிவிப்பும் நடைமுறையும் இருந்தது. பின்னர் படிப்படியே விட்டு விட்டனர்.

1969-இல் கலைஞர் மு.கருணாநிதி முத லமைச்சராக இருந்த போது இராஜமன்னார் குழு என்ற ஒரு குழு உருவாக்கப்பட்டு இந்திய அரசு மாநில அரசுகளுக்கு இடைப்பட்ட அதிகாரங்களின் வரம்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி ஆளுநர் இந்திய அரசின் முகவராகச் செயல்படக்கூடாது என்று மறுத்தனர். அந்தக் குழுவின் அறிக்கை 1974 இல் இந்திய அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால் எவ்வகை ஏற்பையும் இந்திய அரசு செய்யவில்லை.

அதேபோல் நெருக்கடி கால ஆட்சிக்குப் பின்னர் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட சர்க்காரியா குழு வழி, ஆளுநர் பற்றிய சில அதிகார வரம்புகள், ஆளுநர் தேர்வு செய்யப்படுவதில் மாற்றங்கள் சொல்லப்பட்ட போதும், அவையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை..

தொடர்ந்து 2002-இல் வாஜ்பாய் ஆட்சியின் போது அரசியல் அமைப்புச் சட்டம் மறு ஆய்வு என்கிற பெயரில் அமைக்கப்பட்ட குழுவும், ஆளுநர் நேரடியாகச் சட்டமன்ற உறுப்பினர்களால்தாம் தேர்வு செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தும் அக்கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

2007-இல் ‘பூஞ்சிக்குழு’ என்கிற குழுவின் அறிக்கைபடி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான அதிகாரம் உள்ளதுபோல் சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராகவும் தீர்மானங்கள் கொண்டு வருகிறபடியான அதிகாரமும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதுவும் ஏற்கப்பட வில்லை. இந்திய அரசியல் சட்டம் இதுவரை 101 முறை திருத்தப்பட்டும் ஆளுநர் தொடர்பான அதிகாரங்களை மீளாய்வு செய்கிறபடியாக எந்தத் திருத்தத்தையும் இந்திய அரசு செய்திடவில்லை.

ஆனால், மக்கள் அதிகாரத்தையே தூக்கி வீசிடும்படி ஆளுநர் அதிகாரம் படைத்தவராக இருக்கிற கொடுமையைப் பார்க்க வேண்டும். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட சட்டமன்ற அதிகாரத்தையே எந்தக் காரணமும் இல்லாமல் தன் விருப்பப்படி உடன்பாடு இல்லை என்கிற அடிப்படையில் 356-ஆவது பிரிவின் படி ஆளுநரால் கலைத்துவிட முடியும்.

இன்றைய அளவில் உள்ள சட்டமன்ற ஆட்சி அமைப்பு முறை எந்தளவு அதிகாரம் படைத்தது, அது யாருக்கானது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இருக்கக்கூடிய அந்த அமைப்பு முறையையே கூட கலைத்து விடுகிற அதிகாரத்தை ஆளுநர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதே அவர்களின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும்.

இப்படியாக இதுவரை அதாவது கடந்த 70 ஆண்டுகளில் 128 முறை சட்டப் பிரிவு 356-இன்படி மொழித் தேச மாநிலங்களின் ஆட்சிகள் கலைக் கப்பட்டுள்ளன என்றால்-ஆளுநரின் அதிகார வெறிப் போக்கை உணர்ந்து கொள்ள வேண்டும்.

356 பிரிவு முதன்முதலாக சூலை 31,1959 அன்று கேரள மக்களால் தேர்ந்தெடுகப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சி அரசைக் கலைக்கப் பயன்படுத்­தப்பட்டது. அதன் பிறகு 1953, 54, 56, 59 என வரிசையாக ஆட்சிக் கலைப்புகள் நடந்துகொண்டே இருந்தன, இருக்கின்றன...

1947 முதல் 64 வரை நேரு தலைமை அமைச்சராக இருந்த காலங்களில் 8 முறையும், 1977 முதல் 79 வரை மொராஜி தேசாய் தலைமை அமைச்சராக இருந்த ஒன்றரை ஆண்டில் பதினாறு முறையும், இந்திரா காந்தி தலைமை அமைச்சராசு ஆட்சி செய்த 16 ஆண்டுகளில் 50 முறைகளும் மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 128 முறைகளில் 88 முறை காங்கிரஸ் ஆட்சியின் போது கலைக்கப்பட்டுள்ளது. அண்மையில் 2016-இல் அருணாச்சலப் பிரதேசத்தில் ஆளுநர் தேவிபிரசாத் ராஜ், கோவா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்ததையும், அதே 2016 மார்ச் 27-இல் உத்தர கண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்ததையும் உச்ச நீதிமன்றம் வெகு கடுமையாகக் கண்டித்ததை அறிந்திருப்போம்.

ஏற்கனவே: 1977-இல் இராசசுத்தான் மாநில அரசு கலைக்கப்பட்டதால் இந்திய அரசை உச்சநீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட அமர்வு மிகக் கடுமையாகக் கண்டித்து இருந்தது. அமீதுல்லா (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி), சந்திர சூட், பி.என். பகவதி, கோசுவாமி, குட்டா, உன்ட் வாலியா, பாசலால் ஆகியோரின் அறிக்கையிலும் “இது பிரிட்டீசு ஆட்சியைப் போல் அல்லவா இருக்கிறது. இது போன்ற நடைமுறை இந்திய அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அமர்வு இடித்துரைத்தது.

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட அரசுகள் கலைக்கப்பட்ட நிகழ்வுகளும் கொடுமையானவை. 1976இல் ஊழலின் பெயராலுல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதும், பின்னர் 1991இலும் ஈழ ஆதரவுப் போக்கை காரணம் காட்டி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதும் முற்றிலும் மக்களாட்சிக்கு எதிரானவை.

இன்னொரு கொடுமையையும் சொல்ல வேண்டும். அன்றைய ஆளுநர் பர்னாலா தி.மு.க. அரசைக் ககலைக்க வேண்டும் என அறிக்கையைத் தர மறுத்தும், குடியரசுத் தலைவர் தன் போக்காகத் தமிழ் நாட்டு அரசாட்சியைக் கலைத்த கொடுமையும் இந்திய மக்களாட்சியில் நடைபெற்றது.

ஆக, இப்படியாக ஆளுநர் அதிகாரவெறியின் அத்து மீறல்களின் தொடர்ச்சிதான் இன்றைய தமிழ்நாட்டு ஆளுநர் இரவி. பீகாரைச் சார்ந்தவர்.

அவர் தமிழ்நாட்டு ஆளுநராக வந்து ஆறு மாதத்திற்குள் (கடந்த பிப்ரவரியில்) அவரின் மகளின் திருமணத்தை உதகையில் ஏன் நடத்த வேண்டும்? பீகாரில் உள்ள உற்றார் உறவினரோடு பீகாரில் நடத்துவதை விட்டு விட்டுத் தமிழ்நாட்டில். உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரின் உறவுக் கூட்டம் வந்து கொட்டமடிக்க தமிழ்நாடு என்ன திறந்த மடமா?

ஆண்டாண்டுக் காலமாக வெள்ளை வண்ணப் பூச்சிலிருந்த உதகை ஆளுநர் மாளிகையைத் திருமணத்திற்காகப் பல இலக்கம் செலவில் பச்சை நிற வண்ணப்பூச்சில் மாற்றினார். எதற்காக? இந்த ஆண்டு பிப்ரவரி 21, 22 ஆகிய இரு நாள்களும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் உதகையில் ஆளுநர் மாளிகை முழுவதும் புதுப்பிக்கப்பட்டதாம்.

திருமணத்துக்காக ஆளுநர் மாளிகை தோரணங்கள், நுழைவு வாயில்களில் தென்னங் கீற்று, வாழை, பாக்கு மரங்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டனவாம். திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் பாதுகாப்புக் காரணமாக உதகை தனியார் விண்மீன் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனராம். திருமணத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையின் சுற்று வட்டார பகுதிகளில் மூன்று அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டது. உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிலேயே தற்காலிக ஆய்வுச் சாவடி அமைக்கப்பட்டு, வண்டிகள் தணிக்கை செய்யப்பட்டன. திருமணத்திற்குத் தமிழ்நாட்டு முதலமைச்சர் அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மற்றபடி ஆளுநர் மகள் திருமணம் பற்றிய நிகழ்ச்சி பெரிய அளவில் செய்தியும் வெளியாக வில்லை. படங்களும் வெளியாகவில்லை, அந்தக் கமுக்கங்களுக்குள் வேறு என்னென்ன செய்திகள் உள்ளன என்பது வெளிவரவில்லை!

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இது நாள்வரை இருந்த ஆளுநர்களைவிட கூடுதலான வன்ம உணர்வினராகவும் வாய்ப் பேச்சு அதிகப்படியான வருமாகவே ஆளுநர் இரவி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே... திருக்குறளை வேதத்தின் சாரம் என்று அவர் திருக்குறளைப் படிக்காமலேயே பிதற்றியிருப்பதும்... தமிழ்நாடு வளரக் கூடாது, இந்தியாதான் வளரவேண்டும் எனும் பொருள்பட பேசியிருப்பதும்... நீட் உள்ளிட்ட தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தின் 19 முன்வரைவுத் தீர்மானங்களை நிறைவேற்ற தடைசெய்கிற வகையில் செயல்பட்டு வருவதும். ஆளுநர் இரவி செய்திருக்கிற அல்லது செய்யாதிருக்கிற திமிர் செயற்பாடுகள் என்றே குறிப்பிட வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் காரணம் ஆளுநர் என்கிற அதிகார வெறிப்பொறுப்பே ஆகும். எனவே, ஆளுநர் இரவியை மட்டுமன்று, ஆளுநர் பொறுப்பையே விரட்டியடிக்கத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்தாக வேண்டும். தமிழர்கள் தங்களுக்குள் உள்ள பிற முரண்பாடுகளையெல்லாம் தள்ளி வைத்து விட்டு இந்தியப் பார்ப்பனியத்திற்கு எதிராய் அணி சேரவேண்டிய நேரம் இதுவல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்?

- பொழிலன்

Pin It