ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் தொல்லைகளை உருவாக்கி அரசியல் சட்டத்தையே முடக்கும் ‘திருப்பணிகளை’ ஆளுநர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா மாநில ஆட்சிகள் இப்பிரச்சனையை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.

பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அம்மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களை மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போதுதான் தலைமை நீதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் அனுமதி மறுத்தார். அப்போதே பஞ்சாப் மாநில ஆட்சி ஆளுநருக்கு இந்த அதிகாரம் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு கூறியது. சட்ட ஆலோசனைகளை பெற்ற பின்பே அனுமதி தருவேன் என்று ஆளுநர் எடுத்த நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. விசாரணை நடக்கும் போதே ஆளுநர் தரப்பில் வாதிட்ட ஒன்றிய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா ஏற்கனவே சட்டசபை கூட்டுவதற்கு ஆளுநர் அனுமதி வழங்கி விட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார், ஆக ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமான செயல்பாடு என்று தெரிந்தும் செயல்பட்டிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. ஆனாலும் காவல்துறை ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு முழுமையான நிர்வாக உரிமை உண்டு என்று முதல்வர் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு டெல்லி யூனியன் பிரதேசத்திற்கே அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்தது. “ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதன் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை இல்லை என்றால் அந்த அரசுக்கு சட்டமன்றம் மற்றும் பொதுமக்கள் மீதான பொறுப்புகளை நீர்த்துப் போக செய்துவிடும். ஆனாலும் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு சட்டத்திருத்தம் கொண்டுவந்து ஒன்றிய பாஜக ஆட்சி மீண்டும் உரிமைகளை பறித்துக் கொண்டது.

ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு மற்றொரு உதாரணம் மேற்கு வங்காளத்தில் நடந்த சம்பவம். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகளை உருவாக்கி வந்தார் அம்மாநில ஆளுநர் ஜெகதீஸ் தன்கர். மாநில சட்டமன்றத்தை கூட்டி ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானத்தை மம்தா கொண்டுவரப் போகிறார் என்பதை உணர்ந்த அவர் 174வது பிரிவை பயன்படுத்தி சட்டசபையை முடக்கினார். இதற்கு பதிலடியாக டிவிட்டரில் ஆளுநரை பிளாக் செய்தார் மம்தா. இப்போது ஜெகதீஸ் தன்கர் குடியரசு துணைத் தலைவர்.

புதுவையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நாராயணசாமி முதல்வராக இருந்த போது ஆளுநர் கிரண் பேடி ஆட்சி நிர்வாகத்தில் எல்லைமீறி தலையிட்டு நெருக்கடிகளை உருவாக்கினார். இப்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுவையில் பாஜகவின் ஊது குழலான தமிழிசை ஆளுநர், இதனால் அந்த மாநிலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. பிறகு தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் பதவியும் கூடுதலாக தமிழிசைக்கு வழங்கப்பட்டது. பாஜக அல்லாத பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு நெருக்கடிகள் தொடங்கின. ஆளுநரே மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களை கூட்டினார். ஒரு கட்டத்தில் ஆளுநரையே புறக்கணித்து சட்டசபையை கூட்டினார் சந்திரசேகர ராவ்.

கேரளாவிலும் இதே மோதல் தான். ஆரிஃப் முகமது கான் அம்மாநில ஆளுநர். அம்மாநிலத்தின் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட மறுத்தார். துணை வேந்தர்களை தேர்வு செய்யும் செனட் குழு கூட்டத்தில் தனது ஆணையை ஏற்க மறுத்த 15 உறுப்பினர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்தார்.

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் அரசு தயாரித்த உரையை படிக்காமல் பல பகுதிகளை நீக்கினார். அவரே சில பகுதிகளை சேர்த்துக் கொண்டார். ஆளுநர் சேர்த்துக் கொண்ட பகுதிகளை அவைக் குறிப்பில் இருந்து அவைத் தலைவர் நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் முன்னிலையிலே தீர்மானம் கொண்டு வந்தார். ஆத்திரமடைந்த ஆளுநர் அவையை விட்டே வெளியேறினார். தமிழ்நாடு அரசின் 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் முடக்கி வைத்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் சூதாட்டம் நடத்தும் உரிமையாளர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துப் பேசினார்.

ஆளுநரின் முறைகேட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்த அடுத்த சில மணிநேரத்திலேயே ஆளுநர் ஆன்லைன் தடை மசோதாவுக்கு ஒப்புதல் தந்தார். தன்னை தமிழ்நாட்டின் தலைவராகக் கருதிக் கொண்டு ஒவ்வொரு நாளும் வகுப்பெடுத்துக் கொண்டு தனது அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது பாஜக ஆட்சி செய்யாத மாநில ஆட்சிகள் உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளன. ஆளுநர் மக்கள் பிரதிநிதிகள் அல்ல என்று தலைமை நீதிபதிகள் கூறியிருப்பதும் ஏற்கனவே இது தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளும் ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

- விடுதலை இராசேந்திரன்

Pin It