காவிரி நீர் வரத்து என்பது (1) குடகுப் பகுதியில் பெய்யும் பருவ மழைகளின் அளவைப் பொறுத்தது; (2) கீழ்மடையில் தமிழகத்தில் இருக்கிற நிலங் களுக்கு, மேல்மடையில் இருக்கிற கருநாடக நாட்டினர் - காலாகாலத்தில் உரிய பங்கீட்டுத் தண்ணீரைத் தரவேண்டும் என்பது.

இந்தப் பங்கீடு பற்றிய தகராறு 1972க்குப் பிறகு தான் முளைத்தது.

ஆனால் நீர்வரத்து அளவு குறைவு என்பது - கண்ணம்பாடி அணையைக் கருநாடக அரசு கட்டிய பிறகு-தமிழ்நாட்டையும், கருநாடகத்தையும் காங்கிரசுக் கட்சி ஆண்டபோதும், அதற்கு முன்னரும் - கீழ்மடையில் உள்ள தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமலேயே கருநாடக அரசால் கட்டப்பட்ட புதிய நீர்த்தேக்கங்களின் நேரடி விளைவே ஆகும்.

பருவ மழைகள் காலந்தவறிப் பெய்தாலும் - கீழ்மடைக்காரர்களுக்குத் தண்ணீர் விடமுடியாது என்கிற அடாவடித்தனத்தை - கட்சி வேறுபாடு, தலைமை வேறுபாடு, சாதி வேறுபாடு கருதாமல் ஒன்றுபட்டுச் சென்றே பழைய பழைய கருநாடக முதலமைச்சர்களும், அன்றன்றைய முதலமைச்சரும் தில்லி அரசை ஆட்டி வைத்தனர்.

மிகப்பெரிய ஆற்று நீர்த் தட்டுப்பாட்டுக்கு ஆளான தமிழக முதலமைச்சர்கள் - பழைய முதலமைச்சர் களையும் அழைத்துக்கொண்டு, 1956க்குப்பிறகு நடைபெற்ற காங்கிரசுக் கட்சி ஆட்சியிலோ, 1967-1976 வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியிலோ, 1977க்குப் பிறகு 2012 வரை மாறி, மாறி நடந்த - நடைபெற்றுவரும் தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களிலோ ஒன்றுசேர்ந்து போய், தில்லிக்கு அழுத்தம் தரவேண்டும் என்கிற பொறுப்பு உணர்வும் கடமை உணர்வும் பொதுநல நோக்கமும் இல்லை. இதனால் தில்லி அரசு தமிழ்நாட்டு அரசின் கோரிக் கையை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

16.8.1969க்குப் பிறகு காங்கிரசுக்குக் காவடி தூக்கிய தி.மு.க.வும்; 1980க்குப் பிறகு காங்கிரசுக்குப் பல்லக்குச் சுமந்த அ.இ.அ.தி.மு.க.வும் - காவிரிச் சிக்கல் உட்பட்ட எந்தச் சிக்கலை எதிர்கொள்ளும் போதும் இலாவணி பாடுவது, ஒருவர் பேரில் ஒருவர் - எந்தப் பொருத்தமும் இன்றிக் குற்றம்சாட்டிக் கொண்டு - இவர் களின் அழுக்கு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, ஊராரும் உலகத்தாரும் சிரிக்கும்படியே நடந்து கொள்கிறார்கள்.

இவர்களைச் சார்ந்து நிற்கும் தமிழக மக்களும் - கட்சியும் கட்சித் தலைவரும் மட்டுமே பெரிதாக - அதுவே வாழ்வாக நினைக்கிற ஆட்டுமந்தைத் தனத்துக்கு ஆட்பட்டுவிட்டனர். அதனால் தான்,

1.            நீதிமன்றத்தின் ஆணைகளையும் மதிக்காமல் - 2004 முதல் 2009 வரையிலும்; 2009 முதல் இன்று வரையிலும் தி.மு.க.வின் ஆதரவோடு இந்தியாவைக் கட்டி ஆளும் டாக்டர் மன்மோகன் சிங் என்கிற பண்ணையாள் மனப்பான்மை - நல்ல கணக்குப்பிள்ளை வேலை பார்த்த அவரு டைய அரசுக்கு, காவிரி ஆற்றுநீர் ஆணையத்தின் (CRA) கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற சொரணையே வரவில்லை. இதற்கு முழுப்பொறுப் பையும் 2004 முதல் 2011 வரையிலும் முறையே இந்தியாவையும் தமிழகத்தையும் ஆண்ட காங் கிரசும்; தமிழக தி.மு.க. அரசும் தான் ஏற்க வேண்டும்.

2.            அதற்கு முன்னர் நடுவர் மன்றம் அமைக்கப்படவே முயற்சி எடுக்காத - அ.இ.அ.தி.மு.க.வும், காங் கிரசும், பாரதிய சனதாவும் தான் இதற்குப் பொறுப் பேற்க வேண்டும்.

இனி, இப்போது என்ன செய்ய வேண்டும்?

தமிழக முன்னாள் முதலமைச்சரும், மாண்புமிகு இந்நாள் முதலமைச்சரும் ஒன்றுசேர்ந்து - அவர் களின் தலைமையில் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 57 பேர்களையும் அழைத்துச் சென்று பிரதமர், மய்ய நீர்வள அமைச்சர், குடிஅரசுத் தலைவர் முதலானவர்களுக்கு நேரில் அழுத்தம் தரவேண்டும். இது வெறுங்கனவு என்று எவரேனும் கருதினால் - இன்றைய முதலமைச்சரின் தலைமையில் எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர் களும் விருப்புடன் சென்று நடுவண் அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.

3.            இந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதுவை மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், புதுவை மாநில முதல்வரும் சேர்ந்து - பாராளு மன்ற வளாகத்தில் ஒரு நாள் கோரிக்கை ஆர்ப் பாட்டம் நடத்த வேண்டும்; அடுத்த ஒரு நாள் முழுவதும் நாடாளுமன்றத்தின் முன் உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

4.            காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அமல் படுத்தும் விதத்தில் அத்தீர்ப்பை இந்திய அரசு இதழில் உடனே வெளியிட வேண்டும் என்றும்; குறித்த காலத்தில் கர்நாடக அரசு அதை அமல்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்திக் கோர வேண்டும்.

5.            ஆற்று நீர்ப்பங்கீடு என்பது, நீரின் அளவு அருந்த லாக - அருமருந்தாக - போதாததாக இருக்கும் போது, கருநாடகமும் காய்ந்து போகாமல் - தமிழகமும் காய்ந்து போகாமல் இருக்கப் போதிய அளவில் - கையிருப்பில் இருக்கிற நீரை விகிதா சாரம் பங்கு போட்டுக் கொள்ளவே. நீதிமன்றத் தீர்ப்புகள், அரசு ஆணைகள் - முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் இதற்காகத்தான்.

6.            இதற்குக் கருநாடகம் இணங்காவிட்டால், நடுவண் அமைச்சரவையில் முடிவெடுத்து, கருநாடக அணை களில் உள்ள மொத்த நீரின் அளவில், அருந்தல் காலத்தில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரை, இராணுவத்தைக் கொண்டு - குடிஅரசுத் தலைவர் திறந்துவிடுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

சி. இராசகோபால ஆச்சாரியார் அந்த உயர்ந்த பொறுப்பில் இருந்தபோது, அப்படித்தான் ஒரு தடவை செய்தார். அவரைவிட நல்லவராக - வல்லவராக இன்றையக் குடிஅரசுத் தலைவர் செயல்படுவாரா, மாட்டாரா என்பது இனிமேல் தான் தெரியும். ஆனால் கன்னெஞ்சம் - வன்னெஞ்சம் கொண்ட நம் பிரதமர் மன்மோகன் சிங் தான் இதற்கு முன்வந்து ஆவன செய்தல் வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், செயல்படாத பிரதமருக்கு எத்தனை மடல்கள் போட்டாலும் அவருக்கு உறைக்காது; நேரில் சென்று அவரையும், நடுவண் அமைச்சரவையையும், குடிஅரசுத் தலைவரையும் இடித்தால்தான் அவர்கள் அசைவார் கள்; நகருவார்கள்; செயல்படுவார்கள்.

இவர்கள் கொட்டை போட்டுப் பழம் தின்ற கெட்டிக்காரர்கள்.

காவிரிச் சிக்கலில், கட்சிவாரியாகப் பிரிந்து நின்று நோக்கிடுகிற-செயல்படுகிற சிறுமைத்தனத்தைத் தமிழ்நாட்டிலுள்ள எல்லோரும் உடனே கைவிட முன்வரவேண்டும் என, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், அன்புடன் அனைவரையும் வேண்டுகிறேன்.

Pin It