கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டம் 2011 செப்டம்பர் முதல் ஓராண்டாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைதியான முறையில் அறவழியில் சிறிய வன்முறை நிகழ்வும் இன்றி இப்போராட்டம் நடந்து வருகிறது.

சுதந்திர இந்தியாவில் நருமதை அணைக்கு எதிராக மேதாபட்கர் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு இணையானது - சுப.உதயகுமார் தலைமையில் “அணுசக்திக்கு எதிரான” மக்கள் இயக்கம் நடத்திவரும் போராட்டம். இவ்விரு போராட்டங்களும் உலக அளவில் செய்திகளாயின. ஆயினும் விளைவு என்ன?

2012 செப்டம்பரில் கூடங்குளத்தின் முதலாவது அணுஉலையில் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. சனநாயகத்தின் பெயரால் நடத்தப்படும் ஆட்சியில், மக்களின் உரிமைப் போராட்டங்களை எவ்வாறு அடக்கி ஒடுக்குவது என்பது ஆளும் வர்க்கத்திற்குக் கைவந்த கலையாகிவிட்டது. போராட்டம் நீண்டகாலம் நடைபெற அனுமதிப்பதின் மூலம் அவர்களைச் சோர்வடையச் செய்வது; போராட்டக்காரர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவது; சிக்கலைத் தீர்க்க விரும்புவது போல் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை எனும் நாடகம் நடத்துவது; ஊடகங்கள் வாயிலாக இப்போராட்டம் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் எதிரானது என்று பரப்புரை செய்வது; போராட்டக்காரர்கள் மீது தீவிரவாதிகள், தேசத்துரோகிகள், மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி; எண்ணற்ற வழக்குகள் தொடுப்பது; சிறையில் அடைப்பது; காவல்துறையையும் படைப்பிரிவினரையும் ஏவித் தாக்குவது - துப்பாக்கியால் சுடுவது போன்ற எல்லா வழிமுறைகளையும் அரசுகள் கையாண்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்கி வருகின்றன.

துப்பாக்கியால் சுடுவது என்கிற ஒன்று தவிர, மற்ற எல்லா உத்திகளும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நடுவண் அரசாலும், தமிழ்நாட்டு அரசாலும் கையாளப்பட்டுள்ளன. இதில் செயலலிதா தலைமையிலான தமிழக அரசின் நயவஞ்சக நாடகம் மிகவும் வெட்கக்கேடானதாகும்.

2011 செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் சிலரும் அதிகாரிகளும் கூடங்குளம் அருகில் உள்ள இராதாபுரத்தில் போராட்டக் குழுவினரைச் சந்தித்தனர். 21.9.2011 அன்று போராட்டக் குழுவினர் முதலமைச்சர் செயலலிதாவைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இதன் விளைவாக 22.9.2011 அன்று தமிழக அமைச்சரவையில், “கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வரையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று தீர்மானம் இயற்றப்பட்டது. “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று போராட்டத்திற்கு ஆதரவாக முழக்கமிட்டார், செயலலிதா.

மேலும் 2011 அக்டோபர் மாதம் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், போராட்டக் குழுவினரும் உள்ளடங்கிய ஒரு குழுவினர் தில்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை அளித்து விளக்கினர்.

அ.தி.மு.க.வின் தலைமையிலான தமிழ்நாட்டு அரசின் அணுஉலை எதிர்ப்புக்கு ஆதரவு என்ற வஞ்சக நாடகத்திற்கு அரசியல் ஆதாயமே அடிப்படை யாகும். 2011 அக்டோபரில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவிருந்ததால் அதில் வெற்றி பெற வேண்டும் என்பது முதல் நோக்கம். கூடங்குளம் போராட்டம் காங்கிரசுத் தலைமையிலான நடுவண் அரசுக்கு ஒரு தலைவலியாக இருக்கட்டும் என்பது இரண்டாவது நோக்கம்.

புயலின் மய்யம் போல், கூடங்குளம் அணு உலை அருகில் உள்ள இடிந்தகரையில் மக்கள் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகளின் பேராளர்கள் இடிந்தகரைக்குச் சென்று அப்போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர். தமிழகம் முழுவதும் பல ஊர்களில் அணுஉலைக்கு எதிரான கூட்டங்களும், கருத்தரங்குகளும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடந்தன.

நடுவண் அரசு அமைத்த 15 பேர் கொண்ட வல்லுநர் குழு, ‘அணுஉலை மிகவும் பாதுகாப்பாக உள்ளது’ என்று கூறியதை ஏற்காமல், முதலமைச்சர் செயலலிதா 9.2.2012 அன்று தமிழக அரசின் சார்பில் நால்வர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்தார் - அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு ‘நான்தான்’ சவக் குழி தோண்டுவேன் என்ற பிடிவாதத்தால்! நடுவண் அரசின் வல்லுநர் குழு கூறியதையே தமிழக அரசின் வல்லுநர் குழுவும் வழிமொழிந்தது. அதனால் 2012 மார்ச்சில் செயலலிதா அரசும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கிடப் போர்க் கோலம் பூண்டது.

2012 மார்ச்சு மாதம் 19 அன்று கூடங்குளத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்பகுதி மக்கள் உணவுப்பொருள்கள், தண்ணீர், மின்சாரம் முதலானவற்றைப் பெறுவதற்குப் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. மக்கள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டனர். அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி கால நிலையின் சூழல் உருவாக்கப்பட்டு, மக்கள் அச்சுறுத்தப்பட்டனர்.

திருநெல்வேலியில், காவல்துறையினர், ‘கூடங் குளம் அணுஉலைக்கு எதிராகப் பேசுவோர் தேசத் துரோகியாகக் கருதப்பட்டுக் கைது செய்யப்படுவார்கள்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். கூடங்குளம் காவல் நிலையத்தில் 50,000 பேர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 21 பிரிவுகள் போராட்டக் குழுவினர் மீதும் இதில் பங்கேற்ற மக்கள் மீதும் ஏவப்பட்டுள்ளன. ‘இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தனர்’ எனும் 121ஆவது பிரிவின்கீழ் 3600 பேர் மீதும், தேசத் துரோகப் பிரிவு 124ஹ-வின் கீழ் 3,200 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனநலம் குன்றியவர், மாற்றுத் திறனாளிகள், முதியோர் என அனைவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வளவு ஒடுக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் இடிந்தகரையில் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் விளம்பர வருவாய்க்கு ஆசைப்பட்டும், அரசின் சினத்திற்கு ஆளாக வேண்டாம் என்று அஞ்சியும் ஊடகங்கள் அணுஉலைக்கு எதிரான போராட்டச் செய்திகளை இருட்டடிப்புச் செய்து வருகின்றன.

கூடங்குளம் முதல் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் 10.8.12 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொன்றும் 4.57 மீட்டர் நீளம் உடைய 163 செறிவூட்டப்பட்ட யுரேனியத் தொகுப்புகள் எரிபொருளாக அடுத்த பத்து நாள்களுக்குள் நிரப்பப்படும். அதனால் ஆகசுட்டு இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் கிழமையில் கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

வாய்ச் சவடாலில் வல்லவரான நடுவண் துணை அமைச்சர் வி.நாராயணசாமி, “நாட்டில் 45,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை இருக்கிறது. தற்போது அணுமின் உற்பத்தி மூலம் 4780 மெகாவாட் கிடைக்கிறது. கூடங்குளத்தில் இரண்டு அணுஉலைகளும் இயங்கத் தொடங்கியதும் கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 2017க்குள் 10,000 மெகாவாட் அணுஉலை! மின்சாரம் கிடைக்கும். 2032க்குள் 63,000 மெகாவாட் அணுஉலை மின்சாரம் கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார் (தினத்தந்தி 14.6.12).

சப்பான் நாட்டில் 2011 மார்ச்சு மாதம் புகுசிமா அணுஉலை நேர்ச்சியின் கொடிய விளைவுகளைக் கண்டபின், 30 விழுக்காடு அளவுக்கு அணுமின்சாரம் அளித்துவந்த 54 அணுமின் நிலையங்களையும் மூடி விட சப்பான் அரசு முடிவு எடுத்துள்ளது. 75 விழுக் காடாக உள்ள அணுமின் உற்பத்தியை 50 விழுக் காடாகக் குறைக்கப் போவதாக பிரான்சு அரசு அறிவித் துள்ளது. செருமனியும் அணுஉலைகள் அனைத்தை யும் மூடப்போவதாகக் கூறியுள்ளது. சுவிட்சர்லாந்து, இத்தாலி, குவைத், மெக்சிகோ போன்ற பல நாடுகள் அணுமின் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளன. ஆனால் அமெரிக்காவின் அடிமையாகச் செயல்படும் இந்தியா மட்டும், மக்களைப் பலியிட்டு அணுமின் உற்பத்தியைப் பல மடங்கு உயர்த்தப் போவதாகக் கொக்கரிக்கின்றது.

சென்னை உயர்நீதிமின்றத்தில் கூடங்குளம் அணு உலை குறித்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதிகள் பி. சோதிமணி, பி. தேவதாசு இருவரும் 16.8.12 அன்று, “சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புத் தயாராக உள்ள நிலையில், நடுவண் அமைச்சர் ஒருவரும், நடுவண் அரசு அதிகாரிகளும் கூடங்குளம் அணுஉலையை இயங்கத் தொடங்குவது குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். நடுவண் அரசின் இந்தப் போக்கானது உயர்நீதிமன்ற விசார ணையைக் கேலிப் பொருளாக ஆக்குவது போல் உள்ளது” என்று கண்டித்துள்ளனர்.

மேலும் 21.8.12 அன்று நீதிபதிகள், “அணு உலையிலிருந்து கடலுக்குள் விடப்படும் நீரின் வெப்ப அளவு 37 டிகிரி செல்சியசுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியை மீறி 45 டிகிரி செல்சியசு அளவு வரை இருக்கலாம் என்று தமிழ்நாட்டரசின் மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் அனுமதி அளித்திருக்கிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்பது தெரிந்த பிறகும் பொறுப்பற்ற முறையில் மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் செயல்பட்டுள்ளது” என்று கண்டித் துள்ளனர்.

ஏன் இந்த அவசரக் கோலம்? கூடங்குளத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள முதல் அணுஉலையை இயக்கத் தொடங்கியதும், அடுத்த சில மாதங்களில் இரண்டாவது அணுஉலையையும் இயக்க வேண்டும். அடுத்து மூன்றாவது, நான்காவது அணுஉலைகளைத் தொடங்க வேண்டும். இதற்காக இரஷ்யா-3.5 பில்லியன் டாலர் 3,500 கோடி டாலர் கடன் வழங்க இசைந்துள்ளது. அதன்பின் 5ஆவது 6ஆவது அணுஉலைகளையும் நிறுவிட வேண்டும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பது போல், செயலலிதாவின் இரும் புக்கர ஆட்சி இருக்கும்போதே, இப்பணிகளை முடித்துக் கொள்வது நல்லது என்று கருதி நடுவண் அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

1945 ஆகசுட்டு 6 அன்று சப்பானில் ஹிரோஷிமா நகரத்தின் மீது அமெரிக்கா உலகின் முதலாவது அணு குண்டை வீசியது. அப்போது வெளிப்பட்ட அணுக்கதிர் வீச்சைப் போல் 60 மடங்கு கதிர் வீச்சு 2011இல் புகுசிமா அணுஉலை நேர்ச்சியின் போது வெளிப் பட்டது என்கிற பேருண்மையை அறிந்த பிறகும், நடுவண் அரசும், தமிழக அரசும் கூடங்குளத்தில் மேலும் நான்கு அணுஉலைகளை அமைப்பதில் தீவிரம் காட்டுகின்றன. முதல் அணுஉலையில் உற்பத்தியாகும் 1000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழ கத்திற்கே தர வேண்டும் என்று செயலலிதா தொடர்ந்து மன்மோகனுக்கு மடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

மகாராட்டிரத்தில் ஜெய்தாப்பூரிலும் மேற்கு வங்கா ளத்தில் ஹரிப்பூரிலும் மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக அணுஉலைகள் அமைப்பதற்கான வேலை களைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கூடங்குளத்தில் முதல் இரண்டு அணுஉலை களை இயங்க வைத்து விட்டு, அவற்றைப் பாதுகாப்பது என்ற போர்வையில் காவல்துறையினரை - துணை இராணுவப் படையினரைக் குவித்து, மேலும் நான்கு அணுஉலைகளை அமைக்க அரசுகள் முயல்கின்றன. இவ்வாறு ஆறு அணுமின் உலைகளும் அமைக்கப் படுமானால், மிக விரைவில் அணுக்கதிர் வீச்சினால் தமிழகமே சுடுகாடாகும் கொடிய நிலை ஏற்படும்.

கூடங்குளத்தைச் சுற்றிலும் வாழும் 250 பள்ளிச் சிறுவர்கள் 14.8.12 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் கூடங்குளம் அணுஉலை இயங்குவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விண்ணப்பம் அளித்தனர். இதற்குச் சிறுவர்களைத் தவறாகப் பயன் படுத்துவதாக ஆளும்வர்க்க நரிகள் சில ஊளையிட்டன.

ஆகசுட்டு 15 - இந்தியாவின் 66ஆவது சுதந்தர நாளை, கூடங்குளம் மக்கள் துக்க நாளாக - கண்டன நாளாகக் கடைப்பிடித்தனர். தம் வீடு களில் கறுப்புக் கொடி ஏற்றினர். அன்று மாலை யில் சனநாயகம் செத்துப் போனதாகக் கூறிச் சவப்பெட்டி ஊர்வலம் நடத்தி, சவப்பெட்டியைத் தீயிட்டு எரித்தனர். சுதந்தர நாளை அவமதிப்புச் செய்ததாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக் கத்தின் தலைவர்களான உதயகுமார், புஷ்பராயன், மில்டன் உள்ளிட்ட 2000 பேர் மீது கூடங்குளம் காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும், மற்ற அமைப்புகளும் கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். அமைதியான அறவழிப் போராட்டத் திற்கு அரசுகள் உமியளவுகூட மதிப்பளிக்கவில்லை என்கிற நிலையில், போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு மக்களை அரசு தள்ளுகிறது.

தமிழர்களைத் தில்லியில் உள்ள ஆளும்வர்க்கம் கிள்ளுக்கீரையாகக் கருதிச் செயல்படுகிறது. தமிழ கத்தில் உள்ள இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மற்ற அரசியல் கட்சி களும் தமிழ் மக்களுக்கு இரண்டகம் செய்து, தில்லி வல்லாதிக்கத்துக்குத் துணைபோகின்றன. எனவே தான் கூடங்குளத்தில் இரண்டு அணுமின் நிலையங் களை இயக்குவதுடன், மேலும் நான்கு அணுமின் நிலையங்களையும் அங்கே அமைக்க நடுவண் அரசும் மாநில அரசும் முயல்கின்றன.

எனவே தமிழர்கள் கட்சி பாராமல், அணுஉலை யின் பெருங்கேடுகளையும் அழிவுகளையும் உணர்ந்து, அரசுகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் ஒன்று பட்டுப் போராடினால் அணுஉலைகள் அமைக்கப்படு வதைத் தடுத்த நிறுத்த முடியும்.

Pin It