விடுதலை வந்ததா என்று சிந்தியுங்கள்!

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புத்தர் காலத்திலேயே வருணாசிரமம் இந்தியச் சமூகத்தில் நிலைபெற்றுவிட்டிருந்தது. பார்ப்பன ஆதிக்கத்தை - புரோகிதம் செய்வதற்கான பார்ப்பனரின் முற்றுரிமை யை - பார்ப்பனர்களின் வேள்விகள் உள்ளிட்ட சமயச் சடங்குகளை - மக்களை நான்கு வருணங்களாகக் கூறுபோட்டுள்ள வருணாசிரம தத்துவத்தைப் புத்தர் தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் பரப்புரை செய்தார். புத்தர் அமைத்த சங்கத்தில் சாதி வேற்றுமை, ஆண்-பெண், உயர்வு-தாழ்வு இல்லாத புதிய மாற்றுச் சமூக அமைப்பை நிறுவிட முயன்றார். எனவேதான் மேதை அம்பேத்கர், “சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது பிரெஞ்சு புரட்சி (1789)யின் மூல முழக்கம் என்பது தவறு; இம்முழக்கங்களின் பிறப்பிடம் பவுத்தமாகும்” என்று கூறியுள்ளார்.

பார்ப்பனர்க்குப் புரோகிதம் செய்தல், கல்வி கற்றல் மற்றும் கல்வி கற்பித்தல்; சத்திரியருக்கு அரசனாக ஆட்சி செய்தல், போரிடுதல்; வைசியருக்கு வேளாண்மை, வணிகம் செய்தல்; சூத்திரர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வருணத்தார்க்கும் குற்றேவல் செய்தல் என்பன மாற்ற முடியாத - பிறப்பின் அடிப்படையிலான தொழில்களாகச் சாத்தி ரங்கள் மூலம் விதிக்கப்பட்டன. மன்னராட்சிகள் இந்த வருணாசிரமத்தை - சாத்திரங்களின் விதிகளை நடை முறைப்படுத்தின. இவற்றை மீறியவர்கள் தண்டிக்கப் பட்டனர். இந்நான்கு வருணத்துக்கும் அப்பாற்பட்ட வர்கள் - இதை இறுதிவரை ஏற்காதவர்கள், பஞ்சமர் - தீண்டத்தகாதவர் எனப்பட்டனர்.

இவையெல்லாம் பழைய கதை - தெரிந்த செய்திதானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் சுதந்தரம் பெற்று 65 ஆண்டுகளுக்குப் பின்னும் வருணாசிரம - சாதியமைப்பின் அடிப்படையில்தான் மக்கள் பிரிவினரின் கல்வி, வேலைவாய்ப்பு, வரு வாய் தரக்கூடிய தொழிலும் மூலதனமும், சொத்தும், அதிகாரம் வாய்ந்த பதவிகளும் அமைந்துள்ளன. சுருங்கச் சொன்னால், இன்னும் சாதியே எல்லாவற் றையும் தீர்மானிக்கும் ஆற்றலாக விளங்குகிறது.

திறந்த சந்தைப் பொருளாதாரக் கோட்பாடு 1991 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விடா முயற்சியுடன் உழைத்தால் எவரும் அம்பானியாக, டாடாவாக, மிட்டலாக உயரலாம் என்று அப்துல்கலாம் போன்றவர்களே உரத்துச் சொல்கிறார்கள். இவை யெல்லாம் இன்றைய இளைஞர்களை ஏமாற்றுவதற் கான செப்படி வித்தைகள்.

2010ஆம் ஆண்டு ஓர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அந்த ஆய்வின் முடிவுகள் அடிப்படையில் 11.8.2012 நாளிட்ட எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பாருங்கள்!

இந்தியாவில் 4000 தொழில் - வணிக நிறு வனங்களில்; 1000 பெரிய நிறுவனங்கள் ஆய்வுக் காகத் தெரிந்தெடுக்கப்பட்டன. இந்த 1000 நிறுவனங் களின் சந்தை மூலதன மதிப்பு, மும்பைப் பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தை ஆகியவற்றின் மொத்த மதிப்பில் 5இல் 4 பங்கு ஆகும். இவற்றில் தனியார் நிறுவனங்களும், பொதுத் துறை நிறுவனங் களும் அடங்கி உள்ளன.

இந்த 1000 கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர்களின் பட்டியல் பெறப்பட்டது. பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஒன்பது இயக்குநர்கள் இருப்பார் கள். இந்த 1000 நிறுவனங்களில் மொத்தம் 9,052 இயக்குநர்கள் உள்ளனர். இவர்களில் பார்ப்பனர், வைசியர், சத்திரியர், சிரியன் கிறித்துவர் போன்ற பிற மதங்களின் முன்னேறிய சாதியினர், பிற்படுத்தப் பட்டவர், பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் எத் தனைப் பேர் இருக்கின்றனர் என்று கணக்கு எடுக் கப்பட்டது.

தமிழ்நாடு தவிர, பிற பகுதிகளில் குறிப்பாக வட இந்தியாவில் பெயருடன் சாதிப் பெயரும் இணைந்து இருப்பதால்-இந்நிறுவனங்களின் 85 விழுக்காட்டு இயக்குநர்களின் சாதியை எளிதில் அடையாளம் காண முடிந்தது. சாதிப்பெயரின் ஒட்டு இல்லாத 15 விழுக் காட்டுப் பேரின் சாதி பற்றிய விவரம் வேறு வழிகளில் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின்படி சாதிவாரியாக - வருணவாரியாகக் கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள இயக்குநர்கள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

                சாதி       இயக்குநர்கள்         மொத்த இயக்குநர்களில்

                                   எண்ணிக்கை          சாதிவாரியாக

                                                      உள்ள விழுக்காடு (%)

ஐ.          முன்னேறிய சாதியினர் :               8,387     92.6

                இவர்களில் உட்பிரிவு       

                1. பார்ப்பனர் 4,037     44.6

                2. வைசியர்   4,167     46.0

                3. சத்திரியர்  46           0.5

                4. பிற முன்னேறிய வகுப்பினர் 137         1.5

ஐஐ.     பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்      346         3.8

ஐஐஐ.                பட்டியல் குலத்தினர் மற்றும் பழங்குடியினர்            319         3.5

                                ------------            ----------

                மொத்தம்      9,052     100

                                ------------            ----------

பார்ப்பனர், வைசியர், சத்திரியர் ஆகிய இருபிறப் பாளர்கள் என்ற உயர்ந்த வருணத் தகுதி பெற்றவர் கள் மக்கள் தொகையில் வெறும் 10% மட்டுமே உள்ளவர்கள் 93% அளவுக்குப் பெருந்தொழில் நிறுவனங்களில் இயக்குநர்களாக இருக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 3.8% பேரும், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர் சேர்ந்து 3.5% பேரும் இயக்குநர்களாக உள்ளனர். யாருக்கு விடுதலை வந்தது என்று சிந்தியுங்கள்!

ஓதலும் ஓதுவித்தலும் புரோகிதமும் பிறப்புத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்கள் 44.6% பங்கு பெற்றிருப்பது எப்படி? அரசாண்ட வருணத்தினரான சத்திரியர் 0.5% இடம் மட்டும் பெற்றது ஏன்? இவ்வினாக்களுக்கு டாக்டர் அம்பேத்கர் அளித்துள்ள விளக்கம் மிகப் பொருத்தமானதாக உள்ளது.

“பார்ப்பனர்கள் எப்போதுமே வேறு வகுப்பின ரைத் தம் கூட்டாளிகளாக வைத்துக் கொண்டனர். அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடங்கி ஒத்துழைக்க அணியமாய் இருந்தால், அவர்களுக்கு ஆளும் வகுப்பு எனும் தகுதிநிலையைத் தரவும் தயாராக இருந்தார் கள் என்பதை வரலாறு காட்டுகிறது. புராதன காலத்திலும் மத்தியக் காலத்திலும் சத்திரியர் எனப் படும் போர் வீரர் வகுப்புடன் பார்ப்பனர்கள் இத்தகைய கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். பார்ப் பனரும் சத்திரியரும் வெகு மக்களை அடக்கி ஆண்டனர். அவர்களை நசுக்கி ஒடுக்கினர். பார்ப்பனர் எழுதுகோலைக் கொண்டும், சத்திரியர் வாளைக் கொண்டும் இதைச் செய்தனர். இப்போது பனியா எனப்படும் வைசிய வகுப்புடன் பார்ப்பனர்கள் கூட்டணி கண்டிருக்கின்றனர். இந்தக் கூட்டணி சத்திரியரிட மிருந்து பனியாவுக்கு மாறியிருப்பது இயல்பானது. வாணிகம் கோலோச்சுகிற இந்தக் காலத்தில் வாளை விடவும் பணமே முக்கியம். கூட்டணியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு இது ஒரு காரணம்” (அம்பேத்கர் நூல் : காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?).

கி.பி.4ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்தியாவில் நிலமானிய முறை வளர்ந்தது. அரசர்கள் பார்ப்பனர் களுக்குப் பெரும் பரப்பு நிலங்களையும், ஊர்களையும் தானமாகக் கொடுத்தனர். அதனால் பார்ப்பனர்கள் பெரிய நிலவுடைமையாளர்களாக உருவாயினர். காலங்காலமாகக் கல்விகற்கும் உரிமையைத் தங்களது முற்றுரிமையாகக் கொண்டிருந்ததால், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டதும், அரசு வேலைகள் முழுவதையும் பார்ப்பனரே கைப்பற்றிக் கொண்டனர். அதேசமயம் அரசியலிலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

சுதந்தரம் பெற்று அறுபது ஆண்டுகளான பின்னும், 2008 நவம்பர் 2ஆம் நாளன்று நடுவண் அரசு நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் அளித்த அறிக்கையின்படி நடுவண் அரசு வேலைகளில் உயர் அதிகாரம் வாய்ந்த முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பதவிகளில் பார்ப்பனர் உள்ளிட்ட - 17.5 விழுக்காடாக உள்ள மேல் வருணத்தாரே 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றிக் கொண்டுள்ளனர்.

அதாவது முதல் மூன்று நிலைகளில் உள்ள மொத்தப் பணி இடங்கள் 20,60,500. இதில் முற்பட்ட சாதியினர் 13,42,423 இடங்களைப் பெற்றுள்ளனர்.

இப்போது இந்த இரண்டு புள்ளிவிவரங்களையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். பொதுவாகவே அரசு என்பது வரலாறு நெடுகிலும் சொத்துடையவர் களின் அரசாக - அவர்களின் நலன்களைக் காக்கின்ற அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது. இதற்காக உழைக்கும் வர்க்கத்தினரைச் சுரண்டியும் அடக்கியும் ஒடுக்கியும் வந்துள்ளது. இப்போது நாடாளுமன்றச் சனநாயக அரசு என்ற போர்வையில், அரசு என்பது இதே தன்மையில் தான் செயல்படுகிறது. தாராள மயம், தனியார் மயம், உலகமயம் என்ற முழக்கத் தின் கீழ் வெளிப்படையாகவே சுரண்டலும் ஒடுக்கு முறையும் நிகழ்த்தப்படுகின்றன.

எந்தவொரு முதலாளித்துவ நாட்டிலும் அரசின் பொருளாதார, சமூக, அரசியல் கொள்கைகள் பெரு முதலாளியக் குழுமங்களாலேயே தீர்மானிக்கப்படு கின்றன. உலக அளவிலான காட் ஒப்பந்தம் போன்ற வற்றின் விதிகளை வகுத்தவர்கள் பன்னாட்டு நிறு வனங்களின் இயக்குநர்களேயாவர்! இந்தியாவில் இந்த நடைமுறை மிகத் தீவிரமாகப் பின்பற்றப்படு கிறது.

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குநர்களில் 93% பேர் மேல்சாதியினராக இருக்கின்றனர். அதிகாரம் வாய்ந்த அரசு வேலைகளில் 75% பேர் மேல்சாதியினராகவே உள்ளனர். உயர்நீதித்துறை யில் கிட்டத்தட்ட 90% பேர் மேல்சாதியினராக உள்ள னர். பெருமுதலாளிகள், பெரிய நிலப் பண்ணை யாளர்கள் மேல்சாதியினராகவே இருக்கின்றனர்.

வலிமையாகக் கட்டியமைக்கப்பட்டுள்ள மேல்சாதி வருண ஆதிக்கக் கோட்டையைத் தகர்க்காத வரை யில், உழைக்கும் மக்களாக - பெரும்பான்மை மக் களாக உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பு மக்கள் தொடர்ந்து சுரண்டல்களுக் கும், இயலாமைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், வறுமைக்கும் இரையாகிக் கொண்டேயிருப்பார்கள். இது விடுதலை பெற்ற நாடா என்பதைச் சிந்தியுங்கள்!

Pin It