ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டின் எதிர்ப்பால் மேகதாது அணை கட்டுவதைத் தள்ளிப் போட்ட கர்நாடக அரசு, 4.3.2022 அன்று வெளியிட்ட வரும் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம் ரூ.9000/- கோடி திட்டத்தில் முதல் தவணையாக ரூ.1000/- கோடியை ஒதுக்கி இருப்பது அவர்கள் அணை கட்டுவதைத் தீவிரப்படுத்துவதை உணர்த்துகிறது. தமிழ் நாட்டு அமைச்சர் பெருமக்கள் உடனடியாக எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்துள்ளார்கள்.

கர்நாடக மாநிலம், குடகு மலையில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு பெரும்பான்மையாக, தமிழ்நாட்டு நிலத்தில் ஓடும் ஒரே பெரிய ஆறு. தமிழகத்தில் 1.5 கோடி மக்கள் தம் குடிநீருக்காகவும், 1 கோடி பேர் வேளாண்மைக்காகவும் காவிரி ஆற்றை நம்பி உள்ளனர். அதில் 30 லட்சம் பேர் சிறு குறு விவசாயிகள். உலகெங்கிலும் ஆற்று நீர்ப் பங்கீட்டு உரிமை, வெள்ளம் வந்தாலும் வறட்சி வந்தாலும் அதிகமாக பாதிக்கப்படும் கடைசி நிலப்பகுதிக்கே என்பது பன்னாட்டு வழிகாட்டுதல். அதனால்தான் தமிழ் நாட்டின் எதிர்ப்பு இங்கே கவனம் கோருகிறது.

கர்நாடக அரசியல்வாதிகள், எந்த அரசு அமைந்தாலும், ஒரு வகையில் காவிரி நீரை தமிழக மக்களுக்குக் கொடுக்காமல் இருப்பதையே அரசியலாக முன்னிறுத்துகின்றனர். கழக அரசுகள் அமைந்த பின் 1989-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பெற்றது. 1997-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பெற்றது. இவை போதாமல் அவ்வப்போது உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் போடப்படுகின்றன. 575 டி.எம்.சி தண்ணீர் பங்கீட்டு உரிமை கர்நாடகத்தின் அடாவடியால் தேய்ந்து 192 டி.எம்.சி ஆனது. அந்த அளவைக் கூட கர்நாடகம் வடகிழக்குப் பருவமழையின் போது உண்டாகும் உபரி நீரை வெளியேற்றி கணக்குக் காண்பித்துக்கொள்கிறது.

ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அணைகள் போதாவென்று 2017 முதல் ராமனாகரா மாவட்டத்தின் மேகதாடு என்ற இடத்தில் அணையைக் கட்ட முயற்சி செய்து கொண்டே இருக்கிறது. இது தமிழகத்தில் காவிரி நுழையும் இடத்திற்கு முன்னால் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இதிலிருந்து கர்நாடகத்தின் வஞ்சனையான முடிவு நமக்குப் புரிகிறது. டெல்டா விவசாயிகள் நேரத்துக்கு நீர் கிடைக்காமல் விவசாயத்தைக் குறைத்து கொண்டே வருவது எதிர்காலத்தில் நமக்கு உணவுப் பற்றாக்குறையை விளைவிக்கும்.

ஆற்று நீர்ப் பங்கீட்டிற்காக அமைக்கப்பெற்ற எல்லா அமைப்புகளின் தீர்ப்புகளையும் எச்சரிக்கைகளையும் புறம் தள்ளி, பாதிக்கப்படப்போகும் தமிழ்நாட்டு அரசின் ஒப்புதலின்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்த நகர்வை தமிழக மக்கள் தடுத்து நிறுத்துவோம்!

- சாரதா தேவி

Pin It