மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல் குறிக்கோள் விளக்கம்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி 8.8.1976-இல் சீர்காழியில் தோற்றுவிக்கப்பட்டது.அன்று வரித்துக்கொள்ளப்பட்ட இக்கட்சியின் பெயர் “பெரியார் சம உரிமைக் கழகம்” ஆகும்.

இக்கட்சியின் அடிப்படை நோக்கம் அரசியல், சமுதாய, பொருளியல் விடுதலை. இதனை வெளிப் படையாகக் காட்டும் வகையில், கட்சியின் பெயரை மாற்ற வேண்டும் என 1981இல் சேலத்தில் முடிவெடுக் கப்பட்டது.அப்போதே ஒரு குழு அமைக்கப்பெற்றது.அப்போது முதல் பலமுறை கட்சி அமைப்புக் குழுவில் கலந்தாய்ந்து 13.10.1984இல் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஏழு ஆண்டுகள் கலந்துரையாடிய பின்னர்,மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி எனும் பெயர் மாற்றம் 13.3.1988இல் அரிய லூரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஒரு பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் உரிய ஆவணம் ஒன்றை வெளியிட வேண்டும். பெரம்பலூரை அடுத்த எசனையில் முதலாவது ஆவணமும், அரக்கோணத்தில் இரண்டாவது ஆவணமும் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.அவை சிறந்த ஆவணங்கள்.

இந்தியா இன்று ஒற்றை அதிகாரமய்யமாகவும்,ஒரே முற்றதிகாரமான ஆட்சியாகவும் உள்ளது.“இந்தியாவைஉண்மையானசமதர்ம-மதச்சார்பற்ற-தன்னுரிமைபெற்ற மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சியாக அமைக்க வேண்டும்” என, 20.10.1991இல் புதுதில்லியில் கூடி முடிவு செய்யப்பட்டது.

கூட்டாட்சிக் கொள்கை விளக்க மாநாடு சென்னையில் பல்லாவரத்தில் 7.1.2012இல் நடைபெற்றது.அனைத்திந்திய அளவில் அதற்கான முயற்சியை மேற் கொள்ளுவதென அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பில், பின்னர் தில்லி சென்றபோது, அங்கிருந்து தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசத் தன்னுரிமை கோரும் அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பழ.நெடுமாறன்,தியாகு, பெ.மணியரசன், கி. வீரமணி, தொல். திருமாவளவன், முனைவர் மு. நாகநாதன், கொளத்தூர் தா.செ.மணி,டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்க்கும் இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த முதலாவது ஆவணம் 8-4-2012இல் விரைவு அஞ்சலில் விடுக்கப்பெற்றது.

தமிழ்நாட்டுத் தமிழ்ப் பெருமக்களுக்கும்,பிற மொழிகளைப் பேசுவோர்க்கும் மொழிவழித் தன்னுரிமைக் கோரிக்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் நன்னோக்கத்துடன், 6.1.2013அன்று வேலூர் மாநாட்டில், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் குறிக்கோள் ஆவணம்-1தமிழிலும்,ஆங்கிலத்திலும் உள்ள ஒரே நூலாக வெளியிடப்படுகிறது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும்,தமிழ்த்தேசத்துக்குத் தன்னுரிமை வேண்டும் எனப்பாடுபடுவோரும்,இக்குறிக்கோளைப் பற்றி அறிய விரும்பும் எல்லாத் தமிழ்ப் பெரியோர்களும்,இளைஞர்களும் இந்த ஆவணத்தை அன்பு கூர்ந்து வாங்கிப்படித்து, இதனைச் செழுமைப்படுத்திட ஏற்ற அறிவுரைகளையும், கருத்துரைகளையும் வழங்கிட வேண்டுகிறேன்.

அருள்கூர்ந்து பிற மொழியாளர்க்கும் இக்குறிக்கோளை அறிமுகப்படுத்திடுங்கள் எனக்கோருகிறேன்.

செவ்வணக்கம்

வே. ஆனைமுத்து
பொதுச்செயலாளர்

Pin It