தமிழன் Tamil-Tamilian என்றால் Cooly ‘கூலி’-கூலிக்கு வேலை செய்பவன் என்று பொருள் என, பழைய ஆங்கில அகராதியில் இருந்தது. இப்போது அது அகற்றப் பட்டிருக்கிறது.

ஏன் அப்படி, வெள்ளையர் எழுதினர்?

பிரிட்டிஷ் வெள்ளையன்தான் உலக நாடுகளில் மூன்றில் ஒரு பகுதியை ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆண்டான்.

அவன் தன் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் உழவு வேலை செய்ய, 1865 வரையில் ஆப்பிரிக்கக் கருப்பர்களை அடிமை களாக வைத்திருந்தான்.அமெரிக்க அதிபர் ஆபிரகாம்லிங்கன் 1865இல் அடிமை ஒழிப்புச் சட்டத்தை நடப்புக்குக் கொண்டு வந்தார்.

ஆப்பிரிக்கக் கருப்பர்கள் அடிமை வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.அவர்கள் செய்த வேலைகளைத் தன் குடியேற்ற ஆட்சி நடந்த எல்லா நாடுகளிலும் செய்வதற்குப் பண்ணை அடிமைக் கூலிகள் வேண்டப்பட்டனர்.

இந்தியாவில் 1801இல் கெட்டியாகக் காலூன்றிய வெள்ளை ஆங்கிலேயன்,இங்கு எந்த மொழி பேசும் மக்கள் கூலிக்கு உழைக்கும் புத்தி உள்ளவர்கள் என்று தேடினான். தமிழர்தான் நல்ல கூலி வேலைக்காரர்கள் என்று கண்டான்.

எனவே 1870க்குப் பிறகு இலங்கை, பர்மா, மலாக்கா, மோரிஷஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய தன் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் காடுகளை அழிக்கவும், தோட்டம் உண்டாக்கவும், கரும்பு வயலில் வேலை செய்யவும், தேயிலைச் செடி, காபிச் செடி நடவும் வேண்டித் தமிழர்களைக் கூலிகளாக அழைத்துச் சென்றான். இவர்கள் நல்ல அடிமை களாகவே இருந்தார்கள்.

1876 இல் கொடிய (தாதுப் பஞ்சம்) பஞ்சம் நேர்ந்தது. இலக்கக் கணக்கில் தமிழர் செத்தனர்;  இந்தியாவில் பல இலக்கம் பேர் செத்தனர்.

இந்தியாவில் சாதி ஆதிக்கக் கொடுமைக்கு ஆளான கீழ்ச் சாதிக்காரர்களில் சிலர் மதம் மாறினர்; பலர் அயல்நாடுகளுக்குக் கூலிகளாகச் சென்றனர்.

அப்படிக் கூலிகளாகச் சென்றவர்களில் தென்னிந்தியரே அதிகம் பேர்; அவர்களிலும் தமிழரே அதிகம் பேர். இது உண்மை. எப்படி?

தாதுப் பஞ்சக்கொடுமையும்,சாதி ஆதிக்கக் கொடுமையும் தமிழ்நாடு அல்லாத பிற மொழி நிலக்காரர்களையும் வாட்டின.ஆனால் மற்ற மொழிக்காரர்களில் அதிகம் பேர் தத்தம் நாட்டை விட்டு ஓடிவிடவில்லை. ஆனால் தமிழர் ஓடினர்.

இன்று உலகம் முழுவதிலும் 90க்கு மேற்பட்ட நாடுகளில், 2.75 கோடிக்கு மேற்பட்ட வர்கள், இந்தியர் பரம்பரையில் பிறந்தவர்கள் வாழ்கிறார்கள்.இவர்களுள் ஏறக் குறைய ஒரு கோடிப்பேர் தமிழர்.

அயல் நாடுகளில் உள்ள தமிழர்களுள் இலங்கை, மலேசியா, மியான்மர் (பர்மா), சிங்கப்பூர், ஆஸ்திரேலியாமுதலான நாடுகளில் இருப்பவர்கள் வீட்டிலும்,ஊரிலும் தமிழில் பேசுகிறார்கள்;சிலர் நல்ல தமிழில் பேசுகிறார்கள். அவரவர் வாழும் நாட்டின் மொழியை யும் ஆங்கிலத்தையும் படிக்கிறார்கள்.

எடுத்த எடுப்பில் அயல்நாட்டைப் பற்றி ஏன் எழுதினேன்?

மேலே சொல்லப்பட்ட சில அயல்நாடுகளில் வாழும் தமிழரைத் தவிர,மற்ற பல அயல்நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழ்மொழி அறவே தெரியாது. ஆங்காங்கு 60, 70, 80 அகவை உள்ள முதியோருக்கு மட்டுமே தமிழ் பேசத் தெரியும்.அவர்களுடைய மக்களுக்கும், பெயரப் பிள்ளைகளுக்கும் தமிழ் அறவே தெரியாது. ஏன்?

அவர்கள் வீட்டில் தமிழ் பேசப்படவில்லை; கடைத் தெருவில், அரசு அலுவலகங்களில் தமிழ் பேசப்பட வில்லை.அதாவது அவர்களின் அன்றாட வாழ்வில் தமிழ் பயன்பாட்டில் இல்லை.இந்த ஈனநிலைமை தமிழ்நாட்டில்-சென்னை மாகாணமாக இருந்த காலத்தில்-100க்கு 5 பேரே எழுதப்படிக்கத் தெரிந்திருந்த 1880 ஆம் ஆண்டுகளிலேயே வந்துவிட்டது.

இன்றுதமிழர்வீட்டில்,தெருவில்,கடைகளில்,அரசு அலுவலகங்களில் தமிழில் பேசுகிறார்கள். அவர்களுள் பெரும்பாலோர் ஆங்கிலத்தைக் கலக்காமல் பேசுவது இல்லை; வடமொழியைக் கலக்காமல் பேசுவது இல்லை. 5ஆம் வகுப்பு முதல் அதற்கு மேல் எவ்வளவு பெரிய படிப்புப் படித்திருந்தாலும்  எந்தத்  தொழிலில், பணியில் ஈடுபட்டிருந்தாலும்           ஆங்கிலத்தையோ, வடமொழியையோ,இந்தியையோ கலக்காமல் தமிழில் பேசுவது இல்லை.ஆனால் ஒரு மலை யாளியோ, இந்திக்காரரோ, கன்னடியரோ, தெலுங்கரோ அவரவர் மொழியிலேயே உரையாடுகிறார்கள்.ஆனால் கொஞ்சமோ,அதிகமோ படித்த இரண்டு தமிழர்கள் சந்தித்தால் தமிழில் உரையாடுவது குறைவு;ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுபவர் மிக அதிகம்; ஆங்கிலத் திலேயே உரையாடுவோர் சிலர். ஏன் இப்படி?

தமிழர்கள் மட்டுமே,நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட படி, இந்த ஈனப்பழக்கத்தை 1880களிலேயே மேற் கொண்டுவிட்டனர்.

இதோ பாருங்கள்!

தமிழ் பேசும் பொழுது, இங்கிலீஷ் வார்த்தைகளை உபயோகித்தல்

பூமியில் பாஷைகள் பல.அவைகளைச்சிலர் அநேகமாயும் சொற்பமாயும் கற்றுத் தேறியிருக்கிறார்கள்.இதைக்குறித்து அதிகம் விஸ்தரிப்பது என்னுடைய நோக்கம் அல்ல.குறித்த விஷயத்தைக் குறித்துக் கொஞ்சம் சொல்ல இடம் கொடுங்கள்.

நம் நாட்டவரில் அநேகர் இங்கிலீஷ் பாஷையையும்,தமிழர்கள் சுய பாஷையாகிய தமிழ்ப் பாஷையையும் கற்றவர்களா யிருக்கிறார்கள். அவர்களில் சிலருடைய பிசகையே இங்ஙனம் எடுத்துரைக்க வந்தேன்.தமிழ்ப் பாஷை யானது தன்னிலே பத்தரை மாற்றுத் தங்கம் போல் ஜோதியாய் விளங்க,இங்கிலீஷ் பாஷையோ தற்கால அரசாட்சியாரின் ஆளுகை செல்லும் சகல இடங் களிலும் அதேமயமாய் இலங்குகிறது.பின்னே,இவை யிரண்டும் குறைவற்ற பாஷைகளென்பதற் கைய மில்லை. இவைகளைப் பிசகறப் பேசுவதே உத்தமம்.

இதன்றி,மேற்சொன்ன இரண்டு பாஷைகளிலும் அதிக அறிவுடையோரும்,சாதாரண அறிவுடையோரு மான தமிழர்,தமிழ் பேசும்போதே அதைவிட்டுச் சில இடங்களில் வேணுமென்றோ, அல்லது தடுமாறியோ, தமிழுக்குப் பதில் இங்கிலீஷ் வார்த்தைகளை ஊடும் பாவுமாய்ச் சேர்த்து, ஒரு நிமிஷத்துக்குப் 10தரமாவது உபயோகித்துப் பேசிக் கொள்கிறார்கள்.

அப்படிப் பேசுவது இங்கிலீஷா, தமிழா? அல்லது இங்கிலீஷ் தமிழா? தமிழ் பேசும் பொழுது இங்கிலீஷ் வார்தைகளையே உபயோகித்துப் பேசுவிரும்புகிற இருவர்,தான் இங்கிலீஷ் பேசும் போது தமிழ் வார்த்தை களையும் சேர்த்துப் பேசினால் நன்றாய் இருக்குமா? அப்படிப் பேசினால் அதை இங்கிலீஷ் என யார் சொல்லுவார்?

இப்படிப் பேசுதல் கேவலம் என்றால்,தமிழுடன் இங்கிலீஷ் பதம் சேர்ப்பதும் மகா கேவலமே!இப்படியே அதிகம் படித்த மகான்களும் பேசிக் கொள்கிறார்கள்.ஆனால் தமிழில் தெரியப்படுத்தக் கூடாததும் தமிழிலே சகஜமாய் வழங்கிப் போய் நாட்டுப்புறத்து ஜனங்கள்கூட நாடோடியாய் உபயோகிக்கிறதுமான இங்கிலீஷ் சொற்களைத் தமிழில் உபயோகிப்பதைக் குறித்து நான் ஆசே௸பிக்கிறதில்லை.அனாவசியமான அநேக சொற்களைச் சேர்ப்பதுதான் தகாது.

உதாரணமாக :ஒரு நாள் இருவர் தமிழில் சம்பா ஷித்துக் கொண்டு போகையில்,ஒருவர் மற்றொரு வரைப் பார்த்து, உம்முடைய மகன் எங்கே வாசிக்கிறான் என்று கேட்க, மற்றவர் மறுமொழியாக,“என்னுடைய எல்டஸ்ட் ஸன் (eldestson)டாஞ்சூர் (Tanjore) கல்லீஜில் (College) வாசிக்கிறான்.அவனறிவில் நாளுக்கு நாள் இன்கீரிஸ் (increase)அடைய சகல மீன்சுகளும் (means) இருக்கிறது. அவனுக்கு இப்போது மெடிக்கல் டிபார்ட்மெண்டில் (medical department ) இன்ட்ஸ்ரட் (interest) இருக்கிறபடியால், என்னுடைய லைவ் டைமிலே (life-time) அவனை பெட்டர் ஸ்டெப்புக்குக் (better step) கொண்டுவர வேணுமென்பது என்னுடைய புல் (full) ஒபீனியன் (opinon)” என்று முடித்தார்.

பாருங்கள்! இதில் எத்தனை இங்கிலீஷ் வார்த்தை களைக் கட்டாயமாய்ச் சொருகிவிட்டார். வாக்கியத்தில் கண்டிருக்கும் இங்கிலீஷ் சொற்களுக்குத் தக்க தமிழ்ப் பதம் தமிழ்ப் பாஷையில் இல்லையென்றா இவரிப் படிப் பேசினார்?

இந்த வசனத்திலேயே இங்கிலீஷ் தெரியாத ஒருவரிடஞ் சொன்னால் அவருக்கு அதின் கருத்து முக்கால்வாசி பிடிபடாதே. இப்படி அநேக உத் யோகதஸ்தர், தொழிலாளிகள் ஆபீஸ்களிலும்; மாணாக்கர், உபாத்திமார் பள்ளிக் கூடங்களிலும், சாதாரண மாய்ப் பேசுவது தமிழ்ப் பாஷையை அசட்டை செய்வ தாயிருக்கிறது.

சுதேச பாஷையை வெறுத்து ஆங்கிலேயே பாஷையில் அதிகக் கருத்துக் கொண்டு திரிகிற அநேக இந்து மாணாக்கர் பரீட்சைகளில் தங்கள் சுய பாஷையாகிய தமிழில் அநேகமாய்த் தவறுகிறார்கள்.

பேசினால் தமிழில் பேசு;தப்பினால் இங்கிலீ ஷில் பேசு;இரண்டையும் போட்டுப் பிசையாதே. இதின் மேன்மையும் அதின் சாரமும் கெடும்,மேலும்,தமிழர்தான் இவ்விதத் தற்பறைக்குட்படுகிறார்கள்.தமிழ் கற்ற இங்கிலீஷர் தமிழ் பேசுகையில்,இங்கிலீஷ் வார்த்தைகளை உபயோகித்துப் பேசு கிறார்களா?இல்லையே.பின்னே தமிழர்,தமிழ் பேசும்பொழுது இங்கிலீஷ்  பதங்களை உபயோகப் படுத்த இவாள் வெள்ளை மனுஷரைப் பார்க்கிலும் இங்கிலீஷில் அதிகப் பழக்கம் உள்ளவர்களா?அப்படியும் இல்லையே. அனாவசியமான இப்பழக்கம் எடுபடுதல் தமிழ்ப் பாஷைக்கு மேன்மை

ஆகையால் தமிழோடு, இங்கிலீஷ் தமாஷாய்ப் பேசும் தமிழரே! உங்கள் சொந்த பாஷையை நீங்கள் வரவர மறந்து போகாதபடி தமிழ்ப் பாஷையை அவமதியாதேயுங்கள்!அதைப் பிழையறப் பேசுங்கள்!இங்கிலீஷையும் கற்று இங்கிதமாய்ப் பேசுங்கள்!இதனின்றி, இரண்டையும் சொருகுதல் சுயபாஷைக் குறுகுதலாம்.

“தத்துவ விவேசினி”

(Vol.V, No.4, 24.1.1886) (286 A.S)

இது 1900க்கு முந்திய நிலை.1900க்குப் பிறகு இந்திய தேசிய உணர்ச்சி பொங்கி வழிந்தது; 1902 க்குப் பிறகு திராவிடரின உணர்ச்சி பீறிட்டெழுந்தது; 1938க்குப் பிறகு தனித்தமிழ் உணர்ச்சி கொடிகட்டிப் பறந்தது.

அரசியல்துறையில் வெள்ளையர் வெளியேறிய பின்னர்,தமிழ்நாட்டில் 1947 முதல் 1956 வரை யிலும் அதன் பிறகு 1967 வரையிலும், காங்கிரசு ஆட்சி நடைபெற்றது.

1938-1939 காங்கிரசு ஆட்சியின் முடிவில் தமிழ் நாட்டில் 6 ஆம் வகுப்புக்குமேல் 11 ஆம் வகுப்பு வரை யில் தமிழே பயிற்று மொழியாக ஆக்கப்பட்டுவிட்டது.அப்போக்கு, இளங்கலைப் பட்டப் படிப்பு வரையில் காங்கிரசு ஆட்சிக்காலம் வரையில் இடம் பெற்றது.
6-3-1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை அமைத்தது.

1977 முதல் 1979, 1980 முதல் 1989 வரையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடந்தது.

1989 முதல் 2013 வரையில் தி.மு.க - அ.இ.அ.தி.மு.க ஆட்சிகள் தொடர்ந்து மாறி மாறி நடந்தன; நடக்கின்றன.

அறிஞர் சி.என்.அண்ணாதுரை ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, 1963 இல் தி.மு.க. பிரிவினை கோரிக்கை யைக் கைவிட்டது.அண்ணாதுரையின் மறைவுக்குப் பின் இக்கட்சியினர் வகுத்துக் கொண்ட அரசியல் கோட்பாடு “மாநிலத்தில் சுய ஆட்சி;மத்தியில் கூட்டாட்சி” என்பதும்; மொழியைப் பொறுத்த வரையில், “எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்” என்பதும் ஆகும்.

1977க்குப் பிறகு, இவர்களால்,இவைஇரண்டும் அடியோடு காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டன. எப்படி?

1976 வரையில், தேசிய உயர் தொழில்நுட்பக் கல்வித்துறைகளைத் தவிர்த்த மற்றெல்லாக் கல்வியும்-பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரையில் -முற்றிலுமாக மாநில அரசு எப்படி வேண்டு மானாலும் செயல்படுத்துவதற்கு உரிய வகையில்-“கல்வி”என்பது மாநில அரசு அதிகாரப் பட்டியலில் (Concurrent List of Subjects)இருந்தது.

3-1-1977 முதல் “கல்வி” என்பது, பொது அதிகாரப் பட்டியல் (Central Board of Secondary Education -CBSE) என்பதற்கு மாற்றப்பட்டுவிட்டது.

அதாவது, “கல்வி”பற்றித் திட்டமிடலில் மய்ய அரசுக்கும் மாநில அரசுக்கும் அதிகாரம் உண்டு என்று மாற்றப்பட்டுவிட்டது.

அப்படி மாற்றப்பட்ட பிறகும் தமிழ்நாட்டில் பாலர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ் வழியில் எல்லாப் பாடங்களையும் கற்பிக்கத் தடையில்லை;பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை - கலை வகுப்புகள்; பொறியியல், வேளாண்மை, மருத்துவம், சட்டம், தொழிற் பயிற்சி இவற்றில் தமிழ் வழியில் பாடங்களைப் பயிற்றுவிக்கத் தடையில்லை.

இதில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு தலையிட்டாலும்-அதையும் மீறித் தமிழ்நாட்டு அரசு விரும்பினால்-உறுதியாக நின்று முடிவெடுத்தால்,எல்லாப் பாடங்களையும் தமிழ்வழியில் பயிற்றுவிக்கத் தடையில்லை.

இதை, வேறு வழியில், மத்திய இடை நிலைக் கல்விக்குழுமம் (Central Board of Secondary Education -CBSE)மூலம் புறந்தள்ள ஏற்பாடு செய்து, மாநில அரசிடம் தடையில்லாச் சான்று மட்டும் பெற்றுக் கொண்டு,தனிப்பட்டவர்கள் பனிரண்டாம் வகுப்புவரை,ஆங்கில வழியில் எல்லாப் பாடங்களையும் கற்பிக்க வழி அமைத்துக் கொண்டனர்.தாய்மொழியான தமிழ் ஒரு பாடமாகக் கூட இப்பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டியதில்லை.“இந்திய மொழிகள்” என்கிற பேரால்சமஸ்கிருதம்,இந்தி,தமிழ்,மலையாளம்,கன்னடம் இவற்றுள் எதை வேண்டுமானாலும் மொழிப்பாட மாகக் கற்கலாம்.

இந்த ஈனத்தனமான நிலைமைக்கு உடன்பாடான தனியார் பள்ளிகள் - தமிழ்நாட்டில் 12,536 உள்ளன.

இவற்றில் படித்தவர்களும், தமிழக அரசுப் பள்ளிகள், மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகளில் படித்தவர் களுமாக, 2013 மார்ச்சில், 10.5 இலக்கம் பேர் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதினர்; 8.53 இலக்கம் பேர் +2 என்கிற 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர்.

இந்த 19.03இலக்கம் படித்தவர்களுள் ஒரு 10-15விழுக்காடு பேர் தாம் பட்டப்படிப்பு Diplomaஇளங்கலை, முதுகலை - கலை, வரலாறு, அறிவியல் பட்டங்கள் பெறவும்; மருத்துவம்,பொறியியல்,சட்டம்,வேளாண்மை முதலான தொழிற் கல்விப் படிப்பைப் படிக்கவும் முற்படுகிறவர்கள். அப்படி அவர்கள் கற்கப் போகும் படிப்புகளைத் தமிழ் வழியில் கற்பிக்கத் தமிழ்நாட்டு அரசினர்-கடந்த 46ஆண்டுக்கால திராவிடக் கட்சி ஆட்சிகளில், திட்டமிட வில்லை. இது பற்றித் தமிழ்நாட்டு அரசினர்க்கு வெட்கமில்லை.

இன்றுள்ள அரசு,தொடக்கப்பள்ளி முதல் நடுநிலைப் பள்ளி,உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி;மற்றும் கலை,அறிவியல் கல்லூரிகள்,தொழிற்படிப்புகள் எல்லா வற்றிலுமே தமிழ் நீக்கப்பட்டு,ஆங்கிலமே பயிற்று மொழி ஆகும் எனத் துணிந்து அறிவித்துவிட்டது.எந்த மொழி மாநில அரசும் செய்யத் துணியாத செயல் இது! கடுங்கண்டனத்துக்கு உரியது.

இதுபற்றி ஏன் என்று கேட்கக் கூடிய தகுதிபடைத்த தமிழ்நாட்டு அறிஞர்கள் என்போர்க்கு இதில் கவலை இல்லை.

ஆனால் மேடைதோறும், ஏடுகளின் பக்கந்தோறும்-“தமிழே மூச்சு, தமிழே வாழ்வு” என்று முழக்கு வதிலும், எழுதுவதிலும் தமிழர்க்கு ஈடானவர்கள் எவரும் இல்லை.

தொல்காப்பியத்தையும், திருக்குறளையும், சங்க இலக்கியங்களையும், கி.பி.பத்தாம் நூற்றாண்டுக்குள் வந்த கம்பராமாயணம் உள்ளிட்ட தமிழ் இலக்கண,இலக்கிய நூல்களையும் பெற்றுள்ள நாம்-நம் நாட்டுத் தமிழறிஞர்கள்,பிற துறைக் கல்விகளைப் பெற்ற மூதறிஞர்கள், முனைவர்கள் - இந்த வெட்கங்கெட்ட அரசை நம்பி நில்லாமல், தாம் தாம் குழுக்களாக அமைந்து, தத்தம் நேரம், மூளை உழைப்பு. உடலு ழைப்பு, பணம் இவற்றைச் செலவு செய்து கலை, பண்பாடு, வரலாறு, அறிவியல், பொறியியல், மருத்து வம், சட்டம், வேளாண்மை,தொழில்நுட்பம்,தொலைத் தொடர்பு முதலான எல்லாத்துறைப் பாட நூல்களையும் இவர்களே உருவாக்குவதைச் செய்ய வந்திருக்க வேண்டும் இனியாவது முன்வரவேண்டும்.

பன்னாட்டு முதலாளிகளின் கையாள்களாகவும்,மேல் சாதிக்காரர்-மேல் தட்டுக்குடியினரின் பேராளர்களாகவும்; பணம், சாராயம், கறிச்சோறு, கைக்கூலி, அடியாள் கட்டு, சாதி உணர்ச்சி இவற்றை மட்டுமே நம்பியும் அரசியலில் களவெற்றிகளை விரும்புகிற இன்றைய கட்சிகளின் தலைவர்களை நம்பியும் சார்ந்தும்,இவர்களுக்கு அஞ்சியும் அறிஞர் என்போர் ஏன் வாளாயிருக்க வேண்டும்?

இணையத்தின் மூலமே எல்லாம் சேமிக்கலாம், கற்கலாம் என்பதை நன்றாக அறிந்துள்ள - 25 அக வைக்கு உட்பட்ட இளைஞர்கள் மக்கள் தொகையில் 60 விழுக்காடு உள்ளவர்கள் - தமிழிலும் எழுதத் தெரியாமல்,ஆங்கிலத்திலும் எழுதத் தெரியாமல்,தமிழ் நாட்டிலுள்ள வணிகக் கல்வித் தொண்டை ஆற்றும் -தகுதியற்ற கல்வியைத் தரும் தனியார் கல்லூரிகளில் படித்து விட்டு,இவர்கள் பெற்ற கல்வித் தகுதியைக் கொண்டு,100க்கு எத்தனை பேர் ஆண்டுக்கு 5 இலக்கம், 10 இலக்கம் உருபா ஊதியம் பெற விரும்பி, அயல்நாடு களுக்குப் போக முடியும்?

தமிழ் நாட்டிலும், பிற மாநிலங்களிலும் உள்ள 82 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட, பட்டியல் வகுப்பு, பழங்குடி வகுப்பு மாணவர்கள் IIT, IIM, I.Sc முதலான மய்யத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் எத்தனை விழுக்காடு இடம் பெறமுடிகிறது?ஏன் பெற முடியவில்லை?இதற்குத் தமிழ்நாட்டு அரசும்,தமிழ்நாட்டுக் கட்சிகளும் காண விரும்பும் தீர்வு என்ன?

தமிழ்நாட்டிலுள்ள 500க்கும் மேற்பட்ட தன்நிதிக் தனியார் கல்லூரிகளிலும், 67 தமிழ்நாட்டு அரசுக் கல் லூரிகளிலும், 124 அரசு நிதி பெறும் கல்லூரிகளிலும் இன்று படிக்கும் 5 இலக்கம் மாணவர்கள் மாணவிகள் “தமிழ்நாட்டில் தமிழ் வழியில் எல்லாக் கல்வியும் வேண்டும்” என்பதை நோக்கி ஆற்றப்போகும் பணி என்ன?

இப்படி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும்; கல்லூரிகளிலும் பயிலும் 24, 25 இலக்கம் மாணவர்களுள்-ஓர் அய்ந்து இலக்கம் மாணவர்களுக்குக் கூடத் தமிழ்வழிக்கல்வியின் முதன்மையையும்;தமிழ் மொழிக்கு அதற்கான தகுதி இருப்பதையும் தெளிவாகப் புரிய வைக்காமல்-எங்கோ ஒரு மூலையில் மாநாடு, பேரணி, ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தி - இவற்றால் மட்டும் என்றைக்குத் தமிழ் வழிக்கல்வி வரும்?

தமிழ் வழிக்கல்வி வராமல் -தமிழ்நாட்டு அரசில் எப்படித் தமிழ் ஆட்சி மொழியாகும்?

நீதிமன்ற வாதீடு, வழக்குரைத்தல், தீர்ப்பு உரைத்தல் மொழியாகத் தமிழ் என்றைக்கு வரும்?

வழிபாட்டு மொழியாகவும்,குடும்ப நிகழ்ச்சிகளுக்கான வரன் முறை (சடங்கு) மொழியாகவும் எப்போது தமிழ் வரும்?

கடைகளில், தெருவில், வீடுகளில் என்றைக்கு நல்ல தமிழ் பேச்சு வழக்கில் வரும்?

எங்கெல்லாம் எதிலெல்லாம் தமிழ் புழக்கத்தில்-பயன்பாட்டில்வரவேண்டுமோ அங்கெல்லாம் பயன் பாட்டுக்கு வரப்படச் செய்யாத தமிழ் - இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வாழுமா? வழக்கிழந்து விடுமா?

சிந்தியுங்கள்!எல்லோரும் சிந்தியுங்கள்!இதில் உடன்பாடு உள்ளோர்-கற்றல் மற்றும் விழிப்புணர்வு உண்டாக்குதல் பணியைச் செய்யுங்கள். அத்துடன் நேரம், உழைப்பு, பணம் இவற்றையும் தந்து, ஒன்றிணைந்து போராட முன்வாருங்கள்!

Pin It