என் பொதுவாழ்வுப் பணி என்பது,

1. சுயமரியாதைக் கொள்கைகளைச் சிற்றூர்களில் பரப்புவது.

2.வன்னியர் வகுப்பினருக்குக் கல்வி, சமூக, அரசியல், பொருளாதார நலன் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவது என்கிற இரண்டு வேலைத் திட்டங்களுடன் தொடங்கியது.

இந்நிலையில் இப்பணிகளைப் பற்றிய என் எண்ணங்களை,‘குமரன்’, ‘திராவிட நாடு’, ‘அணில்’, ‘பல்லவ நாடு’ முதலிய இதழ்களில் 1947இல் எழுதலானேன்.

என் பொதுப் பணிக்கு ஆக்கம் சேர்க்க வேண்டி,நான்கு பேர்கள் கொண்ட கூட்டு முயற்சியாகத் திருச்சி யிலிருந்து, ‘குறள் மலர்’ இதழைத் தொடங்கினேன். இது 1950-1951இல். இம்முயற்சியில் அன்றும்,பின் தாம் மறையும் வரையிலும் எனக்குத் தோன்றாத் துணையாக நின்றவர் என் கொள்கை ஆசிரியர் வீரானந்தபுரம் ந.கணபதி ஆவார்.மற்ற கூட்டாளிகள் இருவரும் என்னைப் பாழாக்கிட நினைத்துத் தோற்றனர்.அவர்களை 1951லேயே மறந்துவிட்டேன்.

நான் 1946அக்டோபர் முதல் 1956ஏப்பிரல் வரையில் பெரிதும் தென்னார்க்காடு மாவட்டத்திலும், திருச்சி மாவட்டத்திலும் என் பணிகளைச் செய்தேன். 1949 மற்றும் 1952-இல் நடைபெற்ற உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களில் வன்னியர் நலன் கருதி, என்னை மறந்து செயல்பட்டேன்.அச்சங்கத்தினர்,1954இல் தடம் மாறினர்;பதவிகளை மட்டுமே குறிக் கோளாகக் கொண்டனர். இச்சமூகத்தினரைப் பற்றி அதிக அக்கறை கொண்டவராக ஈ.வெ.ரா. 1905 முதலே விளங்கினார் என்பதை நான் அறிவேன்.

1952 தொடங்கி 1957 வரையில் இவர்களின் அரசியல் நலன் கருதி,அவர் ஓடோடி உழைத்தார்.“இச்சமூகத் தினரில் ஒரு நல்ல தலைவர் தோன்றவில்லையே”என வருத்தப்பட்டு,1958இல்,ஓர் அறிக்கையை, ‘விடுதலை’ ஏட்டில் அவர் எழுதினார். எனக்கு அது ஓர் எச்சரிக்கையாக அமைந்தது. எனவே அவர்களிட மிருந்து அறவே ஒதுங்கிவிட்டேன்.

1958ஆம் ஆண்டு முழுவதும் நான் சிறையி லிருந்தேன். சிறையில்தான் - வருண சாதிகள், சங்கர சாதிகளான உள்சாதிகள் பற்றிய எட்கர் தர்ஸ்ட்டனின் நூல் தொகுதிகளையும், திருக்குறள், மனுநீதி, பகவத் கீதை இவற்றையும் ஆழமாகவும் ஒப்புநோக்கியும் கற்றேன். அக்கல்வி என் அறிவை விரிவுபடுத்தியது.

நான் 26.11.1957இல் சிறை புகுவதற்கு முன் வரையில், திருச்சியிலிருந்து 1957 மார்ச்சு முதல் என் சொந்தப் பொறுப்பில், ‘குறள் முரசு’ இதழை வெளியிட்டேன்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை 15.1.1951இல் படிக்கத் தொடங்கிய நான்,1957இல் அச்சட்டத்தின் தீய கூறுகளை விளக்கி முதன்முதலாக அந்த ஏட்டில் எழுதினேன். திராவிட இயக்கத்தாரை நோக்கி - தி.மு.க.வினரைச் சுட்டி, 1957இல் நான் முன்வைத்த வினாக்களுக்கு அவ்வியக்கத்தார் இன்றுவரை விடை கூறவில்லை.ஏனெனில் திராவிட இயக்கத்தவர்கள் எந்தக் கட்டத்திலும் அரசியல் படுத்தப்படவில்லை.எனவே அரசியல் தத்துவ மேதைகள் (ளுவயவநளஅநn) 1936க்குப் பிறகு, திராவிட இயக்கத்தில் இன்றுவரை உருவாகவில்லை.

மகன் பிறந்த மகிழ்ச்சியில் திளைத்த என் மனைவி யிடமிருந்து,22.2.1957முதல் 31.10.1957க்குள் பத்துப் பவுன் நகைகளை நயந்து வாங்கி விற்றுத் தான், 6 மாதம் ‘குறள் முரசு’ஏட்டை வெளியிட்டேன்.1996இல் பெயரளவுக்கு ஒரு தங்கச் சங்கிலி வாங்கி என் மனைவியாரிடம் தந்தேன். நிற்க.

தந்தை பெரியார் 1954 ஏப்பிரல்-மே-இல் தொடங்கி, 1962, 1972-ஆம் ஆண்டுகள் வரையில் - மூன்று தடவைகளில் என்னை விரும்பியும் வற்புறுத்தியும் அழைத்து,“எந்தப் பொறுப்பையாவது ஏற்றுக்கொள்” என்று கூறினார். அவருடைய சூழ் நிலையைக் கருதி, “நான் எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது”என்று நேரில் ஒவ்வொரு தடவையும் மறுத்துவிட்டேன்.அது சரியானதுதான் என்பதை,அவர் 6.3.1967-இல் நடத்திய பொதுக் குழுவிலும்;அவர் மறைந்த பிறகு 6.1.1974இல் நடத்தப்பட்ட பொதுக் குழுக் கூட்டத்திலும் இருந்து நான் நன்கு புரிந்து கொண்டேன்.

அப்போது முதல் என் பணிகளைச் செய்ய எனக்குத் தோன்றாத் துணையாக விளங்கிய தோழர் கள் திருச்சி சிந்தனையாளர் கழகச் செயல் வீரர்கள் நோபிள் கு.கோவிந்தராசலு, உறையூர் கோ. முத்து கிருஷ்ணன், பெரியார் மாளிகை ச.சோமு, புலவர் து.தயாளசாமி, கு.ம.சுப்பிரமணியன்,அன்பில் பெ.தருமலிங்கம் மற்றும் என்றும் போல் ந.கணபதி,இரா.கலியபெருமாள் ஆகியோரே ஆவர்.

என் எல்லாப் பணிகளுக்கும் இவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கினர். இவர்களின் ஊக்கம்தான், “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” என்னும் பெரியாரின் தத்துவ விளக்கத் தொகுப்பு நூலைப் -பெரியார் 400பக்கம் அச்சில் படித்துப் பார்த்த நிலையில்2,100பெரிய அளவு (Octavo)பக்கங்களில் -அவர் மறைந்த 7-வது மாதத்திலேயே வெளிக்கொணர உதவியது. இன்றைய இளைய தலைமுறையினரின் பார்வைக்கு அந்நூல் தென் படாமல்போவதற்குஎல்லாம் செய்தவர்கள் பெரியார் பெயரைப் போற்றுகிறவர்கள்தாம். வாழ்க அவர்களின் திருத்தொண்டு!

அடுத்து, 17.8.1974-இல் என் பாவேந்தர் அச்ச கத்திலிருந்து ‘சிந்தனையாளன்’ கிழமை ஏட்டை வெளியிட்டேன்.1978-இல் அது என் வருவாயைத் தின்னத் தொடங்கியது.அமைச்சர் கா.காளிமுத்து தொடங்கி,1980-இல் மா.பெ.பொ.க.தோழர்கள் வரை சிலர் வாழ்நாள் உறுப்பினர் ஆயினர். எனினும் 1982-இல் ஏட்டை நிறுத்த நேர்ந்தது. இப்போது, அது கட்சி ஏடாகத் தத்திக் குத்தி வெளிவருகிறது.

8.8.1976-இல் என்னாலும் தோழர்களாலும் நிறுவப்பட்ட, “பெரியார் சம உரிமைக் கழகம்” தான், 1988 மார்ச்சு முதல், “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி”யாக மறுபெயர் பெற்றது.இதன்செயல்பாடுகள்எல்லாவற்றிலும்2003வரையில்முழுமூச்சாகச்செயல்பட்டவர்கள் ந.கணபதி, ஆ.செ. தங்கவேலு, கோ. குழந்தைவேலன், து. தில்லைவனம், மா. முத்துச்சாமி,சேலம் அ.சித்தையன்,எம். இராஜுஆகியோரும்;சென்னைகலச.இராமலிங்கம்,சி.பெரியசாமி,க.தென்னன்,க. ஜலநாதன்,க. முகிலன், தமிழேந்தி, இரா. பச்சமலை, வேலூர் மு. சுகுமார், வாலாசா வல்லவன், இரா. கலியபெருமாள் ஆகியோரும் ஆவர்.

இடையில்,1986இல் என் மனம் நொந்து நான் குடும்பத்துடன் என் ஊர்ப்பக்கம் உள்ள வாலிகண்ட புரத்தில் குடியேறினேன்.என் குடும்ப வளர்ச்சி கெட்டது.ஆயினும் அதைத் தாங்கிக் கொண்டு என் குடும்பத்தார் எனக்குத் துணை நின்றனர்;இன்றும் துணை நிற்கின்றனர்.

1978 - ஏப்பிரல் முதல் 1982 மே முடியவுள்ள நான்கு ஆண்டுகளில் நானும் என் தோழர்களும் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் வடநாட்டில் தங்கி எல்லாவகையான முயற்சிகளையும் இடைவிடாமல் மேற்கொண்டதால்தான், மண்டல் குழு அமைக்கப் பட்டது; மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பெற்றது. அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் முதலாவது மாநாடு 24.6.1978இல் சென்னையில் நடைபெற்றது.அதை முன் வைத்து 19.8.1978 இல் ஒடுக்கப்பட்டோர்பேரவைதொடங்கப்பட்டது.

அதன் சார்பில் வடநாட்டில் எங்களுக்குத் துணை நின்றவர்கள்,பீகார் இராம் அவதேஷ் சிங், வாழப்பாடி கூ. இராமமூர்த்தி, அலகா பாத் ஜெய்பால் சிங் கஷ்யாப், அரியானா சிறீசாந்த் கஷ்யாப் ஆகியோரும்;உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் ஆகியோருமே ஆவர்.

தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக் காடு என்பதை உயர்த்தி 60 விழுக்காடாக உயர்த்தித் தர வேண்டும் என, எம்.ஜி.ஆரிடம் 19.8.1979-இல் கோரிக்கை வைத்து 6.10.1979இல் அப்போது முதலமைச்ர் எம்.ஜி.ஆரின் அரசில் அமைச்சராக இருந்த பண்ருட்டி இராமச்சந்திரன் மூலம் விளக்கிச் சொல்லி,25.12.1979இல் 50விழுக்காடு தந்து அரசு ஆணையிடக் காரணமானவர்கள் வே. ஆனைமுத்து,அ. சித்தய்யன் இருவரும்.

13.11.1979 முதல் 1984 முடிய, நான் பெரிதும் மதித்து, அவருடன் இணைந்து பணியாற்றிய - பேருழைப்பாளர் கன்ஷிராம், 1986இல் அவர் பாதை மாறினார். 1993க்குப் பிறகு அவருடனான என் தொடர்பு அறுந்துவிட்டது.

இதற்கிடையில் 1993இல் நிறுவப்பட்ட “பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக் கட்டளை” தத்தித் தத்தி வளர்ந்து, 2010-இல் உறுதியாகக் காலூன்றியது.

பெரியார் கொள்கையைத் தத்துவ வடிவப்படுத்து வது, வள்ளுவம், மார்க்சியம், இலெனினியம், காந்தியம்,பெரியாரியம்,அம்பேத்கரியம் இவற்றில் திண்மை சான்ற பல அறிஞர்களை உருவாக்குவது; இத்தத்துவங்களைப் பற்றிப் பல மொழிகளில் பேசிட வும் எழுதிடவும் தகுதி படைத்த பலநூறு பேர்களை உருவாக்குவது என்னும் உயர்ந்த,விரிந்த,மிகப் பெரிய நோக்கங்களைக் கொண்டது இந்நிறுவனம். இதன் தன்மையை என்னோடு பணிபுரிகிற சில தோழர்கள் மட்டுமே புரிந்துள்ளனர்.சிலரே இதனை நிலையாக நிறுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றனர்.

பெரியாரின் பெயரைச் சொல்லும் பலருக்கும் தமிழ்ப் பெருமக்களுக்கும் செல்வந்தர்களாக உள்ளவர்களுக்கும் இதன் முதன்மையை உணர்த்திட,நாங்கள் எல்லோருமே எல்லாம் செய்ய வேண்டும்.

இந்த அறக்கட்டளையின் மிகப்பெரிய செயல்,1974-இல் வெளியிடப்பட்ட கட்டுரைகளுடன், கூடு தலாக 60 விழுக்காடு அளவு தொகுத்துச் சேர்த்து, “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூலை உயரிய பரிசுப் பதிப்பாக, 9300 பக்கங்கள் அடங்கிய 20 தொகுதிகளை, 3000 பெருமக்களிடம் முன்பதிவு செய்து, 3000 படிகளை அச்சிட்டு, 2010 மார்ச்சில் வெளி யிட்டதே ஆகும்.

இதேநேரத்தில்,தமிழர்க்கும் மற்ற எல்லா மொழிக் காரர்களுக்கும் தன்னுரிமை தர விரும்பாத வெகுமக் களுக்கு எதிரானதே இந்திய அரசு. இதை ஆட்டி அசைத்து - எல்லா மொழி மாநிலங்களும் தன்னுரிமை பெற வேண்டிப் போராடினால்தான் -இந்தியாவை எல்லோரும் சேர்ந்து உலுக்கினால்தான் -இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவ - மேல்சாதி ஆதிக்க “இந்தியா என்கிற நம் நாடு” உடைபடும்.

இது கருதி, 1991 அக்டோபரில், ஓய்வுபெற்ற பஞ்சாப் -அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி அஜித் சிங் பெயின்ஸ் (90 அகவை) தலைமையில் நாம் அமைத்திட்ட, “இந்தியக் கூட்டாட்சி ஆய்வுக் குழு”என்கிற அமைப்பு,இன்றளவும் முழு வடிவம் பெறவில்லை.இதற்காக இந்தியா முழுவதும் நாம் பயணிக்கவும்,பல மொழிகளில் உண்மையான கூட்டாட்சி பற்றிய கொள்கை இலக்கியங்களை உருவாக்கவும் நானும் நம் தோழர்கள் பலரும் முன்வர வேண்டும்;ஒன்றுபட்டுப் பல ஆண்டுகள் உழைக்க வேண்டும்.இதுவே நாம் அடைய வேண்டிய அரசியல் குறிக்கோள் ஆகும்.

இந்தப் பணியை முன்வைத்து, 4.4.2013, 5.4.2013 இருநாள்களிலும் பஞ்சாபிலும், 14.4.2013 முதல் 19.4.2013 வரையிலும் ஜம்மு-காஷ்மீரிலும் பயணம் மேற்கொண்டு, ஆவன செய்தேன்.

21.6.2013 அன்று 89-ஆம் அகவையை எட்ட உள்ள நான்,

1. தந்தை பெரியாரின் முழுமையான - விரிவான - திறனாய்வு முறையிலான வரலாற்றை எழுத வேண்டும்.டாக்டர் சாமுவல் ஜான்சன்,விக்டோரியா மகாராணி ஆகியோரின் வரலாறுகள் போன்ற ஒன்றை எழுதி முடித்து,2014செப்டம்பரில் வெளியிட்டே தீர வேண்டும்.

இன்றேல்,28.10.1944 முதல் ஏறக்குறைய 70 ஆண்டுகளாகத் தந்தை பெரியாரின் தொண்டனாக விளங்கும் என் வாழ்வு வீணான வாழ்வாகிவிடும் என நான் மனமார நம்புகிறேன்.

இந்தத் திட்டத்தில் தாழ்ச்சி நேராமல் தடுத்துக் கொள்வதில் நான் மிக உறுதியுடன் உள்ளேன்.

எல்லாத் தமிழ்ப் பெருமக்களும்,பெரியார் தொண்டர்களும்,மா.பெ.பொ.க.தோழர்களும் இப்பணியில் எனக்குப் பெரிய அளவில் ஆக்கம் சேர்க்க வேண்டுகிறேன்.

2015-க்குப் பின்னர் நான் வாழக்கூடிய எஞ்சிய காலத்தில்,

1. எல்லா வகுப்பினருக்கும் கல்வியிலும் வேலையிலும் விகிதாசார இடப்பங்கீடு வரவும்;
2. எல்லா மொழிவழி நாட்டினருக்கும் தன்னுரிமை வந்து சேரவும் என் உயிருள்ள வரையில் உழைப்பேன்.

 

வே. ஆனைமுத்து உருவாக்கத்தில் பெரியார் .வெ.ரா. வரலாறு

தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களின் வரலாற்றை எழுத வேண்டும் என, 1975இல் எண்ணினேன்.எடுத்த எடுப்பில் ஈரோட்டுக்குச் சென்று,ஈ.வெ.ரா.ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்த 27மாத காலத்துக்கான நகராட்சி நடவடிக்கைக் குறிப்புகளைப் படித்தேன். அப்போது முதல் பல ஊர்களுக்கும் சென்று, எவ்வளவு தேடினாலும், 1925ஆம் ஆண்டுக்கு முந்திய வரலாற்றை எழுதப் போதிய தரவுகள், சான்றுகள் இன்னமும் எனக்குக் கிடைக்கவில்லை.

1925க்குப் பிறகு, பெரியாரும் பெரியார் கொள்கையினரும் வெளியிட்ட ஏடுகள் எனக்குச் சொந்தமாக இல்லை;எங்கள் இயக்கத் தோழர்களிடமும் இல்லை.ஆனால் பல நூலகங்களிலும்,தனிப்பட்ட பெரியார் தொண்டர்களிடமும்,பல அமைப்புகளிடமும் பெரியார் வெளியிட்ட ஏடுகளும்,திராவிட இயக்கத்தார் வெளியிட்ட ஏடுகளும்,பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பர அறிக்கைகளும்,பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் நிழற்படங்களும் நிரம்ப உள்ளன.

அப்படிப் பெற்றுள்ளவர்கள், இயக்க வேறுபாடு - கட்சி வேறுபாடு கருதாமல், அவரவரிடம் உள்ள சான்றுகளை எனக்கு அளித்து உதவ வேண்டுகிறேன். எல்லாவற்றையும் ஒளிப்படம் (Xerox) எடுத்துக்கொண்டு, மூல ஆவணங்களை 30 நாள்களில், பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்பிட உறுதி கூறுகிறேன்.

பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகள் நடைபெற்ற சரியான நாள்களும் தவறாமல் பதிவு செய்யப்படுவதும் பெரியாரின் வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் என்று மனமார நம்புகிறேன்.

தரவுகளைப் பெற்றுள்ளவர்கள் எனக்கு அனுப்புவதற்கு ஆகும் செலவுத் தொகையையும் செலுத்திவிட ஆயத்தமாக உள்ளேன்.

2013 சூன் திங்களில் விடுத்து உதவிட வேண்டுகிறேன். நன்றி.

முகவரி:வே.ஆனைமுத்து
19,முருகப்பாதெரு,சேப்பாக்கம்,சென்னை-600005.
கைப்பேசி : 94448 04980

Pin It