சமுதாய மருத்துவராம் பெரியா ருக்குத்
   தமிழ்நாட்டு மருத்துவர்கள் எல்லாம் சேர்ந்து
தமதன்பை வெளிப்படுத்தும் வண்ண மாகத்
   தலைசிறந்த வரவேற்போர் நாள்அ ளித்தார்
நமதுபெரியார் அவர்க்கு நன்றி கூறும்
   நல்வாய்ப்பில் கீழ்க்காணு மாறு சொன்னார்:
“அமைவாகச் சிந்தித்தால் இறைம றுப்பை
   அன்றாடம் கடைப்பிடிப்போர் நீவிர்!” என்பேன்.
“மருத்துவராம் நீங்கள்தாம் நாத்தி கத்தை
   மக்களிடை நடைமுறையில் பரப்பு கின்றீர்!
ஒருத்தர்தாம் செய்கின்ற பாவத் திற்காய்
   உடன்கடவுள் தருகின்ற கடுஞ்சா பந்தான்
வருத்துகிற நோயென்பார் பக்தர்; நீரோ
   வளர்ந்துவரும் மருத்துவத்தால் நோய்கள் தம்மைச்
சுருக்கத்தில் குணமாக்கிக் கடவுட் சாபம்
   சும்மாதான் என்று, அவர்க்கு மெய்ப்பிக் கின்றீர்!”
“காளியாத்தாள் கடுஞ்சினத்தின் விளைவே கொல்லும்
   காலரா, பிளேக் எல்லாம்; கருத்த மேனி
மாரியாத்தா ளின்நேர்த்தி மட்டுப் பட்டால்
   மக்களுக்கு வரும்அம்மை என்பார்; நீரோ
ஊரினிலே பரவுகின்ற தொற்று நோய்கள்
   ஒவ்வொன்றுக் கும்மருந்து கொடுத்தே அந்நோய்
வேரினையே பிடுங்குகின்றீர்; கடவு ளுக்கே
   வெடிவைத்துத் தகர்க்கின்றீர்; உண்மைதானே?”
“இருபதிலே இங்கொருத்தன் சாதல் என்ப(து)
   எமலோகம் எழுதிவைக்கும் கணக்கே என்பார்
அறுபது எழுபதின்மேலும் ஆயுள் நீட்டி
   ஆண்டவன் கணக்கைப்பொய் ஆக்கு வீர்நீர்!
புரியாமற் சொல் கின்றார் கடவுளுக்குப்
   பொல்லாத கடும் எதிரி நான்தான் என்று
சரியாகச் சொல்வதெனில் நீவிர்” என்றார்
   தலையாட்டி மருத்துவர்கள் சரியே என்றார்.

- தமிழேந்தி

Pin It