தினமணி கோவைப் பதிப்பு : 13.5.2010. ஆதிசங்கரர் செயந்தி பத்து நாள்கள் நடைபெறுகின்றது.

அதில் குறிப்பிட்டிருந்த முகாமையான செய்தி, கயிலையை விட்டு வைதிக அறங்கள் தழைக்கக் காலடியில் அவதரித்தவர்தான் ஆதி சங்கரர். 2519 ஆண்டுகளுக்கு முன் அவதரித்துச் சனாதன அறத்துக்குப் புத்துயிர் அளித்தார். அனைத்தையும் வேத நெறிப்படுத்தினார். இவரது கருத்துகள் உலகில் உள்ள விஞ்ஞானிகளையும் மெய்ஞானிகளையும் வியக்கவைக்கிறது. காஞ்சிபுரம் வந்த சங்கரர் காமாட்சி கோவிலை உருவாக்கிப் பூசை முறைகளை வைதிக முறைக்கு மாற்றினார். இவர் காமாட்சியம்மனுடன் ஐக்கியமானார். அன்று தொடங்கி இன்றுவரை 2500 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சி காமகோடிபீடம் ஆதிசங்கரர் வழியில் அரும்பணியாற்றி வருகிறது என்பதுதான் முகாமையான செய்தி.

பொய்களைக் கூறியே தமிழனை நம்பவைத்து அந்த இனத்தையே அடிமையாக்கிப் பழம்பெருமை வாய்ந்த அவனது மொழியை, வரலாற்றை, பண்பாட்டை, இலக்கியத்தை, வீரத்தை, தன்மான உணர்வை நாசமாக்கிய இந்தப் பார்ப்பனக் கும்பல் உடன்பிறந்தே கொல்லும் நோய்க் கிருமி போற் பொய்மைக் கும்பல். பெரியார் போன்றவர்களால் அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பட்டி தொட்டியெல்லாம் சென்று இவர்களின் பொய்மைகளைத் தோலுரித்துக் காட்டியபின்னர், மூடத்தனங்களும், அறியாமைப் பேயும் அடித்து நொறுக்கப்பட்ட பின்னர், மக்கள் பெரும்பான்மையர் கல்வி கற்று ஓரளவிற்குப் பகுத்தறிவுச் சிந்தனைகள் வளர்ந்த பின்னரும் - திரு. ஆனைமுத்து போன்றவர்கள் ‘பெரியார் சிந்தனைகள்’ என்னும் மாபெரும் சிந்தனைக் களஞ்சியங்களை இருமுறை வெளியிட்டுப் பார்ப்பனப் பொய்மைகளையும் ஏமாற்று வேலைகளையும் எடுத்துச் சொன்ன பிறகும், இன்றும் இவ்வளவு பெரிய பொய் மூட்டைகளைச் செய்தித்தாள்களில் அவிழ்த்துக் கொட்டுகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு கரவுத் தனம் மிக்கவர்களாகத் தமிழன் எவ்வளவு ஏமாறியவனாக இருக்கிறான். இன்னும் நாம் சொன்னால் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்! இன்றும் இவற்றை நம்பவும் சிலர் இருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாதே! அந்த நம்பிக்கையில்தானே அவர்கள் இத்தகைய பொய்களையெல்லாம் அவிழ்த்துக் கொட்டுகிறார்கள்?

அவர்களுக்குச் சிறிதளவேனும் சிந்தனை, மானம், வரலாற்றறிவு என்பது இருந்திருக்குமே யானால் ஒரு சிலர் மடையர்களாக இருந்தாலும் சிந்தனையுடைய வரலாறு தெரிந்தவர்கள் சிலர் இருப்பார்கள் - அவர்கள் இதைப் பார்த்தால் கீழ்வாயில் சிரிக்கமாட்டார்களா?என்ற மான உணர்வு இருந்தால் இப்படிச் செய்திகளையெல்லாம் வெளியிடுவார்களா? அதுதான் அவர்களுக்கு இல்லையே! அதனால் சிந்தனையுள்ள தமிழர்கள் - வரலாறு தெரிந்தவர்கள் அவர்களின் பொய்களுக்கு முகத்தில் உமிழ்ந்த மாதிரி பதில் கொடுக்க வேண்டாமா? இது என்ன பெரிய செய்தி என்று தமிழனுக்கு எதிரான ஒவ்வொரு செய்தியையும் எளிதாக எண்ணியதன் விளைவுதானே தமிழினம் இன்றைக்கு இந்த நிலைக்குப் போய் உள்ளது.

அட! மானங்கெட்டவர்களே! சங்கராச்சாரி பிறந்தது கி.பி. எட்டாம் நூற்றாண்டு. அப்புறம் 2519 ஆண்டு எங்கே வந்தது? விஞ்ஞானிகள் எல்லாம் வியக்கும்படி அவர் கூறிய கருத்துகள் என்னென்ன? அது மக்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது? கூறுங்கள் என்று கேட்க வேண்டாமா? இந்த சங்கராச்சாரியால் மாந்தநேயமிக்க புத்த சமண சமயங்கள் அழிக்கப்பட்டு மக்களிடம் குலக்கொடுமைகள் , பிறவி வேறுபாடுகளை உருவாக்கி வெகுமக்களை இழிந்தவர்களாக்கி, குமுகத்தில் பிளவுகளை உண்டாக்கி அந்நியனுக்கு அடிமையாக்கியதன் அடிப்படைக் கரணியம் இந்தச் சங்கராச்சாரிதானே! காறி உமிழும் குலக் கொடுமைகளைக் கண்டுதான் விஞ்ஞானிகள் வியப்படைகிறார்களா? சங்கராச்சாரி காஞ்சிபுரம் வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளனவா? புத்தசமயம் மேலோங்கியிருந்த காலத்தில் மணிமேகலையின் நினைவாக அன்னபூரணி கோவில் என்று கட்டப்பட்டதாகச் சீனி. வேங்கடசாமி போன்ற வரலாற்றாய்வாளர்கள் கூறியுள்ளனர். சங்கரர் எங்கே வந்து உருவாக்கினார்? வேத மதத்திற்கு மாற்றினார், என்கின்றனர். அதுவும் அவர் மாற்றினார் என்பதற்குச் சான்றுகள் உள்ளனவா? இவர்கள்தான் பொய்மையிலேயே வாழ்கின்றவர்கள் ஆயிற்றே. எனவே, இவர்களே அவ்வாறு கதை கட்டிவிட்டிருக்கலாம். இருந்தாலும் இவர்கள் செய்த அரம்பத் தனத்தை ஒத்துக் கொள்கின்றனர்.

மேலும், சங்கராச்சாரி இந்த காமாட்சியிடமே ஐக்கியமாய் விட்டாராம். இது உண்மையா? இதற்கு வரலாறு உண்டா? மற்ற சங்கரமடங்கள் இதை ஏற்றுக்கொள்கின்றனவா? இதற்கு அவர்கள் பதில் சொல்வார்களா? மானமுள்ள தமிழர்களாவது. இதழ்களாவது இதைக் கேட்க வேண்டாமா? “அட மானங்கெட்ட மடையர்களே! ஏண்டா இப்படிப் பொய்களையே கூறி உங்கள் அறிவற்ற தனத்தை - பொருந்தாப் பொய்களையெல்லாம் கூறி உங்களின் பொய் வாழ்க்கை முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்கிறீர்கள்?” என்று பதிலடி கொடுக்க வேண்டாமா?

அப்படிச் செய்யாததன் விளைவுதானே இன்னும் இத்தகைய பொய் வரலாறுகளைச் செய்தியாக வெளியிடுகிறான். இன்னும் இந்த ஏமாறிய தமிழன் நாம் எதைச் சொன்னாலும், ஏற்றுக்கொள்வான் என்ற துணிவுதானே, இப்படியெல்லாம் எழுதச் செய்கிறது. பொய்களைச் சொன்னால் கடுமையாகத் திட்டுவார்கள் - எதிர்க்குரல் எழும்பும் என்ற அச்ச உணர்வு இருக்குமானால் இத்தகைய நிலை தோன்றுமா?

இன்னொரு பொய்! 2500 ஆண்டுகளுக்கும் மேலாகக் காஞ்சி காமகோடிபீடம் இவரது வழியில் அரும்பணியாற்றிவருகிறதாம். அடப்பாவிகளா! புளுகினாலும் சிறிதளவாவது பொருத்தம் வேண்டாமா? கும்பகோணத்தில் கூடாரம் போட்டிருந்த சங்கரன் பேராலான இந்த மடம், மராட்டியர்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகக் காஞ்சிக்கு ஓடிவந்ததாக வரலாறு சொல்கிறது. அதோடு மிகவும் பிற்காலத்தில் தலைமை மடத்தின் ஒரு சிறு கிளையாகக் சங்கரமடம் குடமூக்கில் (குடந்தையில்) சில பார்ப்பனர்களால் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்படியிருக்கும்போது காஞ்சி மடம்பற்றிக் காலவரையறை கூறும்போதெல்லாம் 2500 பழைமையானது என்றுதான் கூறுகிறார்கள். இவற்றைப் பார்க்கும்போது நமக்கு ஓர் ஐயம் தோன்றுகிறது. இவர்கள் மண்டையில் என்னதான் இருக்கிறது? எத்தகைய அறிவோடு இத்தகைய பொய்களைக் கூறுகிறார்கள்? அண்டப்புளுகன் ஆகாயப் புளுகன் என்றெல்லாம் கூறுவார்கள். அனைவரையும் விஞ்சிய பார்ப்பனப் புளுகு இதுதானோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சங்கரன் பிறந்தது கி.பி. எட்டாம் நூற்றாண்டு; அதற்கும் மிகவும் பிற்காலத்தில் தோன்றியது சங்கர மடம். அதற்கு 2500 ஆண்டு வரலாறு எப்படி வந்தது? ஒரு பழமொழி சொல்வார்கள். புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கொண்டது என்று. தமிழின் வரலாறு பற்றிய சான்றுகள் இன்று நிறைக் கிடைக்கின்றன. அவையெல்லாம் கி.மு. 2000, 3000 என்றும் அதற்கு மேலும் செல்கிறது. தங்களையும் தங்கள் மொழியையும் தமிழரைவிடவும் தமிழை விடவும் மேம்பட்ட நிலையில் காட்ட வேண்டும். இடைக்கால அரசர்கள் காலத்தில் அவ்வாறு புளுகித்தான் மேல்நிலையைப் பெற்றனர். சென்ற நூற்றாண்டில் அவை தகர்க்கப்பட்டன.

இன்றைய ஆட்சியாளர்கள் அவர்களின் அடிமைகளாக ஏவலர்களாக இருக்கிறபடியால் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டார்களோ? அப்படியானால் மொழி, இன, மானமுள்ள வரலாறறிந்த - தமிழினத்தின் மேம்பாட்டை விரும்பும் தன்மானமுள்ளவர்களே, நமது நிலை என்ன? இத்தகைய பொய், புரட்டுகளைச் சந்தி சிரிக்கச் செய்ய வேண்டாமா? உண்மை நிலைநாட்டப்பட வேண்டாமா?

- சோ.க.அறிவுடைநம்பி

Pin It