உலகத் தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation - ILO) பொது இயக்குநர் ஜுவான் சோமவியா (Juan Somavia) 6.12.2011 அன்று உலகின் தற்போதையப் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரம் அடைந்தால் அது அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்றும் இதனால் மேலும் பலர் வேலையை இழக்கக் கூடும் என்றும், ஆனால் இதை மக்கள் உணருவதற்கு ஆறு மாதங்கள் ஆகும் என்றும் கூறினார். அதற்குள் அனைத்து நாடுகளின் அரசியல் தலை வர்களும் தீவிரமாக முயன்றால் வேலையில்லாத் திண்டாட் டத்தின் கடுமையை ஓரளவுக் குறைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தென்அமெரிக்க நாடுகள், பன்னாட்டு நிதியத்தின் (International Monetary Fund - IMF) வழக்கமான கொள்கைக ளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றாமல், தங்கள் நாட்டு மக்களின் தேவைகளைக் கணக்கில் கொண்டு செயல்பட்டதால், குறிப்பிடும்படியான வளர்ச்சியை எட்டா விட்டாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக் குறைக்க முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார். பொருளாதார வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம் என்பவற்றைக் கணக்கில் கொண்டு செயல்பட்ட நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் பெருகி உள்ளது என்றும் அவர் கூறினார்.

இது ஒருபுறம்இருக்க கியோட்டோ (Kyoto))வில் உலக தொழிலாளர் அமைப்பு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் 10.12.2011 அன்று பேசிய, பேரிடர் மேலாண்மை நிபுணர் ஷுக்குகோ கொயாமா (Shukuko Koyama), இளைஞர்களிடையே உள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பயங்கர வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள் கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தான் நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகையில் அந்நாட்டில் 7.9 விழுக் காட்டினர் வேலையின்றி இருப்பதாகவும், 47 விழுக்காட்டினர் மிகக் குறைந்த (அதாவது இந்தியாவில் ஒரு கொத்தனா ருக்குக் கிடைக்கும் கூலியைவிடக் குறைந்த) ஊதியத்தில் வேலை செய்வதாகவும் தெரிவித்த அவர், தலிபான்கள் இதை விடச் சற்று அதிகமான ஊதியத்தைக் கொடுத்து அவ்விளை ஞர்களைத் தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

இதைப் பற்றிய விரிவான ஆய்வு செய்வதற்காக, முதலில் வேலையில்லாதோர், குறைந்த ஊதியத்தில் வேலை செய் வோர் பற்றியக் கணக்கெடுப்பை நடத்த உலகத் தொழிலாளர் அமைப்பு முனைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வாசகர்கள் தயவு செய்து குழப்பமடைய வேண்டாம். ஏற்கெனவே 7.9 விழுக்காட்டு பேர் வேலையில்லாதோர் என்றும், 47 விழுக்காட்டு பேர் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வோர் என்றும் கூறிவிட்டு மேலும் ஒரு கணக்கெடுப்பு எதற்கு என்று கேட்கிறீர்களா? அதொன்றுமில்லை. அது அரசாங்கம் ஆய்வு செய்து கொடுத்த புள்ளிவிவரங்கள். உலக வங்கி முதலிய முதலாளித்துவ நிறுவனங்கள் அனைத்தும் தனியார் துறையினரின் ஆய்வு முடிவுகளைத்தான் ஒப்புக் கொள்ளுமே ஒழிய அரசாங்கத்தின் ஆய்வு முடிவுகளை ஒப்புக் கொள்ளமாட்டா. முதலீட்டிற்கு இலாபம் வரும் வழியைப் பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டுமே ஒழிய, தப்பித் தவறிக் கூட மக்களின் தேவைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டுவிடக்கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட வழிகாட்டு நெறிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.

ஒரு கொத்தனாருக்குக் கிடைக்கும் கூலியைவிடக் குறைவான ஊதியத்தில் வேலை பார்க்கும், படித்த பட்டதாரி இளைஞர்களை, பயங்கரவாதிகள் கவர்ந்து கொள்கின்றனர் என்று குற்றம் சாட்டும் பேரிடர் மேலாண்மை நிபுணர், தென் அமெரிக்க நாடுகள் முதலாளித்துவப் பொருளாதார அளவு கோல்களைப் பின்பற்றாமல், மக்கள் நலனைக் கணக்கில் கொண்டதால் வேலையில்லாத் திண்டாட்டத்தின் தீவிரத்தைக் குறைத்திருப்பது பற்றி அவர் பணியாற்றும் உலகத் தொழிலாளர் அமைப்பின் பொது இயக்குநர் கூறியிருப்பதை ஏன் காண மறுக்கிறார்? தென் அமெரிக்க நாடுகளின் அனுபவத்தைக் கணக்கில் கொண்டு, முதலாளித்துவப் பொருளாதார அளவுகோல்களைச் சிறிதுகாலம் தள்ளிவைத்துவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கிவிட்டால், பயங்கரவாதிகள் தங்களுக்குத் தேவையான ஆட்கள் கிடைக்காமல் அழிந்து போய்விடுவார்கள் அல்லவா? அதைவிட்டுவிட்டு, பயங்கரவாதிகள் வேலையில்லா இளைஞர்களைக் கவர்ந்து கொள்கிறார்கள் என்று ஏன் புலம்ப வேண்டும்?

உண்மை என்னவென்றால் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சி என்றாலே, அது வேலையில்லாத் திண்டாட்டத்தையும் பயங்கரவாதத்தையும் உள்ளடக்கியதுதான். முதலாளித்துவப் பொருளாதார முறையைக் காவு கொடுக்காமல், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியாது. வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது.

பிரச்சினையின்றி நிம்மதியாக வாழ நினைக்கும் மக்கள் ஒதுங்கி ஒதுங்கி வாழ்வதால் பிரச்சினைகள் தீராது. முதலாளித்துவத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் போரில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம்தான் நிம்மதியான வாழ்க்கையை நோக்கியப் பயணத்தைத் தொடங்க முடியும்.

Pin It