நீடிய மலையும் மலைசூழ்ந்த
    நிலமும் குறிஞ்சி அறிதம்பி!
காடும் காடு சூழ்இடமும்
    கவின்மிகு முல்லை உணர்தம்பி!
வயலும் வயல்கள் சூழ்இடமும்
    வளமார் மருதம் ஆம்பாப்பா!
பயிலும் நெய்தல் கடல், மற்றும்
    கடல்சூழ் பகுதி அறி பாப்பா!
எரிக்கும் பாலை இங்கில்லை
    எனினும் அறிவோம் அச்சொல்லை!
குறிக்கும் இந்தத் திணை வாழ்க்கை
    கொண்ட தொல்குடி வேறில்லை!
பொங்கல் தைமுதல் பெருநாளாம்
    போற்றும் தமிழர் திருநாளாம்!
வையப் புலவன் வள்ளுவனை
    வாழ்த்த வருநாள் மறுநாளாம்!
வீட்டில் பொங்கல் பொங்கட்டும்
    வேதனை போய்ஒளி தங்கட்டும்
கேட்டில் உழலும் ஈழத்தின்
    கிழக்கில் வெளிச்சம் தோன்றட்டும்.
Pin It