sivaprakashamபேராசிரியர் முனைவர் வெ. சிவப்பிரகாசம், மேனாள் பேராசிரியர், திராவிட இயக்க ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம்

நேர்காணல் மா. உதயகுமார்

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறது. 4.9 இலட்சம் கோடி கடனில் தமிழ்நாடு இருக்கிறது. இந்தக் கடனைச் சமாளித்து வளர்ச்சி பெற அரசு முன்னெடுக்கும் செயல்பாடுகளை, பொருளாதாரப் பேராசிரியராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

2011ல் இருந்தது ஒரு லட்சம் கோடி கடன். 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகளில் 4.9 லட்சம் கோடியாகக் கடன் அதிகரித்து விட்டது. ஓபிஎஸ் தன்னுடைய கடைசி வரவு செலவுத் திட்ட அறிக்கையில் இது 5.7 லட்சம் கோடி கடனாக வாய்ப்பிருக்கிறது என்று சொல்லியிருந்தார்.

கடனுக்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாக மின்சாரத் துறைக்கான செலவு ஆகிவிட்டது. ரூபாய் 3.9 பைசாவிற்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை 7 ரூபாய் கொடுத்து வாங்கினார்கள். வாங்கிய கடனைவிட அதிகமான வட்டியைக் கட்டி இருந்தால் அதனை ‘Debt Trap' கடன் பொறி என்று சொல்லுவார்கள். வெள்ளை அறிக்கை வந்தால் தான் இந்த நிலை எல்லாம் தெளிவாகத் தெரியும்.

ஆனால் கடனை எப்படிச் சமாளிக்க முடியும் என்றால் அதற்கும் பல வழிகள் இருக்கின்றன. குறிப்பாகக் கனிமங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பன்மடங்கு அதிகரிக்கலாம். ஆனால் இந்த வருவாய் எல்லாம் முழுமையாகவே கணக்கில் வராத வகையில் பல மோசடிகள் நடந்திருக்கின்றன.

இது தொடர்பான ஊழல் பட்டியலை நம்முடைய முதல்வர் ஆளுநரிடம் வழங்கியிருந்தார். அதேபோல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் ஊழல் பட்டியலை அளித்திருக்கிறார். இந்த இரண்டு பட்டியலின் அடிப்படையில் உண்மையிலேயே நடவடிக்கை எடுத்தால் அதிக வருவாய் ஈட்டலாம்.

அதேபோல் நம்முடைய உள்நாட்டு உற்பத்தி 3.5% குறைந்திருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு மற்றும் சேவை வரிப் பங்கீட்டிலும் தற்போது பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நிதித்துறையில் சரியான சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

கடன் வாங்கியது தவறில்லை ஆனால் அதனை வருமானம் வரக்கூடிய முறையான வழியில் செலவு செய்யவில்லை, முதலீடுகளை, உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் செலவு செய்யவில்லை என்று நம்முடைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார்.

‘Austerity Measures' சிக்கன நடவடிக்கைகள் என்று சொல்வார்கள். தேவையற்ற செலவுகளைக் குறைத்துவிட்டு உற்பத்தியைப் பெருக்கும் வண்ணம் செலவு செய்வது. மின்சாரமாக இருக்கட்டும் வேளாண்மையாக இருக்கட்டும் சிறு குறு தொழில் ஆக இருக்கட்டும் போக்குவரத்தாக இருக்கட்டும் சரியான முறையில் நேர்மையாகச் செயல்பட்டால் இழப்பு என்பது இருக்காது.

போக்குவரத்துத் துறையில் எல்லாம் நஷ்டம் ஏற்படுகிறது என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த நான்கு ஆண்டுகளில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஊதாரித்தனமாக செலவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆகவே அவர்கள்மேல் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தற்போது இருக்கும் நிதி அமைச்சரின் அனுபவம் திறமை இவற்றை வைத்துப் பார்க்கும் போது அவர் மிகச் சரியாக அனைத்தையும் மேற்கொள்வார் என்பது தெரிகிறது. உலக அளவில் குறிப்பிடத்தக்க வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதில் எஸ்தர் டஃப்லோ, ஜான் ட்ராசே ஆகியோர் Developmental Economists. அதாவது வளர்ச்சிப் பொருளாதார வல்லுனர்கள். வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு இவற்றை பற்றி அவர்கள் சிறந்த ஆலோசனைகள் வழங்கக்கூடும். அதேபோல் ரகுராம்ராஜன் அவர்கள் நிதித்துறை சார்ந்த வல்லுனர்.

அரவிந்த் சுப்ரமணியம் அவர்களும் சிறந்த பொருளாதார வல்லுநர். அவர் வளர்ச்சி சதவீதம் பற்றி சிறந்த வகையில் ஆய்வு செய்பவர். அதே போல் திரு.நாராயன் அவர்களும் நிதித்துறையில் அனுபவம் கொண்டவர். இந்தக் குழு சிறப்பான ஆலோசனைகளை அளிக்கும். ஆகையால் இந்த ‘Deficit' பற்றாக்குறை என்பதை நிச்சயமாகச் சமாளிக்க முடியும்.

ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கையும், தமிழக அரசின் பொருளாதாரக் கொள்கையும் எப்படி வேறுபடுகிறது?

ஒன்றிய அரசு சந்தைப் பொருளாதாரம் என்று சொல்லிக் கொண்டு அனைத்தையும் தனியாருக்கு விற்கிறது. HALக்குக் கொடுக்க வேண்டிய ரஃபேல் உற்பத்தியை ரிலையன்ஸ்க்குக் கொடுக்கிறது. இது நிச்சயம் இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யாது. அதேபோல் அவர்கள் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் வருவாயை அதிகரிக்கும் வகையில் செலவு செய்வதில்லை.

இல்லாத சரஸ்வதி நாகரிகத்திற்குப் பல ஆயிரம் கோடியை ஒதுக்குகிறார்கள். தற்போது சென்ட்ரல் விஸ்தாவிற்குப் பல ஆயிரம் கோடியை ஒதுக்கி இருக்கிறார்கள். இவற்றால் நாட்டிற்கு எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. அதேபோல் ‘Trickle Down Effect' என்று சொல்லுவார்கள். பணம் மேலிருந்து கீழ் வருதல். இது ஒரு தோல்வியான திட்டமாகும்.

இந்தியா போன்ற சாதியக் கட்டமைப்பு உள்ள நாடுகளில் கீழ்நோக்கி பணம் செல்லாது. பல இடங்களில் அது தேங்கி விடும். ஆனால் ‘Trickle up' என்று சொல்வார்கள். அது உழைக்கும் ஏழை எளிய மக்களிடம் பணத்தைக் கொண்டு போய்ச் சேர்ப்பது. அவர்களுக்கு உரிய ஊதியத்தைக் கொடுத்து வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது.

இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அந்த வகையில் தமிழ்நாட்டில் வல்லுனர்களுடன் ஆலோசனைகள் நடைபெறுகின்றன என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். குஜராத் மாடல் என்பது பணக்காரர்களை வளர்த்து விடுவது. ‘Dravidian Model' என்பது, இல்லாதவர்கள் வறியவர்கள் இவர்களைத் தூக்கி விடுவது. சாமானியன் தான் நாயகன்.

திரவிடியன் மாடல் என்பதை எப்படி வரையறுப்பது?

திரவிடியன் மாடல் என்பது கம்யூனிஸ்ட் இடதுசாரியும் அல்ல முதலாளித்துவ வலதுசாரியும் அல்ல. இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள ஒரு Social Economics (சமூகப் பொருளாதாரம்). வர்ண தர்மத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு செயல்படுவது ஆரியன் மாடல். அதற்கு எதிரானது

Dravidian Model. ஒடுக்கப்பட்ட, நாட்டின் பூர்வ குடிகளை, உழைப்பாளர்களை முன்வைப்பது. வறுமை வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை பேசுபவர்கள் இடதுசாரிகள்தான். வலதுசாரிகள் அவற்றைப் பேசமாட்டார்கள். அவர்கள் ஆன்மீகம் என்று பேசுவார்கள். அல்லது கொங்குநாடு என்பது போன்ற பிரச்சினைகளைப் பேசி உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவார்கள்.

வெ. சிவப்பிரகாசம்

Pin It