bank queue in india2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், "ரூ.1000, ரூ.500 நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது” என்று அதிரடியாக அறிவித்தார். கறுப்புப் பணம், கள்ள நோட்டு, தீவிரவாதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார். இதையடுத்து, செல்லாத நோட்டுகளை வைத்திருப்பவர்கள், அதை மார்ச் 31-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள மும்முரமானார்கள். ஏ.டி.எம். மையங்கள் செயல்படவில்லை. பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் வங்கிகள் முன்பு கூட்டம் நின்றது. இந்த அறிவிப்பால் மக்கள் சந்தித்த பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. 110க்கும் மேலானோர் மரணமடைந்திருக்கிறார்கள். தங்களுடைய அன்றாட மருத்துவ செலவுகளுக்குக் கூட பணமில்லாமல் ஏராளமானோர் தவித்தனர். பணமில்லாமல் ஏழை, நடுத்தர திருமணங்கள் நிறுத்தப்பட்டன.

ஒரு வழியாக அடையாள அட்டை காண்பித்தவர்களுக்கு ரூ.4 ஆயிரம் என்ற வகையில், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டன. புதிதாக வந்த ரூ.2,000 நோட்டும், ரூ.100, ரூ.50 நோட்டுகளும் மக்களுக்கு வழங்கப்பட்டன.

ஒரு நபருக்கு நாளைக்கு 4000 என்று இருந்தது 4500 ஆக உயர்த்தப்பட்டது, இருந்தும் பணமில்லாத பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இருந்த இக்கட்டான சூழலில் பாஜக பிரமுகர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் 650 கோடியில் நடந்ததாக செய்திகள் வெளிவந்தன. அவர்களுக்கு மட்டும் அவ்வளவு பணம் எவ்வாறு கிடைத்தது என்பதும், கறுப்புப் பணம் ஒழியும் என அறிவித்து எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அதற்கு மாறாக சில தொழிலதிபர்கள் வீடுகளில் கட்டுக் கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. இதையெல்லாம் பார்க்கும் போது, இச் செல்லா நோட்டு அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிக்கவா அல்லது ஒளிக்கவா என்று மக்கள் மத்தியில் அன்றே கேள்விகள் எழாமல் இல்லை.

ஒரு வழியாக திரும்பப் பெறப்பட்ட பழைய நோட்டுகளை எண்ணும் பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. இந்தப் பணிகள் முடிவடையாமல் நீண்டு கொண்டே சென்றது. வங்கிகளுக்கு எவ்வளவு பணம் திரும்ப வந்தது என்ற விவரம் இருந்தால்தான், திரும்பி வராத பணம் கருப்புப் பணம் என்ற முடிவுக்கு வர முடியும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. ஒரு வழியாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்குப் பிறகு நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15,44,000 கோடி ரூபாய் என மத்திய அரசு கூறிய நிலையில், தற்போது பழைய நோட்டுக்கள் அனைத்தும் எண்ணப்பட்டு 15,31,000 கோடி ரூபாய் திரும்ப வந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது மொத்த மதிப்பில் 99.3% ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்குத் திரும்பி விட்டது என்றும் 0.7% ரூபாய் மட்டுமே திரும்ப வரவில்லை, அதாவது வெறும் 10 -லிருந்து 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரும்ப வரவில்லை என தெரிய வந்துள்ளது,.

ஊழலும், கறுப்புப் பணமும் நாட்டை அரிக்கும் கரையான்கள் என்றவர் மோடி. ஊழலை ஒழிப்பதில் பாஜக உறுதியாக இருக்கும் என்றும், ஊழல், கறுப்புப் பணம், கள்ளப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை பெரும் வெற்றியடையும் என்றாரே நம் பிரதமர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல்,கறுப்புப் பணம் ஒழிந்ததா இல்லையா என்று அறிவிப்பாரா??

இந் நிலையில், பணமதிப்பு நீக்கம் என்பது பிழை இல்லை, அது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என்றும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது பற்றி நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்றும், மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பலனடைந்தது பணக்காரர்களே என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளது உண்மை தானே என்று எண்ணத் தோன்றுகிறது.

- அப்சர் சையத்

Pin It