இந்திய விவசாயிகள் பெரும்பாலும், இரசாயன உரத்தையே நம்பியுள்ளனர். போதிய அளவு மழை பொழிந்திருந்தாலும், உரவிலையேற்றம், உரத்தட்டுப்பாடு, கூலி ஆள் பற்றாக்குறை, இடுபொருள்கள் விலை உயர்வு, கூலி உயர்வு இவைகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் தத்தளித்துக்கொண்டு செக்கு மாடுபோல் வாழ்கின்றனர்.

இதுவரை ஓரளவு உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மய்ய அரசு, இவ்வாண்டு சௌமித்ரா சவுத்திரி கமிட்டியின் பரிந்துரையின் பேரில் உரங்களின் விலையை, உரக் கம்பெனிகளே தீர்மானித்துக் கொள்ள லாமென, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து உர நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு உரங்களின் விலையைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப உயர்த்தியுள்ளன.

இதுமட்டுமன்றி வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொட்டாஷ் உரத்தில் செயற்கையாகத் தட்டுப்பாட்டை உருவாக்கி, கள்ளச் சந்தையில் விற்றுக் கொள்ளை இலாபமடைகின்றனர்.

தமிழ்நாட்டில் 50% உரவிநியோகம், கூட்டுறவு விற்பனை இணையம் மூலமும் (டான்பெட்), மீதி 50% தனியார் மொத்த வியாபாரிகள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. உரக்கடைகளில் உரம் முறையாக, நியாயமான விலையில் கிடைப்பதில்லை.

விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் யூரியா ரூ.265.50க்கு பதில் ரூ.350க்கு விற்கப்படுகிறது. அதேபோல் மற்ற உரங்களுக்கான விலைகளைத் தனியார் உர நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இவற்றின் விலையே அதிகம். ஆனால், அதைவிடக் கூடுதலான விலையில் கடைகளில் அவை விற்கப்படுகின்றன. அரசு இதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் எடுக்க வில்லை.

விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வரும், யூரியா, டைஅமோனியம்பாஸ்பேட், பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் 20:20, 20:20:0-13; 17:17:17. 10:26:26 என 15 வகையான காம்பௌக்ஸ் உரங்களை ‘இப்கோ’, ‘சில்’, `எம்.சி.எப்', `ஆர்.சி.எப்', என பல உரநிறுவனங்கள் உற்பத்தி செய்ததில் 1.4.2010க்கு முன், உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு, உரவிலை உயராத வகையில், உரமானியத்தை அரசு வழங்கி வந்துள்ளது. அனைத்து உர நிறுவனங்களும் அரசு நிர்ணயிக்கும் விலையில், வித்தியாசமின்றி உரத்தை விற்பனை செய்து வந்தன. இந்த ஏற்பாடு 31.3.2011 வரை அமுல் படுத்தப்பட்டதால், உரத்தின் விலை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.

1.4.2011 முதல் உரமானியக் கொள்கையில் மாறுதல் செய்து, தழைச்சத்து, சாம்பல்சத்து, மணிச்சத்து, கந்தகச்சத்து என உரத்தின், உரச்சத்தின் அடிப்படையில் உரமானியம் வழங்கிடவும், உரநிறுவங்களே உரத்தின் விலையை நிர்ணயித்துக்கொள்ளவும், மய்ய அரசு முடிவெடுத்ததன் காரணமாக உரவிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

உரச்சத்தின் அடிப்படையில்தான் அரசு மானியம் அளிக்கப்படும் என்றவுடன், ஏற்கனவே டி.ஏ.பி. (டைஅமோனியம் பாஸ்பேட்) உரத்தில் 18:46 என்ற அளவிலிருந்த மணிச்சத்து, தழைச்சத்து என்ற விகிதம் 16:44 என்ற அளவில் உரக்கம்பெனிகளால் குறைக்கப் பட்டள்ளது. ஏற்கனவே 100 கிலோ உரம் பயன்படுத்திய இடத்தில் தற்போது 120 கிலோ பயன்படுத்த வேண்டும்.

tables_370

தழைச்சத்து, சாம்பல்சத்து, மணிச்சத்து என்ற 3 வகையான உரங்கள் விவசாயத்திற்கு அடிப்படையான உரங்கள். இதில் சாம்பல்சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் உரங்களுக்கு ஆண்டு தோறும், ஒரு இலட்சம் கோடிக்கு மேல் உரமானியம் உர கம்பெனிகளுக்கு, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. உற்பத்தியை விடக்கூடுதலாக, உற்பத்தியைக் கணக்குக் காட்டி அரசிடமிருந்து பல மடங்குக் கூடுதலாக உர மானியம் பெறுகின்றனர் உரமுதலாளிகள். இதை மத்தியத் தணிக்கைக் கட்டுப்பாட்டு அறிக்கை அம்பல படுத்தியுள்ளது.

01.07.2008 முதல் 31.03.2010 வரை, உரநிறுவனங்களின் உற்பத்திச் செலவு, அதற்கு அரசு வழங்கும் உரமானியம், 50 கிலோ கொண்ட ஒரு மூட்டையின் விற்பனை விலை பற்றியும், 01.04.2010 முதல் 01.11.2011 வரை உர உற்பத்தியின் செலவும் அரசு வழங்கும் மானியம்; 50 கிலோ கொண்ட ஒரு மூட்டைவிலை பற்றிய விவரம்.

01.04.2010 முதல் உர உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு உரவிலை நிர்ணயித்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டு இதன்படி ஒவ்வொரு நிறுவனமும் தெரிவித்த பட்டியலில் இப்கோ, ஐ.பிஎல், சில், ஸ்பிக் உர நிறுவனங்கள் தெரிவித்த உற்பத்திச் செலவு மட்டும் மேலே பட்டியலிடப்பட்டள்ளது.

இப்பட்டியலை ஒப்பு நோக்கிப் பார்த்தால், 01.04.2010க்கு பின் 01.11.2011 வரை உற்பத்திச் செலவு குறைவாக உள்ளது. அதேபோல் உற்பத்திச் செலவிற்கேற்ப உரமானியமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உர விற்பனை விலையைப் பார்க்கும் போது, மிக அதிக அளவு உயர்ந்திருக்கிறது. இது ஆட்சியாளர்களுக்கு தெரியாதா? தன் குடும்பம் வாழ, ஊருக்குழைக்கும் கோடிக்கணக்கான விவசாயிகள் தலையில் ஒரு பெரும் சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. இதை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

எல்லாம் ஆண்டவன் விட்ட வழி, தலைவிதியென்று செக்குமாடுபோல் வாழ்ந்து கொண்டிருக்கும் உழவர் பெருமக்களே, நமக்காகப் போராட, யாரும் தயாராக இல்லை. நம் உரிமைக்கு நாம்தாம் போராட வேண்டும். ஒருங்கிணைந்து, உழவர்களின் உரிமை பெற, போராட வாரீர்! வாரீர்!!

பூமி பிளக்காமல் விதை முளைப்பதில்லை

போராடாமல் உரிமை கிடைப்பதில்லை.

- மாவோ

Pin It