ஏகாதிபத்திய யுத்தம் மக்கள் யுத்தமாகிறது :

ஏறத்தாழ அய்ரோப்பா முழுவதையும் வெற்றி கொண்டுவிட்ட நிலையில், 1941 சூன் 22ஆம், நாள் தனது அனைத்துச் சக்திகளையும் ஒன்றுதிரட்டிக் கொண்டு இட்லரின் ஜெர்மனி, சோவியத் இரஷ்யா மீது பாய்ந்தது. எட்டே வாரங்களில் சோவியத் நாட்டி னை வீழ்த்திவிடலாம் எனக் கணக்குப் போட்டிருந் தனர் நாஜிகள்.

ஆனால் நாஜிப் படைகளை இரஷ்யாவின் செஞ் சேனை வீராவேசத்தோடு எதிர்கொண்டது. இந்த யுத்தத் தில் சோவியத் நாட்டை ஆதரிப்பதாக இங்கிலாந்தின் பிரதமர் சர்ச்சிலும், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் டும் அறிவித்தனர். பாசிசம் எனும் மனிதகுலத்தின் அன்றைய முதன்மையான எதிரியை ஒழிக்க, ஏகாதி பத்திய சக்திகளுடன்கூட சோசலிச சக்திகள் உறவு கொள்ள வேண்டி வந்தது. இந்த இரண்டாம் உலகப் போர் அதன் தொடக்கத்தில் இருந்தது போன்று ஒரு ஏகாதிபத்திய யுத்தமாக இல்லை. மாறாக ஒரு மக்கள் யுத்தமாக மாறிவிட்டது. மனிதகுல நல்வாழ்வே, நாஜிப் படைகளின் தோல்வியிலும் சோவியத் படைகளின் வெற்றியிலும் இருந்தது.

இப்படிப்பட்ட உலக நிலையில் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி என்ன நிலை எடுத்தது? இந்த இக்கட்டான சூழ்நிலையில், சோவியத் நாட்டின் மீதான நாஜி களின் படையெடுப்புத் தொடங்கி ஆறு மாதங்களாகி யும், கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் புதிய நிலை குறித்து எந்த முடிவும் எடுக்காமலிருந்தது.

நாஜிப் படைகள் தங்களுக்கிருந்த ஆரம்ப அனு கூலங்களைக் கொண்டு, சோவியத் நாட்டிற்குள் புகுந்து, லெனின் கிராட், கீவ் நகரங்களைக் கைப்பற்றி மாஸ்கோவையும் நெருங்கிவிட்டன. இதற்கிடையில் நாஜிகளின் நண்பனான ஜப்பானும், 1941 திசம்பர் 7இல் அமெரிக்கக் கடற்படை மீது (பெர்ல் துறைமுகத்தை) தாக்கியது. இங்கிலாந்தின் காலனி நாடுகளான மலேசியா, பர்மா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைப் பிடிக்க ஜப்பானியப் படைகள் விரைந்தன. அதாவது யுத்தம் இந்தியாவை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

இப்படிப் போர்நிலை மாறியிருந்த சமயத்தில், தியோலி (இராஜஸ்தான்) சிறையிலிருந்த பி.டி. ரணதிவே, எஸ்.ஏ. டாங்கே போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலர் புதிய நிலைகுறித்துச் சில ஆவணங்களைத் தயாரித்தனர். “இட்லரின் பாசிசத்திற்கு எதிரான மக்கள் யுத்தம்” எனத் தலைப்பிடப்பட்ட அவை “சிறை ஆவ ணங்கள்” என அழைக்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து, இட்லரை முறியடிப்பதற்காக மக்களை ஒருங்கிணைத்து, இந்தியாவில் நடத்த வேண்டிய மக் கள் யுத்தத்திற்குத் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்க வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கின்ற ஒரு நடைமுறையுடன், யுத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைபாட்டை அந்த ஆவணம் வலியுறுத்தியது.

இந்த நிலைபாட்டிற்கு வர, இங்கிலாந்து கம்யூ னிஸ்ட் கட்சியிடமிருந்து வந்து சேர்ந்த இரு முக்கிய ஆவணங்களும் உதவின.

கம்யூனிஸ்ட் நிலைபாடுகள் :

ஆங்கில ஆட்சியின் யுத்த நடவடிக்கைகளை ஆதரிப்பது என்றால், இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தைக் கைவிடுவது என்பதுன்று. அன் றைக்கிருந்த அரசின் யுத்த நடவடிக்கைகளை ஆதரிப் பது என்பது, ஜப்பானியத் தாக்குதலுக்கு எதிராக தேசத்தைப் பாதுகாக்கச் செய்யவேண்டிய உடனடிக் கடமையாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில் தேசப் பாதுகாப்புக்காக மக்களைத் திரட்ட, தேசிய சக்திகளி டையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும். தேசிய சக்திகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு ஏகாதிபத்தி யத்தை நிர்பந்திக்க வெகுமக்கள் போராட்டத்தைக் கட்டமைக்க வேண்டும். அந்நிய ஆட்சியை - அரசை விரட்ட வேண்டும். ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும். இதுதான் அன்று கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலை.

பாசிச ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவைக் காக்க, பாசிச எதிர்ப்பு இயக்கமும், ஏகாதிபத்திய அடிமைத் தளையிலிருந்து இந்தியாவை விடுவிக்க விடுதலைப் போராட்டமும் இணைந்து நிற்கும் நிலையை அன்று கம்யூனிஸ்ட் கட்சி எடுத்தது. இக்கொள்கையினை நடைமுறைப்படுத்தியதில் சில தவறுகள் நேரிட்டன என்பது உண்மைதான். ஆனால் இக்கொள்கையினை உருவாக்கியதில், ‘சோவியத் நலன்’ மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டது; இந்திய விடுதலை கணக்கில் கொள்ளப் படவில்லை என்று கம்யூனிஸ்ட் விரோதிகள் கூறும் குற்றச்சாட்டில் கொஞ்சமும் உண்மை இல்லை.

உலக யுத்தத்தின் தன்மையில் மாறுதல் ஏற்பட்டி ருக்கிறது என்பதைக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, நேரு போன்ற காங்கிரசுத் தலைவர்களும் அன்று ஒப்புக்கொண்டனர். ஆனால் சோசலிஸ்ட் கட்சியும், பார்வார்டு பிளாக் கட்சியும் நிலைமை மாறியிருக்கிறது என்பதைக்கூட அங்கீகரிக்க மறுத்தன. எம்.என். ராயும்; அவரைச் சார்ந்தோரும் ஈ.வெ.ராவும் அவரைச் சார்ந்தோரும், தேச மக்களின் உணர்வை மதித்து ஆட்சியுடன் ஒத்துழைக்க முன்வந்தனர். இடதுசாரிகளி டையே இதுபற்றிக் குழப்பமான நிலை நிலவியது.

பர்மாவின் தலைநகரம் இரங்கூன் வீழ்ந்து, அசாமிற்கு அருகில் ஜப்பானியர் முன்னேறி வந்திருந்த நிலையில், 1942-ஆம் ஆண்டு மார்ச்சு 11ஆம் நாள் “கிரிப்ஸ் தூதுக் குழு” அமைக்கப்பட்டுள்ளது என்னும் அறிவிப்பு வெளியானது. அந்த ஆலோசனைக் குழு கொண்டு வந்த யோசனைகள் : 1. யுத்தம் முடியும் வரை அரசு அமைப்பில் மாறுதல் இல்லை. 2. யுத்தத்திற்குப் பின் குடியேற்ற நாட்டு அந்தஸ்து (டொமினியன்) தரப் படும். 3. இந்தியாவின் சில மாகாணங்கள் தனிக் குடியேற்ற நாடுகளாக இருக்கலாம்.

இத்தகைய சூழலில்தான், ‘அரிசன்’ இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில், காந்தியார் “வெள்ளையனே வெளியேறு” (Quit India)) என்னும் முழக்கத்தை முதன் முதலாகக் கொடுத்தார்.

தேச விடுதலையைப் பெற்றிடவும், ஜப்பானிய அபாயத்தை எதிர்த்துப் போராடிடவும், முசுலீம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் தேசிய சுய நிர்ணய உரிமை தருவது என்ற அடிப்படையில் ஓர் உடன்பாடு காண வேண்டும் என்னும் தனது திட்டத் தை இராசாசி வெளியிட்டார். இதனைத் “தவிர்க்க முடியாத தீமை” என்ற முறையில் காங்கிரசு ஏற்க வேண்டும் என்று கூறினார்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் கூடிய அலகாபாத் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், தான் கலந்து கொள்ளாமல், கீழ்க்கண்ட வாசகங் களைக் கொண்ட ஒரு நகல் தீர்மானத்தைக் காந்தியார் அனுப்பி வைத்ததாக ஆர்.சி. மஜும்தார் கூறுகிறார் : “இந்தியாவைக் காப்பாற்ற பிரிட்டனால் இயலாது. ஜப்பானுடைய சண்டை இந்தியாவுடன் அல்ல. இந்தியா விடுதலை அடைந்தால், அதன் முதல் நடவடிக்கை ஜப்பானோடு பேச்சுவார்த்தை நடத்துவதாக இருக்கும். ” காந்தியின் இந்த நகல் தீர்மானத்திற்குப் பதிலாக, நேரு எழுதிய மற்றொரு நகல் தீர்மானத்தைத்தான் காரியக் கமிட்டி ஏற்றுக்கொண்டது.

1942 சூலை 14ஆம் நாள் காங்கிரஸ் காரியக் கமிட்டி ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை நிறைவேற்றியது. தேச விடுதலையின் பெயரால் காங்கிரசு ஒரு வழியைக் காட்டியது; கம்யூனிஸ்ட் கட்சி மற்றொரு பாதையைக் காட்டியது. தேசப் பாதுகாப்புக் காகவும், தேச விடுதலைக்காகவும் காங்கிரசு - முசுலீம் லீக் ஒற்றுமை உருவாக வேண்டும் என்றும், போராட்டம் வேண்டாம் என்றும் கம்யூனிஸ்டுகள் கூறவில்லை. போராட்ட முறையானது நமது இலட்சி யத்துக்குக் இயைந்ததாக இருக்க வேண்டும் என்று தான் வற்புறுத்தியிருந்தார்கள். கம்யூனிஸ்டுகள் இத் தீர்மானத்தை எதிர்த்தாலும், காங்கிரசை விட்டு வெளியேறவில்லை. ஆனால் இராசாசியோ காங்கிர சை விட்டு வெளியேறியதுடன், காங்கிரசின் அக்காலத் திய கொள்கைகளை, நடைமுறைகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆகஸ்டு 8ஆம் நாள் முடிவுற்றது. அடுத்த நாளே - ஆகஸ்டு 9 அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது தாக்குதலைத் தொடுத்தது. காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டு, அகமத் நகர் கோட்டையில் சிறை வைக்கப் பட்டனர். தலைவர்கள் சிறைப்பட்டதையும், கைது செய்யப்பட்டதையும் கேள்விப்பட்ட மக்களிடையே கோபாவேச எழுச்சி ஏற்பட்டது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதால், காங்கிரசு உறுப்பினர் கள் தளபதிகள் இல்லாத படை வீரர்கள் போலாயினர்.

தன்னெழுச்சியாக நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப் பாட்டங்கள், பேரணிகள், கதவடைப்புகள், ஹர்த்தால் கள், கல்வி நிலையங்களில் வேலை நிறுத்தங்கள் முதலியன நடந்தன. அவற்றையெல்லாம் அடக்கி ஒடுக்கிட வரன் முறையற்ற கைதுகள், தடியடிகள், துப்பாக்கிச் சூடுகள் அன்றாட நடவடிக்கைகளாயின. போலீசும், இராணுவமும் சுட்டதில் 940 பேர் மாண்ட னர். 1030 பேர் படுகாயமடைந்தனர். 60,229 பேர் கைதாயினர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது, உலகளாவிய பாசிச எதிர்ப்பு, சோசலிச சோவியத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தது. ஆனால் ‘வெள்ளையனே வெளி யேறு’ இயக்கத்தை எதிர்த்தது; மக்களிடமிருந்து தனிமைப்பட்டது.

 ஆகஸ்டு 10 அன்று, அகமதாபாத் மக்கள் மீதான போலீசாரின் துப்பாக்கிச் சூட்டினைத் தடுத்து நிறுத்த முயன்ற போது, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான உமாபாய் காடியா ஆகஸ்டு போராட்டத்தில் முதல் களபலி ஆனார். 1943 பிப்ரவரி 9ஆம் நாள் காந்தியார் 22 நாள் உண்ணாநோன்பினைத் தொடங்கினார். நெடிய உண்ணாநோன்பினாலும், கஸ்தூரிபாயின் மரணத் தாலும், காந்தியின் உடல்நிலை மோசமடைந்தது. இதன் காரணமாக 1943 மே 6ஆம் நாள் காந்தியார் விடுதலை செய்யப்பட்டார்.

தொடரும்...

Pin It