நான்காவது மாநாடும் முதல் பொதுவுடைமை அமைச்சரவையும்

கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது அகில இந்திய மாநாடு கேரளத்தில் பாலக்காடு நகரில் 1956 ஏப்பிரல் 16 முதல் 29 வரை நடைபெற்றது. இம்மாநாட்டி னையொட்டி, தீவிரமாக நடந்து கொண்டிருந்த உட் கட்சி விவாதம் பற்றி பி. சுந்தரய்யா எழுதுவதைக் கவனியுங்கள் :

“1956 பாலக்காடு மாநாட்டில் இரண்டு வெவ்வேறு கருத்தோட்டங்கள் தெளிவாக வெளிப்பட்டன. நானும், பசவபுன்னையாவும், ஹரிகிஷன்சிங் சுர்ஜித்தும், பிரசாத் ராவும், அனுமந்தராவும் கட்சியின் மத்தியக் குழுவில் ஒரே கண்ணோட்டத்துடன் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தோம். அம்மாநாட்டில் எங்களுடைய தீர்மானமும், மத்தியக் கமிட்டியின் சார்பில் அஜய் ஜோஷின் தீர்மானமும், இராஜேஸ்வரராவின் தீர்மா னமும் விவாதத்திற்கு வந்தன. இராஜேஸ்வரராவின் தீர்மானத்தைப் பிரதிநிதிகளில் மூன்றிலொரு பகுதியி னர் ஆதரித்தனர். எங்கள் தீர்மானத்தையும் அஜய் கோஷின் தீர்மானத்தையும் ஒரே எண்ணிக்கை அள வில் ஆதரித்தனர். இறுதியில் ஏதோ ஒரு வகையில் ஒரு சமரசத் தீர்மானம் நிறைவேறியது.”

பாலக்காடு மாநாடு முடிந்த சிறிது காலத்திற்குள், சோவியத் கட்சியின் 20ஆவது மாநாட்டின் இரகசிய அமர்வில் ஸ்டாலின் பற்றி, குருச்சேவ் சமர்ப்பித்த அறிக்கையினை அமெரிக்க ஏகாதிபத்திய அரசு வெளி யிட்டது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு எதிராக அந்த அறிக்கையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி னார்கள் ஏகாதிபத்தியவாதிகள்.

ஸ்டாலின் பற்றிய ஒருதலைபட்சமான சோவியத் கட்சியின் கணிப்பை அப்போதே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்தது.

சோவியத் கட்சியே, “தனிநபர் ஆராதனை எதிர்ப்பு” என்ற பெயரில் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்துக்குத் தீனிபோட்டது.

மக்கள் போராட்டத்தின் விளைவாக 1956 நவம்பர் 1-ஆம் நாள் 14 மொழிவழி மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவாயின.

1956 நவம்பர், திசம்பர் மாதங்களில் சீனப் பிரதமர் சூ என் லாய் இந்தியாவில் பயணம் செய்தார். தில்லியில் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மேலும் சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களுக் கும் சென்றார். எல்லா இடங்களிலும் இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு நின்று உணர்ச்சிமிகு வரவேற்பு அளித்தனர். “இந்தி-சீனி பாய், பாய்” - இந்திய சீன மக்கள் சகோதரர்களே எனும் முழக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.

இத்தகைய சூழலில், 1957 பிப்பிரவரியில் இரண் டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவையில் 29 இடங்களைப் பெற்று, கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது பெரிய கட்சி என்ற நிலையைத் தக்க வைத்துக் கொண்டது.

கேரளத்தில், இந்திய மண்ணில் முதன்முதலாக, ஒரு கம்யூனிஸ்ட் அமைச்சரவை அமைக்கும் அளவுக்கு, கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் கிடைத் தது. இந்தியாவில் கேரளத்தில் காங்கிரசு அல்லாத ஓர் அரசு உருவானது. அய்ந்து சுயேட்சை உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை அமைக்கத் தாங்கள் ஆதரவு அளிப்பதாக எழுத்து மூலம் உறுதி அளித்தனர்.

1957 ஏப்பிரல் 5இல் எம்.எஸ். நம்பூதிரிபாத் தலைமையில் 11 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளுக் கிணங்க, நிலச்சீர்திருத்த மசோதா ஒன்றை நிறை வேற்றியது. மேலும் கல்வித் துறையிலும் அரசுத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆதிக்கச் சக்தி களுக்கு எதிராக, கல்வி மசோதா, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு போன்ற தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடுத்தது. அதனால் கேரள அரசை எதிர்த்து நிலப்பிரபுத்துவ ஆதிக்க சக்தி களும் ‘விமோசன சமரசம்’ நடத்திய மன்னத்துப் பத்ம நாபனும் வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டிவிட்ட னர். இத்தகைய எதிர்ப்புகளுக்கிடையேயும் பீர்மேடு-தேவிகுளம் இடைத்தேர்தலில் 20.5.1958இல் கம் யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி வாகை சூட்டி மக்கள் பதிலடி கொடுத்தனர்.

ஆயினும், 1959 சூலை 31இல் நேருவின் ஆட்சி யில், இந்திராகாந்தியின் வழிகாட்டுதலின்படி, கேரள கம்யூனிஸ்ட் அமைச்சரவை பதவி நீக்கம் செய்யப் பட்டது. சனநாயகமும், மாநில மக்களின் உரிமையும் ஒரே அடியில் தூக்கி எறியப்பட்டன. ஆளும் சுரண்டும் வர்க்கங்கள் சனநாயகத்துக்கும், நாடாளுமன்ற அமைப் புக்கும் என்ன மதிப்பும், மரியாதையும் வைத்திருக் கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இந்தச் சனநாயகப் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடந்தன. பொதுக் கூட்டங்கள் நடந்தன. கல்கத்தாவில் இரண்டு இலட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் ஊர்வலமும் பொதுக் கூட்டமும் நடைபெற்றன. சுதந்தரத்துக்குப் பிறகு கல்கத்தாவில் நடைபெற்ற மிகப்பெரிய கூட்டம் இது தான் என்று பத்திரிகைகள் எழுதின. ஆயினும் கேரள அரசு அநியாயமாகக் கலைக்கப்பட்டதை எதிர்த்து இந்திய அளவில் வீரியமான போராட்டங்களைக் கம் யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கத் தவறியது.

நட்புறவில் விரிசல்

இந்தக் காலக்கட்டத்தில், இந்தியா-சீனா நட்புறவில் விரிசல்கள் காண ஆரம்பித்தன. 1959இல் மார்ச்சில் மக்கள் சீனத்தின் ஒரு பகுதியாக இருந்த திபெத்தில் நிலப்பிரபுத்துவ ஆதரவாளர்கள் கலகம் செய்தனர். தங்களது செல்வாக்கும் பிடியும் தளர்வதைக் கண்ட நிலப்பிரபுக்களும், மதவெறியர்களும் வன்முறைக் கிளர்ச் சியில் ஈடுபட்டனர். அதற்கு மதத்தலைவரான தலாய் லாமாவின் ஆதரவு இருந்தது. இந்த வன்முறைக் கலகத் தினை சீன அரசின் மக்கள் விடுதலை இராணுவம் மிக விரைவில் அடக்கிவிட்டது. தலாய்லாமாவுக்கு அடுத்த மதத் தலைவராகிய பஞ்சன் லாமா சீன அரசின் நிலையை ஆதரித்தார்.

கலகம் அடக்கப்பட்டது கண்டு, தலாய்லாமா இந்தியாவுக்கு இரகசியமாக வந்து சேர்ந்தார். இந்திய அரசும் அவருக்கு அரசியல் அடைக்கலம் அளித்தது. சீன அரசைக் கண்டித்து, இந்தியாவிலிருந்து தலாய் லாமா விடுத்த அறிக்கையை, இந்திய அரசுப் பிரதிநிதி ஒருவரே விநியோகம் செய்தார். இந்திய-சீன நட்புறவைப் பாதிக்கும் தலாய்லாமாவுக்கு அளிக்கப்பட்ட அரசியல் தஞ்சம் பற்றி இந்திய அரசு கவலைப்படாமல் போனது ஏன்? தலாய்லாமாவை இங்கு கொண்டுவந்து சேர்த்த சக்திகள் எவை? என்பவை இன்றைக்கும் கேட்கப்படும் கேள்விகளாக உள்ளன.

இதற்கிடையில் 1959 ஆகத்து மாதத்தில் இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாகக் கடுமையான கருத்து வேறுபாடுகள் எழுந்திருப்பதாகச் செய்திகள் வெளிவரத் தொடங்கின. பிரச்சினைகளைச் சுமூக மாகப் பேசித் தீர்க்குமாறு இரு நாடுகளையும் கம்யூ னிஸ்ட் கட்சி கடிதம் மூலம் கேட்டுக் கொண்டது. சீனப் புரட்சியின் பத்தாவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள பீக்கிங் சென்றிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு, சீனத் தலை வர்களிடம், பிரச்சினையைச் சுமூகமாகப் பேசித் தீர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

இதற்கிடையில் 1959 அக்டோபர் 21இல் கோங்கோ கணவாய் (Kongko Pass) அருகே மோதல் ஏற்பட்டு, இருதரப்பிலும் உயிர்ச்சேதம் நேரிட்டது. “மக்மோகன் கோடு” என்று பொதுவாகக் கூறப்படும் எல்லையைப் பொறுத்த வரையில், அது எந்தவொரு மத்திய சீன அரசாலும் ஒருபோதும் ஒத்துக்கொள்ளப்பட்டதில்லை என்றும், இரகசியக் குறிப்புகளின் பரிமாற்றத்தின் விளைவாக ஏற்பட்டதால், அது சட்ட விரோதமானது என்றும் சீன அரசு கூறுகிறது. இந்திய அரசின் கருத்து வேறுவிதமாக உள்ளது. அப்படியிருந்தாலும் அநேக ஆண்டுகளாக, இந்தியாவின் எல்லையாக அது இருந் துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, மக்மோகன் கோட்டிற்குத் தெற்கேயுள்ள பகுதி இந்தியாவின் பகுதியாக இருந்து வந்துள்ளது என்றும், அது இந்தியாவில்தான் இருக்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு கூறுகிறது.

மேற்கு எல்லையைப் பொருத்தவரை, இப்பிராந்தி யத்தின் பாரம்பரிய எல்லையை ஒப்புக்கொள்ள வேண்டு மென்று இந்திய அரசு சரியான முடிவை எடுத்திருக் கிறது. ஆயினும் பாரம்பரிய எல்லை தீர்மானமாக எது என்பதில் ஒரு தகராறு உள்ளது. இந்தச் சமயத்தில் 1960 பிப்பிரவரியில் கேரளத்தில் நடந்த சட்டமன்றத் திற்கான இடைத்தேர்தலில், 1957இல் கிடைத்த வாக்கு களைவிட அதிகமாகப் பெற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பி.எஸ்.பி.-காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை கேரளா வில் அமைந்தது.

1960 ஏப்பிரலில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்த ஏட்டில், “லெனினியம் நீடு வாழ்க” எனும் தலைப்பில் லெனின் பிறந்த நாளையொட்டி ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் சோவியத் கட்சியின் நிலைப்பாடு களை “நவீன திருத்தல் வாதம்” என மறைமுகமாகத் தாக்கி எழுதப்பட்டிருந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே யான சித்தாந்த வேறுபாடுகள் முதன்முதலாக மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தன.

1960ஆம் ஆண்டு சூன் மாதத்தில், புகாரெஸ்டில் நடந்த ருமேனியக் கட்சியின் மாநாட்டிற்கு வந்திருந்த சோவியத், சீனக் கட்சிகளின் ஆளும் பிரதிநிதிகளும், இதர நாடுகளின் ஆளும் கட்சிகளின் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசியும், கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட வில்லை, எனவே 1960 நவம்பரில் மாஸ்கோ நகரில் 81 நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு நடை பெற்றது. மூன்று வார காலம் நடைபெற்ற இம்மாநாட் டில், 81 கட்சிகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட்ட போதிலும், அதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வது தொடர்பாகச் சீன, சோவியத் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இம்மா நாட்டுக்குச் சென்று திரும்பிய அஜய் கோஷ், எஸ்.ஏ. டாங்கே, பி. இராமமூர்த்தி, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், புபேஷ்குப்தா ஆகியோரடங்கிய குழுவினர்களாலும் கூட ஓர் ஒருமித்த அறிக்கையை தேசியக் குழுவுக்குச் சமர்ப்பிக்க முடியவில்லை.

உலக அரங்கிலும், உள்நாட்டிலும் பரபரப்பான நிகழ்வுகள், திடீர் திருப்பங்கள் நடந்து கொண்டிருந்த இக்காலக்கட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது அகில இந்திய மாநாடு ஆந்திராவில் உள்ள விஜயவாடா நகரில் 1961 ஏப்பிரல் 7 முதல் 16 வரை நடைபெற்றது. அப்போதுதான் சோவியத் குடிமகன் யுரி காகாரின் அண்டவெளியில் பறந்த முதல் மனிதன் என்ற நிலையில், சோசலிச சாதனைகளுள் இது முக்கிய நிகழ்வானது.

1960 திசம்பர் 1961 சனவரியில் கூடிய தேசியக் குழு, அரசியல் தீர்மானத்தைத் தயாரிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அதில் அஜய் கோஷ் நகல் தீர்மானம், பி.டி. ரணதிவேயின் நகல் தீர்மானம் என இரு வரைவுகள் உருவாயின. இவ்விரு வரைவு களும் 1961 பிப்பிரவரியில் கூடிய தேசியக் குழுவில் வைக்கப்பட்டு, அஜய் கோஷின் தீர்மானம் பெரும்பான் மையினரால் மாநாட்டு விவாதத்திற்கான தேசியக் குழுவின் நகல் தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டது.

இத்தீர்மானத்தில் உருவாகியுள்ள கருத்து வேறு பாடுகள் அடிப்படையானவையாகவும், ஆழமானவை யாகவும் இருந்ததால், ரணதிவேயின் நகல் தீர்மானத் தை அடித்தளமாகக் கொண்டு ஒரு மாற்று நகல் தீர் மானத்தை 21 தேசியக் குழு உறுப்பினர்கள் தயாரித்த னர். இவர்களுடைய மாற்று நகல் தீர்மானமும் கட்சி அணிகளிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கட்சித் திட்டம், அரசியல் தீர்மானம் இரண்டிற்கும் சேர்த்து ஒரு நகல் ஆவணத்தை இ.எம்.எஸ். தயாரித்திருந்தார். அதுவும் மாநாட்டில் விவாதத்துக்கு வைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி, அதன் ஆட்சி பற்றி மதிப்பீடு செய் வதிலும், அதனோடு கம்யூனிஸ்ட் கட்சி கொள்ள வேண்டிய அணுகுமுறை பற்றியும் தீர்மானிப்பதில், கருத்து முரண்பாடு தீவிரமாக வெளிப்பட்டது.

தேசியக் குழு, அஜய் கோஷை மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. ஆனால் தேசிய நிர்வாகக் குழு, செயற்குழு ஆகியவற்றைத் தேர்ந் தெடுக்கவில்லை. இந்நிலைக்கு உட்கட்சிப் போராட்டமே காரணம் என இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் கருதினார்.

- தொடரும்

Pin It