vallasa-vallavan 350சென்னையில் 3.6.1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் சர்வாதிகாரி செ.தெ. நாயகம் கைது செய்யப்பட்டவுடன், ஈழத்து அடிகளை இரண்டாவது சர்வாதிகாரியாக அன்றே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

போராட்டக்களம் தியாகராயர் நகர் முதலமைச்சர் வீட்டின் முன் நடைபெற்றதை மாற்றி, சென்னை பெத்துநாயக்கன்பேட்டை உயர்நிலைப்பள்ளிக்கு முன்பு நடத்தத் திட்டமிடப்பட்டது. ஏனெனில் அந்தப் பள்ளி யில் சமஸ்கிருதமும் பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது.

28.7.1938இல் ஈழத்து அடிகள் கைது செய்யப் பட்டவுடன், தோழர் கே.எம். பாலசுப்பிரமணியம் மூன் றாவது செயல் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண் டார். அதன்பின் அருணகிரி அடிகளார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரும் 6.8.1938இல் கைது செய்யப் பட்டார். அதன்பிறகு மறைமலையடிகளாரின் இளைய மகன் மறை திருநாவுக்கரசு தமிழாசிரியர் பணியைத் துறந்து இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் குதித்தார். 9.8.1938இல் அவர் கைது செய்யப்பட்டார்.

26.9.1938இல் சி.என். அண்ணாதுரை கைது செய்யப்பட்டார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டச் செயல் தலைவர் திரு. ஜி.என். ராசு, குடந்தை எஸ்.கே. சாமி, எம்.சு. மொய்தீன், புவனகிரி நமச்சிவாயம், மயிலாடுதுறை சம்பந்தம், காஞ்சி பரவஸ்து இராசகோபாலாச்சாரியார், பெரியகுளம் அரங்கசாமி, கந்தம் ரோசம்மாள், டி.என். மாரியம்மாள், நெல்லை புலவர். இராமநாதன் ஆகி யோர் தலைமையில் போராட்டம் தொடர்ந்து நடை பெற்று வந்தது. செயல் தலைவர்கள் (சர்வாதிகாரிகள்) ஒருவர் பின் ஒருவராகத் தலைமையேற்றுப் போராட் டத்தை நடத்தும் போது கைது செய்யப்பட்டு, சிறைக்குள் அடைக்கப்பட்டபோதும், போராட்டம் தொய்வின்றி நடைபெற்று வந்தது.

குடிஅரசு இதழில் ‘இந்தி எதிர்ப்பும், அரசாங்கமும், எதிரிகளும்’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்கள் மீது எப்படியெல்லாம் வீண்பழி சுமத்து கிறார்கள் என்பதை விளக்கியுள்ளார்கள். அந்தத் தலையங்கத்தின் ஒரு பகுதியை இங்கே காணலாம்.

இந்தி எதிர்ப்பும், அரசாங்கமும், எதிரிகளும்

“இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காக இதுவரை 197 பேர்கள் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். நூற்று இருபது பேர்கள் வரை தண்டிக்கப்பட்டி ருக்கிறார்கள். இவர்களில் பல ருக்கு 4 மாதம், 5 மாதம், 6 மாதம் கடினக் காவலும், ஒரு மடாதிபதி சந்நியாசிக்கு 2 வருஷக் கடினக் காவலும், மற்றொரு பி.ஏ. படித்த யாழ்ப்பாணத்துச் சன்யாசியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனையும் அளித் திருப்பதோடு இவர்கள் எல்லோருக்கும் ஜெயிலில் ஊ (சி) கிளாஸ் உணவும் தகுதியும் தான் கொடுக்கப்பட வேண்டும்மென்றும் தீர்ப்பளித்து அந்தப்படியே அவர் கள் அத்தனை பேரையும் மொட்டை அடித்து கிரிமினல் கைதிகள் உடுப்புக் கொடுத்து மிகக் கொடூர வாழ்வு வாழும்படி நடத்தப்பட்டு வருகிறார்கள்.

சிறைசென்ற தொண்டர்களில் பலர் பெருத்த செல்வவான்களின் பிள்ளைகள். சிலர் மாதம் 100, 200 ரூபாய் சம்பாதிக்கக் கூடியவர்கள். சில தொண்டர் களின் பெற்றோர்கள் சென்னை வந்து தொண்டர்களுக்குப் பலவித உபசாரங்கள் சொல்லி காங்கிரஸ்காரர்கள் தயவு பிடித்து அழைத்துப் போக முயற்சித்தும் தொண் டர்கள் மறுத்துவிட்டார்கள். இரண்டொரு லட்சாதி பதிகள் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

ஒரு முக்கிய விஷயம்

ஒரு விஷயத்தை வாசகர்கள் நினைவில் இருத்த விரும்புகிறோம். அதாவது இந்தி எதிர்ப்புக் கமிட்டியார் தங்கள் கிளர்ச்சிகளைச் சட்டத்திற்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்றும், எவ்வித நிலைமையிலும் சட்டம் மீறுதல் கூடாது என்றும், சர்க்கார் உத்திரவுகளைக் கூட மீறி ஒன்றும் செய்யக்கூடாது என்றும் தீர்மானித் திருப்பதுடன், இம்முடிவை இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உணர்ந்து வெகு கண்டிப் பாய் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கும் போதே பதட்டமுள்ள - சர்க்கார் அக்கிரமத்தை சகிக்க முடியாத - பல தோழர்கள் சிறை பிடிக்க இணங்கி இருக்கிறார்கள் என்றாலும் இவர்களில் எவரும் சட்டம் மீறத் தீர்மானித்துச் சிறை சென்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

மறியலுக்குக் காரணம்

உண்மையிலேயே யாரும் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று கருதிக்கூட சிறை செல்ல வில்லை. நடந்த காரியம் என்னவென்றால் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது ஒரு தோழர் ‘ராமசாமி நாயக்கரா’லும், மற்றொரு காங்கிரஸ்-ஆரிய விரோதி யாலும் நடக்கின்றதே ஒழிய பொது ஜனங்களின் எதிர்ப்பல்ல என்று கனம் ஆச்சாரியார் வெளியிலும், சட்டசபையிலும் கூறிய கூற்று தவறு என்று நிரூபிப் பதற்காக “நாங்களும் எதிர்க்கின்றோம்”. “நாங்களும் எதிர்க்கின்றோம்” என்பதைக் காட்ட வேண்டிப் பல தோழர்கள் முயற்சித்தார்கள்.

அம்முயற்சியில் ஒன்று தான் ஆச்சாரியார் வீட்டுக்கு பக்கத்தில் ஆச்சாரியார் கண்ணில் படும்படி நின்றதாகும். அதுவும்கூட அப்படி நின்ற தோழர்கள் “தமிழ் வாழ்க - இந்தி ஒழிக” என்று சொல்லிக்கொண்டு நின்றதாகும். இதைத்தவிர அத்தொண்டர்கள் எந்த அடாதகாரியத்தையும் செய்யாது-யாருக்கும் எவ்வித அசௌகரியத்தையும் தொந்திர வையும் கொடுக்காது இருக்கும்போது (கொடுத்ததாக போலீசார் சாட்சியத்திலும் மற்றும் அவர்கள் கொடுத்த சார்ஜ் ஷீட் பிராதிலும் கூடக் காண முடியவில்லை) அந்தப்படி நடந்துகொண்டவர்களைத் தான் ஆச்சாரியார் சர்க்கார் கைது செய்து 200 பேர்கள் வரை கணக்குக் காட்டி இருக்கிறார்கள்.

மந்திரிமார் ஏளனம்

ஆனால் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி கமிட்டியார் “நியாயமான முறையில் சமாதானத்துக்குப் பங்க மில்லாமல் செய்யப்படும் கிளர்ச்சியைச் சட்டம் மீறியது என்று சொன்னாலும் இலட்சியம் செய்ய வேண்டிய தில்லை” என்று தீர்மானித்திருப்பார்களேயானால்கூட, இதுவரை 2000 பேர்களாவது சிறைபிடிக்கப்பட்டிருப் பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அந்த நிலையை ஏற்படுத்தாமல் இனியும் பார்ப்போம்; இனியும் பார்ப்போம் என்று இந்தி எதிர்ப்புக் கமிட்டி பொறுமை காட்டி வருவதை மந்திரிகள் யோக்கியப் பொறுப் பற்ற முறையில் கருதி ஏளனம் செய்து வருகிறார்கள்.

“இந்தி எதிர்ப்புத் தலைவர்கள் ஏன் இன்னும் சிறைக்கு வரவில்லை?” என்று கூட்டங்களிலும் மேடை களிலும் இருந்து கேட்பதோடு தனிப் பேச்சு வார்த்தை களிலும் பேசி, பரிகாசம் செய்கிறார்கள். மந்திரிகள் என்னவோ சொல்லட்டும், அதைப்பற்றிக் கவலை இல்லை. அது பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட கூட்டமாகும்.

ஆனால் அற்பக் கூலிகளும் இதைப் பின்பற்றி சில அயோக்கிய காலிப் பத்திரிகைகளும் ஏளனம் செய்கின்றன.

அற்பர்கள் புரளி

மக்களுக்கு வாழ்க்கையின் கொடுமையால் மானம் ஈனம் இல்லாமல் போவது இயல்பு. ஆனால் புத்திகூட இல்லாமல் போகுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தி எதிர்ப்புக் கமிட்டித் தலைவர்கள் சட்டத்தையும் சர்க்கார் உத்திரவையும் இலட்சியம் செய்யாமல் சிறை செல்லும்படி அபிப்பிராயப்பட்டு விட்டார்களா, தீர்மானம் போட்டு அனுமதித்து விட்டார்களா, என்றுகூடக் கவனிக் காத இந்த அற்பர்கள், அயோக்கியர்கள் தங்களிடம் பத்திரிகை இருப்பதாலும் தங்களுக்கு வாய் இருப்ப தாலும் அவைகளை ஒழுங்காக உபயோகப்படுத் தாமல் துஷ்ப்பிரயோகப்படுத்துகிறார்களே! இந்த இழிபிறப்பாளருக்குப் புத்தி வரும்படியான வார்த்தை கள் கிடைக்காமல் வெகு கஷ்டப் பட்டுக் கொண்டு இதை எழுத வேண்டியிருக்கிறது.

இந்திக் கிளர்ச்சி நடப்பதேன்?

இன்றைய நிலைமை இந்நாட்டுத் தமிழ் மக் களுக்குப் பேராபத்தாய் வெகு நெருக்கடியாய் இருக் கிறது என்று கருதியே இந்தி எதிர்ப்பையும் மற்றும் பல காரியங்களையும் செய்யப் பல சுயநலமற்ற மக்கள் கிளர்ச்சி துவக்கி இருக்கிறார்களே தவிர இதனால் எவ்விதக் கூலியும் பெறுவதற்கல்ல. இம்முயற்சியில் அவர்கள் படும்பாடும் அடையும் கஷ்டமும் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் ஏற் படும் ஆபத்தும் கவலையும் அபாயகரமானதாக இருந்து வருகிறது. இவ்வளவு கஷ்டத்தில் அவர்கள் வேலை செய்து வரும்போது தங்களது மான ஈனத்தைக் காசுக்கு விற்று வயிறு வளர்க்கும், பதவி பெற்று வாழும் அற்பர்கள் இதைப் பரிகசிக்கவோ உண்மைக்கு விரோத மாகப் பேசவோ எழுதவோ என்ன யோக்கியதை என்று கேட்காமல் இருக்கவும் இந்த அயோக்கியர் களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும்படி வெளிப்படுத் தாமல் இருக்கவும் பொது நலத்தை உத்தேசித்து நம் மால் முடியவில்லை. ஆதலால் இதை விளக்குகிறோம். சர்க்காரை நடத்துகிறார்கள் என்கின்ற முறையில் மந்திரிகள் ஏதாவது பேசலாம். அவர்கள் சில சமயங் களில் வக்கீல்களைப் போலும் வியாபாரிகளைப் போலும் தாசி வேசிகளைப் போலும் உண்மைக்கு மாறாகவும், உணர்ச்சிக்கு மாறாகவும் பேசலாம், நடக்கலாம்.

பொது ஜனங்களுக்கு வேண்டுகோள்

ஆனால் மற்றவர்கள் அதிலும் பொதுநல சேவைப் பத்திரிகைகள், பொதுநலச் சேவைப் பிரசாரகர்கள் என்று சொல்லிக் கொண்டு இம்மாதிரி அற்பத்தனமாக அயோக்கியத்தனமாக நடந்து பொது ஜன சமூகத் துக்குக் கேடு உண்டாகும்படியான காரியத்தைச் செய்து வாழப் பார்ப்பதை எப்படிச் சற்றாவது மதித்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகையால் பொது ஜனங்கள் இவ்விஷயங்களில் உண்மைகளை அறியக் கவலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.

தவிர இவ்வியக்கத்துக்குப் பணம் வசூல் செய்வதைப் பற்றியும் ஈனத்தனமாகச் சிலர் பேசி வருவதாக அறி கிறோம். “சில தலைவர்கள் தங்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக இந்தி வசூல் பணம் பயன்படுத்தப் படுகிறது” என்று பேசினார்களாம். இது எவ்வளவு கண்டிக் கப்படத்தக்கது என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

காங்கிரஸ் வீரர்களுக்கு ஒரு கேள்வி

காங்கிரஸ்காரர்கள் பலர் காங்கிரசில் வந்து சேரும் போது எச்சிலை நக்கிப் பிழைக்கும் யோக்கியதை யிலும் காமுகனுக்கும் காமக்கிழத்திக்கும் தரகனாய் இருந்து வயிறு வளர்த்துக் கொண்டும் இருந்தவர்கள் இன்று பல ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு உடை மைஸ்தர்களாய் இருக்கக் காரணம் என்ன? அவர் களது வரவு-செலவு என்ன? தொழில் வரி, வருமான வரி என்ன? என்று கணக்குச் சொல்ல முடியுமா என்று கேட்கிறோம்.

இந்நிலையுள்ள அயோக்கியக் கூட்டத்தார் மற்றவர்களைப் பார்த்து, அதுவும் பொதுநலச் சேவைக்கு வந்தபின்பு தங்களுடைய ஏராளமான வருவாய்களை இழந்து பல இலட்சக்கணக்கான ரூபாய்களையும் இழந்து பல நல்ல வீடுகள் மொத்தத்தில் மாதம் 1000, 1500 ரூ. வாடகை வந்த வீடுகள் குட்டிச் சுவராக நிற்க விட்டு விட்டும், பல பதினாயிரக்கணக்காகக் கடன் கொடுத்த ரூபாய்களை வசூலிக்காமல் (கடன் நிவாரண சட்டத்தால் அல்ல) விட்டு விட்டும் மற்றும் ஒருவர் தனது பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமிகளின் சொந்த விவசாயத்தைப் பாழாக்கிக் கொண்டும், மற்ற ஒருவர் தனது, ஆண்டிற்கு 4000, 5000 இலாபம் தரும் வியா பாரத்தை இலட்சியம் செய்யாமல் இருந்து கொண்டும் எந்தப் பதவியையும் எந்த இலாபத்தையும் ஆசைப் படாமல் தமிழ் மக்கள் நலத்தையே கருதி பல கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் தங்கள் சொந்தச் செலவில் தொண்டாற்றி வருகிறவர்களைச் சிறிதும் நன்றிகெட்ட மிருகக் குழந்தைகள் போல் கேவலமாக இழிவாகப் பேசி விஷமப் பிரசாரம் செய்வதென்றால் இதை எப்படி சகிக்க முடியும் என்று கேட்கிறோம்.”

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடையவே ஆச் சாரியார், இந்தியில் நான்கு வார்த்தைகள் படித்தாலே போதும் என்று மழுப்பலாப் பேசிவந்தார்.

(குடிஅரசு 31-7-1938)

தொடரும்.

Pin It