sankar-ayya 350ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் சங்கரய்யா. அவருடைய தந்தை 1911இல் பம்பாய் சென்று கொதிகலன் பொறியியல் படிப்பை முடித்து மதுரையில் அரசுத் துறைப் பொறி யாளராகப் பணி யாற்றியவர். 1922இல் பிறந்த சங்கரய்யா வழக்கு ரைஞராக வர வேண்டுமென்பது தந்தையாரின் விருப்பம். அவரும், தாத்தாவும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்த நகரங்களில் ஒன்று மதுரை. அந்தப் போராட்டத்தில் மற்ற பகுதி மக்களோடு மாணவர்களும் ஈடுபட்டார்கள். அப்போது அந்நியர் ஆட்சியை எதிர்த்து, அமெரிக்கன் கல்லூரி மாணவரான சங்கரய்யா அக்கல்லூரியில் கண்டனக் கூட்டம் நடத்தியதோடு, மதுரை நகரில் மாணவர்களைத் திரட்டிப் பெரும் ஊர்வலத்தையும் நடத்தினார். நாட்டின் அரசியல் விடுதலையோடு சமுதாய விடுதலையையும் இலட்சியமாகக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

போராட்டத்தை ஒடுக்க முற்பட்ட அந்நியர் ஆட்சி நிர்வாகம் மாணவன் சங்கரய்யாவையும் கைது செய்தது. பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வுக்கு 15 நாள்களே இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா வேலூர் சிறையிலடைக்கப்பட்டார்.

சிறையில் அவருக்கு அரசியல் படிப்பு தொடர்ந்தது. தோழர்கள் ப.ஜீவானந்தம், வ.சுப்பையா, பி.சீனிவாச ராவ், எம்.ஆர். வெங்கட்ராமன், வி.பி. சிந்தன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன், காங்கிரஸ் தலைவர் களும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். வேலூர் சிறையில்தான் காமராஜரை முதன் முதலாக சங்கரய்யா சந்தித்தார்.

18 மாதங்களுக்குப் பிறகு 1942 ஜூன் மாதம் தலைவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட் டார்கள். விடுதலையான பிறகு முழுநேரமாக சங்கரய்யா இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். பட்டப்படிப்பு இறுதித் தேர்வுக்குச் சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப் பட்ட சங்கரய்யா தனது எதிர்காலம் பற்றி முடிவெடுக்க வேண்டிய அந்த முக்கியமான தருணத்தில், தனிப்பட்ட முறையில் தன்னுடைய சொந்தத் தேவைகள் பற்றிக் கவலைப்படாமல், நாட்டுக்குச் சேவை செய்வதையே இலக்காகக் கொண்டு சிறை சென்றார்.

1942இல் காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பாளையங்கோட் டையில் மாபெரும் மாணவர் பேரணி நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மாணவர் சங்கப் பொதுச் செயலா ளரான சங்கரய்யாவும் கலந்து கொண்டார். பேரணி யைத் தடுத்த காவல் துறையினர் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதில் சங்கரய்யா வும் படுகாயம் அடைந்தார். நெல்லை மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து 1942 ஆக்ஸ்ட் மாதத்தில் மீண்டும் சங்கரய்யா கைது செய்யப்பட்டுக் கேரளத்தில் உள்ள கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1944இல் அண்ணல் காந்தி விடுதலையானபோது தான் சங்கரய்யாவும் மற்ற கம்யூனிஸ்ட் தலைவர் களும் விடுதலை செய்யப்பட்டார்கள். மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபட்ட போது, கம்யூனிஸ்ட் கட்சியில் அன்றைய மதுரை மாவட்ட (மதுரை, தேனி, விருதுநகர், இராம நாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்) செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1946ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய கடற்படை எழுச்சி பம்பாயில் தொடங்கி, கல்கத்தா, சென்னை என்று அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. கடற்படையிலிருந்த இந்திய வீரர்கள் அந்நிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். அந்தப் போராட்டத்தை முறியடிக்க ஆங்கிலேய அரசு கடுமையான ஒடுக்கு முறையை ஏவிவிட்டது.

இந்தியக் கடற்படை வீரர்களின் போராட்டத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளித்தது. கடற்படை வீரர்கள் போராட்டத்தை ஆதரித்து மதுரையில் ஒரு பேரணியை சங்கரய்யா தலைமை தாங்கி நடத்தினார். பேரணியைக் கைவிடுமாறு அவரை காவல்துறை அதிகாரி துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அதற்கெல்லாம் சங்கரய்யா பணியவில்லை. மதுரையில் முன்னைக்காட்டிலும் சுதந்தரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. அதில் கம்யூனிஸ்டுகள் பிரதானமான பாத்திரம் வகித்தனர்.

இந்தப் பின்னணியில்தான் கம்யூனிஸ்ட்டுகள் மீது மதுரை சதி வழக்குத் தொடுக்கப்பட்டது. தோழர்கள் பி. ராமமூர்த்தி, சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் 1946 டிசம்பரில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப் பட்டனர். நாட்டுக்குச் சுதந்தரம் கிடைத்து, நாடு முழு வதும் மகிழ்ச்சியாடு சுதந்தரத்தைக் கொண்டாடத் தொடங்கிய 1947 ஆகஸ்டு 14ஆம் தேதி இரவுதான் இந்தத் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

அந்த வழக்கிலிருந்து விடுதலையான பிறகு செப்டம்பர் 18 அன்று கட்சி அலுவலகத்தில் சங்கரய்யா - நவமணி திருமணம் பி. ராமமூர்த்தி தலைமையில் எளிமையாக நடைபெற்றது. இது சாதி மறுப்புத் திருமணம் மட்டுமல்ல; மத மறுப்புத் திருமணமும் கூட. ஆசிரியர் நவமணி பிராட்டஸ்டன்ட் கிறித்துவக் குடும்பத்தைச் சார்ந்தவர். சங்கரய்யாவின் பெற்றோர்களுக்குத் தொடக் கத்தில் இத்திருமணத்தை ஏற்பதில் தயக்கம் இருந் தாலும் அவருடைய் உறுதியால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டனர். சங்கரய்யா-நவமணி திருமணம் மட்டுமல்லாமல், அவர்களது பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும்கூடப் பெரும்பாலும் சாதி மறுப்புத் திருமணம் தான். ஆம், சங்கரய்யா வீட்டில் ஒரு சமத்துவபுரமே இருக்கிறது!

1948ஆம் ஆண்டு கல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் 2ஆவது அகில இந்திய மாநாடு நடந்தது. மாநாடு முடிந்தவுடன் நேரு அரசு கம்யூனிஸ்ட் கட்சிக் குத் தடைவிதித்து ஆணையிட்டது. கல்கத்தாவிலேயே பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக சங்கரய்யா, பயணத்தின்போது ஒரிசாவில் இறங்கி அங்கிருந்து சில நாள்களில் தமிழகம் வந்து சேர்ந்தார். கட்சியின் கட்டளையை ஏற்று, கைதாகாமல் தலைமறைவா கவே இயக்கப் பணியாற்றி வந்தார்.

தலைமறைவாக இருந்து கொண்டு கட்சி வேலை செய்வது கடினமா னது; ஆபத்து மிக்கது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காவல் துறையினர் சங்கரய்யாவைக் கைது செய்தனர். பின்னர் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விடுதலையானதைத் தொடர்ந்து, 6 மாத சிறைவாசத் திற்குப் பிறகுதான் சங்கரய்யாவும் விடுவிக்கப்பட்டார்.

அடுத்து நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் மாநிலச் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்ட சங்கரய்யா, மாநில மையத்திலிருந்து செயல்படு வதற்காகக் குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். இந்நிலையில், 1962ஆம் ஆண்டு தோழர் சங்கரய்யா மறுபடியும் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறைப்படுத் தப்பட்டார்.

1964ஆம் ஆண்டு கல்கத்தாவில் கட்சியினுடைய 7வது அகில இந்திய மாநாடு நடைபெற்று, அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. 1964 டிசம்பரில் கட்சியினுடைய மத்தியக்குழு கூட்டத்திற்குச் சென்றுவந்த பி. ராமமூர்த்தி, சுர்ஜித், பசவபுன்னையா ஆகியோருடன், சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார். 16 மாதங்களுக்குப் பிறகுதான் இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

1967இல் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட சங்கரய்யா வெற்றி பெற்றார். 12 உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழுவுக்கு சங்கரய்யாதான் தலைவர். சங்கரய்யா 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டுச் செயலாற்றியிருக்கிறார்.

தோழர் சங்கரய்யா சிறந்த பேச்சாளர். அவருடைய கணீர் என்ற பேச்சு எவரையும் சுண்டி இழுத்து உணர்வூட்டக்கூடியது. ஒருமுறை பொதுவாகப் பேச்சு வன்மையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர், உள்ளத் தில் உண்மை உண்டாயின், வாக்கினிலே ஒளி உண்டாகும் என்றார்.

தன்னுடைய உடல்நலம் பாதித்ததால் மாநிலம் முழுவதும் சென்று சுறுசுறுப்பாகச் செயல்பட இயலாது என்று கூறித் தன்னை மாநிலச் செயலாளர் பொறுப்பி லிருந்து விடுவிக்க வேண்டுமென்று 2002ஆம் ஆண்டு அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகும், இன்று வரையில் தன்னால் இயன்ற இயக்கப் பணியைத் தோழர் சங்கரய்யா நிறைவேற்றி வருகிறார்.

இன்று என். சங்கரய்யாவின் 93ஆவது பிறந்த நாள்.

ஜி.ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

(“தினமணி, 15.7.2014 ”)

Pin It