கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதமும் நக்சலைட் இயக்கத்தின் எழுச்சியும்

1953ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது பேராயக் கூட்டம், கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு பாராளுமன்றத் தன்மைக் கட்சியாக மாற்றுவதற்கான அடிப்படைகளை வகுத்தது.

மேலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்காடு, அமிர்தசரஸ், விசயவாடா ஆகிய இடங்களில் நடை பெற்ற பேராயக் கூட்டங்கள் கட்சியை முழுவதுமாகப் பாராளுமன்றவாதத் தன்மை கொண்ட பூர்ஷ்வா சீர் திருத்தக் கட்சியாக மாற்றுவதில் முக்கியப் பங்குவகித் தன. சனநாயகத்தையும், சமதர்மத்தையும் சமாதான வழியில் உருவாக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

இச்சமயத்தில், சர்வதேச அரங்கில் இரஷ்யத் திரிபுக் கொள்கையானது சமாதான சகவாழ்வு, சமா தானப் போட்டி, சமாதான மாற்றம் போன்ற வர்க்க சமரசக் கொள்கைகளை ஆதரித்ததால், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியும், வர்க்கப் போராட்டக் கொள்கைகளைக் கை விட்டு, வர்க்க சமரசக் கொள்கைகளைப் பின் பற்றி, ஒரு வலது சந்தர்ப்பவாதக் கட்சியாகத் தன் னைச் சீரழித்துக் கொண்டது.

1964இல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான பிறகு, புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் திட்டத்தின் அடிப்படையில் கட்சி இயங்கும் என்று கட்சிக்குள் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, 1964இல் திருச்சியில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள், ஆதர வாளர்கள் அடங்கிய பொதுக் குழுக்கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன், அக்கூட்டத்தில் தோழர் ஏ. பாலசுப்பிரமணியம் பேசும் போது, “சி.பி.எம். கட்சி யானது முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கியது போன்று அல்லாமல், முற்றிலும் புரட்சிகரமான முறையில் செயல்படும்.

அரசு இயந்திரமானது புரட்சிகரமான நடவடிக்கைகளுக்குத் தடையை உண்டாக்கும் என்ப தால், தலைமறைவு வேலைத் திட்டத்தையும், ஆயுதந் தாங்கி நம்மைப் பாதுகாக்கவும், தேவைப்படும் போது எதிரிகள் மீது உபயோகிக்கவும் கூடிய செய்முறைத் திட்டத்தைப் பின்பற்றும்” என்று விளக்கி உரையாற்றி னார். அதுவரை இம்மாதிரியான செயல்முறை நட வடிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிராத எனக்கு, இப்பேச்சு மிகவும் நம்பிக்கை ஊட்டியது.

கட்சி, சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது; திட்டமும் புரட்சிகரமாக உள்ளது. இனிமேல், கட்சிப் பணி என்பது மிகவும் கவனத்துக்குரியதாகவும், தலைமறைவு வாழ்வையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும் என்பதால், இனி இந்திய அரசியலில் இது, புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கும் என்று நம்பினேன். ஆனால் எனது எதிர்பார்ப்பு வீணானது. கட்சியின் நடைமுறை பழைய முறையிலேயே நீடித்தது.

1964இல் கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் ஏழாவது பேராயத்துக்குப்பின், இந்திய அரசு, சி.பி.எம். கட்சி மீது ஒடுக்குமுறைகளை ஏவியது. இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், பல்வேறு மட்டங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சியின் தலைவர்களைச் சிறையில் அடைத்தது. கட்சிக்கும், அதன் தலைவர் களுக்கும் எதிராக, “பீகிங் ஏஜெண்டுகள்”, “தேச விரோதிகள்” என்று அவதூறுப் பிரச்சாரத்தை இந்திய அரசு செய்தது.

மேலும் அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது (சி.பி.ஐ.) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப்பட்டது. எனவே, சி.பி.எம். கட்சி யைப் ‘பிளவுவாதிகள்’, ‘வறட்டுவாதிகள்’, ‘அசட்டுத் துணிச்சல்காரர்கள்’ என்று திருத்தல்வாதிகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் அழைத்தனர். தங்களை ஆக்கப்பூர்வமான மார்க்சிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்டனர்.

1965 செப்டம்பரில், பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கியது. சி.பி.எம். கட்சி அரைத் தலைமறைவுக் கட்சியாக இயங்கிக் கொண்டிருந்த போது, மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்றன. 1966 மே மாதத்தில் தான், கட்சித் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குப் பிறகுதான், பல்வேறு மட்டங்களில் அமைப்புகளை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

1967இல் நடைபெற்ற நான்காவது பொதுத் தேர்தல், காங்கிரசு ஆட்சிக்கு மரண அடி கொடுத்து, எட்டு மாநிலங்களில் காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. இங்கெல்லாம் காங்கிரசு அல்லாத அரசுகள் அமைந்தன. சி.பி.எம். கட்சி கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் மய்யமான இடத்தைக் கைப்பற்றியது. காங்கிரசு அல்லாத அரசாங்கங்களை அமைக்கும் போது, “அரசாங்கத்தின் கொள்கைகளில் தீர்மானகர மான செல்வாக்குச் செலுத்தும் இடங்களில் மட்டுமே சேர்வது” என்ற கொள்கை ரீதியான நிலையை சி.பி.எம். மேற்கொண்டது. மாறாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ‘காங்கிரசு அல்லாத அனைத்து  அரசாங் கங்களுக்கும் முழு ஆதரவு’ என்ற நிலையை மேற்கொண்டது.

இச்சமயத்தில்தான் ‘நக்சல்பாரிகள்’ எனப்பட்ட மார்க்சிய லெனினியக் கட்சி சாரு மஜும்தார் தலை மையில் உருவானது. சி.பி.எம். கட்சியிலிருந்து வெளி யேற்றப்பட்ட அல்லது வெளியேறிய புரட்சிகரத் தோழர் கள் இவ்வாறு ஒரு புதிய கட்சியைத் தொடங்குவதற்கு முன்பு, “அனைத்திந்தியப் பொதுவுடைமைப் புரட்சி யாளர் ஒருங்கிணைப்புக் குழு” என ஒன்றினை அமைத்தனர். 1967இல் தொடங்கப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சீனப் பொதுவுடைமைக் கட்சியின் அங்கீகாரம் கிடைத்தது.

அக்கட்சிக்கு வெளியே இருந்தவர்களை வென் றெடுக்கவும் வர்க்கப் பகைவர்களை அழித்தொழித்தல் என்னும் நடைமுறை உத்தியைப் பரப்பவும் சாரு மஜும்தார் தமிழகத்துக்கு வந்து தோழர்கள் பலரைச் சந்தித்தார். இதன்விளைவாக நக்சல்பாரி இயக்கம் தமிழகத்தில் சில பகுதிகளில் வளர்ந்தது. சில அழித் தொழிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. எனவே தமிழக அரசு நக்சல்பாரிகளைக் கடுமையாக ஒடுக்க முனைந்தது.

தோழர் சுப்பு வடஆர்க்காடு வேலூரில் காவல் துறையால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். அழித் தொழிப்பு வழக்கு ஒன்றில் ஏ.எம். கோதண்டராமனும் கைது செய்யப்பட்டிருந்தார். 1972இல் சாரு மஜும்தார் கைது செய்யப்பட்டுக் காவல்துறையினரால் படு கொலை செய்யப்பட்ட பிறகு கட்சி உடைந்து, பல குழுக்கள் தோன்றின. நெருக்கடி நிலைக்குப் பின்னர் ஏ.எம். கோதண்டராமன் கொலை வழக்கிலிருந்து விடுதலையானார்.

அச்சமயத்தில், தோழர் கொண்டபள்ளி சீத்தாரா மையா தலைமையில் ஆந்திராவை முதன்மைத் தளமாகக் கொண்டு இயங்கிவந்த “மக்கள் யுத்தக் குழுவில்” தமிழகத்தில் மார்க்சிய-லெனினியக் கட்சி யைத் தொடங்கிய முக்கியத் தலைவர்களில் பெரும் பாலோர் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தனர். ஏ.எம். கோதண்டராமன் இக்குழுவில் இருந் தார். வடஆர்க்காடு, தருமபுரி மாவட்டங்களில் போலீ சாருடன் மோதல் என்னும் பெயரில் பல நக்சலைட் புரட்சியாளர்கள் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்டு வந்தனர்.

கட்சியை ஒரு மக்கள் திரள் இயக்கமாக மாற்றுவதற்கு மிகுந்த முயற்சி செய்த தோழர் பாலன் மிருகத்தனமாக அடித்துத் துன்புறுத் தப்பட்டுப் பின்னர் சென்னை பொது மருத்துவமனை யில் காலமானார். தோழர்கள் கண்ணாமணி, ராயப்பன் போன்றோரும் காவல் துறையால் கொலை செய்யப்பட்டனர்.

மோதல் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், நக்சலைட் புரட்சியாளர்கள், ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்டுவந்த அடக்குமுறைகளை வெளிப்படுத்துவதற்காகவும், அனைத்திந்திய அளவில் நடவடிக்கை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான பொறுப்பு தோழர் எஸ்.வி. ராஜதுரையிடம் கொடுக்கப் பட்டது. அவர் பம்பாய், தில்லி, கோவா, கர்நாடகம், ஆந்திரம் முதலான இடங்களிலிருந்த மனித உரிமை அமைப்பினருடன் தொடர்பு கொண்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அறிஞர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயல் வீரர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்றை ஏற்படுத்தி, அதன்மூலம் வடஆர்க்காடு, தருமபுரி மாவட்டங்களுக்கு அக்குழுவினர் சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் அந்த உண்மை அறியும் குழுவினரே இரத்தக் காயங்களுடன் சென்னைக்குத் திரும்பிவர நேரிட்டது. வேலூரில் அன்று இருந்த காவல்துறைக் கொடுங்கோலன் வால்டர் தேவாரம் நடத்திய அடக்கு முறை தர்பார்தான் இதற்குக் காரணமாகும். இந்த உண்மை அறியும் குழுவில் இருந்த வெளிமாநிலத்தினர் பெரும் பாலோர் சமுதாயத்தில் மதிப்புமிக்க இடத்தில் இருந்த வர்கள், “எங்களுக்கே இந்தக் கதி என்றால், எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களது பணிகளை எப்படித் தொடர்ந்து நடத்து வீர்கள்?” என அனைவரும் கேட்டனர்.

பின்னர் எஸ்.வி. ராஜதுரை, பேராசிரியர் ரஜினி கோத்தாரி இருவரும் மோதல் மரணங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அப்போ தைய நாடாளுமன்ற உறுப்பினர் மிருணாள் கோரே, சுவாமி அக்னிவேஷ், ஆந்திர மனித உரிமை இயக்கத் தலைவர் கே.ஜி. கண்ணபிரான் போன்றோர் அடங்கிய மற்றொரு உயர்மட்ட உண்மை அறியும் குழுவை வடஆர்க்காடு, தருமபுரி மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் அங்குள்ள மக்களின் அச்சத்தைப் போக்க உதவினர்.

தமிழ்நாட்டில் நக்சலைட் புரட்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறை பற்றிய செய்திகளை அனைத்திந்திய அளவில் அறியச் செய்திட அரும்பணி யாற்றிய மற்றொரு பத்திரிகையாளர் கன்ஷியாம் பர்தேசி ஆவார். இவர் ‘ஸ்டேட்மன்’ ஆங்கில நாளேட் டில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். இடதுசாரி சிந்தனை கொண்டவர். எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சி களுடனும் நட்புடன் இருந்தவர். அஞ்சாநெஞ்சமும் நேர்மையும் கொண்டவர்.

கன்ஷியாம் பர்தேசி இரண்டு நாள்கள் எஸ்.வி. ராஜதுரையுடன் தங்கி, செய்திகளைத் திரட்டிய அவரி டம், தமிழகச் சிறைகளில் நக்சலைட்டுகளுக்கு இழைக் கப்பட்டுவந்த கொடுமைகளைப் பற்றியும், குறிப்பாகத் தோழர் கலியபெருமாளும் அவரது குடும்பத்தினரும் அனுபவித்த கொடுமைகள் பற்றியும், வினோத் மிஸ்ரா குழுவைச் சேர்ந்த தோழர் தன்னாசியின் உடல்நலக் கேடு குறித்தும் தகவல்களைக் கேட்டறிந்தார். இவற்றை ஏன் நீங்கள் முன்பே சொல்லவில்லை என்று வருத் தப்பட்டுக் கொண்டு, தோழர் கலியபெருமாள் மற்றும் பிறரையும் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

அடுத்த நாள், கன்ஷியாம் பர்தேசி காலஞ்சென்ற இராதாகிருட்டிணனை அழைத்துக் கொண்டு, புலவர் கலியபெருமாள் துணைவியார் வாலாம்பாளையும், அவரது பெண்மக்களையும், சவுந்திர சோழபுரம் சென்று சந்தித்துவிட்டுத் திரும்பினார். இந்த அளவுக்கு அரசின் வன்கொடுமைகளுக்கு ஆளான அரசியல் கைதிகளை பிரிட்டிஷ் ஆட்சியின் போதுகூட இந்தியா கண்டதில்லை என்று சீற்றமடைந்தார்.

ஒரு குடும்பமே அரசியல் காரணங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டதை, இந்தியாவில்  வேறு எங்கும் தான் கேள்விப்பட்ட தில்லை என்று கூறினார். இந்த விஷயம் எப்படி மனித உரிமை அமைப்புகளின் கவனத்துக்கு வராமல் தப்பியது என்று கேட்டார். ‘மேயர்’ கிருஷ்ணமூர்த்தி யின் தலைமையில் இருந்த மனித உரிமை அமைப் பின் தலையீட்டின் காரணமாகத்  தோழர்கள் கலிய பெருமாளுக்கும், அவரது மகன் வள்ளுவனுக்கும் விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது என்று கூறியதுடன், அவர்கள் இரு வரும் இறுதிவரையில் கருணை மனு அனுப்ப மறுத்துவிட்டனர் என்பதையும் தெரிவித்தார்.

பின்னர் நடந்த முயற்சிகளின் காரணமாக, பர்தேசி உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். பகவதியை நேரில் சந்தித்துப் பேசி, ரிட் மனுக்களைத் தாக்கல் செய்து, புலவர் கலியபெருமாள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஒரே மத்திய சிறைக்குக் கொண்டு வருவது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக் கேடுகள், நோய்கள் ஆகியவற்றுக்கு உடனடியாகச் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை அளித்தல், நக்சலைட் கைதிகளை இரத்த உறவினர்கள் மட்டும் கியூ பிரிவு போலீசார் முன்னிலையில் பார்க்க அனுமதித்தல் போன்ற வேண்டுகோள்கள் ரிட் மனு மூலம் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றம் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசுக்குத் தக்க ஆணைகளைப் பிறப்பித்தது. அன்று தமிழ்நாட்டில் இருந்த ஒரே பெண் அரசியல் கைதியான அனந்தநாயகி மற்றும் தன்னாசி இருவரும் பரோலில் விடுதலை செய்யப்பட்டனர். பிறகு புலவர் கலியபெருமாள், வள்ளுவன், நம்பியார், ஆறுமுகம், இராஜமாணிக்கம் ஆகியோரும் தற்காலிக பரோலில் வெளிவந்தனர்.

- தொடரும்

Pin It