விடுதலை பெற்ற ஒரு நாட்டில் எல்லா நன்மைகளும் வளங்களும் பெரிய எண்ணிக்கையில் உள்ள மக்களுக்குச் சென்றடைய வழி கோலுவதே மக்கள் நாயக ஆட்சியின் குறிக்கோள் ஆகும். அரசியல் மேதை பெந்தாம் தந்த விளக்கம் இது.

இந்தியா 1950இலேயே மக்கள்நாயக ஆட்சி நாடாக ஆகிவிட்டது. கடந்த 61 ஆண்டுகளில் இந்தியாவின் பழங்குடிகளாகவும் இந்தியாவின் செல்வத்தை உருவாக்கு கிறவர்களாகவும் இருக்கிற பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோருக்கு - உண்மையான ஆட்சி அதிகாரம் தேங்கிக் கிடக்கும் மய்ய அரசில் உள்ள பணிகளில் எந்த அளவுக்குப் பங்கு கிடைத்திருக்கிறது என்று எண்ணுவதும் - அப்படிப் பங்கு கிடைக்கவில்லை என்று தெரிந்த அடுத்தகணமே ஏன் பங்கு கிடைக்க வில்லை என்று சிந்திப்பதும் - உரிய பங்கு கிடைக்கும் வரை போராடுவதும்தான் பொறுப்புள்ள ஒரு குடி மகனின் கடமையாகும்.

ஒடுக்கப்பட்ட வகுப்பினரில் உள்ள மய்ய அரசு அலுவலர்கள், மாநில அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறிஞர்கள், படித்தவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் பின்வரும் செய்திகளைப் பற்றிக் கவலையோடு சிந்திக்க வேண்டும்.

மேதை அம்பேத்கர் பட்டியல் வகுப்பினருக்கு இந்திய அரசின் வேலைகளில் முதன்முதலாக 11.8.1943இல் இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். 65 ஆண்டுகளுக்கு முன் அவர் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தும், 2008 நவம்பர் வரையில் இந்திய அரசின் முதல்நிலை, இரண்டாம் நிலைப் பணிகளில் 1/6இல் பங்கு கிடைப்பதற்குப் மாறாக 1/8 பங்கே கிடைத்திருக்கிறது; 3ஆம் நிலைப் பணிகளில் 1/7 பங்கே கிடைத்துள்ளது; 4ஆம் நிலைப் பணிகளில் 1/5 பங்கும்; துப்புரவுப் பணிகளில் ஏறக்குறைய 50 விழுக்காடும் கிடைத்துள்ளன. பழங்குடியினரின் நிலைமை இதைவிட இழிவானது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முதல் நிலையில் 1/19 இடங்களும்; 2ஆம் நிலையில் 1/29 பங்கு இடங்களும்; 3ஆம் நிலையில் 1/15 இடங்களும் 4ஆம் நிலையில் 50 விழுக்காடு இடங்களும் பெற்றுள்ளனர்.

ஆனால் அதேநேரத்தில் மக்கள் தொகையில் 17.5 விழுக்காடு உள்ள உயர்சாதி வகுப்பினர் முதல்நிலையில் மொத்தம் உள்ள 97,951 இடங்களில் 77,585 இடங்களையும், 2ஆம் நிலையில் மொத்தம் உள்ள 1,40,223 இடங்களில் 1,06,283 இடங்களையும், 3ஆம் நிலையில் மொத்தம் உள்ள 18,22,326 இடங்களில் 12,60,555 இடங்களையும் பெற்றுள்ளனர். 4ஆம் நிலையில் மட்டும் ஏறக்குறைய 24 விழுக்காடு இடங்களைப் பெற்றுள்ளனர். துப்புரவுப் பணியில்கூட ஏறக்குறைய 40 விழுக்காடு இடங்களைப் பெற்றுள்ளனர்.

அருகே தரப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் இந்த உண்மை யை எல்லோருக்கும் அறிவிக்கும்.

மேதை அம்பேத்கர் தாம் பாடுபட்டு இந்தியச் சட்டமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் 1937 இலும்; மத்திய அரசின் வேலையில் 1943இலும் வாங்கித் தந்த இடஒதுக்கீட்டைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே அரசியல் அமைப்புக் குழுவின் உறுப்பினராக வந்ததாகத் துலாம்பரமாக - வெளிப்படையாக அரசியல் அமைப்பு அவையிலேயே 25.11.1949இல் அறிவித் தார்.

1950ஆம் ஆண்டு நடப்புக்குவந்த அரசியல் அமைப் பில் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யப்படவில்லை.

1950 செப்டம்பர் முதல் பெரியார் ஈ.வெ.ரா. தொடர்ந்து போராடித்தான் - (1) சமுதாயத்திலும் கல்வி யிலும் பிற்படுத்தப்பட்டவர்கள், (2) பட்டியல் வகுப்பி னர், (3) பழங்குடியினர் ஆகிய 3 பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக்களுக்கும் மத்திய அரசின் கல்வியிலும் மாநில அரசின் கல்வியிலும் இடஒதுக்கீடு 2.6.1951இல் பெற்றுத்தந்தார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் இடஒதுக் கீடு தர முடியாது என்று 1961இல், மே திங்களில் பிரதமர் பண்டிதர் நேரு மத்திய அமைச்சரவையைக் கூட்டி முடிவு செய்தார்.

அதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை 8.5.1978இல் இந்திய அரசின் குடிஅரசுத் தலைவரி டம் முன்வைத்த அமைப்பு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியே ஆகும். மண்டல் குழு அமைக்கப்படப் போராடியதும், மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட இந்திய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில்சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தி வெற்றி பெற்றதும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியே ஆகும்.

ஆனாலும், இந்துக்களில் 48 விழுக்காடும், சிறுபான்மை மதத்தினரில் 10 விழுக்காடும் ஆக 58 விழுக் காடு உள்ள - 4300 சாதிகளைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு மண்டல் குழு பரிந்துரையின் படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் இப்போது அரசு வேலையில் தரப்படுவது 27 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே, அந்த 27 இடஒதுக்கீட்டைத் தரும் போது பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினரை நீக்கிவிட்டுத் தான் தரவேண்டும் என்று ஆணையிட்ட தும் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அவர்களின் காங்கிரசு அரசுதான்.

6.8.1990இல் பிரதமர் வி.பி.சிங் அரசு பிற்படுத் தப்பட்டோருக்கு மய்ய அரசின் வேலையில் 27 விழுக் காடு இடஒதுக்கீட்டை அறிவித்தது. அதை எதிர்த்துப் போராட்டம் செய்தது பாரதிய சனதாக் கட்சியே ஆகும். அனைத்திந்தியக் கட்சிகளான காங்கிரசும் பாரதிய சனதாவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்ப்பதால்தான் 2011-12 கல்வியாண்டு வரையில் 58 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக் களுக்கு இந்திய அரசின் உயர் தொழில் கல்வியில் ஒரு விழுக்காடு கூட இடஒதுக்கீடு தரப்படவில்லை.

இத்தனை அவமானங்களையும் புறக்கணிப்புக ளையும் உரிமைப் பறிப்புகளையும் தாங்கிக் கொண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பு - பட்டியல் வகுப்பு - பழங்குடி வகுப்புகளில் உள்ள விவரம் தெரிந்தவர்களும் படித்த வர்களும் அலுவலர்களும் ஆசிரியர்களும் பெரியவர் களும் அவரவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருப்பது அடாதது; இழிவானது; கொடுமையானது.

மொத்த மக்கள் தொகையில் 83 விழுக்காடு உள்ள இம்மூன்று பிரிவு மக்களும் என்றைக்கு ஒன்றி ணைந்து போராடுகிறார்களோ அன்றுதான் இந்திய ஆட்சி அதிகாரத்தில் இவர்களுக்கு உரிய விகிதாசாரப் பங்கு வர வழி ஏற்படும்.

அருள்கூர்ந்து அனைவரும் இவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள்! அவரவர் நேரத்தை, உழைப்பை, பொரு ளை இந்த முயற்சிக்கு அள்ளித்தர முன்வாருங்கள். இந்த அகத்தியமான பணியை 1911 செப்டம்பர் - அக்டோபர் முதல் தமிழக அளவிலும், இந்திய அள விலும் முன்னெடுத்துச் செல்ல ஆயத்தமாக இருக்கிற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிக்கும், மா.பெ.பொ.க. மாணவர் அணிக்கும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்ட வகுப்பினர் பேரவைக்கும் பெருமளவில் நிதி அள்ளித் தாருங்கள்! ஆதரியுங்கள்! என மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

- வே.ஆனைமுத்து, பொதுச் செயலாளர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

Pin It