பார்ப்பனர்களின் முழு ஆதிக்கத்தின் கீழ் மார்க்சியவாதிகள் பல ஆண்டுகளாக இடைவெளியின்றி மேற்கு வங்கத்தை ஆண்டு வருகின்றனர். இம்மாநிலத்தில் கீழ்சாதி மக்கள், தீண்டத்தகுந்த மற்றும் தீண்டத்தகாத சூத்திரர்கள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களே பெரும்பான்மை மக்களாக இருக்கின்றனர்.

முஸ்லிம்களும், கிறித்துவர்களும் கீழ்சாதியினர் என சொல்லப்படக்கூடிய வகுப்பிலிருந்தே வந்திருக்கின்றனர். இரக்கமற்ற பார்ப்பனர்களின் திட்டமிட்ட ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்கவே அவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறியுள்ளனர். 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் இ.எ.கெய்ட், அய்.சி.எஸ். இவ்வாறு குறிப்பிடுகிறார் : “வங்காளத்தின் முகமதியர்களும் குறைந்தது 90 லட்சம் மக்கள் இப்பிரிவை (தீண்டத்தகாத சந்தல் / நாமசூத்ரா மற்றும் போடுகள்) சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர் என்று சொல்வது பாதுகாப்பானது.''

jyothi_basu_3601972 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டு அறிக்கையில் வங்காளத்தின் இந்து மக்கள் தொகையானது முஸ்லிம்களைவிட 4,91,303 அதிகமிருந்ததாக தெரிகிறது. மொத்த இந்து மக்கள் தொகை 1,81,00,438; முஸ்லிம்களின் மக்கள் தொகை 1,76,09,135 ஆக இருந்தது. எனினும் 1941 ஆம் ஆண்டு அறிக்கை முற்றிலும் வேறான தோற்றத்தை அளிக்கிறது. வங்காளத்தின் முஸ்லிம் மக்கள் தொகையானது, இந்துக்களைவிட 84,37,713 (4,91,303 +79,46,410) அதிகமாக இருந்தது. இந்துக்களின் தொகை 2,50,59,024 ஆக எண்ணப்பட்டிருந்த அதேவேளையில், முஸ்லிம்களின் தொகை 3,30,05,434 ஆக எண்ணப்பட்டிருந்தது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டுள்ள மாற்றமும் வெளிப்படையான ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

1901 – 1911 காலப் பகுதியில் இந்துக்களைவிட முஸ்லிம்கள் 24,89,590 அதிகமிருந்தனர். 1901இன் அறிக்கையின்படி, இந்துக்கள் 2,01,55,357 ஆகவும், முஸ்லிம்கள் 2,19,54,955 ஆகவும் இருந்திருக்கின்றனர். 1911 இல் இது 2,09,48,357 – 2,34,37,947 என முறையே மாறியது. 1911 – 1921 காலகட்டத்தில் மொத்த இந்து மக்கள் தொகையைவிட, முஸ்லிம் மக்கள் தொகை 13,84,727 அதிகமாக இருந்தது. இந்து மற்றும் முஸ்லிம்களின் மக்கள் தொகை முறையே 2,08,12,526 மற்றும் 2,54,86,124 ஆக இருந்தது. 1931 – 1941 காலகட்டத்தில் முஸ்லிம் மக்கள் தொகை இந்துக்களைவிட 23,48,379 அதிகமிருந்தது. 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முறையே அவர்களின் மக்கள் தொகை 2,22,12,069 மற்றும் 2,78,10,100 ஆகவும் இருந்தது. கடந்த சில பத்தாண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளில் நடக்கும் மோசடிகளின் காரணமாக, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் மக்கள் தொகையைப் பொருத்தவரையில், ஒரு தவறான தோற்றமே காட்டப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக அவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கவே இல்லை. இதனால், அவர்கள் "எளிதில் அழியக்கூடிய பிரிவினராக' மாறியுள்ளனர். இடம்பெயர்ந்த பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் மக்கள் தொகை கணக்கில் சேர்க்கப்படவே இல்லை. ஏனெனில், இடம்பெயர்ந்த மக்களின் சாதி பெயர்கள் அந்த குறிப்பிட்ட மாநிலத்தின் பட்டியலில் இல்லை என்பதே காரணம்.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த இடம்பெயர்ந்த மக்களின் தொகையானது 29.90 சதவிகிதமாகவும், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தவர்களின் தொகை 13.80 சதவிகிதமாகவும் இருந்தது. இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையினர், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். ஆனால், அவர்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், பொதுப் பிரிவில் உள்ள மக்களின் எண்ணிக்கையும் சதவிகிதமும் பலமடங்கு வீங்கியுள்ளது. தொடர்ச்சியாக, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கையானது, உண்மையான எண்ணிக்கையை விட குறைந்தபட்சம் 10 சதவிகிதம் குறைந்துள்ளது.

1991 இல் மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள் தொகை 6,80,77,965 ஆகும். இதில் முஸ்லிம்கள் 1,60,75,836 மற்றும் இந்துக்கள் 5,08,66,624; கிறித்துவர்கள் 3,83,477; சீக்கியர்கள் 55,392. 1,60,80,611 ஆக இருக்கும் பட்டியல் சாதியினரும், 38,08,760 ஆக உள்ள பழங்குடியினரும் இந்து மக்கள் தொகையில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்து, முஸ்லிம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் மக்கள் தொகை சதவிகிதமானது – முறையே 74.7%, 23.6%, 23.6% மற்றும் 5.59 % ஆக இருக்கிறது. இவை தவிர, பிற்படுத்தப்பட்ட சூத்திரர்கள் வேறு உள்ளனர். சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு 1931க்குப் பிறகு கைவிடப்பட்டது. தற்பொழுது பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் தொகை கணிக்கப்படுகிறது. சில பெரும்பான்மை சாதி மட்டுமே கணக்கில் கொண்டு சதவிகிதம் கணக்கிடப்படுகிறது. “மொத்தமாக அவர்கள் 27,94,654 ஆக உள்ளனர் (1921 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு). 1921 இல் மொத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 56,80,382 ஆக இருந்தனர். மொத்த இந்துக்களின் எண்ணிக்கை 2,08,09,148 ஆக இருந்தது. எனவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 29.90% ஆக இருந்தனர்.''

மண்டல் ஆணையத்தின் விசாரணையின் போது, இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப் பீடத்தின் ஆணவமானது, மேற்கு வங்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இருப்பை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. மநுவாதி கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்ன சொன்னாலும், அவர்களின் சமூக பொருளாதார நிலையானது, மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகப் பெரும் சதவிகிதத்தில் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. டாடாவின் படையினரான மார்க்சிஸ்டுகளின் சித்திரவதைகளின் காரணமாக அவர்கள் எளிதில் அழியக்கூடிய பிரிவினராக நிச்சயமாக மாறவில்லை. அந்த சூழலில் மேற்கு வங்கத்தில் உள்ள முஸ்லிம்கள், பட்டியல் சாதியினர் – பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்தமாக 79.98 சதவிகிதமாக இருக்கின்றனர். இந்த மக்கள்தான் மார்க்சிஸ்டுகளால் தெற்கு வங்கத்தில் உள்ள கிராமங்களான சிங்கூர், நந்திகிராம் மற்றும் தியாமொந்தார்பூர் ஆகிய இடங்களில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வெளியேற்றுதல் ஆகியவற்றிற்கு இலக்காக இருந்திருக்கின்றனர். இதே கதை மரிச் ஜாப்பியிலும் தொடர்கிறது.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள் தொகை 8,01,76,197. இந்துக்கள் 5,79,54,741 ; முஸ்லிம்கள் 2,01,54,199; கிறித்துவர்கள் 5,77,963; பட்டியல் சாதியினர் 1,84,52,555; பட்டியல் பழங்குடியினர் 44,06,794 என கணக்கிடப்பட்டனர். இந்த குழுக்களின் விகிதாச்சாரமானது முறையே 72.3 (பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர்); 25.1; 0.7; 23.0; மற்றும் 5.5 ஆகும். பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் மக்கள் தொகை விகிதாச்சாரம் மிகவும் குறைந்திருப்பதையும், அதே நேரத்தில் பார்ப்பனர்களின் மக்கள் தொகையும் வளமும் ஒப்பிடமுடியாத அளவிற்கு வளர்ந்திருப்பதையும் கவனிக்கலாம்.

சமூகத்தில் இருப்பதிலேயே கீழ் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் மக்களின் குரலானது, மிக நுண்ணிய சிறுபான்மையினரான ஆளும் வர்க்கத்தினை சேர்ந்த தலைவர்களின் வசதி மற்றும் இனிய விருப்பங்களோடு, பழமைவாத பூசாரிகளான பார்ப்பன வகுப்பினரின் கைகளிலும் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. சில பிற ஆய்வறிக்கைகள், மேற்குவங்கத்தின் மொத்த "இந்து மக்கள் தொகையில்' 5 சதவிகிதத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே பார்ப்பன மக்கள் தொகை உள்ளதை வெளிப்படுத்தியுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக நடந்துவரும் மார்க்சியவாதிகளின் கொடுமையான அடக்கு முறை மிகுந்த ஆட்சியின் கீழ் – மிகப்பெரும்பான்மையினரான தொல்குடி மக்களின் குரலானது, ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்பட்டுள்ளது.

மெல்லிய எதிர்ப்புக் குரல்கள் எழுந்தபோது, தோழர் ஜோதிபாசு ஒரு முறை அறிவித்தார்: “தீண்டத்தகாதவர்கள் மற்றும் பழங்குடியினரின் நலன்களைக் காக்க, அவர்களை அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பதில்லை'' தோழர் பாசு அறிவித்தது சரியாகவும் இருக்கலாம். ஆனால், "பிரதிநிதித்துவம் இல்லாமல் வரியில்லை' என்று கோரும் ஜனநாயக அடிப்படைகளுக்கு அது எதிரானது. சாதிகளின் மிகக் கொடூரமான பங்கின் முக்கியத்துவத்தை மார்க்ஸ் அறிந்தும் அங்கீகரித்தும் இருந்தார். ஆனால், இந்திய மார்க்சியவாதிகளோ சாதியின் பாதிப்புகளை எந்த சூழலிலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் வகுப்பை நம்புகின்றனர். உண்மையில், வகுப்பின் பெயரால் சாதிய நலன்களையே அவர்கள் பாதுகாத்தும் தூக்கிப் பிடித்தும் வந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபின்படி, 2006 தேர்தலில் மேற்கு வங்காளம் பார்ப்பனிய வேட்பாளர்களையே தங்களது வெற்றியாளர்களாக தேர்ந்தெடுத்தது கவனிக்கத்தக்கது.

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பார்ப்பன வேட்பாளர்களையே மநுவாதி மார்க்சியவாதிகள் மற்றும் பிற பார்ப்பனிய கட்சிகளின் கூட்டமைப்பான இடதுசாரி முன்னணி நிறுத்தியது. வாக்காளர் பட்டியலில் பார்ப்பனர்களின் எண்ணிக்கை நிச்சயமாக 3 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தபோதும், பிற சாதியில் இருந்து வேட்பாளர்கள் இல்லாத நிலையில் போட்டியிடும் ஏதேனும் ஒரு கட்சியைச் சேர்ந்த ஒரு பார்ப்பனரை தேர்ந்தெடுப்பதைத் தவிர, வாக்காளர்களுக்கு வேறு தேர்வு இருக்கவில்லை. மேற்கு வங்கத்தில் மறைமுகமாக, "உலகப் பார்ப்பனர்களே ஒன்றுபடுங்கள்' என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிய குடும்பப் பெயர்களை மட்டும் வைத்து பார்த்தால், 2006இல் நடைபெற்ற மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் 44 பேர் பார்ப்பனர்கள் என்பது தெரிய வருகிறது.

இதனால் ஜனநாயக எந்திரத்தில் தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட நிலையில் நிறைய சமூகங்களும் வகுப்பினரும் உள்ளனர். பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு 75 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2006 தேர்தலில் 40 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். இதனால் அவர்களுடைய பங்கு 13.6 % மட்டுமே உள்ளது (அவர்களின் மக்கள் தொகை 25.1 விழுக்காடாகும்). பார்ப்பனர்கள் மற்றும் சாதி இந்துக்கள் சட்டமன்றத்தில் மொத்தமாக 60.4 விழுக்காடு இடங்களைப் பறித்துள்ளனர்.

வங்க சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிக மோசமாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளனர். நமது அரசியல் சட்டமானது, சட்டமன்றத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இடங்களை அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஒதுக்குவதால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் மக்கள் தொகை கணக்கைக் குறைத்துக் காட்டுவதற்கான திட்டமிட்ட வேலைகள் நடந்துள்ளன. அமைச்சரவையில், எவ்வித ஒதுக்கீடும் இல்லாத நிலையில், இக்குழுவினருக்கு அமைச்சரவையில் உரிய இடம் கிடைப்பதில்லை.

30 ஆண்டு கால மார்க்சிய ஆட்சி கூட மேற்கு வங்கத்தில் இந்த மக்களை அதிகாரப்படுத்தவும், ஒற்றை அமைச்சர் பொறுப்பை பெறுமளவிற்கான அவர்களின் திறனை உயர்த்தவும் தவறிவிட்டது. பார்ப்பனர்களை விட இரண்டு மடங்கு எண்ணிக்கையில் இருந்த போதும் அமைச்சரவையில் பழங்குடியினருக்கு ஓரிடம் கூட ஒதுக்கப்படவில்லை. அவர்கள்தான் இம்மண்ணின் மைந்தர்கள். ஆக, நவீன வங்கத்தில் மிக அதிகமாகவும் பாரம்பரியமாகவும் ஒதுக்கப்பட்டவர்கள் – திறனற்ற பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களாகவே இருக்கின்றனர்.

முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில், மீண்டும் ஒரு முறை சாதிய பாகுபாடுகள் தனது அசிங்கமான முகத்தைக் காட்டின. ஓர் ஆய்வின்படி, “பத்ரலோக் (ஆளும் வர்க்கத்தினரான சாதி இந்துக்கள்) சமூகத்தைச் சேர்ந்த 23 அமைச்சர்களில், 16 பேர் பார்ப்பனர்கள் மற்றும் 7 பேர் பைதியர்கள் மற்றும் காயஸ்தர்கள். வேறு சொற்களில் சொல்ல வேண்டுமெனில், அமைச்சர்களில் 48 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் பார்ப்பனர்கள் மற்றும் 21 சதவிகிதத்தினர் பைதியா மற்றும் காயஸ்தர்கள். 3 அமைச்சர்கள் முஸ்லிம்கள். பட்டியல் சாதியைச் சேர்ந்த 5 பேர் காபினட் அமைச்சர்கள் அந்தஸ்தில் தொழில்நுட்பம், காடுகள், உணவு மற்றும் பொது விநியோகம், பாசனம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகியவற்றிற்கு பொறுப்பாக உள்ளனர்.''

அரசியலில் மட்டுமின்றி, மாநிலத்தின் கல்வி மற்றும் நிர்வாகத்திலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் மிக வெளிப்படையாக கொழுந்துவிட்டு எரிகிறது. இத்தகைய நுண்ணிய வெளிச்சத்தின் மறுபக்கம் ஒரு விளைவு என்ற வகையில் வெளிப்படையானது. மிகப் பெரும்பான்மையினரும் அடித்தட்டில் வைக்கப்பட்டுள்ள மக்களும், நொறுங்க வைக்கும் மனச் சோர்வை அளிக்கக் கூடிய கண்ணுக்கு எதுவும் புலப்படாத இருட்டில் தங்கள் இருப்பிற்காக ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா விதத்திலும் போராடி வருகின்றனர்.

தேசிய அளவில் மதிப்பு வாய்ந்தவராக இருக்கக் கூடிய ஒரு தலைவரைப் பற்றி என்ன சொல்வது? மார்க்சிய தாக்கம் உள்ள மாநிலங்களில் ஒரு மாநில அளவிலான தலைவரோ அல்லது கொள்கை வகுப்பாளரோகூட, சமூகத்தின் அடிநிலையிலிருந்தோ, தலித் பகுஜன் சமூகத்திலிருந்தோ வரவில்லை. மேற்கு வங்கத்தில் மாவட்ட அளவிலான தலைவரைக்கூட காண முடியவில்லை!

காம்ரேட்ஸ் – முகர்ஜி, பானர்ஜி, சட்டர்ஜி, பட்டாச்சாரியா, பன்டோ பாத்தியாயா, முகோபாத்தியாயா...

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி : சிறீகுமார் முகர்ஜி, நாராயண் முகர்ஜி, மனஸ் முகர்ஜி, மானபேந்திர முகர்ஜி, பிரத்யூஸ் முகர்ஜி, பரத் முகர்ஜி, அஷûதோஷ் முகோபாத்தியாயா, நிக்கில் முகர்ஜி, அமிதாபா முகோபாத்தியாயா, ப்ரோத்திவா ரஞ்சன் முகர்ஜி, நபநிதா முகர்ஜி, கும்கும் சக்ரபர்த்தி, டாக்டர் நீர்ஹரினி சக்ரபர்த்தி, சுபாஷ் சக்ரபர்த்தி, ஜிபேஷ் சக்ரபர்த்தி, புலா சவுத்ரி சக்ரபர்த்தி, பிபேந்துகுமார் சக்ரபர்த்தி, அசோக் பட்டாச்சாரியா, பிரணாப் குமார் பட்டாச்சாரியா, புத்ததேவ் பட்டாச்சாரியா, கோபால் கிருஷ்ண பட்டாச்சாரியா, சந்தியா பட்டாச்சாரியா, அசோக் பானர்ஜி, ஷிப்பிரசாத் பன்டோ பாத்தியாயா, மிருணால் பானர்ஜி, மொகந்தா சாட்டர்ஜி, காந்தி பூஷன் கங்கோ பாத்தியாயா

காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள்: பிபாஸ் சக்கரபர்த்தி, மனோஜ் சக்கரபர்த்தி, தரப்பதா சக்ரபர்த்தி, டாக்டர் ஜகன்னாத் பட்டாச்சாரியா, ரபீந்திரநாத் பட்டாச்சாரியா, நந்தகோபால் பட்டாச்சாரியா, பிஸ்வநாத் பானர்ஜி, தரக் பந்தோபாத்தியாய சுதிப் பந்தோபாத்தியாய, அசிஸ் பாபர்ஜி, பர்த்தா சட்டர்ஜி, சபோன்தேவ் சட்டோபாத்தியாய, பிரதீம் சட்டர்ஜி,உஜ்ஜால் சட்டர்ஜி, ரபீந்திரநாத் சட்டர்ஜி, தீபக் சட்டர்ஜி மற்றும் கனிகா கங்குலி.

ஜாதி காம்ரேட்ஸ்களின் அதிகாரம் : மேற்குறிப்பிட்ட 44 மக்கள் பிரதிநிதிகள் தவிர, மேலும் 21 குடும்பப் பெயர்கள் கோஸ்வாமி, ராய் சவுத்ரி, ராய், அதிகாரி,மிஷ்ரா, பாண்டே, ஜா, தாஸ்தாகூர், தாஸ்மகாபத்ரா போன்றவையும் உள்ளன. அந்த மேன்மை மிகுந்த அவையில், பார்ப்பனர்களின் எண்ணிக்கை 65 ஆக அதாவது 22.1 சதவிகிதமாக உள்ளது (தனித்தொகுதிகளை தவிர்த்துவிட்டு கணக்கிட்டால் இது 29.6 சதவிகிதமாக உள்ளது). மக்கள் தொகையில் 3 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள ஒரு குழுவினர், 29.6 விழுக்காடு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

எஸ்.கே.பிஸ்வாஸ் 

தமிழில் : பூங்குழலி

Pin It