தொழிலாளர் விவசாயிகள் கட்சி மாநாடு :

“இந்தியர்களுக்கு ஆளத் தகுதி உண்டா” என ஆராய சைமன் என்பவர் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்து, இந்திய மக்களை அவமானப்படுத்த முயன்றது ஆங்கிலேய ஏகாதிபத்தியம்.

சைமன் கமிஷன் பற்றி முடிவு செய்யவும், தேசிய இயக்கத்தின் இலட்சியம், ‘குடியேற்ற நாட்டு அந்தஸ்தா அல்லது முழுமையான சுதந்தரமா’ என்ற வினாவுக்கு விடை காணவும், இந்திய தேசியக் காங்கிரசின் சென்னை மாநாடு 1927ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் கூடியது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த கம்யூனிஸ்டுகள் சென்னையில் சிங்காரவேலர் இல்லத்தில் கூடினர். இக்கூட்டத்தினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் “மத்திய நிர்வாகக்குழுக் கூட்டம்” என்கிறார் ஜி. அதிகாரி.

இக்கூட்டம் 1927 திசம்பர் 27 முதல் 30 வரை நடைபெற்றது. இதில் கே.என். ஜோக்லேக்கர், ஆர்.எஸ். நிம்கர், எஸ்.ஏ. டாங்கே, பிலிப் ஸ்பிராட், எஸ்.வி. காட்டே, சவுகத் உஸ்மானி, அப்துல் மஜீத், அயோத்தியா பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டதாக ஜோத் லேக்கர் குறிப்பிட்டுள்ளார், இக்கூட்டத்தில் தான் “அகில இந்தியத் தொழிலாளர்-விவசாயிகள் கட்சியை” அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

சைமன் கமிஷன் இந்தியாவுக்குள் வந்து இறங்கும் நாளில் தொழிலாளர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுவது என்று முடிவு செய்யப்பட்டது, மேலும் ஸ்தாபனப் பிரச்சினைகளைப் பற்றியும் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

1928 பிப்பிரவரி 3ஆம் நாள், சைமன் கமிஷனை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர். பம்பாய், சென்னை, கல்கத்தா முதலிய நகரங்களில் சைமன் கமிஷன் புறக்கணிப்புப் பேரணிகள் நடைபெற்றன. சைமனின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்ட ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு, மக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. நூற்றுக்கணக்கானவர் மாண்டனர்.

ஆயிரக்கணக் கானவர் காயமடைந்தனர். லாகூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசார் புகுந்து தடியடி நடத்தியதில் படுகாயமுற்ற லாலா லஜபதிராய் 1928 நவம்பர் 17இல் மரணமடைந்தார். நவம்பர் 19 அன்று நாடு முழுவதும் லஜபதிராய் தினமாக நிகழ்த்தப்பட்டது.

1927இல் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவிற்கிணங்க. ‘அகில இந்தியத் தொழிலாளர் - விவசாயிகள் கட்சி அமைப்பு மாநாடு’ கல்கத்தாவில் 1928 திசம்பர் 21 முதல் 24 வரை நடைபெற்றது, இம்மாநாட்டில் பம்பாய், பஞ்சாப், கல்கத்தா, அய்க்கிய மாகாணங்கள் ஆகிய வற்றிலிருந்து 300 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ‘முழுச் சுதந்தரத்தை’ வற்புறுத்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தொழிலாளர்-விவசாயிகள் கட்சியின் அகில இந்திய மாநாடு கல்கத்தாவில் நடந்தபொழுதுதான், காங்கிரஸ் மாநாடும் கல்கத்தாவில் நடைபெற்றது. 50,000 பாட்டாளிகள் கலந்துகொண்ட மாபெரும் அகில இந்தியத் தொழிலாளர்-விவசாயிகள் கட்சியின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று, காங்கிரஸ் பந்தலில் நடைபெற்றது, லிலுவா மற்றும் இதர ஆலைப் பகுதி களிலிருந்து வந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இரண்டு மணிநேரம் காங்கிரஸ் பந்தலைத் தங்கள் வசம் வைத்திருந்தனர், முழுச் சுதந்தரமே இந்தியாவின் குறிக்கோள் என்னும் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, அமைதியாகவும் ஒழுங்காகவும் திரும்பிச் சென்றனர்.

தொழிலாளர்-விவசாயிகள் கட்சியைக் கட்ட முன் வந்த கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் பணியைப் புறக்கணித்தனர் என்ற விமர்சனத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சி ஆளானது.

மீரட் சதி வழக்கு :

இந்தியப் பாட்டாளிகள் போராட்டத்தில் பங்குபெற இங்கிலாந்திலிருந்தும் புரட்சியாளர்கள் வந்துகொண்டி ருந்ததை, ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். பெர்சி கிளாடிங்கும். ஜார்ஜ் அலிசனும் முதலில் வந்தனர். அடுத்து பிலிப்ஸ் பிராட்டும், பென் பிராட்லேயும் வந்தனர். ஆஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் ஒருவராகிய ஜே.எப்.ரியான் 1928 நவம்பரில் இந்தியா வந்தார்.

உலக கம்யூனிஸ்டுகள் மற்றும் இடதுசாரிகள் முன்முயற்சியால் தொடங்கப் பெற்றிருந்த “பான் பசிபிக் தொழிற்சங்கச் செயற் குழுவின்” முக்கியஸ்தர்களில் ஒருவரான அவர், ஏ.ஐ.டி.யு.சி. யின் ஜாரியா மாநாட்டிலும், அகில இந்தியத் தொழிலாளர்-விவசாயிகள் கட்சியின் அமைப்பு மாநாட்டிலும் கலந்துகொண்டார். ஏ.ஐ.டி.யு.சி. ஜாரியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கழகத்தின் சார்பில் கே.டபிள்யு. ஜான்ஸ்டோன் இந்தியா வந்தார். அவர் ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் கலந்துகொண்ட வுடன் கைது செய்யப்பட்டு, இந்தியாவை விட்டு வெளி யேற்றப்பட்டார். எச்.எல். ஹட்சின்சன் என்னும் இங்கிலாந்து கம்யூனிஸ்டும் 1928 செப்டம்பரில் பம்பாய் வந்து சேர்ந்தார்.

இவ்வாறு இந்தியப் பாட்டாளி மக்களுக்காகப் பாடுபட, வெள்ளை நிறத்தவர்களும் புறப்பட்டவுடன், பயந்துபோன ஏகாதிபத்தியம் அதனைத் தடுப்பதற் கென்றே 1928இல் “பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா” என்ற ஒரு மசோதாவைக் கொண்டுவந்தது. அதன் உடனடி நோக்கம் பென் பிராட்லேவையும், பிலிப்ஸ் பிராட்டையும், ஹட்சின்சனையும் இந்தியாவை விட்டு வெளியேற்றுவதுதான். அதற்கு முன்னர் ஓர் ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டுமானால், பல சட்டப் பிரச்சனைகள் தோன்றின. இந்த ஏகாதிபத்திய மசோதா இந்தச் சிரமங்களையெல்லாம் போக்கி, ஏகாதிபத்தியத்தின் விரும்பத்தகாத குடிமக்க ளையும் இந்தியாவை விட்டு வெளியேற்ற அதிகாரம் கொடுத்தது.

இம்மாதிரியே, வேலை நிறுத்தங்களையும், அனுதாப வேலை நிறுத்தங்களையும் தடை செய்வதற்கும், போராடும் ஒரு பிரிவினர்க்கு, மற்றொரு பிரிவினர் நிதி உதவி அளிப்பதையும் இம்மசோதா தடைசெய்தது. இந்தக் கம்யூனிஸ்ட் விரோத மசோதாக்களை மத்திய சட்டசபை விவாதித்துக் கொண்டிருந்தபோதுதான் ஏகாதி பத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக மக்களின் கவனத்தை ஈர்க்க பகத்சிங்கும், படுகேஷ்வர் தத்தாவும், சட்டசபையிலே “இன்குலாப் ஜிந்தாபாத்!” (புரட்சி ஓங்குக) என முழங்கிக் கொண்டே இரண்டு குண்டு களை எறிந்தனர் (அந்தக் குண்டுகள், யாரையும் கொல்வதற்காகத் தயாரிக்கப்படவில்லை). அத்துடன் ‘சிவப்புத் துண்டுப் பிரசுரம்’(Red Pamphlet) ஒன்றி னையும் சட்டசபைக்குள்ளே வீசினர்.

அந்தப் பிரசுரத்தில் அவர்கள் பின்வருமாறு கூறியிருந்தனர். “அனாதரவாக உள்ள இந்திய மக்களின் சார்பாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மசோதாவையும் தொழில் தகராறு மசோதாவையும், லாலா லஜபதிராய் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை இந்த அரசாங்கம் உணர்ந்து கொள்ளட்டும். அதுமட்டுமல்லாது, மனிதர்களைக் கொன்றுவிடலாம்; ஆனால் தத்துவங்களைக் கொன்று விட முடியாது எனும் வரலாற்றுப் பாடத்தினையும் அரசாங்கம் அறிந்துகொள்ளட்டும். மாபெரும் சாம்ராஜ்ஜி யங்கள் அழிந்துவிட்டன; ஆனால் மாபெரும் சிந்தனை கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஜார்கள் வீழ்ந்தார்கள்; ஆனால், பட்டாளிகள் வெற்றிகரமாக முன்னேறிச் சென்றார்கள்.”

இவ்வழக்கின்போது பகத்சிங்கும், படுகேஷ்வர் தத்தாவும் விடுத்த கூட்டறிக்கையொன்றில், “புரட்சி என்றால் குண்டுகளையும் துப்பாக்கிகளையும் ஆராதனை செய்வது அல்ல. புரட்சி என்ற சொல்லுக்கு அநீதியை அடித்தளமாகக் கொண்டுள்ள இன்றைய சமுதாய அமைப்பினை மாற்றியமைப்பது என்பதுதான் பொருள். தீவிர மாறுதல் தேவை. இதனை உணர்ந்தவர்களின் கடமை, சமுதாயத்தைச் சோசலிச அடிப்படையில் மாற்றி அமைப்பதுதான்... நம்முடைய எச்சரிக்கைகள் அசட்டை செய்யப்பட்டால், தற்போதுள்ள அரசாங்க அமைப்பே தொடருமானால், ஒரு பெரும் போராட்டம் வெடிக்கும். அப்போராட்டத்தில் அனைத்துத் தடைகளும் நொறுங்கி விழும்; உண்மையான புரட்சியை அடை வதற்காகப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் அமைக்கப் படும்” என்று முழங்கினார்கள்.

“ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் முழுநேரப் புரட்சிக் காரன். அதிலும் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியர் என்பவர் புரட்சியையே தொழிலாகக் கொண்ட வர் என்றே பொருள்” என்று லெனின் கூறியதற்கு ஏற்ப பகத்சிங்கும், படுகேஷ்வர் தத்தாவும் வீரசாகசம் புரிந்தனர்.

அப்போதைக்குச் சட்டசபை, பொது மக்கள் பாது காப்பு மசோதாவை நிராகரித்தாலும், 1929இல் அது ஓர் அவசரச் சட்டமாக அறிவிக்கப்பட்டது. தொழில் தகராறு கள் மசோதாவும் சட்டமானது.

கம்யூனிஸ்ட் நடவடிக்கைகளில் இறங்குவோருக்கு, அவை சிரமமானவை, அபாயகரமானவை என்று உணர்த்தவே மீரத் சதி வழக்கிற்காக, நாடெங்கும் கம்யூனிஸ்டுகளைக் கைது செய்யும் வேலை 1929 மார்ச்சு 20ஆம் தேதி ஆரம்பமானது. பம்பாய், வங்காளம், அய்க்கிய மாகாணங்கள், பஞ்சாப் ஆகிய மாகா ணங்களில் கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். முதன்மையானவர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களோடு பின்னர் ஹட்சின்சனும் கைது செய்யப் பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இதேபோன்று இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட, இந்தியாவில் இல்லாத - ஆனால் இந்தியச் சட்டத்திற்கு உட்படக்கூடியோர் பட்டியல் ஒன்றும் இருந்தது. அதில் 1. பேஜர்நாட், 2. ரஜினி பாமி தத், 3. சக்லத் வாலா, 4. ஹாரிபொலிட், 5. ஜார்ஜன் அலிசன், 6. என்.கே. உபாத்யாயா, 7. கிரகாம் வோலார்டு இருந்தனர். பின்னர் எம்.என். ராயும் சேர்க்கப்பட்டார்.

வழக்குப் பதிவு செய்யப்பட்ட 32 பேரில் ஆங்கிலேயர்கள் இருந்தனர்; இந்தியர்கள் இருந்தார்கள்; கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்; தொழிலாளி வர்க்கத்தின் தலைவர்கள் இருந்தார்கள்; விவசாய இயக்கத்தின் வீரர்கள் இருந்தார்கள். அநேகமாக அனைவருமே இளைஞர்களாக இருந்தார்கள். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் உன்னதமான பிரதிநிதிகள் பலர் அங்கே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்ககத்தின் பிரதி நிதிகள், இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி களோடு அங்கே சேர்ந்து நின்றனர்.

மீரத் சதி வழக்கு 1929ஆம் ஆண்டு சூன் மாதம் 12ஆம் தேதி மீரத் சிறப்பு மாஜிஸ்ட்ரேட் மில்னர் ஒயிட் என்பவர் முன்பு தொடங்கியது. இவர் கல்கத்தாவில் அய்ரோப்பியக் கழகத்தின் தலைவர் ஆவார். இந்தக் கழகம்தான் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயருக்குப் பொற்கிழி வழங்கி, அவரது சேவையைப் பாராட்டியது. இவரது மாதச் சம்பளம் அன்று ரூபாய் 34,000 ஆகும். குற்றாச்சாட்டு, “மாட்சிமை தாங்கிய மன்னர்பிரானின் ஆட்சியை இந்தியாவில் வேரறுக்க நினைப்பவர்கள் இவர்கள்” என்பதே யாகும். ஏழு மாத விசாரணைக்குப்பின், 1930 சனவரி 11 அன்று, தரம்பீர்சிங் ஒருவரை மட்டும் விடுதலை செய்து, இதர குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்.

செஷன்ஸ் நீதிமன்ற வழக்கினை, பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களுக்கு மாற்றிட, குற்றஞ் சாட்டப்பட்டோர் சார்பில் மனுகொடுக்கப்பட்டு, மோதிலால் நேரு, தேஜ்பகதூர் சாப்ரூ ஆகிய பிரபல வழக்கறிஞர் களால் வாதாடப்பட்டது. ஆனால் அரசு வழக்கை வேறு இடங்களுக்கு மாற்ற மறுத்துவிட்டது. ஏகாதிபத்திய நீதிமன்றத்தினை கம்யூனிசப் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொள்வது என்று கம்யூ னிஸ்டுகள் முடிவு எடுத்தனர். வழக்கைக் கம்யூனிஸ்டுகள் சார்பில் முசாபரும், நிம்கரும், ஜோக்லேக்கரும் நடத்தினர்.

நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில், ‘புரட்சி ஓங்குக’, ‘கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க’, ‘சோவியத் ரஷ்யா வாழ்க’, ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’, ‘இந்திய விடுதலை வாழ்க’ என்னும் முழக்கங்களை உணர்ச்சி கரமாக முழங்கிக் கொண்டே சென்றார்கள். அவர்க ளால் இயற்றப்பட்ட பல புரட்சிப் பாடல்களும் உரக்கப் பாடப்பட்டன. ஏகாதிபத்திய நீதிமன்றத்தில், அந்த ஏகாதி பத்தியத்தை எதிர்த்தே கம்யூனிஸ்டுகள் விடுத்த அறிக் கைகளும், ஆற்றிய உரைகளும், இந்தியக் கம்யூனிச இயக்க வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக் கத்தக்கவையாகும்.

பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான பி.சி. ஜோஷி கட்சியின் திட்டத்தை விளக்கிவிட்டு, இறுதியாகக் கூறினார் :

“இந்த வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிற்பது நாங்கள் அல்ல; ஆங்கில ஏகாதிபத்தியம்தான். இங்கே இறுதித் தீர்ப்பு வழங்கப் போகிறவர்கள் இந்திய மக்கள் தாம். இந்த வழக்கில் நாங்கள் குற்றஞ்சாட்டப்பட்டோர் அல்லர்; மாறாகக் குற்றஞ்சாட்டுபவர்கள். இந்திய மக்கள் எனும் அந்த உண்மையான நீதிபதிகள் கூறப்போகும் இறுதித் தீர்ப்பு, புரட்சியை நோக்கி முன்னேறுங்கள் என்பதாகத்தான் இருக்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இல்லை.”

அய்ந்து மாதங்கள் கழித்து 1933 சனவரி 16இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணை முடியவே, ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்ட னையை அனுபவித்துவிட்டார்கள். இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக நீண்டகாலம் நடைபெற்ற சதி வழக்கு இதுவாக இருந்தது.

இறுதித் தீர்ப்பில், கிஷோரிலால் கோஷ், சிப்நாத் பானர்ஜி, விசுவநாத் முகர்ஜி என்கிற மூவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்களுக்கு ஆயுட்கால, நாடு கடத்தல் தண்டனைகள் வழங்கப்பட்டன. இத் தீர்ப்பினை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உலகெங்கிலும் எழுந்த கண்டனக் குரல் ஓங்கி ஒலித்தது.

எச்.ஜி. வெல்ஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ரொமெய்ன் ரோலந்து, ஹெரால்டு லாஸ்கி போன்ற உலகப் புகழ்பெற்ற மனிதர்கள் எல்லாம் இவ்வழக்குக்கு எதிராக அறிக்கைகள் விடுத்தனர். இங்கிலாந்து கம்யூனிஸ்டுக் கட்சி, இவ்வழக்கிற்கு இங்கிலாந்து மக்களின் ஆதரவைத் திரட்டியது. இந்தியப் பாட்டாளி வர்க்கத்தினரும் இவ்வழக்குக்கு எதிராக இயக்கங்கள் நடத்தினர். மீரத் கைதிகளுக்கு ஆதரவாகப் பேரணிகளும் பொதுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

1933 ஆகஸ்டு 3ஆம் நாள் அளிக்கப்பட்டத் தீர்ப்பில், இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று கூறி கீழ்க்கண்ட ஒன்பது பேர் விடுதலை செய்யப்பட்டனர். எம்.ஜி. தேவாய், எச்.எட். ஹட்சின்சன், ஜாப்வாலா, ராதாராமன் மிஸ்ரா, கே. செயகால், கௌரிசங்கர், காதம், ஏ.ஏ. ஆல்வே, காஸ்லே.

மேலும் விசாரணைக் காலத்தில் அனுபவித்த தண்டனையே போதுமானது எனக் கூறி, அஜருத்யா பிரசாத், பி.சி. ஜோஷி, கோபால் பாசக், ஜி. அதிகாரி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் சிலரின் தண்டனை குறைக்கப்பட்டது. மீரத் கைதிகளின் சிறை வாழ்க்கை தியாக வாழ்க்கை யாகத் திகழ்ந்தது.

சிறையில் நிலவிய கொடுமைகளை எதிர்த்தும், தங்களை அரசியல் கைதிகளாக நடத்தக் கோரியும், பகத்சிங், படுகேஷ்வர் தத்தா, ஜெகதீசன்தாஸ் ஆகி யோர் உண்ணாநோன்மை மேற்கொண்டனர். உண்ணாநோன்பினால் ஜெகதீசன்தாஸ் வீரமரணம் அடைந்தார். பகத்சிங்கும், தத்தாவும் அபாய நிலையில் இருந்தனர்.

சிறைச் சீர்திருத்தக் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், தாங்களும் உண்ணாநோன்பை மேற்கொள்ளப் போவதாக 1930 ஆகஸ்டு 23 அன்று, நீதிமன்றத்தில் மீரத் கைதிகள் ஓர் அறிக்கையை அளித்தனர். இத்தகையப் போராட்டங்களுக்குப் பிறகு சில கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக் கொண்டது.

மீரத் கைதிகள் சிறையில் வாடிய போது, அவர்களைச் சந்தித்து, அவர்களது வழக்கிற்கு பி.டி. ரணதிவே உதவி செய்தார். ஆனால் விரைவில் அவரும் கைது செய்யப்பட்டார். மீரத் கைதிகளைக் காந்தியார், மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, அன்சாரி போன்ற தேசியத் தலைவர்களும் சிறையில் சென்று சந்தித்தனர்.

மீரத் சதிவழக்கைப் பற்றி, ஏகாதிபத்திய உள்துறை இலாகாவே, 1935ஆம் ஆண்டில், ‘கான்பூர் கைதிகளைவிட, மீரத் கைதிகள் தங்கள் விசாரணையின்மூலம் அதிக விளம்பரத்தையும், அரசியல் ஆதாயங்களையும் பெற்றுவிட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தது.

(தொடரும்)

Pin It