kushvant-singh 400நையாண்டிக்கும் துணிச்சலுக்கும் பெயர் பெற்றவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங் (99) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை மறைவுற்றார்.

உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் குஷ்வந்த் சிங். இவரது எழுத்தில் நையாண்டித்தனமும், அழுத்தமான கருத்து களும் பொதிந்திருக்கும். அரசியல், சமூகப் பிரச்சினைகள் குறித்த விமர்சனங்களைத் துணிச்சலாக வெளிப்படுத்தியவர். வயது காரணமாக உடல் தளர்ந்திருந்தாலும் உற்சாகம் குறையாதவராகத் தொடர்ந்து இயங்கி வந்த குஷ்வந்த் சிங், வியாழக்கிழமை மறைந்தார்.

குஷ்வந்த் சிங் இயற்கை மரணம் அடைந்ததாக அவரது மகனும் பத்திரிகையாளருமான ராகுல் சிங் தெரிவித்தார். “அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது. என்றாலும் மனரீதியில் இறுதிவரை அவர் விழிப்புடன் இருந்தார்” என்றார் ராகுல் சிங்.

பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள ஹதாலியில் 1915-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-இல் பிறந்தார் குஷ்வந்த் சிங். டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், டெல்லி மற்றும் லாகூரில் கல்லுரிப் படிப்பை முடித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரி யிலும் படித்துள்ளார்.

இவர் 1947-இல் வெளியுறவுத் துறை அமைச்ச கத்தில் சேருவதற்கு முன் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

மத்திய திட்டக் குழுவுக்காக ‘யோஜனா’ என்ற பத்திரிகையை நிறுவிய இவர், ‘தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆப் இந்தியா’, ‘தி நேஷனல் ஹெரால்டு’, ‘தி இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆகியவற்றின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘டிரெயின் டு பாகிஸ்தான்’, ‘ஐ ஷல் நாட் ஹியர் தி நைட்டிங்கேல்’, ‘டெல்லி’ உள்ளிட்ட இவரது படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைப் பின்னணியாகக் கொண்ட ‘டிரெயின்டு பாகிஸ்தான்’ நாவல் மத நல்லிணக்கம் மற்றும் மனித உறவின் மேன்மை குறித்துப் பேசிய படைப்பு. இந்நாவலைத் தழுவி, இதே பெயரில், 1988-இல் இந்தியில் திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்நாவலில் வரும் ஒரு எளிய மனிதன் சுதந்தரம் பற்றி பேசும் வசனம் புகழ்பெற்றது. “சுதந்தரம் என்பது படித்தவர்களுக்குத் தான். நாங்களோ முன்பு ஆங்கிலே யர்களுக்கு அடி மைகளாக இருந் தோம். இனி, இந்திய அல்லது பாகிஸ் தானிய கனவான்களுக்கு அடிமைகளாக இருக்கப் போகிறோம்.”

குஷ்வந்த் சிங் தனது 95-வது வயதில் ‘தி சன்செட் கிளப்’ என்ற நாவலை எழுதினார், இவரது சுயசரி தையை 2002-இல் பெங்குவின் புக்ஸ் வெளியிட்டது.
குஷ்வந்த் சிங், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1980 முதல் 1986 வரை இப்பதவி வகித்தார்.

1974-இல் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது. ஆனால் அமிர்தசரஸ் பொற் கோயிலில் ராணுவம் நுழைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவ்விருதை 1984-இல் அவர் அரசிடம் திரும்ப ஒப்படைத்தார். பின்னர் 2007-இல் இவருக்குப் பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.

இவரது மனைவி கவல் மாலிக் 2001-இல் மறைவுற்றார். இவருக்கு ராகுல் என்ற மகனும், மாலா என்ற மகளும் உள்ளனர். குஷ்வந்த் சிங்கின் இறுதிச்சடங்கு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள லோதி மயானத்தில் நடைபெற்றது.

குஷ்வந்த் சிங் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பா.ச.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் ஷோபாடே தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருப்பதைப் போல, தனது பேனாவுக்கு ஆணுறை மாட்டிக் கொள்ளாத துணிச்சல்காரர் குஷ்வந்த் சிங்!

Pin It