periyar 238ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர், மோட்டார் கம்பெனி முதலாளிகளுக்குப் பின்வருமாறு ஒரு சுற்றுக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அது வருமாறு :-

“இந்த ஜில்லாவிலுள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திராவிடர்களை தமது “பஸ்களில்” ஏற்றிக் கொண்டு போவதில்லையென்றும் டிக்கட்டில், “ஆதிதிராவிடர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது” என்று நிபந்தனை ஏற்படுத்தியிருப்பதாயும் அறிகின்றோம். இவ் வழக்கம் பிரயாணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத்தக்கதாகவும். மிக அக்கிரம மானதாகவும் இருக்கிறது.

ஆகவே மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்சில் ஏற்றிச்செல்ல மறுக்கவோ டிக்கட்டு களில் மறுப்பு விதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசென்சு, முன்னறிக்கை கொடாமலே ரத்து செய்யப்படுமென இதனால் எச்சரிக்கை செய்கிறோம். இந்தச் சுற்றுக் கடிதம் கிடைத்து ஒரு வாரத்துக்குள் அந்தத் தடை விதி நீக்கப்பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கட்டுடன் ரிப்போர்டு செய்து கொள்ளவேண்டும்.

காங்கிரஸ் தலைவர்களின் யோக்கியதை வாலிபர்களுக்கு விருந்து

ருஷிய பொது உடமைக் கட்சிக்காரர் அன்னிய தேசப் பிரசாரத்திற் கென்று ஒரு இலாக்கா வைத்து தங்கள் கொள்கைகளை உலகமெல்லாம் பரப்ப உத்தேசித்து அந்தந்த நாட்டுக்குத் தகுந்தபடி திட்டங்கள் ஏற்படுத்தி, அதை அந்தந்த நாட்டில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.

அந்த முறையில் இந்தியாவிற்கு என்று அவர்கள் வகுக்கப்பட்ட திட்டங்கள், லண்டன் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டிருந்ததின் சுருக்கம் சென்னை “இந்து” பத்திரிகையில் லண்டன் நிருபரால் தந்தியடிக்கப்பட்டு அப் பத்திரிகையில் பிரசுரமானதின் கருத்தை மொழி பெயர்த்து மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

அது வாலிபர்களுக்கு ஒரு விருந்தாகும், அதில் சில இன்றைய இந்தியாவுக்குப் பொருத்தமானதென்று காணப்படா விடினும் காங்கிரசையும் இன்றைய இயக்கத்தையும், அதன் இயக்கத் தலைவர்களையும் பற்றிக் கூறியிருக்கும் குறைகளில் பெரும்பான்மை நமது அபிப்பிராயமும் ஆகும் என்பதோடு அதையே நாமும் பல தடவை எழுதி வந்திருக்கின்றோம்.

திட்டத்திலும் பெரும்பான்மை நாம் எழுதி வந்தவை களாகும். பொது ஜனங்களின் உண்மையான சுதந்திர உணர்ச்சி களைக் கெடுத்து தொழிலாளர்களுக்கும் உழுகின்ற குடியானவர்களுக்கும் துரோகத்தைச் செய்தது காங்கிரசேயாகும் என்று நாம் பல தடவை எழுதியும், பேசியும் இருப்பதை பொதுவுடமைக் கட்சியாரும் ஒப்புக் கொண்டிருப்பதிலி ருந்தாவது இக்காங்கிரசினால் ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் பயனில்லை என்பதை எளிதில் உணரலாம்.

மற்றும் அதில் தலைவர்களைப் பற்றி எழுதியிருப்பவைகளுக்கோ நாம் அதிக வியாக்கியானம் எழுதத் தேவையில்லை என்று கருதி விட்டு விட்டோம்.

காங்கிரசின் குற்றத்தையும் துரோகத்தையும் உணர்ந்தால் தலைவர் கள் குற்றத்தையும் துரோகத்தையும் பிரித்துக் காட்ட வேண்டியதில்லை.

மற்றப்படி பணக்காரர்கள் சொத்துகளையும் பூமிகளையும் கோயில், மடங்கள் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டுமென்பது மற்ற நாட்டுக்கு பொருந்தாவிட்டாலும், நமது நாட்டுக்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இங்கு சொத்துக்களை அடைவதற்கு பிறவியிலேயே ஜாதிகள் வகுத்து இருப்பதோடு, சிலர் பிறவியின் காரணமாகவே சொத்து அடை வதற்கில்லாமல் தடுக்கப் பட்டிருக்கின்றார்கள்.

சிலர் பிறவியின் காரணமாகவே சொத்துக்கள் தங்கள் வசம் வரும் படியாகவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொள்கைகள் மதத்தோடு சேர்க்கப்பட்டும் இருக்கின்றன. ஆகையால் இந்த மாதிரி நாட்டின் சொத்துக்களை பறிமுதல் செய்து பொதுச் சொத்தாக ஆக்க வேண்டிய கொள்கை ஆட்சியில் ஏற்பட வேண்டியது மிக மிக அவசியமாகும்.

ஒரு நாட்டு சொத்து அந்த நாட்டுக்கு சொந்தமாகும். அந்த நாட்டு மக்கள் எல்லோருக்குமே சொந்தமானதாகும். அப்படி இருக்க அதை தந்திரத்தாலும், கை பலத்தாலும், கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், கர்மத்தின் பேராலும், விதியின் பேராலும் ஒரு சிலரே அனுபவித்துக் கொண்டு பலர் ஜீவனத்துக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதும் அதுவும் பிறவி காரணமாய் தந்திரத்தால் புரட்டால் இக் கொள்கையை நிலை நிருத்தி வைத்திருப்பதும் அக்கிரமமேயாகும்.

இன்றைய தினம் தலைவிதியை நம்பாத உலக ஏழை மக்கள் எல்லா ருடைய உள்ளத்திலும் இருக்கும் உணர்ச்சி இதுவேயாகும்.

முடிவாக மற்ற விஷயங்கள் எது எப்படி இருந்தாலும் இந்திய காங்கிரசானது இந்தியாவின் 100க்கு 90 மக்களாகிய குடியானவர்கள் தொழிலாளிகள் ஆகிய இந்தியாவின் உண்மை மக்களுக்கு விரோதமானது என்பது மாத்திரமல்லாமல், பொது துரோகமானது என்பதையும் இன்றைய தலைவர்கள் பொது விடுதலை எதிரிகள் என்பதையும் நம்மைப் போலவே சம தர்மவாதிகளும் கருதி இருக்கிறார்கள் என்பவற்றை மாத்திரம் அறிவிக்க விரும்புகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.12.1930)

Pin It