கடந்த 13.3.2011, ஞாயிற்றுக்கிழமையன்று கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை யானைக் கூட்டம் சூலகிரி அருகே கடந்து சென்றது. தம் காட்டுப் பகுதியை விட்டு மனிதர்களின் வாழ்விடப் பகுதியில் வந்த யானைக் கூட்டத்தை மறுபடியும் காட்டுப் பகுதிக்கே அனுப்ப 50க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். அப்பகுதியில் உள்ள மக்கள் இதை மிகவும் ஆர்வத்துடன் பார்த்தனர். இந்நிகழ்வினால் மனிதர்களுக்கும், பிற உடைமைகளுக்கும், யானைகளுக் குமே கூட பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

இந்த நிகழ்வு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாமல் போனது பற்றி அப்பாவி மக்கள் மகிழ்ச்சியடையலாம். ஆனால் உலக நடப்புகளைப் பற்றிச் சிந்திப்பவர்கள் அப்படி இருக்க முடியுமா? இப்பொழுது யானைக் கூட்டம் சூலகிரியில் வந்தது. சென்ற ஆண்டு திருப்பதி - திருமலையில் சிறுத்தைகள் வந்தன. இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்பொழுது இங்கு மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அனைத்தையும் மனிதர்கள் வெற்றிகரமாகச் சமாளிக்கிறார்கள். ஆனால்...

இந்நிகழ்வுகள் யாவும் நோயின் அறிகுறிகளே தவிர நோய் அல்ல. இதுபோல் விலங்குகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு ஏன் வருகின்றன? காடுகளில் அவற்றிற்குத் தேவைப்படும் உணவிற்கும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுவதால் அப்படி வருகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இது ஏன் ஏற்படுகிறது? இதன் தொடர்ச்சியும் முடிவும் எப்படி இருக்கும்?

இன்று மக்கள் தொகைப் பெருக்கம் உருவாக்கும் பிரச்சினைகளின் பரிமாணத்தைவிட நுகர்பொருள் பெருக்கம் பல மடங்கு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கம் வாழ்விடத் தேவைகளை அதிகரிக்கும் போது அதன் தொடர்விளைவாக விவசாய நிலப்பரப்பும் அல்லது காட்டு நிலப்பரப்பும் அல்லது இரண்டுமே குறைகிறது. நுகர் பொருள் பெருக்கமோ, புவியின் வளத்தை அளவுக்கு மீறி உறிஞ்சுவதில் முடிகிறது.

இதனால் காட்டுப் பகுதியில் உள்ள விலங்கினங்களுக்குத் தேவையான உணவும் தண்ணீரும் காட்டிலேயே போதுமான அளவிற்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. அவை தங்கள் தேவைகளைத் தேடும் போது, மனிதர்கள் வாழும் பகுதிகளில் வந்தடைய நேரிடுகிறது. இது விலங்கினங்களின் வாழ்வா தாரத்திற்கும் மனிதர்களின் வாழ்வாதாரத்திற்குமான மோத லாக உருவெடுக்கிறது.

தன்னை மிகவும் அறிவாளியாக நினைத்துக் கொண்டி ருக்கும் மனிதன் இதுவரைக்கும் அடைந்துள்ள அறிவைப் பயன்படுத்தி விலங்கினங்களின் மீது வெற்றி காண்கிறான். ஆனால் இது உண்மையான வெற்றியா?

விலங்கினங்களை மீண்டும் காட்டின் மையப் பகுதிக்கு விரட்டி விடுவதன் மூலம் மனிதன் அடைவது தற்காலிக வெற்றியே. விலங்கினங்களுக்குப் போதிய இடமும், உணவும், நீரும் கிடைக்காத காரணத்தால் அவற்றின் பிறப்பு இறப்பு விகிதம் பாதிக்கப்படும். சிறிது சிறிதாக அவற்றின் எண்ணிக் கை குறைந்து போவதுடன், சில உயிரினங்கள் முற்றிலும் அழிந்து போகவும் நேரலாம்.

இயற்கையின் மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத உயிரினங்கள் அழிந்து போகின்றன என்று டார்வினின் கருத்தைக் கூறி நாம் பொழுதைப் போக்கிக் கொண்டு இருக்க முடியாது. ஏனெனில் முதலில் இது இயற்கையில் ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படும் அழிவு அல்ல. மனிதனின் அயோக்கியத்தனமான கருத்துக்களால் ஏற்படும் அழிவு, அடுத்ததாக அழிவிற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அப்படிப்பட்ட அழிவு, இறுதியில் மனித இனத்தின் அழிவில் கொண்டு செல்லவே செய்யும்.

இப்புவியில் ஒவ்வொரு உயிரினமும், இயற்கையைச் சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் பாம்பும் இப்புவியைச் சமநிலையில் வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. வயற்காடுகளில் பாம்பு இல்லையேல் எலிகளின் தொல்லை யினால், தானிய விளைச்சல் மிகவும் குறைந்துவிடும். மேலும் நாகப்பாம்பின் நஞ்சிலிருந்து புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்கும் மருந்தை உற்பத்தி செய்கிறார்கள். இதுபோல் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும், இயற்கையைச் சமநிலையில் வைத்துக் கொள்வதுடன், மனித வாழ்க்கைக்கும் பல விதங் களில் உதவியாகத் தான் இருக்கின்றன.

ஏதாவது ஒரு உயிரினம், இப்புவியிலிருந்து மறைந்துவிடுமானால் அவ்வுயிரினத்தை மீண்டும் படைக்க முடியாது. (ஒவ்வொரு உயிரினத்திற்கும் இலட்சக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் இருக்கிறது) ஒரு உயிரினம் மறைந்த பிறகுதான் இயற்கையைச் சம நிலையில் வைத்துக் கொள்ள அதன் பங்களிப்பை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மீண்டும் அதைப் படைக்க முடியாத நிலையில் இயற்கைச் சமநிலை தவறுவதைத் தடுக்க முடியாது. அதாவது மனிதனின் அழிவு மட்டுமல்ல; அனைத்து உயிரினங்களின் அழிவையும் தடுக்க முடியாது.

யானைக் கூட்டமும், சிறுத்தைகளும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் உணவையும் நீரையும் தேடி வருகின்றன என்றால் நாம் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக் கிறோம் என்று பொருள். நாம் அழிவுப் பயணத்தில் தொடர்ந்து செல்லப் போகிறோமா அல்லது அதிலிருந்து மீளும் செயல்களில் ஈடுபடப் போகிறோமா?

உயிரினங்கள் அழிவதற்கு வழிவகுத்துக் கொண்டிருக்கும், இன்றைய நிலைமை மாற வேண்டும் என்று அக்கறை கொள்ளாதவர்கள் தயவு அருட்கூர்ந்து இக்கட்டுரையைத் தொடர்ந்து படிக்க வேண்டாம். அவர்களுக்குத் தேவையான பரபரப்பு உணர்வுகள் இத்துடன் முடிந்துவிட்டன. மற்றவர்கள் அமைதியாகச் சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைய நிலைமைக்கான காரணிகளாக மக்கட் தொகைப் பெருக்கம் என்பதையும், இயற்கை வளங்கள் அளவுக்கதிக மாக உறிஞ்சப்படுதல் என்பதையும் பார்த்தோம். மக்கள் தொகை பற்றிய சமூக, பொருளாதார காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் சீரான வருமானம் கொண்ட நிரந்தர வேலையில் இருப்பவர்கள் இரு குழந்தைகளுக்கு மேல் பெறுவதில்லை என்பதும், அப்படிப்பட்டவர்களில் பலர் ஒரு குழந்தையுட னேயே நிறுத்திக் கொள்கிறார்கள் என்பதும் தெரியவரும். சீரான வருமானமும் நிரந்தர வேலையும் இல்லாத ஏழை களும், வகை தொகை தெரியாமல் பணம் சம்பாதிக்கும் பணக்காரர்களும் அளவுக்கு மேல் பிள்ளைகளைப் பெறு கிறார்கள் என்பதும் தெரியவரும். மக்கள் அனைவருக்கும் சீரான வருமானம் உடைய நிரந்தர வேலையை அளித்து விட்டால் மக்கள் தொகைப் பெருக்கத்தைத் தடுக்க முடியும்; காலப் போக்கில் குறைக்கவும் முடியும். இதை எப்படிச் சாதிப்பது?

இயற்கை வளங்கள் அளவுக்கு மீறி உறிஞ்சப்படுகிறதே? இதனால் மக்களின் வாழ்க்கை வசதிகள் சாராம்சத்தில் மேம் பட்டு உள்ளதா? 30 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்தில் பயணம் செய்து ஒரு மணி நேரத்தில் சேர முடிந்த இடத்திற்கு, இப்பொழுது தனியார் வாகனத்தில் சென்றால் தான் முடிகிறது. அதாவது தோற்றப் பொலிவில் உயர்வு ஏற்பட்டுள்ளதே ஒழிய, சாராம்சத்தில் பயனளவு உயரவே இல்லை. ஆனால் சூழ்நிலைக்கேடு பக்க விளைவாகவும் வந்து சேர்ந்துள்ளது. தனியார் வாகனங்களைத் தடைசெய்துவிட்டு, அவசர, அவசியக் காரணங்களுக்காகத் தவிர, மற்ற பயணங்கள் அனைத்தும் பொதுப் போக்குவரத்து முறையில்தான் இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்துவிட்டால், இப்பொழுது தனி வாகனங்களில் சென்றடையும் நேரத்தில் அதே இடத்திற்குப் பேருந்துகளில் சென்றடைய முடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் தடுப்பது யார்?

தனிவாகனங்களைத் தடை செய்துவிட்டால், வாகன உற்பத்தித் தொழிலில் பணத்தை முதலீடு செய்ய முடியாது. ஏற்கெனவே பணத்தை எங்கு முதலீடு செய்து இலாபம் சம்பாதிப்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கிக் கிடக்கும் முதலாளிகளுக்கு மேலும் ஒரு இடியாக இருக்கும். அதாவது பொருளாதார நெருக்கடி தீவிரமடையும். முதலாளிகள் தங்கள் பணத்தை இலாபகரமாக முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பேருந்திற்குப் பதிலாக 300 சிறு வாகனங்களை உற்பத்தி செய்து, இயற்கை வளத்தை அளவுக்கதிமாகப் பிழிந்து எடுக்கி றார்கள். இதுபோல்தான் அனைத்துத் தொழில் துறைகளும் இயற்கை வளத்தை அளவுக்கு மீறி உறிஞ்சிக் கொண்டு இருக்கின்றன. இதைத் தடுப்பது எப்படி?

நாம் ஆராய்ந்து பார்த்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு, முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுத்து விட்டு சோசலிச உற்பத்தி முறையைக் கைக்கொள்ளுவதில் தான் இருக்கிறது. சோசலிச உற்பத்தி முறையில் மக்கள் அனைவருக்கும் சீரான வருமானம் உடைய நிரந்தர வேலை அளிக்க முடியும். ஆகவே மக்கள் தொகையைக் கட்டுப் படுத்துவதுடன், காலப்போக்கில் குறைக்கவும் முடியும். மேலும் இம்முறையில் இயற்கை மூலாதாரங்கள் மக்கள் நலனுக் காகத்தான் பயன்படுத்தப்படுமே ஒழிய, இலாபத்தைக் கணக்கில் கொண்டு ஈடுபடுத்தப்படமாட்டாது. ஆகவே இயற்கை வளங்கள் நீடித்து நிலைத்து இருப்பதை உறுதி செய்ய முடியும். ஆகவே புவியில் உயிரினங்கள் அழியக் கூடாது என்ற அக்கறை உடையவர்கள் முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுக்கவும், சோசலிச உற்பத்தி முறையை நடைமுறைப்படுத்தவும் அணியமாக வேண்டும்.

யானைகளையும், சிறுத்தைகளையும் அடக்கி ஆள்வது வீரமே அல்ல; அதிலே மகிழ்வதும் திருப்தியடைவதும் விவேகமும் அல்ல. முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுப்பதே வீரம்; அதன்பின் சோசலிச உற்பத்தி முறையை நிர்மாணிப்பதே விவேகம்.                

Pin It