தமிழீழ விடுதலைப்போர் தற்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சிங்கள இனவெறி அரசு வரலாறு காணாத வகையில் மானுட அழிப்புப் போரை நிகழ்த்தியுள்ளது.

இந்திய அரசு தொடக்கக் காலம் முதலே ஈழத் தமிழர்க்கு இரண்டகம் இழைத்து வருகிறது. இராசிவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை என்கிற பெயரிலான கொலைப்படை ஈழத் தமிழர்க்கு இழைத்த கொடுமைகள் எண்ணற்றவை.

இவற்றை நாடே கண்டித்தது. இந்தக் கொலைப்படை தன் ‘பணிகள்’ முடித்து இந்தியா திரும்பிய போது, அப்போதும் ஆட்சியில் இருந்த தமிழக முதல்வர், கலைஞர் அதை வரவேற்க மறுத்துவிட்டார். ஈழத் தமிழர்க்கு எதிரான பொய்யான பரப்புரைகளைக் கண்டித்து இந்தியத் தொலைக் காட்சிப் பெட்டிகளை உடைத்துத் தன் கண்டனத்தை அவர் வெளிப்படுத்தினார். இதே தன்மையில்தான் 1988இல் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலன் இவ்வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்று சிறையில் இருந்து வருகிறார். வழக்கின் உசாவல் தொடங்கி இன் றைய நாள்வரை பொழிலன் 5 ஆண்டு காலத்தைச் சிறையிலேயே கழித்துள்ளார்.

ஓர் இன அழிப்புப் போருக்கு எதிராக, தமிழகமே கொதித்தெழுந்து நின்ற நிலையில், கொடைக்கானல் குண்டு வெடிப்பும் நிகழ்ந்தது. அதற்குப்பின் பொழிலன் எவ்வகை யிலும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டதில்லை.

பொழிலனை விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு அவை தமிழக முதல்வரிடம் அளிக்கப் பட்டுள்ளன. பொழிலனின் எஞ்சிய தண்டனைக் காலத்தை, சிறப்பு நிலை கருதித் தண்டனைக் கழிவு அளித்து அவரை உடனே விடுதலை செய்யுமாறு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் தமிழக முதல்வர் அவர்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

- மா.பெ.பொ.க.

Pin It