கொள்கைப் பிடிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும், தியாகத்திற்கும் உலக அளவில் பொதுவுடைமைக் கட்சிகள் பெயர் பெற்றவை.

ஆனால், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இத்தனைப் பண்புநலன்களையும் பெற்றிருந்தாலும், உருவாகி சுமார் 90 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், இன்னும் தானாக எழுந்து நடமாட முடியாத நிலையில், தவழ்ந்துகொண்டே காலம் கடத்துவதாகவே உள்ளது. இந்த நிலையை எண்ணி, நீண்ட நாட்களாகவே மனத்தில் ஓர் அன்பு கலந்த ஆற்றாமையும், பரிவும் பீடித்தும் நீடித்தும் வருவதை உணர்ந்ததன் விளைவே இந்தத் திறனாய்வுக் கண்ணோட்டம் ஆகும்.

1947ஆம் ஆண்டு, இந்தியா அரசியல் விடுதலை அடைந்தபோது, பொதுவுடைமை இயக்கம் வலிமை வாய்ந்த எதிர்க்கட்சியாக விளங்கியது. 1952 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அன்றைய சென்னை மாகாணத் தில், 64 இடங்களில் வெற்றிபெற்று, இது முதலாவது எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து, ஒரு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியது. ஆனால், அதற்குப் பிறகு பொதுவுடைமை இயக்கம் சரிவை நோக்கித்தான் பயணித்தது. 1957ஆம் ஆண்டுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் எட்டு இடங்களையும், 1962ஆம் ஆண்டில் நான்கு இடங்களையும், 1967ஆம் ஆண்டில் இரண்டு இடங் களையும் பெற்றுக் கடைநிலையில் தள்ளப்பட்டது.

ஈடு இணையற்ற தியாக வரலாறு படைத்த பொதுவுடைமை இயக்கம் மெலிவடைந்து சிதைந்து போனது ஏன்? இதன் காரணங்கள் யாவை?

பொதுவுடைமை இயக்கம் பிளவுபட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்களாக இப்போது இந்தியாவில் உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தின் தொடக்கத்தையும், வரலாற்றில் ஏற்பட்ட தடங்கல்கள், சறுக்கல்கள், சரிவுகள், தோல்விகள் இவற்றின் பின்புலங்கள் முதலியனவற்றையும் ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத் தோற்றம்

1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15இல், பொதுவுடைமை அகிலத்தின் பேரவைக் கூட்டம் கார்ல்மார்க்ஸ், தலை மையில் நடைபெற்றது. ஏங்கல்சும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கல்கத்தா வாழ்நர் ஒருவர் அக்கூட்டத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார். பொதுவுடைமை அகிலத்தின்கிளை ஒன்றை இந்தியாவில் நிறுவும்படி அதில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு உடனே ஒப்புதல் கொடுத்த அகிலம், இந்திய நிலைமைகள் பற்றித் தெளிவாக உணர்ந்தும் இருந்துள்ளது. பொதுவுடைமை அகிலத்தின் கிளை அமைக்க வேண்டும் என்பது கடிதம் எழுதியவரின் விருப்பமாக இருந்திருக்கிறதே தவிர, இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் அப்போது அதற்குத் தயாராகியிருக்கவில்லை என்பது உண்மை. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி உருவாக மேலும் ஓர் அரை நூற்றாண்டுக்காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி அமைக்கப் பட்ட தகவல் குறித்து இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்குள்ளாகவே மாறுபட்ட கருத்துகள் இருந்து வருகின்றன.

1925ஆம் ஆண்டு டிசம்பரில் கான்பூரில் பொது வுடைமைக் கட்சி உருவானது என்பது இந்தியப் பொது வுடைமைக் கட்சியின் கருத்தாகும்.

ஆனால் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியோ, 1920 அக்டோபரில் தாஷ்கண்ட் நகரில் இந்தியாவுக்கான பொதுவுடைமைக் கட்சி அமைக்கப்பட்டது என்று கூறுகிறது.

இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், தாஷ்கண்டில் அல்லது கான்பூரில் அமைக்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சியானது ஒரு முழுமையான திட்டத்தை மேற்கொண்டிருக்கவில்லை என்பதுதான்.

பொதுவுடைமைக் கட்சி என்பது, தான் நடத்தப் போகும் புரட்சியின் கட்டம், தன்மை, அதற்கான போர்த் தந்திரம் ஆகியன பற்றித் தெளிவான இலட்சி யத் திட்டத்தோடு செயல்பட வேண்டிய கட்சியாகும்.

1930ஆம் ஆண்டு ‘செயல்மேடை’ என்னும் தலைப்பில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கு முழுமையான திட்டம் அறிவிக்கப்பட்டு, 1933 டிசம்பரில் மீரட் சதிவழக்குக் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகுதான், உண்மையான, மையப்படுத்தப்பட்ட கட்சி உருவானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கட்சி தனது திட்டத்தை உருவாக்கி, 1934இல் பொதுவுடைமை அகிலத்துடன் முறையாக இணைக்கப்பட்டது.

1943இல் முதல் மாநாடு மே 23 முதல் ஜூன் 9 வரை பம்பாயில் நடைபெற்றது. கட்சித் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான தீவிர முயற்சிகள் அப்போதும் நிகழவில்லை. முற்றாளுமை (ஏகாதிபத்திய) எதிர்ப்பு, தேச விடுதலை என்பதில் பொதுவுடைமைக் கட்சி மிகத் தெளிவாக இருந்தது. அதேநேரத்தில், இரண்டாம் உலகப்போர், சோவியத் மீது இட்லர் தாக்குதல், இந்தியாவை ஜப்பானியப் படை நெருங்கியது என்னும் இக்கட்டான நிலைகளில், இந்தியப் புரட்சியின் கட்டம், தன்மைபற்றி ஆழமான ஆய்வு செய்து ஒரு கட்சித் திட்டத்தை உருவாக்கும் பணியில் கட்சி ஈடுபடவில்லை; கட்சியினால் ஈடுபட முடியவில்லை. இந்த நிலையில் விடுதலை கிட்டியதும் அதைப்பற்றிச் சரியான கணிப்பிற்கு வருவதிலேயே சிக்கல் ஏற்பட்டது. வளரும் குழந்தை தடுக்கி விழுவதுபோல, இளம் பொதுவுடைமைக் கட்சியும் சில சறுக்கல்களுக்கு ஆளாகியது.

1920 அக்டோபர் 17ஆம் நாள், சோவியத் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட இந்தியாவுக்கான பொதுவுடைமைக் கட்சியில், தொடக் கத்தில், 10க்கும் மேற்படாத உறுப்பினர்களே இருந்தனர். ஆனால், 1921ஆம் ஆண்டுவாக்கில், முகாஜிகர்கள் வந்ததோடு அதன் அணி பெருகியது.

இந்த முகாஜிகர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லீம்களின் புனித அரசாகக் கருதப்பட்ட துருக்கி சுல்தான் கலீபாவை, ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஆட்சியைவிட்டு இறக்கியது. இதனால், உலகம் முழுவது முள்ள முஸ்லீம்கள் கொதித்தெழுந்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக, முஸ்லீம் மக்களின் கிலாபாத் (எதிர்ப்பு) இயக்கம் உருவானது. முஸ்லீம்கள் பலர் இந்தியாவிலிருந்து தாங்களாகவே வெளியேறித் துருக்கியை அடைய முயன்றனர். இவர்களே ‘முகாஜிகர்கள்’ என அழைக்கப்பட்டனர்.

இவர்கள், 1921 வசந்த காலத்தில் கீழை நாடுகளுக் கான உழைப்பாளர் பொதுவுடைமைப் பல்கலைக் கழகத்தில் இந்தியக் குழு ஒன்றை அமைத்தனர். கட்சியின் முதல் செயலாளர் முகமது ஷபீக் ஆவார். தாஷ்கண்டிலும், மாஸ்கோவிலும் கல்வியை முடித்த பிறகு, முன்னாள் முகாஜிகர்களுடைய உறுப்பினர் களான முகமதுஷபீக், பெரோஸ்தீன் மன்சூர், அப்துல் மஜீத், ரபீக் அகமது, சவுகத் உஸ்மான், பஸர் இலாகி குர்பான் மற்றும் அப்துல் வாரென் உட்படப் பலர் இந்தியாவிற்குத் திரும்பி, இங்கு அமைக்கப்பட்டிருந்த பொதுவுடைமைக் குழுக்களில் பங்கெடுக்கத் தொடங்கி னர். மற்றவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து, பொதுவுடைமை அகிலத்துடன் இணைக்கப்பட்ட பல் வேறு அமைப்புகளுக்குள்ளோ, பிற தேசிய புரட்சிகர அமைப்புகளிலோ செயல்பட்டு வந்தனர். எம்.என். ராயைத் தவிர, அயல்நாடுகளிலிருந்த இந்தியர்களுக் கிடையில் இருந்த பொதுவுடைமைக் குழுக்களில் முக்கியமாகப் பணியாற்றிய இன்னொருவர் அபானி முகர்ஜி ஆவார். அவர் பெர்லினில் இருந்த இந்திய சுதந்தரக் குழுவின் பிரதிநிதியாக இரண்டாவது பொது வுடைமை அகிலத்தின் மாநாட்டுக்கு வந்திருந்தார்.

ஏற்கெனவே அமைக்கப்பட்டுச் செயல்பட்டுக் கொண் டிருந்த பல்வேறு பொதுவுடைமைக் குழுக்களை ஒன்றுபடுத்தச் செய்யப்பட்ட முதல் முயற்சி, கான்பூர் பொதுவுடைமைக் கட்சி மாநாடாகும். கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த முயற்சிக்குப் பின்னர்தான் தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் கட்சிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1933-34ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உருவாக்கப்பட்டு, பொதுவுடைமை அகிலத்துடன் அது இணைக்கப்பட்டது. 1943இல் முதல் மாநாடு நடத்தப்பட்டு, பொதுவுடைமை இயக்கத்தை வளர்த் தெடுப்பதற்குப் பொதுவுடைமையாளர்கள் ஆற்றிய பங்கினை நினைவுகூர்தல் வேண்டும்.

இந்திய நிலைமையும் பொதுவுடைமைக் குழுக்களும்

1920ஆம் ஆண்டு தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட போது இந்தியாவில் நிலைமை எப்படி இருந்தது?

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம் 1918 சூலையில் அறிவிக்கப்பட்டது. மாபெரும் உருசியப் புரட்சியை அடுத்து, உலக நாடுகளில், குறிப்பாகக் காலனி நாடுகளில் ஏற்பட்டுவந்த விரைவான மாறுதல் களைச் சமாளிக்க ஆங்கில முற்றாளுமை அரசு, சலுகைகள் சிலவற்றை அளித்தது. 1918இல் மாண்டேகு-செம்°போர்டு சீர்திருத்தத்துடன், ரௌலட் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் விசாரணை ஏதுமின்றி மக்களைக் கைது செய்யும் முறை இந்தியா வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரௌலட் சட்டத்திற்குப் பிறகு, தொழிற்சங்க இயக்கப் பணிகளும், உழவர்கள் இயக்கமும் வேகமாக வளரவே செய்தன. ரௌலட் சட்டத்தை எதிர்த்து, 1919 ஏப்ரல் 6ஆம் நாளில், நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டத்திற்கு (ஹர்த்தால்) காந்தியடிகள் அழைப்பு விடுத்தார். கடையடைப்புப் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது.

பஞ்சாபில், விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர்களை அரசு கைது செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமிர்தசரசின் வீதிகளில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது. முடிவில், நான்குபுறமும் மதிலால் சூழப்பட்டிருந்த ஜாலியன் வாலாபாக் மைதா னத்தில் விடுதலை இயக்கக் கூட்டம் நடைபெற்றது. பெருந்திரளாகக் கூடிய மக்கள், தலைவர்களின் உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆயுதப் படையுடன் உள்ளே நுழைந்த ஜெனரல் டயர், சிறிதும் மனிதப் பண்பு இல்லாதவனாக, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மக்களைச் சுட்டுத்தள்ள ஆணையிட்டான். மைதானமெங்கும் குண்டு மழை பொழிந்தது. ஆயிரம் பேர் குருதி வெள்ளத்தில் உயிரிழந்தனர்; இரண்டாயிரத்துக்கும் மேலானோர் படுகாயமடைந்தனர். ஜெனரல் டயர் நடத்திய இக் கொடுமையை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர். கண்டனக் கூட்டங்கள் நாடு முழுவதும் நடந்தன; போராட்டங்கள் வெடித்தன.

பஞ்சாபில் உழவர்கள் இயக்கம், ஐக்கிய மாகா ணங்களில் குத்தகை உழவர்களின் போராட்டம், 1921 ஆகஸ்ட்டில் மலபார் பகுதியில் நடைபெற்ற மாப்பிள் ளைமார்கள் போராட்டம் (இந்து நிலப்பிரபுக்களை எதிர்த்து, இந்து உழவர்களையும் திரட்டிக்கொண்டு மாப்பிள்ளைமார் என்னும் முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்த உழவர்கள் நடத்திய போராட்டம்) எனப் பல போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களை யெல்லாம் ஆங்கில ஏகாதிபத்திய அரசு கடுமையான அடக்குமுறைகளைப் பயன்படுத்தி அடக்கியது. உழவர்கள் பல்லாயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். பலர் தங்கள் உயிரையே பலியாகத் தந்தனர்.

இந்தக் காலகட்டத்தில் உருசியப் புரட்சி பற்றிய புதிய விவரங்கள் இந்திய மக்களுக்குக் கிடைக்கத் தொடங்கின. இவை உருசியப் புரட்சி பற்றிய ஓரளவு சரியான கணிப்பினை முற்போக்காளர்கள் அறிந்து கொள்ள உதவின.

1920ஆம் ஆண்டு காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமைப் போராட்டம் 1921இல் உச்சநிலையை அடைந்தது. நாட்டின் பல பகுதிகளில் வேல்சு இளவரசரின் வருகைக்கு எதிராகப் பெரும் பேரணிகள் நடத்தப்பட்டன. அதனால், பெரும்பாலான காங்கிர° தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப் பட்ட தலைவர்களை விடுவிக்காவிட்டால் வரிகொடா இயக்கம் தொடங்கப் போவதாகக் காந்தியடிகள் 1922 பிப்ரவரி 1ஆம் நாள் எச்சரித்தார். இந்த நிலையில் மக்கள் திரள் போராட்டங்கள் வலுப்பெற்றன. காவல் துறையின் அடக்குமுறைகள் அதிகமாயின. பிப்ரவரி 4இல், சௌரிசௌரா என்னுமிடத்தில் ஆத்திரம் கொண்ட மக்கள் காவல் நிலையத்துக்குத் தீ வைத்தனர். தீ வைப்புக் கலவரத்தில் 21 காவலர்கள் உயிரிழந்தனர். காவலர்களின் உயிர்ச்சேதத்தைக் காந்தியடிகள் விரும்ப வில்லை. கலவரத்தையும் உயிர்ச்சேதத்தையும் காரணம் காட்டி, காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத் தையே நிறுத்திவிட்டார். இதைக்கண்டதும் காங்கிர° அணிகளே திகைத்து நின்றன.

இந்தப் பின்னணியில்தான் இந்தியாவில் முதல் பொதுவுடைமைக் குழுக்கள் தோன்றின. இவை பம்பாய், கல்கத்தா, சென்னை, இலாகூர் என்று தொழில் நகரங்களில், 1921-1922ஆம் ஆண்டுகளில் உருவாயின.

மகாராஷ்டிர மாநிலத்தில் எஸ்.ஏ. டாங்கேயுடன், ஆர்.எஸ். நிம்கர், வி.டி. சத்தாயி போன்றோரும், பின்னர் எஸ்.வி. தேஷ்பாண்டே, ஜி.டி. மத்கோல்கர், வி.எச். குல்கர்னி, ஆர்.எல். பராட்கர், டி.பி. நவாரே, கே.என். ஜோக்லேகர், பர்வாடே ஆகியோரும், தாங்கள் அரசியல் ரீதியிலும், மெய்யியல் கோட்பாட்டு ரீதியிலும் லெனினை ஆதரிப்பவர்கள் என்று வெளிப்படையாக அறிவித்தனர். இக்குழுவின் முயற்சியால் எஸ்.ஏ. டாங்கேயை ஆசிரியராகக் கொண்டு, 1922இல், இருந்து “சோஷலிஸ்ட்” என்னும் ஆங்கில வார ஏடு பம்பாயி லிருந்து வெளிவரத் தொடங்கியது. பிறகு அது மாத இதழாக வெளிவந்தது. இந்த இதழின் மூலமாக எஸ்.வி. காட்டேயும், எஸ்.எச். மிரோஜ்கரும் பின்னாளில் பம்பாய்க் குழுவினருடன் இணைந்தனர்.

வங்காளத்தில், 1920இல் அரசியலைத் தமது முழு நேரப் பணியாகக் கொண்டு இயங்கிய முசாபர் அகமது, புரட்சிக் கவிஞர் குவாசி நஸ்ருல் இஸ்லா முடனும் மற்றும் சிலருடனும் இணைந்து “நவயுகம்” என்னும் மாலைச் செய்தி இதழைத் தொடங்கினர். தொழிலாளர் இயக்கம் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்பட்ட முசாபர் அகமது, ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்பட்ட சில நூல்களும், லெனின் எழுதிய சில நூல்களும், மார்க்சியம் பற்றிய சில நூல்களும், பிலிப்பிரைஸ் எழுதிய “ரஷ்யப் புரட்சி பற்றிய எனது நினைவுகள்” என்ற நூலும் கிடைத்துப் படித்ததன் மூலம், கட்சி அமைப்பைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டபோது, முசாபர் அகம்மதுடன் இணைந்து, அப்துல் ஹலீம், அப்துல் ரஸாக் கான் ஆகியோர் பொதுவுடைமைக் கட்சியினைக் கட்ட முன்வந்தனர்.

(தொடரும்...)

Pin It