‘பிறப்பால் உயர்ந்தவன் பார்ப்பான்’ என்ற நம்பிக்கை இந்துக்களிடம் அழுத்தமாகப் பதிந்துள்ளது. அதுபோலவே மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டு தான் மிகச் சிறந்த விளையாட்டாக இந்தியாவில் மதித்துப் போற்றப்படுகிறது. மட்டைப்பந்து விளையாட்டில் அய்யப்பாட்டின் நன்மை (Benefit of Doubt) மட்டையாளருக்கு (Batsman) வழங்கப்படுவது ஒரு நெறியாகப் பின்பற்றப்படுகிறது.

மட்டைப்பந்து விளையாட்டுப் போல, தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர்களை - படுகொலைகளைக் கருதி பீகார் உயர்நீதிமன்றம் 9-10-13 அன்று ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. 58 தலித்துகளைப் படுகொலை செய்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 26 சாதி இந்துக்களை - ‘அய்யப்பாட்டின் பயன்’ குற்றவாளிகளுக்குக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் விடுதலை செய் துள்ளது. இத்தீர்ப்பு, பீகாரில் மட்டுமின்றி இந்திய அளவில் தலித் மக்களிடையே பெரும் மனக்கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல சாதி ஒழிப்பையும், மனித உரிமையையும் முன்னிறுத்தும் சமூகச் செயற் பாட்டாளர்களும் இயக்கங்களும் இத்தீர்ப்பைக் கண்டித் துள்ளனர்.

பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் சோன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர் இலட்சுமண்பூர் பதே. பெருநிலவு டைமையாளர்களாகவும் மேல்சாதியினராகவும் உள்ள பூமிகார், இராசபுத்திர சாதி மக்களும், அவர்களின் நிலங்களில் கூலி வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களும் இவ்வூரில் வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடி வந்தனர். அதனால் தலித்துகளை மாவோயி°டுகளின் ஆதரவாளர்கள் என்று மேல்சாதியினர் கருதினர். தலித்துகளை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.

1997 திசம்பர் முதல் நாள் இரவில், பூமிகார் சாதியின் “ரன்வீர் சேனா”வின் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் துப்பாக்கிகளுடனும், வீச்சரிவாள்களுடனும் தலித்துகளின் குடியிருப்பைத் தாக்கினர். 27 பெண்கள் 16 சிறுவர்கள் உட்பட 58 தலித்துகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர். ஆனால் காவல்துறையும் அரசு நிர்வாகமும் இக்கொடிய படுகொலை குறித்த வழக்கைப் பதிவு செய்வதிலும், கொலைக்களத்தில் அழியாமல் இருந்த தடயங்களைத் திரட்டுவதிலும், கொலையை நேரில் கண்ட தலித்து களின் வாக்குமூலங்களைப் பெறுவதிலும், காவல்துறை அதிகாரிகள், மேல்சாதி மனப்பான்மை காரணமாகப் பொறுப்புடன் செயல்படவில்லை. 9.10.2013 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்தினரால் குற்றவாளிகள் விடு தலை செய்யப்பட்டதற்குப் போதிய சான்றாதாரங் களை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை எண்பிக்க முடியாமையே காரணம் ஆகும்.

கீழமை நீதிமன்றத்தில் இப்படுகொலை தொடர்பான வழக்கு, விசாரணைக்கே வரவிடாமல் மேல்சாதி அரசு நிர்வாகம் தடுத்துக் கொண்டிருந்தது. 45 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 91 பேர் சாட்சியம் அளிக்க முன்வந்தனர். சாட்சிகள் மிரட்டப்பட்டதால் 38 பேர் பின்வாங்கிவிட்டனர். பாட்னா உயர்நீதிமன்றம் இப்படுகொலை வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதனால் படுகொலை நடந்து 11 ஆண்டுகள் கழித்து 2008ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. 2010 ஏப்பிரல் 7ஆம் நாள் குற்றஞ்சாட்டப்பட்டவர் களில் 16 பேருக்கு மரண தண்டனையும் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பாட்னா உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த 26 பேரையும் விடுதலை செய்வதாக 9-10-13 அன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக பீகார் அரசு கூறி யுள்ளது. ஆனால் பதைக்கப் பதைக்க 58 தலித்துகளைக் கொன்ற கொடியவர்கள் 13 ஆண்டுகளுக்குப் பிறகும் தண்டிக்கப்படாமல் சுதந்தரமாக உலவிக் கொண்டிருக் கிறார்களே என்று தலித்துகள் பொருமுகின்றனர்.

2010இல் 16 பேருக்கு மரண தண்டனையும் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் கீழமை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட போது, தலித்துகள் ஓரளவு மன ஆறுதல் பெற்றனர். ஆனால் இப்போது 26 குற்றவாளிகளும் உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பதால், மீண்டும், பூமிகாரின் ரன்வீர் சேனா தாக்குதலைத் தொடுக்குமோ என்று, இலட்சுமண்பூர் தலித்துகள் அச்சத்தில் உறைந்து கிடக்கின்றனர்.

பீகாரில் பதானி தோலாவில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் 2012ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல் நகரிபசார் என்ற ஊரில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் 2013 ஏப்பிரல் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இப்போது இலட்சுமண் பூரில் 58 தலித்துகளைப் படுகொலை செய்தவர்கள் 9-10-13 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தலித் மக்கள் அரசு நிர்வாகத்தை, காவல்துறையை, நீதித்துறையை எப்படி நம்ப முடியும்? இந்தியாவில் நடப்பது சனநாயக ஆட்சியல்ல; சாதி ஆதிக்க ஆட்சியே என்று தலித்துகள் தொடுக்கும் வினா ஒவ்வொரு சாதி இந்துவின் மண்டையிலும் விழும் சம்மட்டியடியல்லவா?

Pin It