படித்துப் பாருங்களேன்...

இந்திய அரசியல் கட்சிகளிலேயே தொடர்ச்சியான அரசு அடக்குமுறைகளை எதிர்கொண்ட ஒரே கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். காலனிய ஆட்சியாளர்களும் காங்கிரஸ் ஆட்சியாளர்களும் எவ்வித வேறுபாடுகளுமின்றி சதி வழக்குகள், தடைசெய்யப்படல் என்ற இருவித அடக்குமுறைகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஏவினார்கள். இதன் தொடர் விளைவாக இக்கட்சியின் தலைவர்களும் ஊழியர்களும் சிறைவாசம், காவல்துறையின் கொடுமைகள் என்பனவற்றுக்கு ஆளானார்கள். உடல்சார் வன்முறைக்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் தூக்குத் தண்டனைக்கும் இலக்கு ஆனார்கள். இவற்றையெல்லாம் உள்ளடக்கியதே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு ஆகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியவுடனேயே `கான்பூர் சதி வழக்குÕ என்ற பெயரில் சதி வழக்கொன்றை 1926-இல் காலனிய அரசு புனைந்தது. பின்னர் `மீரத் சதி வழக்குÕ என்ற வழக்கையும் புனைந்தது. வெளிப்படையான முறையில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட அனுமதிப்பதும், இடையிடையில் அதன் செயல்பாட்டைத் தடைசெய்வதும் அரசுகளின் வழக்கமான நடைமுறை ஆயிற்று.

இக்காரணங்களினால் பாதுகாப்புக் கருதி கட்சியாலும், அவற்றைக் கைப்பற்றி சாட்சியமாக்கிய காவல்துறையாலும் கட்சியின் ஆவணங்கள் அழிக்கப்பட்டன. இரண்டாவது வகையில்தான் அதிக அழிவு நேர்ந்தது. இவ்வாறு அழிவுக்கு ஆளானதில் ஆங்கிலத்திலும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வெளியான இதழ்களும் குறுநூல்களும் அடங்கும்.

நாடு விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் கடந்து மூத்த தோழர் ஜி. அதிகாரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களைத் தொகுத்து, `இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சி : வரலாறும் ஆவணங்களும்” (Documents of the History of the Communist Party of India) என்ற பெயரில் சில தொகுதிகளை வெளியிட்டார். மற்றபடி கட்சியின் ஆவணங்களைச் சேகரிப்பதிலும் பாதுகாப்பதிலும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் கட்சியினால் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கு விதிவிலக்காக இக்குறையை நீக்க முயன்றோர், விரும்பியோர் பட்டியலில் பி.சி.ஜோஷி என்று சுருக்கமாக இயக்கத் தோழர்களால் அழைக்கப்படும் பூர்ண சந்தர ஜோஷி இடம்பெறுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இயக்க வரலாற்றை எழுதுவதில் இவர் பெரிதும் ஆர்வம் காட்டினார். மிகவும் அரிதான இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்று ஆவணங்களைச் சேகரித்தார்.

அவரது சேகரிப்புகள் 1970 டிசம்பரில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தினரால் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தனியான தொரு ஆவணக் காப்பகம் ஒன்று உருவாக வழி வகுத்தது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பள்ளியுடன் இணைந்த ஒன்றாக இது அமைந்தது. இதற்கென்று தனியான ஆலோசனைக் குழு இருந்தது. `நவீன கால வரலாற்று ஆவணக் காப்பகம் (Archives on Contemporary History) என்று பெயரிடப்பட்ட இவ்ஆவணக் காப்பகத்தின் இயக்குநராக அதன் தொடக்கத்திலிருந்து ஜோஷி இருந்தார். 1974-இல் கே.தாமோதரன் இவரை அடுத்து பொறுப்பேற்றார்.

 

இவ் ஆவணக் காப்பகத்தில் ஜோஷியின் தனிப்பட்ட சேகரிப்புகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் உலகின் பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் அரிதான பழைய பத்திரிகைகள், வெளியீடுகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட நூல்கள், குறுநூல்கள், கட்சி வரலாற்றுடன் தொடர்புடைய புகைப்படங்கள், கோப்புகள், கடிதங்கள் ஆகியவற்றின் நகல்கள் என்பனவற்றைச் சேகரித்து இதில் இடம்பெறச் செய்தார். இந்திய இடதுசாரி இயக்கம் தொடர்பான நூல்களைக் கொண்ட சிறிய நூலகம் ஒன்றும் இதில் உண்டு. இச்சிறப்பினால் இந்திய மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து இவற்றைப் பயன்படுத்திச் செல்கிறார்கள்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள செய்திகளுடன் மேற்கூறிய செய்திகளையும் இணைத்துப் பார்த்தால் பி.சி.ஜோஷியின் பங்களிப்பு எவ்வளவு பிரமாண்டமானது என்பது தெரிய வரும்.

ஜோஷி ஓர் அறிஞர். மற்றொரு பக்கம் ஓர் இயக்கச் செயல்பாட்டாளர். இந்த இரண்டின் தாக்கத்திற்கு உட்பட்ட அல்லது இரண்டையும் உள்ளடக்கிய பொதுவுடமைப் போராளி . அவரது இயல்புகளை, `போற்றி போற்றிÕ என்றோ, `பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு` என்றோ புகழாமல் அறிவார்ந்த அறிமுகம் செய்யும் நூலாக இத்தொகுப்பு நூல் அமைந்துள்ளது.

பதிப்பாசிரியர்

இந்நூலின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரான கார்க்கி சக்ரவர்த்தி தில்லிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மைத்ரேயி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அத்துடன் சமூகச் செயல்பாட்டாளராகவும் விளங்கியவர். பி.சி.ஜோஷியின் வாழ்க்கை வரலாற்றை 2007-இல் ஆங்கில நூலாக வெளியிட்டவர். Gandhi’s Challenge to Communalism(1987), Coming out of Partition : Refugee Women of Bengal(2005)என்பன இவரது முக்கிய இரு நூல்கள் ஆகும். மற்றொரு பதிப்பாசிரியரான ராஜ ரிஷிதாஸ் குப்தா ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் பணியாற்றுபவர். வங்காள கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்க கால அரசியல் பண்பாட்டு வரலாறு குறித்து ஆய்வு செய்தவர்.

ஜோஷியின் கட்டுரைகள் எழுதப்பட்ட மற்றும் வெளியான காலத்திற்கும் இப்போதைய வாசிப்புக் காலத்திற்கும் இடையே ஓர் இடைவெளி உள்ளது. இவ் இடைவெளியைக் கட்டுரையின் தொடக்கத்தில் எழுதியுள்ள சுருக்கமான குறிப்புகளாலும் ஆங்காங்கே எழுதியுள்ள அடிக்குறிப்புகளாலும் பதிப்பாசிரியர் கார்க்கி சக்ரவர்த்தி இட்டு நிரப்பியுள்ளார். இவ்வகையில் இவரை சமகால வரலாற்று எழுத்துப் பதிப்புக்கான வழிகாட்டியாகக் கொள்ளலாம்.

நூலின் அமைப்பு

மக்களின் போராளி என்ற இந்நூல் 44 கட்டுரைகள் அடங்கியது. பி.சி.ஜோஷி பெயரிலான ஆவணக் காப்பகத்தின் தற்போதைய தலைவரான ஜானகி நாயர் சுருக்கமான, ஆனால் அடிப்படைச் செய்திகள் அடங்கிய முன்னுரையை எழுதியுள்ளார். நூலின் முன்னுரையை கார்க்கி சக்ரவர்த்தியும் ராஜ ரிஷிதாஸ் குப்தாவும் இணைந்து எழுதியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைவர்களில் ஒருவர் பி.சி.ஜோஷி என்று குறிப்பிட்டு விட்டு, இயக்கத்திலுள்ள பலருக்கு இவரது முக்கியத்துவம் மறந்துவிட்டது என்கின்றனர். அரசியல் காரணங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்ட ஒன்றாகவே நினைவுகள் உள்ளன என்பது இவர்களது கருத்தாகும். இன்றைக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஜோஷியின் காலத்திலேயே இருந்தன என்பது இவர்களது கருத்தாக உள்ளது.

1920-இல் மீரத் சதி வழக்கிலிருந்து ஜோஷியின் அரசியல் பயணம் தொடங்கியது. அப்போது தொடங்கி அவரது ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், கட்சி இதழ்களிலும், கட்சி சாரா இதழ்களிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதினார். விவாதத்திற்கான குறிப்புகளை கட்சியிடம் வழங்கினார். ஏராளமான கருத்தரங்குகளிலும், கூட்டங்களிலும் மாநாடுகளிலும் உரையாற்றினார். எனவே அவரது மிகுதியான எழுத்துகளிலிருந்து சிலவற்றைத் தேர்வு செய்து தொகுப்பது என்பது சவாலான பணி. கட்சி இதழ்களில் அவர் எழுதிய தலையங்கங்களும் கையெழுத்திடப்படாத அரசியல் குறிப்புகளும் தொகுப்பில் இடம்பெறவில்லை. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.

நூலின் உள்ளடக்கம்

இந்நூல் நான்கு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதற் பகுதி தன் கட்சி வாழ்க்கை குறித்த பி.சி.ஜோஷியின் கட்டுரையைக் கொண்டுள்ளது. இரண்டாவது பகுதி 1930-இல் தொடங்கி 1940 வரையான ஜோஷியின் எழுத்துகள் அடங்கியது. பிற்காலத்தில் கட்சி இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் குறுநூல்களும் இடம்பெற்றுள்ளன. கட்சியின் தொடக்க காலத்திலும் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த போதும் இவற்றை எழுதியுள்ளார். மூன்றாவது பகுதி கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர், கட்சியின் உறுப்பினராக மட்டும் தொடர்ந்து கொண்டு, கட்சி ஏடுகளிலும் கட்சி சாரா ஏடுகளிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.

நான்காவது பகுதியில் புகழ்பெற்ற அறிஞர்கள் சிலர் பி.சி.ஜோஷியின் படைப்புகள் குறித்தும், அது உருவான காலச்சுழல் குறித்தும், அவரது இயக்கப் பணிகள் குறித்தும் எழுதிய மதிப்பீட்டுத் தன்மையுடன் கூடிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றின் சுருக்கமான அறிமுகமே இக்கட்டுரை.

ஜோஷியின் கல்வி

1907 ஏப்ரல் 14-ஆம் நாள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அல்மூர் என்னும் ஊரில் பிறந்தவர் பி.சி. ஜோஷி. 1920-இல் தனது 13-ஆவது வயதில் மீரட் பதியில் உள்ள ஹபூர் பகுதியின் அரசு உயர்நிலையில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தேர்ச்சி பெற்றார். 1922 - இல் தன் சொந்த ஊரில் உள்ள அரசு கல்லூரியில் இண்டியர் மீடியட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இத்தேர்வில் சமஸ்கிருதத்தில் தங்கப் பதக்கம் பெற்றார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களில், 1924-இல் இரண்டாம் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1928-ஆம் ஆண்டில் வரலாறையும் அரசியல் சிந்தனையையும் முக்கிய பாடமாகக் கொண்டு முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றார். தராசந்த், ஜெம்மி பிரசாத், தான் பிரசாத் திரிபாதி, ஈஸ்வர் பிரசாத் ஆகிய சிறந்த ஆசிரியர்களிடம் பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.

பிரெஞ்சு புரட்சி குறித்து மார்க்சிய அணுகுமுறையில் ஆய்வுக் கட்டுரை எழுதியமைக்காக ஜகபத் அகமதுகான் என்ற ஆசிரியர் நேர்முகத் தேர்வில் சுழியம் (சைபர்) மதிப்பெண் வழங்கினர். இதனால் இரண்டு மதிப்பெண் குறைந்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை.

20 மார்ச் 1920-இல் மீரத் சதி வழக்கு தொடர்பாகக் கைது ஆனார். நைனிடால் சிறையில் இருந்தவாறே 1929-இல் சட்டப் படிப்புத் தேர்வை எழுதினார்.

அரசியல் வாழ்க்கை

கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களுக்கு ஆட்பட்டிருந்த மாணவர் என்ற முறையில் இளைஞர் குழுக்களை பல்வேறு பல்கலைக்கழகங்களில் உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் தொழிலாளி விவசாயிகள் கட்சியுடன் காங்கிரசில் இருந்த இடதுசாரி அனுதாபிகளையும் உள்ளூரிலிருந்த கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்ட புரட்சிக் குழுக்களையும் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மீரத் சதி வழக்கில் விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்தபோது மார்க்சிய - லெனினிய சித்தாந்த நூல்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. பிற்காலத்தில் அவர் கட்சி வாழ்க்கைக்கு உதவிய சித்தாந்தக் கல்வியை வழங்கும் பள்ளியாக சிறைவாசம் அவருக்கு அமைந்தது.

மீரத் சதி வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டோருக்கான வழக்கறிஞர் குழுவின் தலைவராகப் பண்டிதர் மோதிலால் நேரு விளங்கினார். வி.சி. சுக்லா, திவான் ஜமன்லால் ஆகியோர் கீழ்நிலை நீதிமன்றங்களில் இவர்களுக்காக வாதாடினர். உயர்நீதிமன்றத்தில் கே.என். கட்ஜு, ஜியாம் குமரி நேரு ஆகியோர் வாதாடினர்.

சட்ட அடிப்படையிலான வாதங்களை இவர்கள் முன்வைத்தனர். அரசியல் சார்ந்த வாதங்களைக் கைது செய்யப்பட்ட தோழர்கள் முன்வைத்தனர். அரசியல், தொழிற்சங்கம், விவசாயிகள் தொடர்புடைய நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டியது இருந்தது. இவ்வழக்கறிஞர்கள் சிறந்த சட்ட நிபுணர்கள் என்றாலும், மேற்கூறிய அரசியல் தொடர்புடைய செய்திகளை முழுமையாக அறியாதவர்களாக இருந்தனர். இவ் இடைவெளியை இட்டு நிரப்பும் வகையில் சட்ட அடிப்படையிலான வாதங்களுடன் அரசியல் அடிப்படையிலான வாதங்களையும் முன்வைக்கும் வகையில் அரசியல் கருத்துகளையும் வழக்கறிஞர்களுக்கு எடுத்துரைக்கும் அவசியம் குற்றம் சாட்டப்பட்ட தோழர்களுக்கு இருந்தது.

அதற்கடுத்ததாகப் பத்திரிகையாளர்களுக்கும் தம் தரப்புநிலையை விளக்கும் பொறுப்பும் இவர்களுக்கு இருந்தது. ஏனெனில் அவர்கள் சோம்பேறிகளாகவும் அறிவிலிகளாகவும் இருந்தனர். வழக்குத் தொடர்பான வாதங்களின் நகல்கள் தோழர்களால் இவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் மீரத் சதி வழக்கு அரசியல் அடிப்படையில் பிரபலம் ஆயிற்று. இவ்விரு பணிகளிலும் ஜோஷியின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாய் இருந்தது.

1933-இல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னர், உத்தரபிரதேசத்தின் தொழில் நகரான கான்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பாளராகச் செயல்பட்டார். பல்கலைக்கழகங்களில் மாணவர் கம்யூனிஸ்ட் குழுக்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டார். அக்குழுக்களில் உருவானவர்களே, பி. ராஜேஸ்வர்ராவ் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளராகப் பணியாற்றியவர்), நாகிரெட்டி (தீவிர இடதுசாரி தலைவர்களில் ஒருவர்), கே. தாமோதரன் (இடதுசாரி சிந்தனையாளர்), அர்ஜுன் அரோரா ஆகியோர் ஆவர்.

1934 -இல் நிகழ்ந்த அகில இந்தியப் பஞ்சாலைத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக கான்பூர் முயிர் ஆலையில் வேலைநிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தியமைக்காக இவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் சலவைத் தொழிலாளியாகவும், தோட்டக்காராகவும் பணியாற்றியதால் அதிக அளவில் ஆறு மாதத் தண்டனைக் கழிவு பெற்று 1935 இறுதியில் விடுதலையானார்.

இவர் சிறையில் இருக்கும் போதே 1934 இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. இதனால் விடுதலையான உடனேயே ஜோஷி தலைமறைவாக நேரிட்டது. கட்சியின் மத்திய செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இது தன் வாழ்வில் மிக முன்னதாகவே கிடைத்த பொறுப்பு என்று ஜோஷி கூறுகிறார்.

1936-இல் தொடங்கி 1948 வரை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் ஜோஷி தொடர்ந்தார். நீண்ட காலம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தமையால், கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை கட்சியைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. சிறு இடதுசாரிக் குழுக்களாக இருந்த அமைப்பை, மையப்படுத்தப்பட்ட அகில இந்தியக் கட்சியாக வளர்த்தெடுத்தார்.

மத்திய கட்சியமைப்பின் பத்திரிகைகளை அவர் பதிப்பித்தார். ஆண்டுக்கு ஒரு முறைக்கும் மேலாக மாநிலங்களுக்குப் பயணம் செய்தார். அம்மாநிலங்களில் பணியாற்றும் தோழர்களுக்குப் பயிற்சி அளித்தார். இக்காலத்தில் நிகழ்ந்த விவசாயப் போராட்டங்களின் ஆலோசகராகவும் பத்திரிகைத் தொடர்பாளராகவும் பணியாற்றினார். உயர் கல்வி பரவலாகாத அக்காலத்தில் உயரிய கல்விப் பட்டங்களைப் பெற்ற ஜோஷி தன் கல்வித் தகுதியை விளம்பரப்படுத்திக் கொண்டவர் அல்ல.

அவரது எந்தச் செயல்பாட்டிலும் வெளிப்படுத்திக் கொண்டதுமில்லை. 1945, மெட்ரோகோன் (தற்போது பங்களா தேசத்தில் உள்ளது) என்னுமிடத்தில் நிகழ்ந்த அகில இந்திய விவசாயி சங்க மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். அவரைக் குறித்து வங்காள விவசாயி ஒருவரின் மதிப்பீடு இவ்வாறு இருந்தது:

ஜோஷி மிகப் பெரிய மனிதர். நாங்கள் அறிந்தவற்றையெல்லாம் பேச அவரால் எப்படி முடிகிறது. விவசாயிகளான எங்களால், புரிந்துகொள்ள முடியாத உயரிய அரசியலை அவர் பேசுவார் என்று எண்ணினேன். அவர் ஒரு வங்காளி அல்லர். ஆனால் எங்கள் கிராமங்களில் நடப்பவற்றையெல்லாம் அவர் எவ்வாறு அறிந்துள்ளார் என்பதைக் கூறுங்களேன்...? நாடோடிகள் குறித்து அவர் கூறிய ஒவ்வொரு சொற்களும் உண்மையானவை.

பல்வேறு சித்தாந்தச் சார்புடைய இந்திய தேசியத் தலைவர்களுடன் அவருக்கு நேரடியான தொடர்பு இருந்தது. மகாத்மா காந்தி, சர்தார் படேல், மவுலனா அபுல் கலாம் ஆசாத், ரபி அகமத் சித்துவாய், ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களைத் தவிர காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களான ஜெயபிரகாசு நாராயணன், ஆச்சாரியர் நாரேந்திர தேவ், எம். ஆர். மசானி, காங்கிரஸ் சோசலிஸ்ட்களாக இருந்து பின்னர் கம்யூனிஸ்ட்களான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி போன்றோருடனும் நெருக்கமான அரசியல் உறவும் நட்புறவும் அவருக்கு இருந்தது.

இருண்ட காலம்

1947-இல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், சுதந்திர அரசானது பெரும் முதலாளிகளுடனும் நிலவுடமையாளர்களுடனும் நெருக்கமான உறவு கொண்ட அரசாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பெற்ற சுதந்திரம் யாருக்காக என்ற வினா எழுந்தது. `போலி சுதந்திரம்Õ என்ற சொல்லால் குறிப்பிடும் நிலையும் உருவானது.

இத்தகைய சூழலில் பிப்ரவரி 1948 கல்கத்தாவில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு, `மக்கள் யுத்தம்` என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்ட வடிவை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றியது (இம்முடிவு தவறானது என்பதை அமிர்தசரசில் நிகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாடு ஒப்புக் கொண்டுள்ளது). இத்தீர்மானத்துடன் உடன்படாதோரும் இருந்தனர். பொதுச்செயலாளராக இருந்த ஜோஷியும் உடன்படவில்லை. இதனால் அவர் முதலில் இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கட்சியின் முடிவினை ஏற்றுக்கொண்டு அமைதிகாத்தார்.

மீண்டும் கட்சியில்

1950-இல் அவர் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். உத்திரபிரதேசம் சென்று பணியாற்றத் தொடங்கினார். கட்சியின் முக்கிய அமைப்புகளுக்கு அவரைத் தேர்வு செய்தனர். `இந்தியா டூடே’ என்ற பெயரிலான ஆங்கில மாத இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். கட்சியின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலுக்கு மாறாக, அதில் எதுவும் எழுதவில்லை என்றாலும், அவருக்கு உடன்பாடான கருத்துகளையும், அயல்நாட்டு உறவு தொடர்பான அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளையும், இந்தியப் பொருளாதாரச் சிக்கல்களையும் எழுதினார்.

கட்சிக்குள் நிலவும் முரண்பட்ட கருத்துகளைக் கட்சி உறுப்பினர்களும் அனுதாபிகளும் புரிந்துகொண்டு சுயமான கருத்துகளை உருவாக்கிக் கொள்ள இது உதவும் என நம்பினார். பதினொரு மாத அளவில் இவ் இதழை நிறுத்தும்படி, கட்சி கட்டளை இட்டது. அவர் மீண்டும் கான்பூருக்கு இடம் பெயர்ந்தார். தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆனார்.

1943-46 அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரசில் (AITUC) சர்தார் வல்லபாய் படேல் பிளவை ஏற்படுத்தினார். இச்சூழலில் கான்பூர் பஞ்சாலைத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்தார். இதன் அடுத்த கட்டமாக எண்பத்து நான்கு பஞ்சாலைத் தொழிற்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடந்தது. வேலைநிறுத்தக் குழுவின் ரகசிய மையத்தை முறைப்படுத்தும் பொருட்டு ஜோஷி தலைமறைவு ஆனார். மற்றொரு பக்கம் அர்ஜுன் அரோராவும் எஸ்.எம். பேனர்ஜியும் வெளிப்படையாகச் செயல்பட்டனர். இவ்விரு தரப்பும் நல்ல ஒத்துழைப்புடன் இருந்தனர்.

நாள்தோறும் ஊர்வலங்கள் நடத்தி தொழிலாளர்களின் உறுதிப்பாடும் ஒற்றுமையும் வலுவடையும்படி தொழிற்சங்கத் தலைவர்கள் பார்த்துக்கொண்டனர். பத்திரிகைகளுக்குச் செய்தி தரும் பொறுப்பை ஜோஷி செய்துவந்தார். ஆலை முதலாளிகளும் மாநில அரசும் வேலைநிறுத்தம் தொடர்பாக எடுத்துள்ள முடிவுகளை விமர்சிக்கும் கட்டுரைகளை `நேசனல் ஹெரல்டுÕ நாளேட்டில் எழுதி வந்தார். மத்திய அரசின் தலையீட்டால், முழுமையாக இல்லாவிட்டாலும் பெரும்பாலான கோரிக்கைகளில் தொழிலாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதன் பின்னர் பாலக்காடு, மும்பை, பாட்னா ஆகிய நகரங்களில் நிகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடுகள் குறித்தும் உட்கட்சிப் போராட்டங்கள் குறித்தும் வெளிப்படையாக எழுதியுள்ளார். இவற்றையெல்லாம் நுணுக்கமாகப் படித்தால் அரசியல் நிலைப்பாடு தொடர்பான கடுமையான கருத்து வேறுபாடுகள், 1964-இல் கட்சி பிளவுபடுவதற்கு முன்பே இருந்துள்ளது தெரியவரும். அத்துடன் தலைவர்கள் என்போர் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட இடத்தில் வைக்கப்படவில்லை என்பதும் புலனாகும். இதனால்தான் வாரிசு அரசியல் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் இடம்பெறவில்லை.

பி.சி.ஜோஷி, நிருபன் சக்கரவர்த்தி, பி. ராமமூர்த்தி, சுந்தரையா எனப் பல்வேறு உயர்மட்டத் தலைவர்கள் சில கட்சி பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஏ.டாங்கே, ஏ.ஆர். கவுரி, வி.எஸ். ராகவன் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். டென்னிசன் என்ற ஆங்கில கவிஞர் நீரோடை என்ற தன் கவிதையில்

மனிதர்கள் வரலாம் மனிதர்கள் போகலாம்-ஆனால்

நான் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பேன்

என்று நீரோடையின் கூற்றாகக் குறிப்பிட்டிருப்பார். அது போல் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைவர்கள் வரலாம், போகலாம், கட்சி இடைவிடாது செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்பது, ஜோஷியின் அர்ப்பணிப்பும் உறுதியும் மிக்க கட்சி வாழ்க்கை உணர்த்தும் பாடம் ஆகும்.

ஜோஷியின் திருமணம் குறித்தும் ஒரு செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆங்கில ஆட்சியின் போது சிட்டகாங் என்ற ஊரில் ஆயுதக் கிடங்கு இருந்தது. பயங்கரவாதப் புரட்சியாளர் குழுவொன்று சிட்டகாங் ஆயுதக் கிடங்கைத் தாக்கி அதிலிருந்த ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றிச் சென்றது. இத்துணிச்சலான செயல் ஆங்கில ஆட்சியை நிலைகுலையச் செய்தது. இதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். இவர்களுள் கல்பனாதத் என்ற இளம் பெண்ணும் உண்டு. இப்பெண்ணைத்தான் பின்னர் ஜோஷி திருமணம் செய்துகொண்டார். கல்பனாதத் கல்பனா ஜோஷி ஆனார். (கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் வீடுகளில் கல்பனா என்ற பெயரைக் கொண்ட பெண் குழந்தைகள் உண்டு).

ஜோஷியின் படைப்புகள்

ஜோஷியின் படைப்புகள் 1930களிலிருந்து 1940வரையான காலத்தைச் சேர்ந்தவை, 1950லிருந்து 1976 வரையான காலத்தைச் சேர்ந்தவை என கால அடிப்படையில் இரண்டாகப் பகுத்து, மொத்தம் 33 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெறும் கட்டுரைகள் மட்டுமல்ல; ஜோஷி என்ற இயக்கவாதியின் எழுத்தாற்றல் வெளிப்பாடு மட்டுமல்ல; அவை எழுதப்பட்ட காலத்திய அரசியல், சமூகம், பண்பாடு குறித்த ஆவணங்கள் என்ற சிறப்பான தகுதிப்பாடும் உடையன. சான்றாகச் சில கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.

முதல் பகுப்பில் (1930-40) பத்துக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் முதல் கட்டுரை, மீரத் சதி வழக்கில் ஒரு குற்றவாளியான ஜோஷி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் எழுத்து வடிவம் ஆகும். மிகவும் சுருக்கமான, ஆனால் அழுத்தமும் துணிச்சலும் கொண்ட வாக்குமூலம் என்பதை இதைப் படிப்பவர் உணர்வர்.

ஏகாதிபத்தியத்தின் கீழ் கம்யூனிசம் என்பது ஒரு கருத்து அல்ல. அது ஓர் அபாயமாக அறியப்படும்.

இவ்வழக்கில் நாங்கள் விசாரணைக்கு உட்பட வில்லை. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்தான் இந்தியப் பொதுமக்கள் என்ற நீதிபதிகளின் முன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

என்பன போன்ற நறுக்குத் தெறிக்கும் தொடர்கள் இந்த வாக்குமூலத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. முதல் தொகுதியில் உள்ள ஒரு உருக்கமான வரலாற்று ஆவணம் ``மக்கள் யுத்தம்” என்ற கட்சியின் ஆங்கில ஏட்டில் 1943 ஏப்ரல் 11-ஆம் தேதி எழுதிய கட்டுரை ஆகும். இக்கட்டுரைக்குப் பின் ஒரு வரலாற்றுச் செய்தி உள்ளது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள்ளிலிருந்து செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட்கள், விவசாயப் போராட்டமொன்றை கேரளத்தின் மலபார் பகுதியில் நடத்தினர்.

கையூர் என்ற கிராமத்தில் நடந்த காவல்துறையின் தாக்குதலை எதிர்த்து 1941 மார்ச் 28-ஆம் தேதி அன்று விவசாய இயக்கத்தினர் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். காவலர் ஒருவர் குடியானவர் பெண் ஒருத்தியிடம் முறைகேடாக நடந்து கொண்டதை அடுத்து, நிகழ்ந்த மோதலில் காவலர் இறந்துபோனார். இது தொடர்பாக 60 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களுள் குன்னம்பு, சிறுகண்டன், அப்பு, அபுபக்கர் என்ற நான்கு இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, நிறைவேற்றவும் பட்டது.

இத்தோழர்களின் தியாகத்தால் ஈர்க்கப்பட்ட ஜோஷி ‘மக்கள் யுத்தம்Õ இதழில் (1943 ஏப்ரல் 13) எழுதிய கட்டுரை ஒரு முக்கிய வரலாற்று ஆவணம் ஆகும். கண்ணனூர் சிறையில் சென்று இந்நால்வரையும் அவர் சந்தித்ததையும் அவர்களுடன் கை குலுக்கியதையும் அவர்கள் அவருக்கு `லால் சலாம்Õ கூறியதையும் மிக உருக்கமான முறையில் ஜோஷி பதிவு செய்துள்ளதைப் படிக்கும் போது கண்களில் நீர் கசியும். தூக்கிலிடப்பட்ட அந்நால்வரின் உடலையும் தர மறுத்த காலனிய அரசின் கொடூரத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான எதிரிகளின் அவதூறுகள் தொடர்பாக, காந்திக்கும் பி.சி.ஜோஷிக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து 1945-இல் குறுநூலாக வந்துள்ளது. (தமிழிலும் இந்நூல் `காந்தி பி.சி.ஜோஷி கடிதப் போக்குவரத்து என்ற தலைப்பில் என்.சி.பி.எச். வெளியீடாக வந்துள்ளது). இந்நூலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது உலக யுத்தத்தைக் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தொடர்பான ஜோஷியின் தத்துவார்த்த அடிப்படையிலான வாதங்கள் இச்சிறுநூலில் அழுத்தமாக இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸ் செயற்குழுவுக்கு ஜோஷி எழுதிய கடிதங்கள், 1946-இல் நவகாளியில் நடந்த இந்து-முசுலிம் கலவரம், இக்கலவரத்தின் பின்னால் இருந்த ஆங்கில அரசு, இக்கலவரத்தில் முசுலிம் லீக் கட்சியின் பங்களிப்பு என்பன குறித்து `பிப்பிள்ஸ் ஏஜ் இதழில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

1947-இல் டில்லியில் நடந்த மதக் கலவரம், இக்கலவரத்தில் அகாலிதளம், ஆர்.எஸ்.எஸ். போன்றவை வகித்த பங்கு குறித்தும் எழுதியுள்ளார். இக்கட்டுரையில், மாற்றுச் சமூகத்தைத் தாக்கப் பயன்படுத்திய குண்டர்கள் பின்னர் மதவேறுபாடின்றி அனைவரையும் தாக்கத் தொடங்கியதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இரண்டாவது பகுப்பில் 1950 முதல் 1970 வரையிலான காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழ்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி சாரா இதழ்களிலும் அவர் எழுதிய 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இவற்றுள் `ஆயுதந் தாங்கிய கெரில்லா யுத்தத்தின் விளைவுகள்Õ என்ற கட்டுரை முக்கியமான ஒன்று ஆகும். இது `மக்கள் கொள்கையை நோக்கிÕ என்ற தலைப்பில் 1950-இல் அலகாபாத்தில் அவர் வெளியிட்ட 105 பக்க நூலின் ஒரு பகுதி ஆகும்.

`சீனப் புரட்சியிலிருந்து கற்றுக் கொள்வோம்Õ என்ற கட்டுரை நடைமுறை சார்ந்த சித்தாந்தத்தின் மீதான அவரது விருப்பத்தை எடுத்துரைக்கிறது. 1961 பிப்ரவரியில் ஜபல்பூரில் எழுந்த மதக் கலவரங்கள் குறித்து `ஜபல்பூர் பாடங்கள்Õ என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் `நியூ ஏஜ்Õ என்ற ஆங்கில ஏட்டில் (1961 மார்ச் 12) அவர் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

இக்கட்டுரையில் தற்போதைய பா.ஜ.க.வின் முந்தைய வடிவமான ஜனசங்கின் பங்கு குறித்து விரிவாக எழுதியுள்ளார். காவல்துறைக்கும் ஜனசங்கத்திற்கும் இடையில் நிலவிய நெருக்கமான உறவை இக்கட்டுரையில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சேத் கோவிந்த தாஸ் (தமது இந்தி வெறியால் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவர்) என்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரின் வகுப்புவாதச் சார்பை அவர் விமர்சனம் செய்துள்ளதுடன் காங்கிரஸ் கட்சிக்கும் இந்து வகுப்புவாதத்திற்கும் இடையே நிலவிய நட்புறவையும் அம்பலப்படுத்தியுள்ளார் (சசி தரூரின் முன்னோடிகள் அப்போதே காங்கிரசில் இருந்துள்ளனர் என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது).

காந்தி குறித்தும், நேரு குறித்தும் அவர் எழுதியுள்ள மதிப்பீட்டு அடிப்படையிலான கட்டுரைகள் இன்றைய அரசியல் சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.

1965 -இல் நிகழ்ந்த இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோரில் ஒரு பகுதியினர் சீன ஆதரவாளர்கள் என்று முத்திரையிடப்பட்டு, இந்தியப் பாதுகாப்புச் சட்டம் (DIR) என்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். இச்செயல் மக்கள் ஆட்சிக்கு ஆபத்தான ஒன்று என்று கருதி, அவர் எழுதிய கட்டுரை ஒன்றும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. 1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏற்பட்ட மறுவருடம் இதை எழுதியுள்ளார். இரு கட்சியினரும் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் கடுமையாக முரண்பட்டு நின்ற சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த அவர் இக்கட்டுரை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஜனி பாமிதத் குறித்த கட்டுரை ஒரு உயரிய அறிவாளியான பாமிதத்தின் கம்யூனிஸ்ட் உறவு குறித்து பல புதிய செய்திகளை வழங்குகிறது. `இன்றைய இந்தியாÕ என்ற தலைப்பில் அவர் எழுதிய வரலாற்று நூல் இந்திய அறிவாளிகளிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடன் தாம் நடத்திய சந்திப்புகள் குறித்தும் இக்கட்டுரையில் எழுதியுள்ளார். ரஜனி பாமிதத்திடம் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி நன்றியுடன் நடந்துகொள்ளவில்லை என்பது ஜோஷியின் ஆதங்கமாய் உள்ளது. இதை வெளிப்படையாகவே கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

பண்பாட்டுத் துறை

இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்களுடன் ஜோஷி கொண்டிருந்த நட்புறவை முன்னர் கண்டோம். மற்றொரு பக்கம் அரசியலுக்கு அப்பால் கலை இலக்கியத் துறையிலும் அவருக்கு நண்பர்கள் பலர் உண்டு. எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான பிரபல இந்தி திரைப்பட நடிகர் பால்ராஜ் சாகானி, இந்தி மொழிக் கவிஞர் புனித்திரானந்தன் பந்த், வங்க மொழி கவிஞர் பிஷ்ணு தேய், வங்க மொழி எழுத்தாளர் கோபால் ஹால்டர், வரலாற்று அறிஞர் சுசோபன் சர்க்கார், புள்ளியியல் அறிஞர் மகல்நோபிஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஜே.டி. பெர்னால், பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி ஜுலி க்யூரி ஆகியோருடன் அவருக்கு நெருக்கமான நட்புறவு இருந்தது.

இந்திய மக்கள் நாடகக் குழு (IPTA) என்ற கலைக்குழுவின் உருவாக்கத்தில் அவருக்கு முக்கிய பங்குண்டு. இவ் உண்மையை சுமங்கள தமோதரனும் டிரினா பேணர்ஜியும். நாட்டார் வழக்காறுகள் மீது குறிப்பாக நாட்டார் பாடல்களைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. 1857 சிப்பாய் எழுச்சியின் நூற்றாண்டு விழா 1957-இல் நடைபெற்றது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்டம் குறித்த வாய்மொழிப் பாடல்களை இந்திய மொழிகள் பலவற்றிலிருந்தும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் (இவ்வகையில்தான் தமிழ்நாட்டில் பேராசிரியர் நா.வானமாமலைக்கு இத்துறையில் ஈடுபட ஆர்வம் ஊட்டியுள்ளார்.)

இத்தொகுப்பில் `நாட்டார் பாடல்களில் குடியானவர்" என்ற தலைப்பில் 1954-இல் அவர் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. `மக்கள் கலையிலும் மக்கள் யுத்தத்திலும் மக்கள்" என்ற தலைப்பில் ராஜரிஷி தாஸ் குப்தா எழுதியுள்ள கட்டுரை வேறுபாடான, சுவையான கட்டுரை. கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இதழ்களின் ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

டிசம்பர் 1943-இல் பி.டி. ரணதிவேக்கு ஜோஷி எழுதிய கடிதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகைகள் குறித்து எழுதியுள்ள பகுதியே டிரினா பேணர்ஜி மேற்கோளாகக் காட்டியுள்ளார் (இன்றும்கூட இப்பகுதி உயிரோட்டமாகத்தான் உள்ளது). இறுதிக் கட்டுரை தில்லியில் உள்ள மக்கள் தொடர்பு நிறுவனத்தின் தலைவரும் பொருளாதார அறிஞருமான பி.சி.ஜோஷி இந்தியில் எழுதிய கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகும். ஜோஷியின் வரலாற்றை ஒரு சோக வரலாறாகக் காணும் அவர், அது தொடர்பாகப் பல செய்திகளைக் கூறிச் செல்கிறார். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து, பி.சி.ஜோஷி நீக்கப்பட்ட பின் நடந்த நிகழ்வுகளான அவர் குறிப்பிட்டுள்ள செய்திகள் வருமாறு :

ஜோஷியின் மனைவி கல்பனாவை, தன் கணவருடனான உறவைத் துண்டித்துக் கொள்ளும்படி வற்புறுத்தினர்.

அவருக்கு இருப்பிடம் வழங்கக் கூடாது, உதவி புரியக் கூடாது என்று கட்சி உறுப்பினர்களிடம் கூறினார்கள். அப்படிச் செய்தால் கட்சி விரோதச் செயலாகக் கருதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இது சோவியத் ஒன்றியத்தில் தன் எதிரிகளை ஸ்டாலின் ஒழித்துக் கட்டியதை நினைவூட்டுவதாக இருந்தது.

இக்கட்டுரையாளரான ஜோஷி மாணவர் மாநாட்டிற்காகக் கல்கத்தா சென்றார். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவரிடம் இவரது பெயரைக் கூறி அறிமுகம் செய்தனர். அத்தலைவரின் எதிர்வினை இவ்வாறு இருந்தது: கட்சியால் மிகவும் வெறுக்கப்படும் பெயர் இது. இப்பெயரை நீ ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது?

அவருடைய கணிப்பின்படி அவர் இரு லட்சியங்களுடன் இயங்கியுள்ளார். மனஞ்சோர்ந்துபோயுள்ள கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஒரு பொது வேலைத் திட்டத்துடன் செயல்பட வைப்பது, மற்றொன்று சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நிகழும் ஆழமான சிக்கல்களை உணரச் செய்வது.

நூல் உணர்த்தும் செய்தி

ஜோஷி என்ற மிகப் பெரிய கம்யூனிஸ்ட் ஆளுமையை, அவருடைய படைப்புகள் வாயிலாகவும் பிற அறிஞர்கள் எழுத்துகள் வாயிலாகவும் இந்நூல் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளது. அவரது கருத்துகளுடன் மாறுபடுவோர்கூட அவரது அறிவாற்றலையும் தியாக உணர்வையும் கொள்கைப் பிடிப்பையும் சகிப்புத் தன்மையையும் புறக்கணிக்க முடியாது. வறட்டுச் சித்தாந்தவாதத்திலிருந்து விலகி நின்று மண் சார்ந்த மார்க்சியம் படைக்க முயன்ற மூத்த கம்யூனிஸ்ட் தோழர்களுள் அவரும் ஒருவர்.

Pin It