கீற்றில் தேட...

பெரியார் சிறைக்குச் சென்ற பின்னர் மேலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் சிறை சென்றனர்.

பெரியாரை பெல்லாரி சிறை யில் அடைத்தார் இராசாசி. அங்கு அவருக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. உடல் எடையும் குறைந்து வந்தது. இதுகுறித்து சட்டமன்றத்திலும் எடுத்துக் கூறப் பட்டது. ஆளுங்கட்சித் தரப்பில் கிண்டலாகவும் கேலியாகவும் விடைகள் அளிக்கப்பட்டன. அது ஆர்க்காடு இராமசாமி யின் மகன் டாக்டர் கிருட்டிணசாமி நடத்திய லிப்பட ரேட்டர் வெளியீடான ஆரிய ஆட்சி நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது.

திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரது தேக நிலை யைப் பற்றியும் அவரது எடைக் குறைவைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன.

.வெ.இராவின் தேகநிலை நகைப்புக்கிடமாதல்

1938ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதல் 1939 ஆம் வருடம் மார்ச்சு மாதம் முடிவதற்குள், அக் கைதி ஒன்பது ராத்தல் எடை குறைந்துவிட்டதைப் பற்றித் தெரிவிக்கப்பட்டதும், காங்கிரஸ் கருணை வள்ளல் களில் (!) ஒருவரான திரு. பி.எஸ். சீனிவாச ஐயர், அவ்விதம் எடை குறைவதனால், திரு. ஈ.வெ.இரா வைப் போன்ற வயது முதிர்ந்தவர்களுக்கு, அவர்களது தேக நிலை திடம்பெறுவதைத் தானே காட்டுகிறது (!) என்றும்; நமது பிரசித்தி பெற்ற காங்கிரஸ் தோழர் திரு. கத்தே ரங்கய்யா நாயுடுவோ, பலத்த சிரிப்புக்கிடையே ‘திரு. ஈ.வெ.ராவைப் போன்ற வயது முதிர்ந்தோர் எக்காலத்தில்தான் எடையில் பெருக்கமுடியும்?’ என்றும் கேட்டார்கள்.

கீழ்த்தரமான குதர்க்கக் கேள்விகள்

இவ்விதக் கேள்விகளுக்கிடையில், மற்றொரு காங்கிரஸ் அங்கத்தினர் “ஏ-வகுப்புக் கைதிகளுக்கு, அவரது உணவு சம்பந்தமாக ஏதாவது கட்டுப்பாடுகளுண்டா? அல்லது அவருக்கு தமக்குப் பிரியமான உணவை உண்ண, உரிமையிருக்கிறதா?” என்று கேட்டார்.

அதற்குப் பிரதம மந்திரியார், “ஏ-வகுப்புக் கைதிகள் தங்களுக்குப் பிரியமான உணவைச் சாப்பிட அனுமதி யுண்டு. ஆனால் தேக நிலையைக் கெடுத்துக் கொள்ளும் வண்ணம், அவர்கள் வெளி உணவுகளைத் தருவித் துச் சாப்பிடக்கூடாதென்பதே ஒரு நிபந்தனை” என்றார்.

இந்த மாதிரியான பதிலைக் கேட்டதும் சபையோர் என்ன எண்ணியிருப்பார்கள்! திரு.நாயக்கரை ஆதரிப்ப வர்களும், பின்பற்றுபவர்களும்கூட, நல்ல ஆரோக்கிய உணவை வெளியிலிருந்து அவருக்குத் தருவித்துக் கொடுத்து, உதவிபுரிய அக்கறை கொள்ளவில்லை என்று சபையோர் ஒவ்வொருவரும், அப்பதிலைக் கேட்டதும் நினைக்க நேர்ந்தது!

ஆனால், சற்றுநேரங்கழித்ததும், எதிர்க்கட்சித் தலைவர் “சபைத் தலைவரே! வெளியிலிருந்து சிறைக்குள் சமைத்த உணவுகள் மட்டுமல்ல, பழங்கள், ரொட்டிகூட, எடுத்துவர அனுமதிக்கப்பட மாட்டாது என்றெல்லாம் இன்றுவரை நிபந்தனை இருந்து வருகிறது. ஆகவே - ஏ வகுப்புக் கைதிகள் உணவு சம்பந்தமாகத் தற்சமயம் நமது பிரதம மந்திரியார் கூறின பதிலைத் திருத்திக் கொள்ளும்படி நான் கேட்கலாமா? அப்படிக் கேட்பது, சபையினது சட்டத் திட்டங்களுக்குட்பட்டதுதானே!” என்றார்.

இக்கேள்வி சபையோரையே தூக்கிவாரிப்போட்டது. ஏன்! குட்டு வெளிப்பட்டதல்லவா! திரு. இராஜகோபாலாச்சாரி இதற்குப் பதிலளிக்கையில் “ஒரு ஏ-வகுப்புக் கைதியின் உணவு, 15 ரூ. பெறுமானமுள்ள பி-வகுப்புக் கைதியின் ஒரு மாதத்திய உணவுக்குச் சமமானது. வெண்ணெய், நெய் போன்ற எடைநிறை அதிகப்படுத்தும் சத்துள்ள உணவுகளை, டாக்டர் அனுமதித்தால், அக்கைதி அவை களை வெளியிலிருந்து தருவித்துச் சாப்பிட முடியும்” என்றார்.

இந்தப் பதிலின் கடுமையை அறியாதார் இல்லை. அந்தப் பதிலைச் சபையோர் அனைவரும் நம்பவில்லை. உண்மைதான் வெளியாகிவிட்டதே! அவ்விதமிருந்தாலும், மான்ட் போர்டு சட்டசபையில், இதேமாதிரி, காங்கிரசு கைதிகளைப் பற்றி யாராவது பதிலளித்திருந்தால், என்ன மாதிரிக் குழப்பமேற்பட்டிருக்கும்!  நமது உன்னத தேசியப் பத்திரிகைகள் என்னவிதமாய்ச் சீறிக் கூக்குரல் போட்டுக் கிளர்ச்சியை உண்டாக்கியிருக்கும்! இதையெல்லாம் சொல்லி என்ன பிரயோசனம்! திராவிடர்களாகிய நாம் தான் “ராமராஜ்யத்தின்” கீழ் சந்தோஷமாக வாழ்கி றோமே! (நூல் : ஆரிய ஆட்சி, பக்கம் 112-113)

பெரியாரின் உடல்நிலை மிக மோசமானதைத் தொடர்ந்து, எவ்வித முன்னறிவிப்புமின்றி, 22.4.1939 அன்று விடுதலை செய்யப்பட்டார். பெரியார் மொத்தம் 167 நாள்கள் சிறையில் இருந்தார். பெரியார் விடுதலை யாகி 5 நாள்களில், இரண்டாம் உலகப் போரில் இந்தியா வைக் கலந்தாலோசிக்காமல் இங்கிலாந்து அரசு போரில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து, காங்கிரசு அரசு பதவி விலகியது.

இராசாசி பதவி விலகியவுடன், பெரியார் மறியல் போராட்டத்தை நிறுத்தினார்.

ஆங்கிலேய அரசு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் 15.11.1939இல் விடுதலை செய்தது.

19.2.1940இல் பெரியார் கோகலே மண்டபத் தில் நடந்த கூட்டத்தில் இறுதி எச்சரிக்கை கொடுத்தார்.

எனவே 21.2.1940இல் ஆங்கில அரசு கட்டாய இந்தித் திட்டத்தைக் கைவிட்டது.

- தொடரும்