ஆகஸ்ட்டு 1ஆம் தேதி திருச்சியில் புறப்பட்ட தமிழர் பெரும்படை 42வது நாளில் செப்டம்பர் 11ஆம் நாள் சென்னையை அடைந்தது. சென்னையில் சிறப்பான வர வேற்பு சென்னை கடற்கரையில் முப்பெரும் தலைவர்களின் முழக்கம் (மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், ஈ.வெ.ரா.) 12-9-1938 விடுதலையில் வெளிவந்த செய்தியை அப்படியே கீழே தரப்பட்டுள்ளது.

தமிழர் பெரும்படைக்கு சென்னையில் வரவேற்பு

நேற்று காலை படை மைலாப்பூரில் தங்கி, மாலை 3 மணிக்குத் தண்டை விட்டுப் புறப்பட்டு, இராயப்பேட்டை, மவுண்ட்ரோடு, சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி வழியாக மாலை 5.30 மணிக்குத் திருவல்லிக்கேணி கடற் கரைக்கு வந்து சேர்ந்தது. ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

anti hindi agitation 1938

ஊர்வலம் சிந்தாரிப் பேட்டை வந்ததும், தோழர் இராகவேலுவைத் தலைமையாகக் கொண்ட செஞ்சட்டை அணிந்த 100 தொண்டர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஆங்காங்கு பல பேட்டை களிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்தி எதிர்ப்பு வாக்கியங்கள் எழுதப்பெற்ற பலவிதமான அட்டைகளுடனும், தமிழ்க்கொடிகளுடனும் வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ‘தமிழ் வாழ்க’, ‘இந்தி வீழ்க’ என்ற பேரொலி காதைச் செவிடுபடச் செய்தது. படை ஊர்வலம் வரும் காரணமாகப் போக்குவரத்துகள் தடைபட்டன.

கடற்கரைக் கூட்டம்

சரியாக 5.30 மணிக்குக் கூட் டம் தொடங்கப் பெற்றது. கூட்டத் திற்கு மாகாணத்தின் பல பாகங்களி லிருந்தும், சென்னை நகரின் பல் வேறு இடங்களிலிருந்தும் சுமார் ஒன்றரை லட்சம் பேர்கட்கு அதிகமாக மக்கள் வந்திருந்தனர். அவர் களுள் மேடை மீதிருந்த முக்கியமானவர்கள் மறைமலை யடிகள். சர். கே.வி. ரெட்டி நாயுடுகாரு, ஈ.வெ. ராமசாமி, எஸ்.எஸ். பாரதியார், சர். பி.டி.ராஜன், மிட்டாதார் நஞ்சா செட்டியார், ஜோலார் பேட்டை வி. பார்த்தசாரதி, மீனாம்பாள் சிவராஜ், சாமி சண்முகானந்தா, மௌலானா மௌல்வி ஷர்புத்தீன் சாகிப் (வேலூர்), பரவஸ்து இராஜகோபாலாச் சாரியார், டாக்டர் தர்மாம்பாள், அ. பொன்னம்பலனார் ஆகியோராவர்.

மாலை 5.30-க்கு ஆரம்பிக்கப்பட்ட கூட்டம் இரவு 1 மணி அதாவது 7.30 மணி நேரம் மிக்க அமைதியாக வெற்றிகரமாக நடைபெற்றது. கூட்டத்தில் ஒலிபெருக்கிக் கருவிகள் வைக்கப் பெற்றி ருந்தன. பெண்மணிகட்காக ஒதுக்கப்பட்டிருந்த தனி இடத் தில் ஆயிரக்கணக்கான பெண் கள் அமர்ந்திருந்தனர். ‘சதிகார நெஞ்சங்கள் துடிக்க சட சட என விண்ணில்’  தமிழ்க் கொடி பறந்து கொண்டிருந் தது.

தோழர் சாமி சண்முகா னந்தா முன்மொழிய, தோழர் அண்ணல் தங்கோ வழி மொழிய, பல்லாவரம் சுவாமி வேதாசலமென்னும் மறை மலையடிகள், நீண்ட கோஷத் திற்கிடையே தலைமை ஏற் றார்.

தோழர்கள் பெரியசாமி, வைலட் பத்மாபாய் (மாணவி), பொன்னுசாமி, சிறுவன் புருஷோத்தமன் ஆகியோர் இந்தி எதிர்ப்புப் பாடல்கள் பாடினர்.

தலைவர் முன்னுரை

தலைவர் தனது முன்னுரையில், ‘மிக்க நெருக்கமான காலத்தில் கூட்டப்பட்ட இம்மாபெரும் தமிழர் கூட்டத்திற்குத் தன்னைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டமைக்காக எல்லோருக்கும் வந்தனம் செலுத்துவதுடன், நிறைந்த தொல்லைகட்கிடையே தங்களுடைய உடல் நிலையைப் பொருட்படுத்தாது தமிழ்நாட்டிற்கு தமிழுக்குச் சேவை செய்வதே தங்கள் கடன் என நினைத்து திருச்சியிலிருந்து நடந்து ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்து கொண்டே சென்னை யை வந்தடைந்த தமிழர் பெரும் படைக்குச் சென்னை வாசிகளின் சார்பாக வந்தனங் கூறுகின்றேன்’ எனக் குறிப் பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது :

“தமிழர்கள் இனி ஒற்றுமையடையவார்களா? என நான் நீண்ட காலமாகச் சந்தேகித்ததுண்டு. அதற்கு மாறாக இன்று உங்கள் ஒற்றுமையைக் காண உள்ளம் பூரிக்கின் றேன். தமிழ்மொழி இனி முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும் ஒற்றுமை நம்மிடை வளருமா னால் தான் நாம் முன்னேற முடியும். ஒன்றுக்கும் உதவாத இந்தியை நாம் அறவே விலக்க வேண்டும்.

அப்படி இந்தியாவுக்கும் பொதுமொழி ஒன்று இருக்க வேண்டுமென் றால், அது ஆங்கிலமாகத்தானிருக்க வேண்டும். ஆங்கிலம் வந்த பிறகுதான் நாம் மனிதராக வாழ முடிந்தது. ஆங்கில அறிவால்தான் காங்கிரஸ்காரர் கூட இன்று எங்கட்கு சுயராஜ் யம் வேண்டுமெனக் கேட்க ஆரம்பித்தனர். விஞ்ஞான அறிவு நிறைந்த ஆங்கிலத்தின் உதவியால் உலகம் முழுமையும் நாம் தொடர்பு கொள்ள முடியும்.

எனவே முதலில் நமது தாய்மொழியை வளர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியே பொது மொழியாக இருக்க வேண்டும். தமிழ்நாடு தமிழனுக்கே உரிமையாக வேண்டும். தமிழ் வேறு ஒருவனுக்கோ, ஒரு மொழிக்கோ, அடிமைப்பட இடமில்லை மீண்டும் உங்கட்கு எனது வந்தனம்.”

பின்னர் சென்னைப் பொது மக்கள் சார்பாக டாக்டர் தருமாம்பாள் அம்மையாரவர்கள் படைக்கு ஒரு வரவேற்பு இதழ் வாசித்தளித்தார்.

படையின் மந்திரி தோழர் மணவை ரெ. திருமலைசாமி அவர்கள், திருச்சியை விட்டுச் சென்னை அடைந்தது முதல் நடைபெற்ற படையின் செயல்முறைகளைத் தொகுத்த அறிக் கையைப் படித்தார். மேலும் இன்றைய கூட்டத்துடன் இப்படை கலைக்கப் பெறுகின்றது. ஆனால் எங்கள் களைப்புத் தீர ஐந்து நாள் சென்னையில் தங்கி ஊர் செல்வோமென உத்தி யோக முறையில் தெரிவித்தார்.

பின்னர், தோழர் பாரதியாரவர்கள் பேசுகையில், தமிழர் பெரும்படையின் சிறந்த தொண்டினைப் பாராட்டி, தானும் தனது உல் நலிவிலிருந்து நீங்கி மீண்டும் தமிழ்த் தொண்டு செய்யப் புறப்பட்டுவிட்டதாகவும், இந்தப் பத்துமாத காலத்திற்குள் நாமடைந்த ஒற்றுமை, வெற்றி ஆகியவைகட்கு மகிழ்ச்சி யடைவதாகவும் குறிப்பிட்டார். மேலும் பேசுகையில், கனம்கள் இராஜகோபாலாச்சாரியார், இராமநாதன், கோபால் ரெட்டி ஆகியோர் பேச்சிற்கு ஆணித்தரமான பதிலளித்தார்.

மேலும் அவர் கூறியதாவது :

“நான் ஒரு காங்கிரஸ்காரனே. ஆனாலும், தலைவர் கூறுவதை ஆய்ந்து பார்க்காது அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையுள்ள சர்வாதிகாரக் காங்கிர சுக்கு நான் முதல் எதிரி, நிற்க.

நான் இதுவரை பல துறைகளில் தோழர் ஈ.வெ.ரா. அவர்களின் கொள்கைக்கு மாறாக நடந்ததுண்டு; அவரை எதிர்த்ததுண்டு. ஆனால் உண்மையை உணர்ந்த நான், இன்று இம்மாபெரும் கூட்டத்தின் மத்தியில் அவைகட்காக அவரிடம் நேரில் என்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். (கைதட்டல்). இனி தமிழ்நாடு தமிழனுக்கே ஒழிய, தமிழ்நாட்டில் ஒரு நேருக்கோ, போசுக்கோ, காந்திக்கோ அதிகாரம் செலுத்த இடமில்லை.

எனவே நீங்கள் அடுத்த தேர்தலில் மஞ்சள் பெட்டியை மறந்து தமிழ்நாட்டுக்கு உழைக்கும் தமிழர்கட்கே உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டுகின்றேன்.”

பின்னர் தலைவர் ஈ.வெ.ரா. பேச எழுந்ததும், மக்கள் ஒரு நீண்ட கைதட்டல் மூலம் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சி யைக் காட்டினர்.

ஈ.வெ.ரா.

“தலைவர்களே! தோழர்களே!

நான் இன்று இக்கூட்டத்தில் பேசமுடியும் என்று நினைத்து இங்கு வரவில்லை. பல இடங்களில் நான், ‘ஏன் இன்னும் சிறை புகவில்லை?’ என இன்றைய காங்கிரஸ் மந்திரிகள் பேசிவந்தனர். திருவாரூர், விருதுநகர் முதலிய இடங்களில் கனம் இராமநாதன், கனம் இராமன்மேனன் முதலியோர் சிறைக்கு என்னை அறைகூவி அழைத்தனர் (பேச்சு மூலமாக) மேலும் காங்கிரஸ் மந்திரிகள் என்னை சென்னையில் கைது செய்ய முடிவு செய்திருக்கின்றனர் எனக் கேள்வியுற்றேன். ஆனால் நான் சென்னைக்கு வெளியில் என்னைக் கைது செய்யட்டும் என்று 2 வாரம் தாமதித்துப் பார்த்தேன்.

ஆனால்  இதுவரை அப்படியொன்றும் நேரவில்லை. எனவே, சென் னைக்கே சென்றுவிடுவோம் என, எனது மூட்டை முடிச்சு களைக் கட்டிக்கொண்டு கிளம்பி வந்துவிட்டேன். (கைதட்டல்). இன்றும், சென்டிரல் ஸ்டேஷனிலேயே கைது செய்யப்படு வோம் என நானும், பாரதியாரும் நினைத்தோம். பாரதியாரு டைய துணைவியாரும் மகிழ்ச்சியுடன் அவரை வழியனுப்பி வைத்தார்கள். நான் இனி சிறைபுகுவதன் மூலம் வீரனாக வேண்டுமென்று விரும்பவில்லை.

ஏதாவது ஒரு வருடம் தண்டனை கிடைத்தால் உழைப்புத் தொல்லையிலிருந்து சற்று நீங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாமென்றும், அதனால் எனது ஆயுள் சற்று வளரும் என்றும் தான் நினைதேன். இக்கூட்டத்திலும் என்னைக் கைது செய்யலாம்.

ஆனால் தமிழர் பெரும்படையின் வரவால், மக்கள் உணர்ச்சியால் கலவரமேற்படுமென்று மந்திரிகள் பயப்படுகின்றார்கள் போலும்! மேலும் நாளை மாலை வரை இதற்காகவே சென்னையில் தங்கியிருக்கப் போகின்றேன். உண்மையிலேயே என்னிடத் தில் ஆச்சாரியாரவர்கட்கு நல்லெண்ணமிருந்தால் - அன் பிருந்தால் - எனக்கு ஓய்வு கொடுப்பதற்காக வேனும் சீக்கிரம் அழைத்துக் கொள்ள வேண்டுகின்றேன். (கைதட்டல்).

ஆகஸ்ட் 1-ந் தேதி படைக்கு நல் வாழ்த்துக் கூறி, அனுப்பி வைத்தேன். தமிழ்நாட்டில் பலவிதத் தொல்லை களையும் சமாளித்து வெற்றியுடன் சென்னை வரும் படையை வரவேற்க வேண்டி, சென்னை வாசிகள் அழைப்பிற்கிணங்கி யும் இங்கு இன்று வந்தேன்.

படையின் அவசியம்

நிற்க. படையைப் பற்றிச் சிறிது பேச நினைக்கின்றேன். இத்தகைய படையினால் பெரும் பயன் உண்டு. அதில் பலவிதத் தொல்லைகள் ஏற்படும். ஆனால் அவைகளை மகிழ்ச்சியாக ஏற்றுத் தொண்டு செய்ய வேண்டும் என்பதை உலகத்திற்குக் காட்டிவிட்டது. எனவே, இத்தகைய படைகள் ஜில்லாக்கள் தோறும் கிளம்ப வேண்டும். அவைகளை நீங்கள் பெரிதும் ஆதரிக்க வேண்டும்.

anti hindi agitation 1938 sep11

படைத் தொண்டர் கட்கு நான் கூறுவதென்னவெனில், இக்காரியங்களினால் ஏற்படும் தொல்லைகளை ஒரு போக போக்கியமாக நினைக்க வேண்டும். கூடியவரை பிறருக்குத் தொல்லை கொடுக்காது-சுயநலங்கருதாது-நடந்து கொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறுகின்றேன். சென்னையிலும் 25 பேர் கொண்ட ஒரு படையைக் கிளப்பிப் பேட்டை பேட்டையாகப் பிரசாரம் செய்ய வேண்டும். இத்தகைய காரியங்களை நாம் இதுவரை செய்யாததால்தான் இந்த நிலைக்கு வந்தோம்.

நியாயத்தைக்கூற உரிமையில்லையே?

இந்தியைப் பற்றி நான் அதிகம் கூறவேண்டுவதில்லை. சென்ற ஒருவருட காலமாகச் சதா நீங்கள் அதைப்பற்றிக் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டீர்கள். இந்திப் பேய் ஆச்சாரி யாரை ஆட்டுகின்றது. “இந்தியை எனது நண்பர் ஈ.வெ.ரா. வும், ஒரு ஆரிய நாகரிக விரோதியும் தான் எதிர்க்கின்றார்கள்” என்று கூறுகிறார் கனம் ஆச்சாரியார். அது உண்மையா என்பதை இக்கூட்டத்தின் மூலம் அவர் அறிந்து கொள்ளட்டும். மேலும் அரசியல் எதிரிகள் இந்தியை எதிர்க்கின்றார்களாம். ஏன் நியாயத்தைக்கூற எங்கட்கு உரிமையில்லையா?

“பின்னும் நாட்டை ஆளுவது யார்? ஒரு சில கிளர்ச் சிக்காரர்கட்கு பயந்து விட்டுவிடுவதா? அல்லது பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்ற - சட்டசபையில் மெஜாரிட்டி ஸ்தானத்திலுள்ள-நாங்கள் ஆளுவதா?” எனக் கேட்கின்றார். ஆம். உண்மைதான். இன்று சட்டசபை மெம்பர்கட்குக் கொடுக்கும் 75 ரூபாய் மாதச் சம்பளத்தை இல்லை என்று நிறுத்தி விடட்டும்; யாரிடத்தில் மெஜாரிட்டி இருக்கின்றதென்று பார்க்கின்றேன். (கைதட்டல்). நியாய முறையில் இந்தியை எதிர்க்கும் எங்களுக்குத் தண்டனை விதிக்கும் போது, தேர்தல் வாக்குறுதிகட்கு மாறாக நடந்ததன் மூலம் பொதுமக்களை ஏமாற்றிய இவர்கட்குத் தண்டனை வேண்டாமா?

வடநாட்டாருக்கும், ஆரியர்கட்கும் அடிமையானதைத் தவிர சென்ற 52 வருடங்களாக காங்கிரஸ் நிலைத்திருப்ப தினால் நமக்கு ஏதாவது பலன் ஏற்பட்டதா?

தமிழ்நாடு பிரிக்கப்பட வேண்டும்

எனவே, நாம் சுயமரியாதையுடன் மனிதனாக வாழ வேண்டுமானால், வடநாட்டிலிருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட வேண்டும். ஒரு போஸோ, நேருவோ, பஜாஜோ, பட்டேலோ வேறு யாரோ நமக்குத் தலைவரல்ல. தமிழ்நாட்டில் ஒரு தமிழன் தான் தலைவனாக இருக்கவேண்டும். இவைக ளைக் கூறும், உங்கள் நன்மைக்காக உழைக்கும் நாங்கள், உண்மையிலேயே உங்கட்காக உழைக்கின்றோமா என்ப தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆரியர், புரோகிதத்திற்கு நாட்டில் இடமில்லை என்றவுடன் காங்கிரசின் பேரால் நம்மை கொள்ளையடிக்கின்றனர். “நீங்களே வெறுத்த அடக்குமுறைகளை ஏன் கையாளுகின்றீர்கள், கொடுமைப் படுத்துகின்றீர்கள்?” என்றால், “நான் கொடுமை செய்பவனாயிருந்தால் சென்னையில் படை பிரவேசிக்கவோ, இக்கூட்டத்தை நடத்தவோ, தண்டனையடைந்தவர்கள் அப்பீல் செய்யவோ அனுமதித்திருப்பேனா?” என இறுமாப்போடு கூறுகின்றாராம், நாங்கள் பயங்காளிகளல்ல என்பதை அவர் அறியட்டும்.

ஆதித்திராவிடர்கள் கல்வியில் கை வைத்தாய்விட்டது

ஆதித்திராவிட சமூகத்திற்குக் கல்வியளிக்கப் பின்வாங்கு கின்றனர். ஸ்காலர்ஷிப்புகள் மறைந்தன.  ஆலயப் பிரவேசச் சட்டத்தை ஒழித்தனர். மேலும் இந்தி எதிர்ப்பாளர் “எங்களைக் கண்டவாறு திட்டுகின்றனர். அவைகள் சகிக்க முடியவில்லை. சத்யாக்கிரகத் தொண்டர்களும் வசை பாடுகின்றனர்” எனப் பிரலாபிக்கின்றார். நாங்கள் அவர்களைத் திட்டுகின்றோமா? எங்கள் கருத்துகளை நியாய முறையில் எடுத்துக் கூறுகின்றோம்.

நான் சுமார் 150 சத்யாக்கிரகத் தொண்டர்களின் வழக்குகள் நடக்கும்போது நேரில் கவனித்தேன். ஒரு தொண்டர் பேரிலாவது திட்டியதாகக் குற்றம் சாட்டப்படவில்லை - நிரூ பிக்கப்படவில்லை. அப்படி அவர்கள் திட்டியிருந்தாலும், பல வருடங்கள் வக்கீல் துறையில் பழகிய அவருக்கு வேறு சட்டம் அவர்கள்மேல் பிரயோகிக்கக் கிடைக்கவில்லையா? அவர் களாலேயே வெறுக்கப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களைத் தானா பிரயோகிக்க வேண்டும்? ஆம், ‘கையில் கிடைத்ததை எடுத்துத்தானே அடிக்க வேண்டும், திருடனை?’ (கைதட்டல்).

இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை

அவர்களைவிட நமக்கு நாட்டுத் தொண்டுபுரிய அதிக உரிமையுண்டு. ஆனால் நம்மில் ஒற்றுமையில்லை. நாம் கெடுகின்றோம். இந்த நிலையில் இளைஞர்கட்கு ஒரு வார்த்தை :

தோழர்களே! தேசியம் என்ற கொடிய புழு உங்கள் மண்டையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. (கை தட்டல்). அது நீங்கினால் தான் நீங்கள் நன்மையடைய முடியும். அண்மை யில் சென்னையில் தேர்தல் வருகின்றது. நீங்கள் கட்டுப் பாடாக தமிழர்கட்காக உழைக்க வேண்டும். உங்கட்கு நாம் எல்லாம் ‘தமிழர்கள்’ என்ற உணர்ச்சி வரவேண்டும். இங்ஙனம் ஓராண்டு கட்டுப்பாடாக வேலை செய்வோமானால் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இறுதியாக சுபாஷ் போஸ் சென்னைக்கு வரப் போகின் றார். நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? இதுகாறும் கூறியவைகளை யோசித்து நீங்கள் ஒரு நன்மையான முடிவுக்கு வாருங்கள்” (நீண்ட கை தட்டல்). அவர் 1-மணி நேரம் பேசினார்.

பிறகு சேனாதிபதி தோழர் கே. வி. அழகர்சாமி அவர்கள் எழுந்து பேசியதாவது :

“தலைவர்களே! சகோதர, சகோதரிகளே! உங்கள் எல்லோருக்கும் முதன்முதல் எனது வணக்கம். நீங்கள் அளித்த வரவேற்பினையும், வாழ்த்தினையும் உவகையுடன் ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் உங்கள் உதவியால், தமிழர்கள் ஆர்வத்தால் எங்கள் படையை வெற்றியுடன் நடத்தி, இன்று இம்மாபெரும் கூட்டத்திடையே வாகை மாலை சூடுகின்றோம்.

நாங்கள் சென்ற விடமெல்லாம் தோழர்கள் எங்களை ஆதரித்தனர். ஆனால் ஒரு சாரார் எங்களை வெறுக்கவும், எங்களுக்குத் தொல்லை விளைக்கவும் செய்தனர். ஆனால் நாங்கள் அவைகளைப் பொருட்படுத்தாது எங்கள் கருமமே கண்ணாக வந்தோம்.

இப்படையினால் தமிழ் நாட்டிலேயே ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுவிட்டது. இதுபோன்று இன்னும் அநேகம் படைகள் கிளம்ப வேண் டும். அதன் விளைவால் தமிழன் தமிழனாக வாழ வேண்டும். இதுவே எனது ஆசை. நிற்க.

“புலியைப் பார்த்து பூனை சூடு பேட்டுக் கொண்டது போல் (காந்தியின் தண்டி யாத்திரையைப் பார்த்து நாங்கள் தமிழர் படையைக் கிளப்பினோம்) நாங்கள் புறப்பட்டோம்” என்று இழிவுடன் கேலி செய்கின்றான்.

ஆம்! பல ஆட்டைத் தின்ற (தமிழர்களை அடிமையாக்கிய) புலிதான் காந்தி என நான் கூற ஆசைப்படுகின்றேன்.” மேலும் இந்தியை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பேசிவிட்டு, “சமீபத்தில் சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தலில் உண்மைத் தமிழர்களை ஆதரிக்க வேண்டும். மஞ்சள் பெட்டி மயக்கத் தைவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார்.

பின்னர் தோழர்கள் அருள் தங்கையா, இராமாமிர்தத் தம்மாள், மீனாம்பாள் சிவராஜ், பண்டிதை நாராயணியம் மாள், டாக்டர் தர்மாம்பாள், மீனாட்சி, காந்தாமணி, மு.அண்ணல்தங்கோ, சாமி சண்முகானந்தா, முந்நகரழகியார், மறைமலையடிகளாரின் மகள் நீலாம்பிகை, வேலூர் ஷர்புதீன் சாகிப் உட்பட மற்றும் பலர் பேசினர்.

- விடுதலை, செப்டம்பர் 17, 1938

(தொடரும்)

Pin It