இராசாசியின் கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் மாபெரும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடைபெற்றுவந்த வேளையில் பம்பரமாகச் சுழன்று செயல்பட்டுவந்த பெரியார், தமிழர், பெரும்படை சென்னையை வந்தடைவதையொட்டி அதை வரவேற்கவும், கடற்கரைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் சென்னை செல்வதற்குமுன் பெரியார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான பெரியாரின் அறிக்கை என்பதால் அதை முழுமையாக இங்கு வெளியிடுகிறோம்.

நான் சிறை புகுந்தால்? ஈ.வெ.ரா. அறிக்கை

அன்புமிக்க சுயமரியாதைத் தோழர்களே! இந்தி எதிர்ப்புத் தோழர்களே!!

நான் இன்று சென்னைக்குச் செல்லுகிறேன். பார்ப் பன ஆட்சி அடக்குமுறையின் பயனாய் அநேகமாக 11-ந் தேதி கைது செய்யப்பட்டுவிடுவேன். (அன்றுதான் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் கூட உள்ளது க.ஆ)

எனக்கு சுமார் மூன்று, நான்கு வாரங்களுக்கு முன்பே வாரண்டு பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்றும் என்னை சென்னைக்கு வெளியில் பிடித்தால் கிளர்ச்சி பலப்பட்டுவிடுமோ என சர்க்கார் யோசித்து நான் சென்னைக்கு வந்தவுடன் கைதியாக்கிவிட வேண்டு மென்று காத்திருக்கிறார்கள் என்றும் கொஞ்ச நாளைக்கு முன்பே கேள்விப்பட்டேன். என்றாலும் கொஞ்ச நாள் வரையில் நான் சென்னைக்கு வருவேன் என்று சர்க் கார் காத்திருந்து பார்த்துவிட்டு அப்புறம் சென்னைக்கு வெளியில் வந்து என்னைக் கைதியாக்குவார்கள் என்று கருதி நானும் கொஞ்ச நாள் தயாராகக் காத்திருந்து பார்த்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ சர்க்கார் அந்தப்படி செய்யத் துணிவு கொள்ளவில்லை என்பது எனக்குத் தெரிந்துவிட்டது.

சர்க்கார் மனோபாவம்

சர்க்கார் தங்களுடைய அபிப்பிராயத்துக்கு மாறுபட்ட வர்கள் எவ்வித எதிர்ப்புக் கிளர்ச்சியும் செய்யக்கூடாது என்கின்ற கடுமையான மனோபாவத்துடன் இருக்கிறார்கள் என்பதற்கும் மீறி யாராவது ஏதாவது செய்தால் அதைக் கொடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டு எப்படியாவது அடக்கிவிட வேண்டும் என்கின்ற துணிவு கொண்டுவிட்டார்கள் என்பதற்கும் போதுமான ருஜுவு சர்க்கார் இதுவரை பல பிரபலஸ்தர்கள் தலைவர்கள் உள்பட மூன்று மாத காலமாக சுமார் 300 பேர்கள் வரை கைதியாக்கி கடினமாகத் தண்டித்ததிலிருந்தும் மற்றும் சர்க்கார் மந்திரிகள் கடற்கரைக் கூட்டங்கள் வெளிப் பொதுக்கூட்டங்கள் காங்கிரஸ் மகாநாடு கூட்டங்கள் சட்டசபை மீட்டிங்குகள் முதலியவைகளில் பேசிய பேச்சுகளில் இருந்தும் நன்றாய் விளங்கிவிட்டதுடன் மேலும் இந்த முறைகளினால் அதாவது இப்போது சர்க்கார் கையாண்டுவரும் அடக்கு முறையினால் எதிர்ப்புக் கிளர்ச்சி நசுக்கப்படவில்லையானால் இன்னமும் கொடுமையான கடுமையான அடக்குமுறைகளை உண்டாக்கியாவது அழித்துத் தீருவது என்கின்ற முடிவுக்குச் சர்க்கார் வந்திருப்பதாகச் சொல் லிக் கொள்ளுவதிலிருந்தும் தெளிவாகிவிட்டது.

இனியும் தெளிவாக வேண்டுமானால் சார்க்கார் உத்திரவை எதிர்ப்பவர்கள் மீது ராஜத்துரோக சதி (Treason) குற்றச்சாட்டுச் செய்து ஆயுள்காலம் அல்லது தூக்குத் தண்டனை வரை கையாட வேண்டும் என்று தோழர் சத்தியமூர்த்தியார் கனம் ஆச்சாரியாருக்குப் புத்தி கூறியதிலிருந்தும் அதற்கு ஏற்றமாதிரியான மந்திரிசபை நடவடிக்கைகளைக் காங்கிரஸ்காரர்கள் முழுமனதுடன் ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தும் பார்த்துக் கொள்ளலாம்.

எனது கடமை

எனவே இதுசமயம் என்னுடைய கடமை என்ன வெனில்,இந்தி கட்டாயக் கற்பிப்பை ஒழிக்கச் செய்வதற்கு முன்பு நான் வெகுகாலமாகவே சொல்லிக் கொண்டுவந்ததுபோலும், காங்கிரஸ் பார்ப்பன ஆட்சி என்றும் அது வருணாச்சிரம தர்மத்தை அமலுக்குக் கொண்டுவந்து நிலைநிறுத்துவதற்கு ஆகவே பாடுபடுகிறது என்றும், இப்படிப்பட்ட ஆட்சியில் மனிதன் வாழ்வதைவிடக் கொடும்புலி வாழும் காட்டுவாழ்வே மேல் என்றும் நான் கருதுவதைச் சரியென்று பொது ஜனங்கள் கருதுவதற்கு வேண்டிய ஆதரவுகளைக் காட்டிவிட வேண்டியது முக்கியமான காரியம் என்று கருதுகிறேன்.

ஆதலால் அதற்கு ஏற்ற காரியங்களைப் பார்ப்பன மந்திரிகள் ஆட்சியானது செய்யும்படி செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட மனமில்லை. அதற்கு ஆகவே எந்த விதத்திலும் சிறிதும் பலாத்காரம் இல்லாததும் நியாயமான மனப்பான்மை உள்ள உண்மையாளர்களின் மனம் சிறிதும் நோகாததுமான முறையில் வெகு ஜாக்கிரதையுடனே செய்யப்பட்டு வருகிற இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் பங்கெடுத் துக் கொண்டிருக்கிறேன்.

எனது விண்ணப்பம்

மற்றும் எந்தவிதமான சட்டத்தையும் எந்த விதமான அடக்குமுறை உத்திரவையும் மீறாத முறையிலேயே இதுவரை கிளர்ச்சி நடந்து வரவும் என்னா லான துணை புரிந்தும் வந்திருக்கின்றேன் என்ப தோடு, நானோ மற்றும் இந்தி எதிர்ப்புக் கமிட்டியோ இந்தி எதிர்ப்பு சம்பந்தமான தனிப்பட்ட நபரோ கண்டிப் பாக அஹிம்சையுடனும் பலாத்காரம் இல்லாமலும் துவேஷம் மனக்கசப்பு இல்லாமலுமே பேச்சு, காரியம் முதலியவைகளில் மிக்க கவனம் செலுத்தி வந்திருக்கிறோமாதலால், இனியும் அப்படியே நடந்து வரவேண்டும் என்றும் கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்வதுடன் ஒவ்வொருவரும் அதை மன மொழி மெய்களால் கண்டிப்பாய் அனுசரிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

சுயமரியாதைக்காரர் கடமை

சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வார்த்தை, மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி யை ஊட்ட இதைவிட நல்ல சமயம் கிடைப்பதரிதாத லால், அவர்கள் எல்லோரும் இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைச் சாந்தமும் சமாதானமுமான முறையில் நடத்திக் கொடுமையான அடக்குமுறைக்கு மகிழ்ச்சி யோடு ஆளாகி, பார்ப்பன ஆட்சியின் யோக்கியதை யை வெளியாக்கிவிட வேண்டியது அவர்களது உண் மையான கடமையாகும்.

ஏனெனில் இப்படிச் செய்வதன் மூலம் நாம் ஏன் பார்ப்பனியம் கூடாது என்கிறோமென்பது இதன்மூலம் விளக்கப்பட்டுவிடும்.

இந்தி எதிர்ப்பு இயக்க நிலை

இந்தி எதிர்ப்பு இயக்கம் அதன் எதிரிகளுடைய சூழ்ச்சி - விஷம - நாணயமற்ற - இழிவான பல எதிர்ப்புகளைத் தாண்டி இதுவும் ஒரு பொது ஜன இயக் கம்தான் என்று இந்தியா முழுமையும் வெளிநாடும் மதிக்கப்படத்தக்க நிலைக்கு வந்துவிட்டது. அன்றியும் சர்க்கார் தங்களுடைய வெறுக்கத் தகுந்த கடைசி ஆயுதத்தைப் பிரயோகப்படுத்த வேண்டிய அவசியத் திற்குக் கொண்டுவந்துவிட்டுவிட்டது.

தமிழ்நாடோ, சென்னை மாகாணமோ, மாத்திரமல்லாமல் இந்தியா பூராவும் சென்னை சர்க்காரை எள்ளி நகையாட வேண்டிய நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டு விட்டது. இந்தியா பூராவிலும் உள்ள அரசியல் தலை வர்கள் பிரதான புருஷர்கள் கவனிக்கப்படத்தக்க பத்திரி கைகள் எல்லாம் ஒரே அபிப்பிராயமாக இந்தி எதிர்ப்புக்குத் தலைகொடுக்க முடியாமல் சென்னை சர்க்கார் கையாளும் முறையைப் பற்றிக் கவனித்துக் கண்டிக்கும் படியான நிலைமையை உண்டாக்கிவிட்டது.

இதுவரை காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் ஆட்சியையும், ஜஸ்டிஸ் மந்திரி ஆட்சியையும் பற்றி என்னென்ன குற்றம் குறை கூறிவந்தார்களோ அவற்றையெல்லாம் இன் றைய காங்கிரஸ் சர்க்கார் செய்து தீரவேண்டிய அவசியத்திற்கும் அப்படிச் செய்யப்பட்ட காரியங்களுக்கு அந்தக்கால ஆட்சி என்ன சமாதானம் சொல்லிற்றோ, அதே சமாதானத்தைத் தேடிக்கண்டுபிடித்துச் சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்கும் கொண்டுவந்துவிட்டு விட்டது.

கவலை வேண்டாம்

ஆதலால் நமது கிளர்ச்சி பயன் கொடுக்கவில்லை என்பதாக நாம் சிறிதும் நினைக்க வேண்டியதில்லை. மற்றும் இது வெற்றி பெறுமா தோல்வியுறுமா என்ப தாகவும் நாம் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. நம் கடமையைச் செய்கிறோமா, செய்தோமா இல் லையா என்பதேதான் நாம் இனி யோசிக்கப்படத் தக்கதாகும்.

நாம் பெற்ற வெற்றி

காங்கிரஸ் சுமார் 18 வருஷ காலமாகச் செய்து வந்த எதிர்ப்புக் கிளர்ச்சிகள் ஒன்றிலாவது வெற்றி பெற்றது என்பதாகக் காங்கிரசே சொல்லும்படியான காரியம் ஒன்றுமே இல்லை. காங்கிரசானது எதிர்ப்பின் பேரால் சட்டம், சமாதானம், நல்ல ஆட்சி முதலியவை களுக்கு, விரோதமாகச் செய்துவந்த காரியங்களில் நாம் நூற்றிலொரு பங்குகூட இன்னம் செய்யவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து அவற்றைச் சரியான கணக்குக்காட்ட முடியாதபடி செலவு செய்தும் இலட்சக்கணக்கான பேர்கள் சிறை சென்றும் பலர் அடிபட்டும் சிலர் மடிந்தும் கூட ஒரு காரியத்திலாவது எவ்வித வெற்றியும் பெறாமல், நிபந்தனை கொடுத்து, ஜெயிலில் இருந்து வெளிவந்து தேர்தலில் ஓட்டுப்பெற மாத்திரம் பயன்பட்டது என்றால், இப்போது நாம் செய்த கிளர்ச்சிக்கும் சிறை சென்ற தொண்டர்களுக் கும், பொது ஜனங்களால் கொடுக்கப்பட்ட பணத்துக்கும் செலவிடப்பட்ட முறைக்கும் மற்றும் அனுபவித்த கஷ்ட நஷ்டத்திற்கும் இதைவிட என்ன அதிகமான வெற்றி யை எதிர்பார்க்க முடியும்?

சிறை நோக்கிச் செல்கின்றேன்

எனவே காங்கிரசின் கிளர்ச்சி, தியாகம், போர் முதலானவைகள்  எல்லாம் ஓட்டுப்பெறவே ஒழிய, எதிரியிடம் காரியம் வெற்றி பெறுவதற்கு அல்ல என்பது நமக்கு பட்டாங்கமாய்த் தெரிந்துவிட்டதால் நமது எதிர்ப்பும், கிளர்ச்சியும், தியாகமும், கோரும் கோரிய வெற்றி பெறுவதற்குப் பயன்படாவிட்டாலும் பாமர மக்கள் இனிமேலாவது ஏமாறாமல், உண்மை கண்டு மனம் திரும்பவாவது பயன்பட்டால் அதுவே போதுமானதாகும். ஏதோ ஒரு வழியில் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை அதிகமாய்க் கஷ்டநஷ்டமில்லாமல் சாவதானமாய் சந்தோஷமாய் சுளுவில் நடத்திக் கொண்டிருக்க இந்த சர்க்கார் இடம் கொடுத்துக் கொண்டிருப்பதே நமக்கு ஒரு எதிர்பாராத வெற்றி என்று கருத வேண்டும்.

இந்தி கட்டாய முறையை ஒழிக்க சர்க்கார் கண்ணியமான முறையில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நமது கிளர்ச்சியானது முறையே நடந்துகொண்டிருப்ப தால் சர்க்காரை அறியாமலேயே அந்த நமது இலட் சியம் கைகூடும் படியான நிலைமை ஏற்பட்டுவிடு மென்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதோடு பொது ஜனங்களது அபிப்பிராயமும் ஆதரவும் நமக்குச் சாதகமாய் இருக்கும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதோடு இந்தி எதிர்ப்புக்காரரும், சுயமரியாதைக்காரரும், ஜஸ்டிஸ்காரரும், முஸ்லிம்லீக்குக்காரரும் மற்றும் காங்கிரஸ் நடப்பும், போக்கும் பிடியாதவர்களும் ஒன்றுசேர்ந்து காரியம் செய்யவும் இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஒரு பெரும் சாதனமாகும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு இன்று  சிறை வாயிலை எதிர்நோக்கி சென்னை செல்லுகின்றேன் (குடிஅரசு 11.9.1938).

- தொடரும்

Pin It