கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ஆங்கில மருத்துவ (அலோபதி) முறையின் "கொடூர" இயல்பைப் பற்றி முகநூலிலும், செய்திப் புலனத்திலும் நம் அறிவு ஜீவிகள் பரபரப்பான விவாதங்களைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் விவாதங்களைக் கேட்டால் இந்த ஆங்கில மருத்துவ முறை மனித குலத்தின் வளர்ச்சியைக் கெடுப்பதற்கு என்றே வளர்த்து எடுக்கப்பட்டதோ என்று தோன்றும். இது உண்மையா? ஒரு சிறு விபத்து நடந்தால் இந்த அறிவு ஜீவிகள் ஆங்கில மருத்துவ முறையை நாடாமல் இருக்க முடியுமா? அப்படியானால் உண்மையான பிரச்சினை என்ன? இந்த அறிவு ஜீவிகளைப் புலம்ப வைக்கும் உண்மையான காரணம் என்ன?

உண்மையில் ஆங்கில மருத்துவ முறையில் எந்த விதமான தவறும் இல்லை என்பது மட்டும் அல்ல; மற்ற எல்லா மருத்துவ முறைகளைக் காட்டிலும் ஆங்கில மருத்துவ முறை தான் பரந்த அளவில் மனித குலத்திற்குப் பயன் தரக் கூடியது. அது மக்களின் வெறுப்புக்கு உள்ளாகக் காரணம் நோய்க்கு ஏற்பச் சிகிச்சை செய்யாமல், ஒருவனின் செலவழிக்கும் வலுவிற்கு ஏற்பச் சிகிச்சை செய்யத் தூண்டும் முதலாளித்துவ உற்பத்தி முறையே.

தொழிற்புரட்சியின் வெற்றியில் முதலாளித்துவ சமூகம் அமைந்த பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது உழைக்கும் மக்கள், எந்திரங்கள் தான் எதிரிகள் என நினைத்து அவற்றை எல்லாம் உடைத்தார்களாம். ஆனால் அவற்றைப் பழுது பார்த்து அல்லது மீண்டும் உற்பத்தி செய்து சமூக இயக்கம் தொடர்ந்தது. கார்ல் மார்க்°, எந்திரங்கள் பிரச்சினை அல்ல; அவற்றை முதலாளித்துவ உற்பத்தி முறையில் கையாளுவது தான் பிரச்சினை என்று கூறினார். பல சோசலிசவாதிகள் தாங்கள் புதிய சமூகத்தை அமைக்கும் போது எந்திரங்களை ஒழித்து விடுவோம் என்று கூறினர். ஆனால் மார்க்°, எங்கெல்°, லெனினோ எந்திரங்களை ஒழிக்க முடியாது / கூடாது என்றும், அவற்றை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.

அதுபோல் தான் ஆங்கில மருத்துவத்தையும் நோக்க வேண்டும். இம்மருத்துவ முறை பழக்கத்திற்கு வந்த பின் தான் மனிதனின் ஆயுள் வரம்பு அதிகரித்து உள்ளது. சராசரி ஆயுள் காலமும் அதிகரித்து உள்ளது. மேலும் இரண்டு தலைமுறைகளுக்கு முன் அறுபது வயதானவர்கள் என்றால் பழுத்த கிழவர்களாகத் தெரிவார்கள். ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. இதற்கு முக்கிய காரணம் ஆங்கில மருத்துவ முறை தான். இன்று கியூபா மருத்துவத் துறையில் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறது என்றால் அது ஆயுர் வேத, சித்த, நாட்டு வைத்திய முறையினால் அல்ல., ஆங்கில மருத்துவ முறையினால் தான். அங்கு முதலாளித்துவ முறையில் செயல்படாமல், மக்கள் நலனுக்காகச் செயல்படுவதால், அந்நாட்டு மக்கள் மட்டும் அன்றி, உலக மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறது.

நம் உடலியக்கம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று இந்த அறிவு ஜீவிகள் கூறுகிறார்கள்.

இது ஏற்புடையது அல்ல. மனிதன் அறிவியலின் மூலம் அனைத்தையும் தெரிந்து கொண்டு விட்டான் என்று கூற முடியாது தான். ஆனால் தொடர்ந்து மேலும் மேலும் தெரிந்து கொள்ள முயன்று கொண்டே இருக்கிறான். அவன் தெரிந்து கொள்ளும் செய்திகளும் மேலும் மேலும் செம்மையாகிக் கொண்டே வருகின்றன. ஆகவே உடலியக்கம் அறிவிலுக்கு அப்பாற்பட்டது என்பது ஏற்புடையது அல்ல.

நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது. ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொரு மாதிரி இயங்கு கிறது. உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது. இதை ஆங்கில மருத்துவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை என்று இந்த அறிவு ஜீவிகள் கூறுகிறார்கள்.

ஒவ்வொருவருடைய உடலியக்கத்திலும் வேறுபாடு உள்ளது என்பதை ஆங்கில மருத்துவர்கள் கூறவே செய் கின்றனர். அவர்களுள் உள்ள நல்ல (அதாவது முதலாளித்து வத்தின் கோரப் பிடியில் மோசமாகச் சிக்கியிராத) மருத்துவர்கள் இதைக் கூறவே செய்கின்றனர். அதற்காக அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவே முடியாது என்று கூறுவதும், இதை ஆங்கில மருத்துவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை என்று கூறுவதும் ஏற்புடையது அல்ல.

உலகின் ஒவ்வொரு மூலையில் உள்ள மனிதனும், வெவ்வேறு தட்பவெப்ப நிலை, வெவ்வேறு உணவுப் பழக்கம், வெவ்வேறு உணவு உண்ணும் முறை, வெவ்வேறு கலாச்சாரம், வெவ்வேறு மரபணுக் கட்டமைப்பில் இருக்கிறான். இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித் தன்மையுடையதாகத் தானே இருக்கும் என்று இந்த அறிவு ஜீவிகள் கூறுகிறார்கள்.

இது உண்மை தான். கொடியவர்கள் இதைக் கணக்கில் கொண்டு கொடிய நச்சு ஆயுதங்களையும் உற்பத்தி செய் கிறார்கள். பிரச்சினை ஆங்கில மருத்துவத்தில் அல்ல. அதை முதலாளித்துவ உற்பத்தி முறையில் கையாளும் போதுதான்.

இன்னும் இது போல் எத்தனையோ எடுத்துக்காட்டுக்களை இந்த அறிவு ஜீவிகள் காட்டுகின்றனர். அவை அனைத்தையும் பகுப்பாய்வு செய்து பார்த்தால், பிரச்சினை ஆங்கில மருத்துவ முறையில் அல்ல; அது முதலாளித்துவ உற்பத்தி முறையில் செயல்படுவதால் தான் என்று தெரிய வரும்.

ஆகவே நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழித்துக் கட்டப் போராடுவது தான் சரியாக இருக்கும். அப்படி அல்லாமல் ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப் போராடினால், அதில் உள்ள நல்ல கூறுகளை எடுத்துக் காட்டி, நாம் சொல்வது தவறு என மக்களை நம்ப வைக்க முதலாளித்துவ அறிஞர் களுக்கு இடம் கொடுக்கும் தவறைச் செய்தவர்கள் ஆவோம்.