தமிமீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய ஈழப் போராளிக் குழுக்களுக்கும் சிறிலங்காவின் அரசுப் படை களுக்கும் இடையே தாக்குதல்கள் தொடங்கிய பின் கடந்த 35 ஆண்டுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களைச் சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளனர். மேலும் எல்லைத் தாண்டி வந்து சிறிலங்கா கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றிச் சிறையில் அடைக்கும் கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.

சிறிலங்காவில் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு நடுவண் அரசுக்கு மடல் எழுதுவது, இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு வேண்டுகோள் விடுப்பது என்கிற நாடகங்கள் தொடர்கின்றன. பல மாதங்கள் சிறிலங்கா சிறையில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பின் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களின் படகுகளும் மீன்பிடி வலைகளும் திருப்பித் தரப்படுவதில்லை. இந்த மீனவர்கள் தமிழகம் திரும்பிய பின் மீண்டும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட முடியாமல் தத்தளிக்கின்றனர். இவர்களின் குடும்பங்கள் கொடிய வறுமையில் உழல்கின்றன.

இதுவரையில் சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டு வந்த தமிழக மீனவர்கள் இப்போது இந்தியக் கடலோரக் காவல் படையாலும் தாக்கப்படும் கொடுமை நிகழ்ந்துள்ளது. இராமேசுவரத்திலிருந்து 13.11.2017 அன்று 30 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்தியக் கடலோரக் காவல் படையின் இராணி அபாதா-77 என்கிற கப்பல் அப்பகுதிக்கு வந்தது. அக்கப்பலிலிருந்து ஏழு வீரர்கள் ஒரு இரப்பர் படகில் ஏறி வந்து அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகுகளை விரட்டி வந்தனர். ஒரு படகை நோக்கிச் சுட்டனர். அந்தப் படகில் இருந்த பிச்சை ஆரோக்கியதாசு, ஜான்சன் ஆகிய மீனவர்கள் மீது துப்பாக்கிக் குண்டு உரசிச் சென்றதில் அவர்கள் காயம் அடைந்தனர். அந்தப் படகை விரட்டிப் பிடித்து அப்படகில் இருந்த நான்கு மீனவர்களைத் தாக்கினர். அப்போது தமிழில் பேசிய மீனவர்களை இந்தியில் பேசுமாறு அடித்தனர்.

14.11.2017 அன்று கரைக்குத் திரும்பிய இம்மீனவர்கள் இராமேசுவரம் மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொண்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிச்சை ஆரோக்கியதாசு தமிழக அரசின் கடலோரப் பாதுகாப்புக் காவல் நிலையில் புகார் அளித்தார். காவல்துறை ஆய்வாளர் இராசராசன், “இராணிஅபாதா” கப்பலில் இருந்த இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 323, 307 ஆகிய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். படகிலிருந்த துப்பாக்கிக் குண்டைத் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பினார்.

இந்தியக் கடலோரக் காவல்படையால் இராமேசுவரம் மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதைத் தமிழக அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கடுமையாகக் கண்டித்தன. இந்தியக் கடலோரக் காவல்படையினர் சார்பில் துப்பாக்கியால் சுடவில்லை என்றும், மிகக்குறைந்த திறன் கொண்ட துப்பாக்கியால்தான் (ஏநசல-டடிற உயடiசெந பரn) சுடப்பட்டது என்றும் முரண்பட்ட கருத்துகள் வெளியிடப்பட்டன. இராமேசுவரத்தில் இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீனவர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.

அந்நிலையில் சென்னைக்கு வந்த இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக் கிச் சூட்டில் கைப்பற்றப்பட்ட தோட்டா தங்களது கிடையாது என இந்தியக் கடலோரக் காவல்படை மறுத்துள்ளது. மீனவர்களைக் தாக்கிய குண்டு எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி குறித்து விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். தமிழகர்களிடம் நிலவிய கொந்தளிப்பான மனநிலையைத் தணிப்பதற்காக நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறினார்.

நிர்மலா சீதாராமன் கூற்றை நம்பமுடியாது. மருத்து நுழைவுத் தேர்வில் 2017-18ஆம் ஆண்டிற்கு மட்டும் விலக்கு அளித்திட நடுவண் அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறினார். ஆனால் நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது.

தமிழகம் 1,076 கி.மீ. நீளம் உள்ள கடற்கரையைக் கொண்டது. கடலோரப் பகுதியில் 608 மீனவக் குப்பங்கள் இருக்கின்றன. 9 இலட்சத்து 85 மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடு பட்டுள்ளனர். நடுக்கடலில் கடுங்குளிரிலும் மழையிலும் மீன் பிடிக்கும் இவர்களின் வாழ்க்கை வாய்க்கும் வயிற்றுக்குமான போராட்டமாக இருந்து வருகிறது. தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலை மீன்பிடி முறையில் மீன் பிடிப்பதாக மீனவர்கள் கட லோரக் காவல்படையால் பலவகையிலும் துன்புறுத்தப்படு கிறார்கள். காவல்நிலையங்களில் கைது செய்யப்பட்டவர்களைக் காவல்துறையினர் எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்து கின்றனரோ, அதேபோன்று நடுக்கடலில் மீனவர்கள் கடலோரக் காவல் படையால் துன்புறுத்தப்படுகின்றனர்.

ஆழ்கடலில் மீன்பிடிக்க இந்திய அரசு பெருமுதலாளிய நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழக ஏழை மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க வராமல் தடுப்பதற் காகவும், மீன்பிடித் தொழிலிலிருந்தே முற்றாக அவர்களை விரட்டியடிக்கவும், கடலோரக் காவல் படையைக் கொண்டு தமிழக மீனவர்களைத் தாக்கும் வேலையில் இந்திய அரசு இறங்கி யுள்ளது. தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலை நாட்டிட தமிழகர்கள் ஒன்று திரண்டு குரல் கொடுக்கவேண்டும்.

Pin It