சென்னையில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி) தன்னுடைய பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநாட்டும் தன்மையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மாணவர்கள் ஐ.ஐ.டி. வளாக அரங்கில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்தது. இந்திய அளவில் இதற்கு எதிர்ப்பு ஏற்பட்ட பிறகே ஐ.ஐ.டி. நிர்வாகம் அனுமதி அளித்தது. கடந்த ஆண்டில் ஐ.ஐ.டி.யில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மாட்டுக்கறி விருந்து நடத்திய போது இந்துத்துவ மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இந்த இந்துத்துவ மாணவர்கள் மீது ஐ.ஐ.டி. நிருவாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

26.2.2018 அன்று சென்னை ஐ.ஐ.டி.யில் நடுவண் அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி “சகார் மாலா” திட்டத்தின் ஒரு பகுதியாகத் தேசிய தொழில்நுட்ப மய்யம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய விழாவில் சமற்கிருத மொழியில் “மகா கணபதி” எனும் இறை வணக்கப் பாடல் பாடப்பட்டது. ஐ.ஐ.டி.யில் படிக்கும் சில மாணவர்கள் இதைப் பாடினர். இந்த விழாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நடுவண் அரசின் இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாக்களில் தொடக்கத்தில் “நீராடும் கடலுடுத்த” எனும் தமிழ்த் தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு 1970இல் பிறப்பித்த ஆணையே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதைப் புறக்கணிக்கும் நோக்கத்துடனேயே சமற்கிருதத்தில் மகாகணபதி எனும் இந்துமதம் சார்ந்த பாடல் பாடப்பட்டுள்ளது. 2018 சனவரியில் சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது காஞ்சி சங்கரமடத்தின் விஜயேந்திர சங்கராச்சாரி தமிழ் மொழியை அவமதிக்கும் வகையில் அமர்ந்து கொண்டிருந்தார். இதற்கான எதிர்ப்பு ஓய்வதற்குள் சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழைப் புறக்கணித்து சமற்கிருத ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பாஸ்கர் இராமமூர்த்தி, “மாணவர்களாக முன்வந்து சமற்கிருதத்தில் மகாகணபதி பாடலைப் பாடினார்கள். இதைப் பிரச்சனையாக்க வேண்டாம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்ப்பற்றது என்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் இந்துமதக் கடவுள் வாழ்த்தைப் பாடலாமா? ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற கொள்கையைக் கொண்ட இந்துத்துவத்தைப் பரப்புவதுதான் உயர்கல்வி நிறுவனத்தின் குறிக்கோளா?

ஐ.ஐ.டி. இந்திய அரசின் நிறுவனம் என்றும், தமிழ் மாணவர்கள் 32 பேர் மட்டுமே உள்ளனர் என்றும் அதனால் தமிழ்வாழ்த்துப் பாடவேண்டியதில்லை என்றும் இந்துத்துவ வாதிகள் வாதிடுகின்றனர். இந்திய அரசின் கல்வி நிறுவன மாயினும் தமிழ்நாட்டில் இருப்பதால், ஏழரைக் கோடித் தமிழர்களின் உணர்வை மதிக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடவேண்டும் என்பதே சனநாயக நெறியாகும்.

இந்திய அளவில் சில ஆயிரம் பேர் மட்டுமே சமற்கிருதத் தைத் தங்கள் தாய்மொழியாக மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் பதிவு செய்துள்ளனர். ஆனால் 2016இல் நடுவண் அரசு அறிவித்துள்ள தேசியக் கல்விக் கொள்கை பள்ளிகள் முதல் பல்கலைக் கழகங்கள் வரை சமற்கிருத மொழியைக் கற்பிக்கச் செய்யவேண்டும் என்று கூறுகிறது. இந்திய ஆட்சி என்பது பார்ப்பன மேலாதிக்க ஆட்சியாகும். பார்ப்பன ஆதிக்கத் திற்கான வலிமையான ஆயுதம் சமற்கிருத மொழியில் மதச் சடங்குகளை நடத்துவதாகும். எனவே பார்ப்பன ஆதிக்கத்தை வீழ்த்திட சோதிபா புலே-அம்பேத்கர்-பெரியார் காட்டிய வழியில் சமற்கிருத புரோகிதச் சடங்குகளை விட்டொழிக்க வேண்டும்.

Pin It