kannadas agitation

காவிரி நீர்ப் பிரச்சினையை முன்னிட்டுக் கடந்த 5.9.16- முதல் பெங்களூரில் கடுமையான ஆர்ப்பாட்டங்களும், கலவரங்களும் நிகழ்ந்து கொண்டே வருகின்றன; இதன் காரணமாகப் பெங்களூரை நோக்கிச் செல்லும் லாரிகளும், பேருந்துகளும், மகிழுந்துகளும் கொளுத்தப்பட்டு உள்ளன; இவற்றில் தமிழக வாகனங்களையே குறிவைத்துக் கொளுத்தி வருகின்றனர்; இவற்றுடன் நில்லாமல், தமிழர்களின் வியாபாரத் தலங்களையும் கடைகளையும் திட்டமிட்டு சேதப்படுத்தி வரு கின்றனர்; வாகனப் போக்குவரத்தே நிகழாமல் பாதைகளில் பொதுச் சொத்துகளை நாசப்படுத்திய வண்ணம் வருகின்றனர். கர்நாடக அரசு ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தும், கலவரக்காரர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் தங்களின் கை வரிசையைக் காட்டி, போக்குவரத்திற்கும், ஊர் அமைதிக்கும், சமூக ஒழுங்கிற்கும் பங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இவை மிகக் கவலைக்குரியன; கண்டிக்கத்தக்கன; இவை, இரு மாநிலங்களுக்கும் இரு மாநில மக்களுக்கும் வேற்றுமையை விளை விப்பவை; பகையைப் பெருக்குபவை; உறவையும் நட்பையும் குலைப்பவை. இவற்றைத் திட்டமிட்டுச் செய்யும் கலவரக்காரர்கள் சிறிதும் சிந்திப்ப தில்லை. சிந்திக்க விரும்புவதுமில்லை; இது மிகச் சோகமானது. எப்போதுதான் இதற்கு வழி பிறக்குமோ தெரியவில்லை.

கர்நாடக அரசு, திறக்க வேண்டிய அணையைத் திறக்காமல் இருந்ததால் அணையைத் திறந்து தண்ணீர்விடவேண்டி தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 6.9.16 முதல் கர்நாடக அரசு, தமிழகத்திற்கு 16.9.16 வரை நாள்தோறும் 15,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டு இருந்தது. இந்த ஆணையை எதிர்த்துதான் கன்னடத் தீவிரவாதிகள் போராட்டம் நிகழ்த்திப் பொதுச் சொத்தைச் சூறையாடி ஊர் அமைதியைக் கெடுத்தனர். இந்த ஆணையை எதிர்த்துக் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததால், உச்ச நீதிமன்றம் தம் ஆணையில் 20.9.16 வரை தமிழகத்திற்கு இனி நாள்தோறும் 12,000 கனஅடி தண்ணீர் திறக்கலாமென அறிவித்திருந்தது. இதனையும் அரசோ, கலவரக்காரர்களோ ஏற்கத் தயாராக இல்லை; இதன் காரணமாக அனைத்து வாகனங்களும், பேருந்துகளும் ஓசூரிலேயே நிறுத்தப் பட்டன; இவை 10.9.16 வரை நீடித்தது. 11.9.16 அன்று காலை போராட்டம் நிறுத்தப்பட்டது; ஆனால் மீண்டும் அன்றிரவு வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டன. 12.9.16 அன்று கடும் வன்முறை வெடித்தது. அரசோ, காவல்படையோ கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன; இவை மிக அவலமானது; வருந்தத் தக்கது. இந்நிலையால் மத்திய அரசின் காவல் படை வருவிக்கப்பட்டது. இதனால் ஓரளவு நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்தது. எனினும், ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும், கோரிக்கை எழுப்பலும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருந்தன.

தொடக்கக் காலத்தில் இருந்தே போதிய தண்ணீர்விட கர்நாடக அரசு மறுத்து வந்திருந் தாலும் அப்படி மறுப்பதற்கும் நிலைமையைச் சிக்கலாக்கியதற்கும் நடுவண் அரசே பெருங்காரண மாகும், நடுவண் அரசு திட்டமிட்டு விரைந்து செய லாற்றியிருந்தால் இந்நிலைமை உருவாகி இருக்காது; எடுத்துக்காட்டாக, நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று தமிழக அரசு 1968- முதல் வேண்டு கோளிட்டுத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந் தாலும் நடுவண் அரசு 1990-இல் தான் நடுவர் மன்றத்தை அமைத்தது. 1968-லேயே அமைத் திருந்தால் பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்ந் திருக்கும். ஆனால் அதற்கு வழியில்லாமல் போயிற்று. காரணம், அதுவொரு அரசியல். இப்போதும் இத்தனை வன்முறைகளும், இழப்புகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் மோடி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இதுவொரு அரசியல். இந்த அரசியலால் தான் நாடு பாழாகிறது. நாட்டைப் பற்றிய இந்த அவல அரசியல் என்று தான் மாறுமோ? நடுவண் அரசுதான் இப்படி யென்றால், கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும் எந்தக் கட்சியினரும் தமிழகத்திற்கு எதிராகவே செயல் படுகின்றனர்; இவர்களுக்கு நாட்டு ஒற்றுமை யிலோ, மானுட நெறியிலோ, அண்டை மாநில உறவிலோ நட்பிலோ, ஆழ்ந்த அக்கறை இருப் பதாகத் தெரியவில்லை.

கர்நாடக அரசு, தொடக்கக் காலத்திலிருந்து தண்ணீர்ப் பிரச்சினையில், பரந்த மனப்பான்மை யுடன், பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், இப் போது அங்கிருக்கும் தீவிர அமைப்புகள் தோன்றி யிரா; அப்படித் தோன்றியிருந்தாலும், தமிழகத் திடம் இத்துணைப் பகைமை கொண்டிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தமிழர்களைப் பிறவிப் பகையாளர்களாகவே கருதுகின்றனர். கர்நாடகத்தில், கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒரே குரலில் எதிர்த்தே கூக்குரல் இடுகின்றனர். இது நல்ல பண்பாடாக இல்லை. வாட்டாள் நாகராஜைப் போன்றே இந்நாள் முன்னாள் மாநில- மத்திய அமைச்சர்களும் ஒரு சொட்டுநீர் கூடத் தமிழகத்திற்குத் தர மாட்டோம் என்கின்றனர். தமிழகத்திற்கு எதிராக எந்த அளவுக்குப் பகை மையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என் பதையே அது காட்டுகிறது. இந்தப் பகைமைக்குக் காவிரி நீர் மட்டும் காரணமன்று, வேறு காரணங் களும் உண்டு.

சிறந்த எழுத்தாளரான திருமதி வாஸந்தி, அண்மையில் பெங்களூர் கலவரத்தை முன்னிட்டு தமிழ் இந்துவில் 6.9.16 அன்று “பெங்களூரு தீப்பற்றி எரிகிறது” என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரையில், தற்போது பெங்களூரைச் சுற்றி எண்ணற்ற தகவல் தொழில்நுட்ப அமைப்புகளும், சர்வதேச கம்பெனிகளும், தொழிற்சாலைகள் இருப்பனவாகவும், அவற்றில் தமிழர்களும், பிற மாநிலத்தவர்களுமே மிக அதிகமாக உள்ள தாகவும், அவர்கள் லட்சக்கணக்கான ஊதியம் பெறுபவர்களாகவும், அவர்களால் அவ்வூரில் பல வீடுகளும், கட்டடங்களும் எழும்புவதாலும், கப்பல் போன்ற கார்களில் வலம் வருவதாலும், பூங்காக்களிலும் அங்காடிகளிலும் கடைகளிலும் கன்னடத்தைக் காட்டிலும் பிற மொழிகளே உச்சரிக்கப்படுவதாலும், சொந்த ஊரில் கன்னடர்கள் வண்டி ஓட்டுபவர்களாகவும் ஆட்டோ ஓட்டுபவர் களாகவும், கூலிகளாக இருப்பதாலும், தமிழர் மீதும், பிற மொழியினர் மீதும் பகைமை கொண் டிருக்கிறார்கள் என்கிறார். இது மிக அடிப் படையான காரணமாகும், இந்தக் காரணத்தை யாரும் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. பிற மாநிலத்தவரோடு சேர்ந்து தமிழர்கள் தங்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்ததுடன், காவிரி நீரையும் பறிக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது. இந்த எண்ணத்தால்தான் பகைமையை மேலும் மேலும் வளர்த்துக் கொண் டிருக்கிறார்கள்.

உண்மையில், கன்னடர்களின் இந்த எண்ணம் தவறானது நியாயமற்றது; கன்னடர்களும் நன்கு படித்திருந்தால் அந்த வேலை வாய்ப்புக்களைப் பெற்றிருக்கலாம். இந்தத் தீமையெல்லாம் பெருகி யிருப்பதற்கு அடிப்படைக் காரணம் உலகமயம், தனியார், தாராளமயம் எனும் முதலாளித்துவ அமைப்பால் வந்த கேடே ஒழிய, தமிழர்கள் அல்லர். முதலாளித்துவப் பன்னாட்டுக் கம்பெனி களே காரணம். காரணம் யார் என்பதை அறிய முடியாத நிலையில் நம் மக்கள் உள்ளனர். நம் கல்விமுறை அப்படி உள்ளது. இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளாமல், இந்த உலகத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

கன்னடர்களுக்குப் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததாலும், பெங்களூரில் செல்வர்களாக, பெங்களூர்வாசிகளாக தமிழரும் பிற மொழி யினரும் இருப்பதால் அவர்கள் மீது கன்னடர்கள் பகைமை கொண்டிருக்கிறார்கள் என்கிறார் வாஸந்தி. இந்தச் சமூக அரசியலைப் புரிந்து கொள்ளாமல் பெங்களூரில் நடக்கும் வன் முறையைப் புரிந்து கொள்ள முடியாது என்கிறார். இது குறித்து அவர் குறிப்பிட்டிருப்பது சிந்திக்கத்தக்கது.

“இந்த வெறியர்களுக்கு எந்த உணர்வு பூர்வமான விஷயமும், அவர்களின் உள்ளார்ந்த கோபத்துக்கு வடிகாலாகிவிடுவதுதான் சோகம். இது வெறும் நதிநீர்ப்பிரச்சினை அன்று; அது வொரு சமூகவியல் பிரச்சினை, அதன் தீவிரத்தை உணராமல் கன்னட அமைப்புகளும், அரசுகளும் அரசியல் செய்தால் கர்நாடகத்துக்கு மட்டுமன்று; நாட்டுக்கே ஆபத்து; ஜனநாயகப் பண்புகளுக்கு ஆபத்து.”

எழுத்தாளர் வாஸந்தி உணர்ந்திருப்பதைப் போன்று, கர்நாடகத் தலைவர்கள் உணர்ந்து பிரச்சினையை அணுக வேண்டும். அப்படி அணு கினால்தான் கன்னடர்கள் எண்ணத்தில் மாற்றம் தோன்றும். அந்த மாற்றத்திற்குத் தமிழகமும் வழிகாட்ட வேண்டும்.

கர்நாடகத்தில் முதலமைச்சர் கூட்டிய கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து தமிழகத்திற்குத் தண்ணீர் விடக் கூடாதென ஒருமித்துக் கூறுகின்றனர். இது சரியான பார்வை அன்று; கொள்கை அன்று; எந்தெந்த வகையில் மறுக்க முடியுமோ அந்தந்த வகையில் மறுக்க விரும்புகின்றனர்.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மாறாகச் செயல்பட விரும்புகிறார்கள். காவிரி மேலாண்மைக் குழுமத்தை அமைக்க அவர்கள் விரும்பவில்லை; அதற்குக் காலதாமதத்தை ஏற்படுத்தி அது உருவாகாமல் இருக்க விரும்புகிறார்கள். காவிரி மேலாண்மைக் குழுமத்தில் நடுவண் அரசின் வல்லுநர்களோடு, தமிழகமும் கர்நாடகமும் தாங்கள் விரும்பும் வகையில் சரிசமமாக வல்லுநர் களை இடம்பெறச் செய்யமுடியும். இந்தக் குழுமம் இரு அரசுகளின் வல்லுநர்கள் அளிக்கும் குறிப்பு களை நியாயத்துடன் ஆய்வு செய்து எடுக்கும். முடிவுகளில் கருத்து வேறுபாடு இருந்தால் மீண்டும் விவாதித்து முடிவெடுக்க உரிமை அளிக்கப் பட்டிருக்கிறது. இவ்வளவு இருந்தும், கர்நாடகம், மேலாண்மைக் குழுமம் அமைக்க இருப்பதைத் தடுக்க முயல்வது, அந்த மாநிலத்தின் தவறான போக்கையே காட்டுகிறது. இப்படிச் செயல்படும் அரசு இதுவரை எப்படிச் செயல்பட்டிருக்கும் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளலாம். இத்தகு எண்ணங்கொண்ட அரசு நியாயத்தை கடைப் பிடிக்காது; இந்த எண்ணப் போக்கைக் கொண்டே அந்த மாநிலம் தொடக்கக் காலத்திலிருந்து எவ்வாறு செயல்பட்டிருக்கும் என்பதைத் தெளிவாக உணரலாம். இந்நிலையில் நடுவண் அரசும், காவிரி மேலாண்மைக்குழுமமும் நியாய உறுதியுடன், கர்நாடகத்தை எச்சரித்துச் செயல்பட்டால்தான் வழி பிறக்கும்; நியாயம் கிடைக்கும். அதுவே இரு மாநிலங்களுக்கும் ஏற்றது; சிறந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த மறுப்பது மற்றும் காவிரி மேலாண்மைக் குழுவை அமைப்பதற்கு எதிராகக் கர்நாடகம் இருப்பதற்குக் காரணம் என்ன? காவிரி தங்கள் நாட்டில் தோன்று வதால் (குடகு மலையில்) அவ்வாற்று நீர் தங்களுக்கே சொந்தம் எனக் கருதுகின்றனர். அப்படிக் கருதினால் உலகில் எந்த நாடும் தண்ணீரைப் பெற முடியாது. வாழ முடியாது; இஃது இயற்கைக்கும் மனித நியாயத்திற்கும் எதிரானது; பகையானது, சூரிய ஒளியும், காற்றும் எப்படி எல்லோர்க்கும் சொந்த மானதோ அப்படியே ஆற்றுநீரும் ஓடும் பாதை யிலுள்ள எல்லோர்க்கும் சொந்தமானதே! ஓடும் பாதையில் அங்கங்குள்ள மக்கள் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தேவைக்கு அதிகமாகவோ, பிறருக்குக் குறைவாக அளிக்கவோ கூடாது. அவரவர் தேவைக்கேற்ப சமமாகப் பயன் படுத்திக் கொள்ளும் வகையில் அமைத்துக் கொள்வதே சிறந்தது.

ஜம்மு, காஷ்மீர் பகுதியில் உருவாகும் சிந்து செனாப், ஜீலம் நதிகளின் பெரும்பகுதி நீர் பாகிஸ் தானுக்குப் போகிறது. 1960-ஆம் ஆண்டில் நேரு வுக்கும் அயூப்கானுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தப் படி இன்னும் நாம் பாகிஸ்தானுக்கு நதிநீரை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறோம். 1966 மற்றும் 1971 இரு நாடுகளுக்கும் போர் ஏற்பட்டுக் கொண்டிருந்த போதும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிநீரை இந்தியா தடுத்ததில்லை; சிந்து நதி மேற்கே பாகிஸ்தானுக்கு ஓடுவதைப் போல், கிழக்கே சீனாவுக்கும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அதையும் இந்தியா தடுத்ததில்லை. உலகின் மிகப் பெரிய நதியான அமேசான், தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் ஆண்டிஸ் மலையில் உருவாகி, வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா, பிரேசில் போன்ற நாடுகளிலெல்லாம் பாய்ந்து ஓடுகிறது. தன் நாட்டில் அந்நதி உருவாவதால், பெரு, அந்நதியின் நீர் பிறநாடுகளுக்குச் செல்வதால் அதனைத் தடுப்பதில்லை. உலகின் இரண்டாம் பெரிய நதியான நைல் நதியும், மூன்றாம் பெரிய நதியான காங்கோ நதியும் உருவாகும் நாட்டி லிருந்து பல நாடுகளுக்குள் பாய்ந்து செல்கிறது. ஐரோப்பாவில் ஓடும் டான்யூப் நதி 17 நாடுகளின் வழியாகவும், தென்கிழக்காசியாவில் ஓடும் மீகாங் நதி 7 நாடுகளின் வழியாகவும் ஓடுகிறது. எந்த நாடும் தன் நாட்டில் உருவாகும் நதியைத் தன் நாட்டிற்கே சொந்தமென்று உரிமை கொண்டாடு வதில்லை. ஆனால் கர்நாடகம், காவிரியைத் தனக்கே சொந்தம் என்கிறது. ஒரு சொட்டு நீரைக் கூடத் தரமாட்டோம் என்கிறது. இது என்ன நியாயம்? என்ன நீதி? பஞ்சாபில் உருவாகும் ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகள், பஞ்சாபைக் கடந்து அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் பாய்ந்து வளம் சேர்க்கிறது. பஞ்சாபைப் போன்று கர்நாடகம் நடக்க வேண்டாமா?

கோதாவரி நதி நாசிக்கில் உருவாகி மும்பையைக் கடந்து ஆந்திராவில் புகுந்து கடலில் கலக்கிறது; நர்மதையாறு மத்தியப் பிரதேசத்தில் உருவாகி, தெற்கே மும்பையைக் கடந்து மேற்கே குஜராத்தில் பாய்ந்தோடி அரபிக்கடலில் கலக்கிறது. இந்தியா விலேயே இத்தனை உதாரணங்கள் இருக்கும் போது கர்நாடகம் இப்படி முறைக்கு மாறாகச் சண்டித்தனம் செய்வது இரு மாநிலங்களுக்கு மட்டுமேயன்றி, இந்தியாவுக்கே களங்கம் சேர்க் கிறது. மாந்த நெறியை அவமதித்து, வெறுப்பையும் பகையையும் உருவாக்குகிறது. இது எதிர் காலத்திற்கு நல்லதன்று. உலகிலுள்ள ஆறுகளில் பல ஒரு நாட்டில் உற்பத்தியாகி பல நாடுகளுக்குப் பாய்ந்து செல்வதால், அந்நாடுகளுக்குள் நதிநீர் குறித்து முரணும் சச்சரவும் ஏற்பட்டதால்,

அந்நாடுகளின் சச்சரவைத் தீர்க்க ஐ.நா.சபை

1956-ஆம் ஆண்டிலேயே அங்கேரியின் தலை நகரான ஹெல்சிங்கில் பாதிக்கப்பட்ட நாடுகளின் குறைகளை உணர்ந்து, சரியான முறையில் பங்கீடு செய்ய யோசனைகளைக் கூறி நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டது; இப்போது எந்த வேறுபாடும் இல்லாமல் அந்நாடுகள் நதிநீரைப் பயன்படுத்திக் கொள்கிறது.

உச்சநீதிமன்றம் இப்போது தீர்ப்பளிப்பதற்கு முன்னரே காவிரி நடுவர் மன்றம் 2007-லேயே காவிரி மேலாண்மைக் குழுமத்தை அமைக்க வேண்டு மென்று அறிவுறுத்தியது. நடுவண் அரசு அதில் தவறியது. மீண்டும் நடுவர் மன்றம் 19-7-2013இல் மூன்று மாதத்திற்குள் காவிரி மேலாண்மைக் குழுவை அமைக்க நடுவண் அரசுக்கு அறிவித்தது. ஆனால் நடுவண் அரசு அதனை நிறைவேற்றாமல் அதிகாரமற்ற காவிரி மேற்பார்வைக் குழுவை அமைத்துப் பிரச்சினையைத் திசை திருப்பி விட்டதாக, இப்பிரச்சினையில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். மற்றும், மத்திய அரசின் திட்டக்குழுவின் ஒப்புதல் இன்றி, கர்நாடகம் காவிரியின் நடுவேயுள்ள கபினி, ஏரங்கி, ஏமாவதி, யாகச்சி, சுவர்ணவதி படுகை களில் அணைகளைக் கட்டிக்கொண்டதாகவும், நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல், 11.20 லட்ச ஏக்கர் பாசன வசதியை 21. 71 ஏக்கர் பாசன வசதியாகப் பெருக்கிக் கொண்டதாக அவர் தினமணி கட்டுரையில் (22.9.16) குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காவிரி நீரில் கர்நாடகத்திற்கு உரிமை 270 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே. ஆனால் அது 360 டி.எம்.சி. தண்ணீரை எடுத்துக் கொள்வதாகவும், காவிரி ஓடிவரும் வழியில் முறைக்கு மாறாக 25 ஆயிரம் ஏரிகளுக்குத் தேவையான நீரை நிரப்பிக் கொண்ட பிறகே நீரை கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு அனுப்பி வருவதாகவும், அதனால் மேட்டூருக்கு வர வேண்டிய நீர் தடைபட்டு விடுவ தாகவும் அவர் குறித்துள்ளது மிக முக்கியமானது. கர்நாடகம் செய்யும் தில்லுமுல்லுகளைக் கணக் கிட்டால் காவிரி மேலாண்மைக் குழுமம், அமைப்பது எத்துணைத் தவிர்க்க முடியாதது என்பதை நன்கு உணரலாம். இந்தத் தில்லுமுல்லுகளுக்குத் தடை வந்துவிடக் கூடாதென்பதற்காகவே கர்நாடகம் காவிரி மேலாண்மைக்குழு அமையத் தடையாக இருக்கிறது. அப்படியிருப்பதற்கு நடுவண் அரசின் அசட்டையும், அரசியலும் ஒரு காரணமாகும். இது நடுவண் அரசின் பொறுப்பின்மையையே காட்டுகிறது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து விசாரணை நடத்திய நடுவர் மன்றம், தனது தீர்ப்பை 5-2-2007-இல் அறிவித்தது. அதனை நடுவண் அரசு சில மாதங் களில் அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், மிகவும் காலம் கடத்தி ஆறாண்டுகள் கழித்து 19.2.2013-இல்தான் வெளியிட்டது, அதுவும் வெளியிட வேண்டுமென்று தமிழக அரசு பல முறை கூக்குரல் இட்ட பின்னரே நடுவண் அரசு அந்த முடிவுக்கு வந்தது.

காவிரி நடுவர் மன்றம் அறிவித்தபடியே இப் போது உச்சநீதிமன்றம் 4.10.2016-க்குள் காவிரி மேலாண்மைக் குழுமத்தை அமைக்க வேண்டு மென்றும் அதன் அறிவிக்கையை 6.10.2016-க்குள் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டுமென்றும் உறுதி செய்துள்ளது. இவ்வளவு நடைபெற்றும், கருநாடக அரசு உச்சநீதிமன்றம் அறிவித்தபடி தண்ணீரைத் திறந்துவிட முடியாதென்றும், மற்றும் காவிரி மேலாண்மைக் குழுமத்தை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தும் வருகிறது. இதற்காகக் கடந்த 1.10.2016- அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாதென்றும், மேலாண்மைக் குழுமத்தை அமைக்கக் கூடாதென்றும் ஒருமித்த குரலில் அறிவித்துள்ளது.

இந்த நீதி நியாயமற்ற, வெட்கக் கேடான செயலுக்கு இந்தியப் பிரதமராக இருந்த தேவ கௌடா உண்ணாவிரதம் இருப்பது அதனினும் வெட்கக்கேடானது; கீழ்மையானது. ஜீரணிக்க முடியாதது. உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கெதிராக மனித நியாயத்திற்கு மாறாக முன்னாள் பிரதமர் இப்படி நடந்துகொள்வது (சூயவiடியேட ளுhயஅந) ஒரு தேசிய அவமானமாகும். தன்னாட்டின்பால் அவர் அக்கறைகொண்டிருப்பதை யாரும் வெறுக்க முடியாது; ஆனால், அது நியாயத்தின் அடிப் படையில் இருக்க வேண்டும். மேலாண்மைக் குழுமத்தை அமைப்பதில் அவருக்கு மாறுபாடு இருப்பின் அதற்கு வழிகாட்ட எத்தனையோ வழிகள் உள்ளன; குறிப்பாக, நடுவண் அரசை அணுகி, தேவையான ஏற்பாட்டை விரைந்து செய்யவோ, அதன் துணையோடு நடுவர் மன்ற உறுப்பினர் களை அழைத்து காவிரியில் தற்போதுள்ள நீரை ஆய்வு செய்து, அதன் போதாமையைக் காட்டி, தமிழகத்திற்குத் தண்ணீர்விட வழியில்லை என்பதை உறுதி செய்திருந்தால் அது ஏற்கத்தக்கதாக இருக்கும். ஆனாலும் அதனைச் செய்ய அவர் ஆயத்தமாக இல்லை; வாட்டாள் நாகராஜ் போன்றோரும், கன்னட அமைப்புகளும், மத்திய அமைச்சர் ஆனந்த குமாரும், கன்னட மக்களின் உணர்ச்சிக் கொந் தளிப்பைப் பெருக்கும் வழியில் திசைமாறிப் பேசிக் கொண்டிருக்கும்போது பிரதமராக இருந்த ஒருவர், நல்ல வழியைத் தேடாமல், சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் உண்ணாவிரதம் இருப்பதும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காததும் கவலைக் குரியதாக உள்ளது. இது மிகச் சோகமானது.

“மன்பதை காக்கும் அரசர்தாம் - அற

மாட்சியைக் கொன்று களிப்பரோ?”

என்று பாரதி நைந்து கூறியது போன்றே பெரியவர் தேவ கௌடாவை எண்ணிக் கலங்க வேண்டி யுள்ளது.

ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர், கபினி, அமராவதி, பனாரஸ், சாகர் ஆகிய அணை களின் நீர்மட்டம், நீர்வரத்து, வெளியேற்றம் ஆகியவற்றைக் கணக்கிடுவதையும், மாதத்திற்குப் பத்துமுறை தண்ணீர் திறந்து விடுவதையும் சரியாகக் கண்காணிக்கிற பொறுப்பு மேலாண்மைக் குழுமத்திற்குச் சென்றுவிடும் என்பதாலும், குறிப்பாக, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி, கபினி அணைகளின் கட்டுப்பாட்டுரிமையை முழுமை யாக இழந்து விடுவோம் என்ற பயத்தாலுமே அவர்கள் எதிர்க்கின்றனர். இந்தப் பயம் தேவை யற்றது. காவிரி மேலாண்மைக் குழுமத்தில், குழுமத் திற்கு நடுவண் அரசு நியமிக்கும் தலைவர் ஒருவரும், இரு உறுப்பினர்களும், அரசின் சார்பில் இரு பிரதிநிதிகளும் ஆகிய ஐவர் அமர்வர்; மற்றும் தமிழகம், கருநாடகம், கேரளா, புதுவை சார்பில் அந்தந்த மாநிலத்திலிருந்து ஒவ்வொரு உறுப்பினர் சேர்ந்தும் ஆகமொத்தம் ஒன்பதுபேர் இருப்பர்; இதில் எந்த மாநிலத்திற்கும் கூடுதலாக உறுப்பினர் இல்லாத போதும், அந்தந்த உறுப்பினரைத் தேர்ந் தெடுக்கும் உரிமை அந்த மாநிலத்திற்கும் இருப் பதால், கருநாடகம் இதனை எண்ணி அஞ்சத் தேவையில்லை.

காவிரி மேலாண்மைக் குழுமம் அமைக்கப் பட்டு விட்டால் பாசன வசதிக்கான நீர், குடி நீருக்கான நீர் மற்றும் பேரிடர் காலத்திலும், மழை பொய்க்கும் காலத்திலும் எந்த அளவுக்குத் தண்ணீர் விடுவது என்பது பற்றிய உரிமையையும், தண்ணீர் அணை காட்டும் குறியீட்டுக் கருவியை அவ்வப் போது சோதனை செய்யும் முழுவுரிமையையும் மேலாண்மைக் குழுமம் எடுத்துக் கொண்டால், எல்லாவுரிமையையும் இழந்து நிற்கும் நிலை கருநாடகத்திற்கு ஏற்பட்டுவிடும். இதனை முன்னிட்டே கருநாடகம் கையற்று கலங்குகிறது. இதனைக் காட்டிலும், நீர் இருப்பு, ஓடும் நீர், படுகைகளிலுள்ள நீர் ஆகியவற்றைச் சரியாகக் கணக்கிடும் உரிமையும் நீர் அளவீட்டுக் கருவியை அவ்வப்போது சோதனை செய்யும் உரிமையும் மேலாண்மைக் குழுமத்திற்குச் சென்றுவிட்டால், கடந்த காலத்தில் கருநாடகம் திரைமறைவில் செய்த தில்லுமுல்லுகள் அம்பலத் திற்கு வந்துவிடும்; அப்படி அம்பலத்திற்கு வந்து விட்டால், கருநாடகத்தின் முகமூடி கிழிந்துவிடும். இந்த முகமூடியை மறைப்பதற்கே கர்நாடக அரசும் அந்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் வேடம் போடுகின்றன;

அண்டை மாநிலமான தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுக்க மாட்டோமென்று கூறுவதை நினைக்கும் போது பாரதியார்,

“சொந்தச் சகோதரர்கள்

துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடீ - கிளியே

செம்மை மறந்தாரடி”

என்று கூறியதற்கேற்பவே, கர்நாடகத்தினர் சிந்தை இரங்காதவராகவும், மனிதவுணர்வை, மறுக்கும் செம்மை மறந்தாராகவுமே உள்ளனரென்று அரற்ற வேண்டியுள்ளது.

உச்சநீதிமன்றம் ஆணையிட்டதைக் கொண்டு நடுவண் அரசு மேலாண்மைக் குழுமத்தை அமைத் திருக்க முடியும்; ஆனால், காலம் தாழ்த்துவதற்குக் காரணம், இன்னும் சில மாதங்களில் கருநாடகத்தில் சட்டசபைத் தேர்தல் நிகழ இருப்பதால், அதில் பாஜ.க. வெற்றி பெற வேண்டியும் அதற்குக் கருநாடக மக்களின் பேராதரவைப் பெற வேண்டியுமே இவ்வாறு செய்துள்ளது. சென்ற வாரத்தில் நடுவண் அரசின் சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோந்தி காவிரி மேலாண்மைக் குழுமத்தை அமைக்க நடுவண் அரசு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாகக் கூறினார். இப்போதோ நடுவண் அரசு முடியாது என்கிறது. கடந்த 3.10.16 அன்று உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசின் மறுமுறையீட்டை உடனே எடுத்து விசாரிக்க வேண்டுமென்று அட்டர்னி ஜெனரல் கேட்டுக் கொண்டபோது, அப்போது நீதிபதிகளாகிய அமித் மிஸ்ரா, லலித்குமார் ஆகியோர், “உச்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்றுத் தண்ணீர் திறந்துவிடாமல், மேலாண்மைக் குழுமத்தை அமைக்க முயலாமல் உங்கள் முறையீட்டை மட்டும் உடனே விசாரிக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? முடியாது” என்று கடுமையாக எச்சரித்துள்ளனர். மேலும், சென்ற வாரத்தில் அட்டர்னி ஜெனரல் நடுவண் அரசு மேலாண்மைக் குழுமத்தை அமைக்க ஏற்பாடு செய்து கொண் டிருக்கிறதெனக் கூறிவிட்டு, இப் போது குழுமத்தை அமைக்க முடியாதென எப்படிக் கூறலாம் என்றும் கண்டித்துள்ளனர். அட்டர்னி ஜெனரல் கூறி யுள்ளதும், நடுவண் அரசு இப்போது அறிவித் துள்ளதும் சரியாக இல்லை; மேலாண்மைக் குழுமத்தை அமைக்க நடுவண் அரசு திட்டமிட்டே காலம் தாழ்த்தி வருகிறது. காவிரி நீர்ப் பிரச் சினையில் மோடி அரசு இதுவரை மௌனம் சாதித்து வந்ததின் அர்த்தம் இப்போது புரிந்து விட்டது.

காவிரி நீர் என்ற மிக முக்கியமானவொரு பிரச்சினையில், தமிழகத்தில் நீர் இல்லாது சம்பாப் பயிர்கள் வாடும் துன்பமான சூழலில் நடுவண் அரசு தேர்தல் ஓட்டுக்காக, ஒரு மாநிலத்தை வஞ்சிப்பது நல்ல அரசியலாக இல்லை; ஆட்சி யாகவும் இல்லை; திட்டத்தை நிறைவேற்றுவதில் மோடி அரசு காலத்தைத் தாழ்த்துவதே ((Justice delayed is Justice denied) நீதியை மறுப்பதேயாகும். இதைத்தான் மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது; கடந்த 4.10.16 அன்று தமிழகத் தலைமைச் செயலர், நடுவண் அரசு காவிரி மேலாண்மைக் குழுமத்தை அமைக்க சாத்தியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அறிவித்தவுடன், அக்குழுமத்தை அமைக்கத்தான் வேண்டுமென்று நடுவண் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் சில உண்மைகள் புலப்பட்டுள்ளன 20.10.16 அன்று உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ஆணை பிறப்பித்தவுடன், நடுவண் அரசின் நீர்வளத்துறையின் இணையமைச்சர் தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் காவிரி மேலாண்மைக் குழுமத்திற்குத் தமிழகச் சார்பில் உறுப்பினரை உடனே நியமிக்கக் கூறியுள்ளார். அதனை ஏற்ற தமிழக அரசு உடனே திரு.வி. சுப்பிரமணியன் என்பவரை நியமித்துள்ளது.

இணைச் செயலர் அனுப்பிய கடிதத்தில், நடுவண் அரசின் அட்டர்னி ஜெனரல் காவிரி மேலாண்மைக் குழுமத்தை அமைக்க உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டு மென்று எழுதிய கடிதத்தையும் இணைப்பாக அனுப்பியுள்ளார். இவற்றிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? உச்சநீதிமன்றம் 30.9.16 அன்று காவிரி மேலாண்மைக் குழுமத்தை அமைக்க ஆணை பிறப்பித்தவுடன், நடுவண் அரசின் நீர்வளத் துறையும், அட்டர்னி ஜெனரலும் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள் என்பதை நன்கு அறிகிறோம். ஆனால், சில நாள்களுக்குள் நடுவண் அரசு, மேலாண்மைக் குழுமத்தை அமைக்க உச்சநீதிமன்றம் எங்களை நிர்பந்திக்க முடியா தென்று முறையீடு செய்திருப்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. இதுவொரு அரசியல். காவிரி நதிநீர் தீர்ப்பாயம் கடந்த மே 2013- இல் காவிரி நதிநீர் கண்காணிப்புக்குழு மற்றும் நதிநீர் பங்கீட்டுக் குழுவை அமைக்க வலியுறுத்தியது; அப்போது அதனை நடுவண் அரசு ஏற்றுக்கொண்டது. அந்த அடிப்படையான கருத்தையும் இப்போது உள்ள சூழலையும் எண்ணியே உச்சநீதிமன்றம் அந்த அடிப்படையில் காவிரி மேலாண்மைக் குழுமத்தை அமைக்க வேண்டுமென்று இப்போது ஆணை யிட்டுள்ளது. இந்த ஆணையை நிறைவேற்ற நடுவண் அரசின் நீர்வளத்துறையும், சட்டத்துறையும் மேலாண்மைக் குழுவை அமைக்க ஆயத்த ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கும்போது, திடீரென்று நடுவண் அரசு அந்தர் பல்டி அடித்து, தம் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பது அதனுடைய சில்லரை அரசியலை, ஓரவஞ்சகத்தை நன்கு அடையாளம் காட்டியுள்ளது.

தமிழக அரசு, நடுவண் அரசின் தவறான முடிவைத் துணிச்சலுடன் சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தின் ஆணையை ஏற்றுக் காவிரி மேலாண்மைக் குழுவை அமைக்க நடுவண் அரசு ஏற்பாடு செய்யவேண்டுமென்று கடிதத்தில் வலி யுறுத்தியிருப்பதும், திரு.பழ.நெடுமாறனும் ஏனைய கட்சித் தலைவர்களும் நடுவண் அரசின் முடிவைக் கண்டித்திருப்பதும் பாராட்டத்தக்கன. நடுவண் அரசு, தம் முடிவை இறுதியாகத் தெரிவிப்பதற்கு முன்னர், கருநாடக அரசு உச்சநீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றாது தண்ணீரைத் திறந்து விட மறுத்தபோது, தமிழகத்திலுள்ள பா.ஜ.க. தலைவர்கள் கருநாடக அமைச்சரவையைக் கலைக்க வேண்டுமெனக் கூக்குரலிட்டார்கள்; இப்போது, மோடி அரசு மேலாண்மைக் குழுமத்தை அமைக்க முடியாதென்று அறிவித்திருக்கும்போது அதே தலைவர்கள் வாய்மூடி மௌனியாக உள்ளார்கள்; நடுவண் அரசின் இந்த நியாயமற்றப் போக்கை எண்ணும்போது,

“ஆட்சி மந்தை யாமென்று - உலகை

அரசர் எண்ணி விட்டார்

நாட்டு ராஜநீதி மனிதர்

நன்கு செய்ய வில்லை”

என்று பாரதியார் கூறியிருப்பதைப் போன்றுதான் நடுவண் அரசை நாம் நொந்துகொள்ள வேண்டி யிருக்கிறது; உண்மையைச் சில காலம் மறைக் கலாம்; எப்போதும் மறைத்துவிட முடியாது; “அரசியல் பிழைத்தோர்க்கு, அறம் கூற்றாவது” எந்நாளோ?

Pin It